மகிழ்ச்சியின் உச்சநிலை

ஞாயிற்றுக்கிழமை, 25-05-2014

இந்தியா


(மக்களும் அவர்களுடைய கருத்துக்களும் என்ற கட்டுரையின் தொடர்ச்சி)

கேள்வி பதில்கள்

“ரஜோ குணமுள்ளவர்கள் கடினமான உழைப்பின் மூலம் மகிழ்ச்சியை தேடுவார்கள், ஆனால் உண்மையான மகிழ்ச்சி தியானத்தில் உள்ளது“ என்று பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கிறது. நான் படிப்பை நிறுத்தி விட்டு எப்போதும் தியானம் செய்யலாமா?

குருதேவர்: இது தவறான அர்த்தம். எந்த மொழிபெயர்ப்பில் நீ அப்படி படித்தாய்? அப்படி அல்லவே அல்ல. ரஜோ குணத்தால் அடையும் மகிழ்ச்சி திடீரென்று உச்ச நிலைக்கு செல்லும். திடீரென்று கீழே இறங்கும். சிலர் பரிசு பெறும்போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். அடுத்த நொடியில் கீழே விழுவார்கள். சத்வ குணத்தால் அடையும் மகிழ்ச்சி சமநிலையில் இருக்கும். நீ வெற்றி பெறும் போது தலைகால் புரியாமல் குதிக்க மாட்டாய். தோல்வி அடைந்தாலும் மிக வருந்த மாட்டாய். இதயத்தை (மனதை) சமநிலையில் வைத்திருப்பாய்.முடிவு எதுவானாலும் மகிழ்ச்சியாக இருப்பாய். துவக்கத்தில் அப்படிச் செய்வது கடினமாக இருக்கக்கூடும். யோகா, ப்ராணயாமம் மற்றும் தியானம் செய் என்று சொல்லும் போது, துவக்கத்தில் கடினமாக இருக்கும். மிகவும் சலிப்பாக இருப்பதாக நீ எண்ணக் கூடும். இப்படிச் செய்வதை விட்டு வெளியே சென்று ஏதாவது விருந்தில் கலந்து கொள்ள உன் மனம் விரும்பும்.

எனவே துவக்கத்தில் மகிழ்ச்சி தருவது போல் தோன்றாது. ஆனால் பழகப்பழக உடலில் மனதில் நல்ல மாற்றங்களை அனுபவத்தில் பார்க்க முடியும். உன் மகிழ்ச்சி உச்சநிலையை அடையும்.
எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கிறது? பலர் கைகளை உயர்த்துகிறார்கள். ப்ராணயாமம், யோக சாதனை மற்றும் தியானம் பழக்கத்தில் வந்த பின் உனக்குப் புரியும். “ ஓ ! எவ்வளவு நன்றாக இருக்கிறது நான் திரும்பத் திரும்ப இதைச் செய்ய விரும்புகிறேன் “ என்று நீ சொல்வாய். இது ஒரு விருந்தில் கலந்து கொள்வதை விட சிறந்தது. இல்லையா? துவக்கத்தில் மகிழ்ச்சி அளிக்காமல், நன்கு பழகிய பின் மகிழ்ச்சி கொடுப்பது சாத்வீக மகிழ்ச்சியாகும்.

ராஜசீக மகிழ்ச்சி துவக்கத்தில் மகிழ்ச்சி கொடுப்பது போல் தோன்றும். ஆனால் சில காலத்துக்குப் பின்பு உன்னை அழிவில் கொண்டு விடும். துவக்கத்தில் நீ மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைந்ததாகத் தோன்றும். ஆனால் சிறிது காலத்துக்குப் பின்னால் உன் உடல் மனம் மற்றும் ஆத்மாவை அழித்து விடும்.

தாமச மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சிக்கான வாக்குறுதி போன்றது. ஆனால் துவக்கத்திலும் சரி. முடிவிலும் சரி. மகிழ்ச்சியே இருக்காது. நீ அதன் வலையில் சிக்கி விடுவாய். உதாரணத்துக்கு புகை பிடிக்கும் பழக்கத்தை சொல்லலாம். புகை பிடிப்பதால் உனக்கு பரமானந்தம் கிடைக்காது. ஆனால் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களால், அப்பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். அப்பழக்கத்தை அவர்கள் நிறுத்தினால் அது அவர்களுக்கு வலியைக் கொடுக்கும். ஆனால் அப்பழக்கம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை, இருந்தாலும் அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.

சிறு புத்தி படைத்தவர்களை பொறுத்துக் கொள்வது எப்படி ?

குருதேவர்: உலகில் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு காரணமுமில்லாமல் எத்தனை பேர் உனக்கு எதிரியாக இருக்கிறார்கள்? எத்தனை நல்ல நண்பர்கள் உனக்கு எதிரியாக மாறியிருக்கிறார்கள்? அதே போல் வாழ்வில் பல முறை நம்மை முன் பின் அறியாதவர்கள் நமக்கு உதவி செய்திருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்திருக்க மாட்டோம். ஆனாலும் அவர்கள் நமக்கு உதவி செய்தார்கள். நம் நண்பர்களோ, எதிரிகளோ இப்படி நடந்து கொள்ள காரணம், நம்முடைய கர்ம வினை தான். நம் நேரம் சரியில்லாத போது நண்பர்கள் எதிரியாகி விடுவார்கள். நேரம் நன்றாக இருக்கும் போது எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

“உன் வேலையைச் செய். பலனை எதிர் பார்க்காதே“ என்று பகவத் கீதை சொல்கிறது. ஆனால் இதை செயல்படுத்துவது எப்படி ?

