ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம்

வியாழன், 29 மே,2014,

பெங்களூரு, இந்தியா


(மூன்று வகையான த்ரிதி என்னும் இடுகையின் தொடர்ச்சி )

ஒரு சமயம் நான் கலிபோர்னியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது, வீதியில் ஒரு இடுகாடு பற்றிய விளம்பரத்தைக் கண்டேன். அந்த விளம்பரம் என்ன தெரியுமா?" கருத்தை கவரும் மிக அழகான காட்சியமைப்புள்ள பரந்த இடுகாடு, உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்" என்பதே விளம்பரம்! இறந்த பின்னர் உயிரற்ற அந்த உடல் கருத்தை கவரும் மிக அழகான காட்சியமைப்பை காண முடியுமா என்ன?

வெளிநாடுகளில் எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் கூட வர்த்தக விளம்பரம் செய்யப்படுகின்றது. மிக ஆச்சர்யமானது. இறுதியில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்று மக்கள் தங்களுக்கான இடத்தை முன் பதிவு செய்து கொள்கின்றார்கள்,தவிர என்ன நிறமான ஆடைகள் அணிவிக்கப்பட்டுப் புதைக்கப்பட வேண்டும் என்பவற்றை கூட முன்னரே அறிவுறுத்தி விடுகின்றார்கள். அனைத்தையும் தங்கள் உயிலில் எழுதி விடுகின்றார்கள். துரதிர்ஷ்டவசமாக இதுதான் மிக அதிகபட்சமான ஜடப் பொருளான உடலுடன் இணைப்பு. அதை போகவிடுங்கள்.

நீங்கள் இறந்தபின்னர் நிச்சயம் யாரவது அந்த உடலை எரித்து விடுவார்கள். அதை பற்றி ஏன் இந்த அளவு எண்ண வேண்டும்? இது பைத்தியக்காரத்தனம் தான். இத்தகைய எதிர்மறையை ஒருவனிடம் காக்கும் த்ரிதி தமசிக் த்ரிதி ஆகும். நாம் அனைவரும் சத்விக், ரஜசிக் அல்லது தமசிக் இவற்றில் எந்த வகையான த்ரிதி தம்மிடம் உள்ளது என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கண்டிப்பாக எதன் மீதாவது பித்துப்பிடித்தே ஆக வேண்டும் என்றால், கடவுள் படைத்த பொருட்களை விட்டு விட்டு, அனைத்தையும் படைத்த அந்த இறைமையிடமே பித்துக் கொண்டு பிணைத்துக் கொள்ளுங்கள். இவ்வுலக பந்தம் பயத்தை மட்டுமே உருவாக்கும். இந்த பயம் வருத்தத்தையும், துன்பத்தையும்  உருவாக்கும். இவையிரண்டும் மனத் தளர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உருவாக்கும். இவற்றின் விளைவாக முடிவின்றி கடந்த காலத்தையே எண்ணி வருந்திக் கொண்டிருப்பார்.

"நான் வேலையை விட்டிருக்கக் கூடாது", அல்லது சந்தர்ப்பம் அமைந்த போது நான் வேறொரு பெண்ணை மணந்திருக்க வேண்டும்" என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பார். பணி ஓய்வின் விளம்பில் ஒரு பொறியாளர், "நான் மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்து, அமெரிக்காவில் பணியாற்றி இருந்திருக்க வேண்டும். முட்டாள்தனமான முடிவை எடுத்து விட்டேன்." என்று எண்ணினார்! இத்தகைய மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்தவற்றையே எண்ணி வருந்திக் கொண்டிருப்பார்கள்.

