பிறரது கருத்துக்களுக்கு உதைபந்தாக இருக்காதீர்கள்

திங்கள் 5 மே 2014, பஹ்ரைன்


இங்கு குழுமியிருக்கும் அன்பானவர்களே, நாம் செய்ய வேண்டியது இது தான்: உலகெங்கும் மகிழ்ச்சி அலைகளை உருவாக்குங்கள். நீங்கள் அனைவரும் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். இன்றைய உலகில், ஏராளமான சச்சரவுகள் உள்ளன. ஒரு சிறு விஷயத்திற்கு கூட மக்கள் சண்டை இடுகின்றார்கள். ஒத்த மனப்போக்குடைய நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு மகிழ்ச்சி அலைகளை உருவாக்கவேண்டும். வாழ்க்கையை பரந்த கண்ணோட்டத்துடன் காணுங்கள்.

வாழ்நாள் மிகக் குறைவானது ஆகும். அறுபது- தொண்ணூறு ஆண்டுகளே வாழ்கின்றோம். அதிலும் தற்காலத்தில் மக்கள் சீக்கிரமாகவே இறந்து விடுகின்றார்கள். ஐம்பது அல்லது அறுபது வயதில் மக்கள் இறக்கின்றார்கள். குறைந்த வாழ்நாளில் மகிழ்ந்திருக்க தேவையான காலம் இல்லாத நிலையில் ஏன் இத்தனை சச்சரவுகள், சண்டைகள், வேதனைகள் மற்றும் துன்பங்கள்? இதை பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இன்று இங்கிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். பஹ்ரைன் அரபு நாடுகளின் வாயில் என்று கேள்வியுற்றேன்.அத்தகைய அரபு நாடுகளின் வாயிலில் அனைவருடனும் இருப்பதில் மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் மனதை சம நிலையில் வைத்திருங்கள். அனைத்தும் நாம் விரும்பிய முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நாம் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம். நாம் விரும்பாத நிகழ்வுகள் ஏற்படும் போது, சோர்வும் கோபமும் அடைகின்றோம். சம நிலையில் இருப்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

மேதகு Dr முஸ்தபா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர், பழமை புதுமை இரண்டும் தேவையானவை என்று கூறினார். ஒவ்வொரு மரபும், சமயமும் புதுமையான வழிகளை மேற்கொள்ளத் துவங்கவேண்டும். இத்தகைய மாற்றி அமைத்து கொள்ளக்கூடிய திறன் தேவையான ஒன்றாகும். அவரிடம் நான் இசை இஸ்லாமை சேராததா அல்லது அது அனுமதிக்கப்பட்டு விட்டதா என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னமும் சிலர் அதை அனுமதிக்கப் படாததாகவே கருதுகின்றனர் என்று கூறினார். ஆனால் இசை உலகெங்கிலும் உள்ளது. பல்வேறு கருத்துப் பள்ளிகள் உள்ளன.

எவ்வாறு முற்போக்காகவும், மாற்றி அமைத்து கொள்ளக்கூடிய திறன் உள்ளவர்களாகவும், இணங்கிப் போகும் இயல்புடனும் பிறரை அரவணைத்து அழைத்துக்கொண்டு முன்னேறும்  திறனுடனும் இருக்க வேண்டியதன் தேவையை என்னிடம், பகிர்ந்து கொண்டார். நான் அவரது கூற்றினை முற்றிலும் ஆதரித்தேன். வாழ்க்கை என்பது ஒரு மரத்தைப் போன்றது. வேர்களும் கிளைகளும் உள்ளன. பழமையான வேர்களும் புதுமையான பசும் கிளைகளும் இருக்க வேண்டும். இன்று காலையில், மேதகு பஹ்ரைன் அரசரைச் சந்தித்தேன். அவரும் இதே கருத்தைக் கூறினார். பஹ்ரைன் திறந்த நிலையில் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை கடைப்பிடித்து உலகில் நல்லிணக்கத்திற்கு முன் உதாரணமாகத் திகழ்கின்றது. இந்த செய்தி ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாட்டிற்கும், உலகின் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
நாம் அனைவரும் உலகை ஒரு குடும்பமாகக் கருத வேண்டும். உலகம் முழுமையும் ஒரே குடும்பம். அது தான் வாழும்கலை ஆகும். ஒரே உலக குடும்பம். 

இன்று காலையில் உலகெங்கிலுமிருந்து அரபு நாடுகளின் தலைவர்கள் இங்கு கூடியிருந்தனர். அனைவரும் அமைதி என்பதே நமது மொழியாக இருக்க வேண்டும் என்னும் கருத்தைக் கூறினர். கருத்துப் பகிர்தலே அனைவரது குறிக்கோள். பல்வேறு பாலினர், மரபினர், சமயத்தவர், பண்பினர் அனைவரையும் ஒரே மனித இனம், மனிதக் கோட்பாடு, மனிதக் குடும்பம் என்று இணைப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று ஆகும். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக வாழும்கலையின் கனவே இது. 