குருதேவர்: உன் வேலையைச் செய்வது, விதை விதைப்பது போன்றது. அந்த விதை வளர்ந்து 
செடியாகி, பூத்து, காய்த்து, அந்தக் காய் கனியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த விதையை நீ அவ்வப்போது தோண்டிப் பார்த்து வேர் விட்டிருக்கிறதா? முளை விட்டிருக்கிறதா? என்று பார்க்க நினைத்தால், அது எப்படி வளர முடியும் ? தோண்டிப் பார்த்துக் கொண்டிருந்தால் அது வளராது.
அதனால் தான் பலனைப் பற்றி இப்போது நினைக்க வேண்டாம். காலம் வரும் போது அதன் முடிவு தெரியும்.

தற்சமயம் நீ செய்ய வேண்டியது விதை விதைப்பது மட்டுமே. அதற்கு நீர் ஊற்றி அது வளர்ந்து, பூத்து, காய்த்து கனிவதற்காக பொறுமையாக காத்திரு. நீ ஒரு மாங்கொட்டையை இன்று விதைத்தால், அது நாளைக்கே மாம்பழத்தைக் கொடுக்குமா ? காலம் வரும் போது உனக்கு மாம்பழம் கிடைக்கும். அதனால் தான் “ உன் கடமையைச் செய். பலனைப் பற்றி சிந்திக்க வேண்டாம் “ என்று பகவத் கீதை சொல்கிறது.

குருதேவா மதங்களின் பெயரில் மக்கள் சண்டை போடுகிறார்கள். மதங்களை உருவாக்கியவர் கடவுள். எனவே மக்களின் சண்டைக்கான பழியை கடவுள் ஏற்றுக் கொள்கிறாரா?

குருதேவர்: முட்டாள்கள் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி சண்டை போடுவார்கள். மதம் மட்டும் அவர்களுடைய சண்டைக்கு காரணமல்ல. ஜாதியின் பெயரில் சண்டை. மொழியின் பெயரில் சண்டை. நாட்டின் பெயரில் சண்டை, எந்த விஷயமானாலும் சண்டை. புத்திசாலியாக இரு. இந்த சண்டைகளை மறந்து உயர்வடைய வேண்டும்.

“நாம் செல்லும் பாதை இலக்கை விட முக்கியமானது “ என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். எனவே நாம் கவனம் வைக்க வேண்டியது எது என்று தயவு செய்து சொல்லுங்கள். நாம் செல்லும் பாதையா ? அல்லது அடைய வேண்டிய இலக்கா ?

குருதேவர்: இலக்கை நிர்ணயிக்கும் போது வழி தானாகவே கிடைக்கும். தற்சமயத்தில் வாழ்ந்து சுயேச்சையான முடிவை நிச்சயம் செய். “தூய்மையான இதயம்; தெளிவான மனம்; நேர்மையான செயல்;” என்ற விதி நினைவிருக்கிறதா ?

நீங்கள் இங்கு ஆசிரமத்தில் இருக்கும் போது எல்லாமே உயிர் துடிப்போடு இருக்கிறது. நீங்கள் ஆசிரமத்தில் இல்லாத போது வெறிச்சோடி இருக்கிறது.

குருதேவர்: இரண்டு சூழ்நிலைகளிலும் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நான் இங்கு இல்லாத போது இங்கு வந்து அமைதியாக அமர்ந்து தியானம் செய். நான் இங்கு இருக்கும் போது பல மக்கள் வந்து போவதால் அமைதி இருக்காது. ஒரே சத்தமாக இருக்கும். பல நிகழ்ச்சிகள் நடப்பதால் மக்கள் அதிகமாக இருப்பார்கள். இரண்டு சூழ்நிலையிலும் நீ நடுநிலையில் இருக்க வேண்டும். உன் மனம் பாதிக்கப்படக் கூடாது.

பசு வதையை நிறுத்துவது எப்படி ?

குருதேவர்: சட்டப்படி இதை நிறுத்த வேண்டும். சில நாடுகளில் இதற்கான சட்டம் இல்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த போது 120 கோடி பசுக்கள் இருந்தன. 30 கோடி மக்கள் இருந்தார்கள். இன்று நம் நாட்டில் 20 கோடி பசுக்களே இருக்கின்றன. மக்கள் தொகை 120 கோடியாகி விட்டது. விகிதம் 1:6. எப்படி 1 அல்லது 2 லிட்டர் பால் 6 மனிதர்களுக்கு போதுமானதாக இருக்கும்? இதே நிலை தொடர்ந்தால், வரும் சந்ததிகள் பால் என்பதை புத்தகங்கள் மூலம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். குடிப்பதற்குப் பாலே கிடைக்காமல் போய் விடும். மக்கள் பால் என்ற வெள்ளை நிற திரவத்தை குடித்து வந்ததாக கதையில் படிப்பார்கள். பால் குடிப்பதற்குக் கிடைக்காது. ஆகவே பசு வதையைத் தடுப்பது மிக மிக அவசியம். நம் நாட்டின் முன்னேற்றத்தை விரும்பினால் இது மிகவும் முக்கியம். நீங்கள் எல்லோரும் இதற்காக உழைக்க வேண்டும். உங்கள் கிராமத்தில் உள்ளவர்களோடு கலந்து பேசி பசு வதையை நிறுத்துங்கள். பசுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவது மிக மிக அவசியம்.
நம் நாட்டின் புதிய பிரதமமந்திரி கண்டிப்பாக இதற்கான நடவடிக்கை எடுப்பார்.