சிலர் அத்தகைய ஏமாற்ற உணர்ச்சிகளிலும் வருத்தத்திலும் ஆழ்ந்து எப்போதும் தங்களை சுற்றி நடப்பவற்றில் எதுவாயினும் அதைப் பற்றி துக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக சிலர் மும்பையிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்து பெங்களூரை அடைந்த பின்னர்,'ஒ நான் குளிரூட்டப் பட்ட பிரிவில் முன் பதிவு செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். பயணம் முடிந்து விட்டது. பயணத்தின் போது ஏற்பட்ட சிரமங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. ஆயினும் குறையும் வருந்துதலும் உள்ளன. சில சமயங்களில் சிலர் வீட்டைச் சென்றடைந்த பின்னர் கூட, மற்றொரு சாலையைத் தேர்ந்தெடுத்து அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும், அப்போது இன்னும் அரை மணி நேரம் முன்னதாகச் சென்றிருக்கலாம் என்றெல்லாம் வருந்துவர். அந்த அரை மணி நேரத்தில் என்ன பெரிதாகச் சாதித்து விட்டிருக்கப் போகின்றீர்கள்? அந்த அரை மணி நேரம் இழக்கப்பட்டதால் உலகம் அழிந்து விட்டதா என்ன?

வருந்துதல் என்பது இத்தகைய மனிதர்களுக்கு ஒரு பழக்கமாகி விட்டது. இவர்கள் யாரிடம் பேசினாலும் சரி எதையாவது எண்ணி வருந்துவார்கள். இந்த வருந்துதல் என்னும் பழக்கம், சோர்வையும் செயலின்மையும் ஏற்படுத்தும். மகிழ்ச்சியும், உற்சாகமும் நிரம்பிய ஒருவன் ஒருபோதும் வருந்த மாட்டான். அவனது விழிப்புணர்வு எழுச்சியுடன் இருக்கும், செயல் திறனுள்ளவனாக இருப்பான். எவன் ஒருவனுடைய விழிப்புணர்வு எழுச்சி பெற வில்லையோ, அவன் கடந்த காலத்தையே எண்ணி வருந்திக் கொண்டிருப்பான். அத்தகைய த்ரிதி பிராண சக்தியை காத்து நிலை நிறுத்தாது, அதுவே தமஸ் த்ரிதி ஆகும்.

தமஸ் த்ரிதியின் மற்றொரு குறியீடு திமிர் ஆகும். அகந்தையில் சிக்கிக் கொண்டிருப்பவன் அதிலிருந்து தன்னை வெளிக்கொணர முடியாமல் இருக்கின்றான். அதுவே தமஸ் த்ரிதி ஆகும்.
வருந்திக் கொண்டே இருக்கும் பழக்கம் உள்ளவர்கள் இறுக்கமாகவும் கர்வமாகவுமே நடந்து கொள்வார்கள். நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அண்மையில் நடந்த தேர்தலில் தோற்றவர்கள், தங்கள் இறுக்கத்தையும் போலி கர்வத்தையும் இழக்கவில்லை. தங்களுடைய தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூறிக் கொண்டு இருந்தார்கள். கன்னடத்தில் ஒரு நல்மொழி உண்டு." கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை (தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பொருள்)

என்னுடைய கேள்வி என்னவென்றால், உங்கள் மனதில் அத்தனை அழுக்கு இருக்கும்போது எவ்வாறு மீசையில் எந்த அழுக்கு மண்ணும் ஒட்ட வில்லை? இதுதான் அகம்பாவம்.அல்லது துராங்காரம் (போலி கர்வம் மற்றும் ‘தான்’ என்னும் அகந்தையான நடத்தை) இத்தகைய போலிகர்வத்தில் சிக்கிக் கொண்டவனுக்கு அதிலிருந்து வெளியேற இயலாது. அதுதான் தமஸ் த்ரிதி ஆகும்.

முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று உண்டு. ஆறு ஆண்டுகளாக மழையின்றி பஞ்சம் மிகுந்திருந்த ஒரு நகரில் முல்லா வசித்துக் கொண்டிருந்தார். இதை பற்றிக் குறை கூறிக்கொண்டே இருந்த முல்லா நஸ்ருதினுக்கு அதுவே பழக்கம் ஆகிவிட்டது. மேலும் குறைப்பட்டு கொண்டே இருந்தார். இவ்வாறிருக்கையில் ஒரு ஆண்டு நல்ல மழை பெய்து பயிர்கள் நன்கு விளைந்தன.  அப்போதும் முல்லா நஸ்ருதீன் முகமலர்ச்சியின்றி குறை கூறிக் கொண்டே இருந்தார். ஆகவே அவரது நண்பர்கள் "முல்லா ! ஏன் வருத்தப் படுகின்றீர்கள்? இந்த ஆண்டு நீங்கள் புகார் கூற எதுவுமே இல்லையே? ஏனெனில் நிறைவான விளைச்சல் அறுவடை உள்ளதே?" என்று கேட்டார்கள். அதற்கு முல்லா, "இப்போது எனக்கு அதிக வேலையாகிவிட்டது.இவ்வளவு கஷ்டப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக நான் வேலை செய்ததில்லை. இந்த ஆண்டு பணி மிகுதியாக இருக்கின்றது, என்னால் உழைக்க முடியவில்லை" என்று புகார் கூறினார்.

இது எவ்வாறு உள்ளது என்றால், திருமணம் ஆகாத போது சரியான துணை அமைய வில்லையே என்று வருத்தம், திருமணமான பின்னரும் அதே வருத்தம்! (சிரிப்பு ) இதுதான் தமசிக் த்ரிதி.
இத்தகைய மனிதர்கள் எதையாவது எண்ணி வருந்திக் கொண்டே இருப்பார்கள்." ஒ! இவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டும், எனக்கு அந்த வசதி கிடைத்திருக்க வேண்டும்" என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பார்கள். அது விஷாதா அதாவது கடந்து சென்ற காலத்தை பற்றி வருந்திக் கொண்டிருப்பது.

இத்தகைய தமசிக் த்ரிதியின் பாதிப்பில் உள்ளவர்கள்,எதிர்மறை மன நிலையிலிருந்து வெளிவர இயலாமல் இருக்கின்றார்கள். சிலர் முயற்சிக்கின்றார்கள், ஆயினும் அவர்களால் இயலவில்லை. தமசிக் த்ரிதியின் பிடி அவ்வளவு பலமாக உள்ளதால், அவர்களால், எதையாவது எதிர்மறையாக எண்ணிக்கொண்டோ, செய்துகொண்டோ இருக்க வேண்டியாதாகின்றது. பிறரை பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டு இருப்பார்கள், அல்லது முகத்தை மகிழ்வின்றித் தூக்கி வைத்திருப்பார்கள்.
இத்தகைய எதிர்மறையை ஒருவனிடம் காக்கும் த்ரிதி தமசிக் த்ரிதி ஆகும். நாம் அனைவரும் சத்விக், ரஜசிக் அல்லது தமசிக் இவற்றில் எந்த வகையான த்ரிதி தம்மிடம் உள்ளது  என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இது போன்று, பகவத் கீதையில் கர்த்தா (செயல்படுபவன்) மற்றும் கர்மா (செயல்) இவை வகைப் படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது சத்விக் கர்த்தா. தனக்குத் தேவையானது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடன் இருப்பவன். இரண்டாவது, ரஜசிக் கர்த்தா தன்னுடைய பணி நிகழ்ந்தால் மிக மகிழ்ச்சி, இல்லையெனில் மிக அதிக வருத்தம் அடைபவன். மூன்றாவது தமசிக் கர்த்தா, தான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றியே அறியாதவன். எப்போதும் வருந்திக் கொண்டு எப்போது எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க முடியாதவன். செயல்படக் காலம் தாழ்த்துபவன். எதைச் செய்யவும் முயற்சி எடுக்காதவன். அவன்," கடவுள் விருப்பமானால் பின்னர் செய்யலாம்" என்றே அனைத்தையும் இறைவிருப்பத்திற்கு விட்டு  விடுபவன். இதைப் போன்றே, மூன்று வகை புத்தியும் (அறிவு) குணங்களும் (பண்பு அல்லது சுபாவம்) த்ரிதியும் (மன திடம்) உள்ளன.