மக்கள் தங்களுக்கிடையே தாங்களே செயற்கையாக எழுப்பிக்கொண்ட சுவர்களை தகர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு இறைமை, ஒரு இறைவன் நாம் அனைவரும் ஒரே இறைமையின் பகுதி ஆவோம். ஒரே கடவுளின் குழந்தைகள். பல்வேறு பாலினர், மரபினர், சமயத்தவர், பண்பினர் அனைவரையும் ஒரே மனித இனம், மனிதக் கோட்பாடு மனிதக் குடும்பம் என்று இணைப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. இவ்வுலகிற்குத் தேவையானது என்னவென்றால் வேற்றுமையில் ஒற்றுமை அல்லது வேற்றுமையில் கொண்டாட்டம். தடுப்புச் சுவர்களைத் தகர்க்க வேண்டும். ஆயினும் நமது தனித்தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். 

ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். பஹரைன்க்குத் தனித் தன்மை உண்டு. பாகிஸ்தானுக்குத் தனித்தன்மை உண்டு. இந்தியாவிற்குத் தனித்தன்மை உண்டு.தனிதன்மைகளை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும், சண்டையிடக் கூடாது. உலகிற்கு தேவையானது, வேற்றுமையில் ஒற்றுமை அல்லது வேற்றுமையில் கொண்டாட்டம். ஒருவன் மன அழுத்தம் அல்லது கோபமும் பதட்டமும் கொண்டிருக்கும் போது எவ்வாறு இது நிகழும்? அது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே முதலில் நாம் நமக்குள்ளேயே அமைதியை தேட வேண்டும். மனதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். பிறருடன் ஒன்றிணையுங்கள். அனைவரும் இப்ப்ரபஞ்சத்தை சேர்ந்தவர்கள். நாம் குழந்தைகளாக இவ்வுலகிற்கு வந்தபோது எப்படி இருந்தோம்? ஒரு நாளில் நானூறு முறை சிரித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளில் நானூறு முறை சிரித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வளர்பருவத்தினர் ஒரு நாளில் பதினேழு முறை சிரிக்கின்றான். ஒரு வயது வந்த மனிதன் சிரிப்பதே இல்லை அல்லது எப்போதோ ஒரு முறை சிரிக்கின்றான்.

புன்முறுவல் என்பதே நமது மொழியாக இருக்க வேண்டும். எது நம் அனைவரையும் இணைக்கும் என்றால் புன்முறுவல் ஒன்று மட்டுமே ஆகும். உங்களுக்கு ஒரு கதை கூற விரும்புகின்றேன். ஒரு அறிஞர் மௌனத்தில் இருந்தார். அவரை இருவர் அணுகி, எங்களுக்கு ஏதேனும் செய்தி கூறுங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த அறிஞர்  தனது ஆள் காட்டி விரலை உயர்த்திக் காட்டிப் பின்னர் தனது கைமுட்டியை உயர்த்தினார். அவரை அணுகிய இருவரில் ஒருவர் "நம்மை ஒற்றுமையாக இருக்குமாறு கூறுகின்றார்" என்றார். மற்றவர்" இல்லை. நம்மைச் சண்டையிடக் கூறுகின்றார், பிறரைக் குத்த வேண்டும்" என்றார். உங்கள் கைம்முட்டியை உயர்த்தினால் அதை இவ்வாறு பொருள் கொள்ளலாம்: ஒன்று அனைவரும் ஒன்றுபடுங்கள் அல்லது பிறரை தாக்குங்கள்.
ஏன் தாக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்? ஏனெனில் நீங்கள் நலமில்லாதவர், அல்லது நோயுற்று இருப்பவர், அல்லது பலவீனமானவர், பாதுகாப்பற்றவர். யாரையோ கண்டு பயம் அடைகின்றீர்கள். அதனால் பிறரைத் தாக்க எண்ணுகின்றீர்கள். வன்முறை என்பது உள்நிலை பலவீனத்தைக் குறிப்பதாகும்.

இதை எவ்வாறு தவிர்ப்பது? ஆரோக்கியமாகவும், அனைவரிடமும் சுமுகமான உணர்வினை அடைந்தாலும் தவிர்க்கலாம். வாழ்க்கையை ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் கண்டால், உள்மன பலம் ஏற்படும். அப்போது வன்முறை தானாகவே விலகி விடும். எனவே நாம் இப்போது செய்ய வேண்டியது மகிழ்ச்சி அலைகளை உருவாக்குவதே ஆகும்.உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக் கொள்ளுகின்றீர்கள்? நாம் எங்கிருந்தாலும், மகிழ்ச்சி அலைகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மக்களிடம் "நண்பரே ! கவலைப்படாதீர்கள்! நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். இவ்வுலகில் மனித நேயம் உள்ளது. நாம் அனைவரும் ஒரே சமுதாயத்தை ஒரே உலகினைச் சேர்ந்தவர்கள்" என்று கூறுங்கள்.

குடும்பங்களில் வன்முறை, சமுதாயத்தில் வன்முறை, தற்கொலைகள் நிகழ்கின்றன. இவை யாவும் சரியான புரிதல் இன்மையாலும், அறிவீனத்தினாலும், ஒற்றுமை இன்மையாலும், அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை வாழ்வில் தவிர்ப்பது என்னும் அறிதல் இன்மையாலும் நிகழ்கின்றன. இஸ்லாமிய அறிஞர்கள் கூற்றுக்களை கேட்டிருக்கின்றேன். முஹம்மது நபி கிழக்கிலிருந்து குளுமையான காற்றினை அடைகின்றேன்" என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு பாலைவனத்தில், குளிர்ந்த காற்று என்பது மிகுந்த சுகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

குளிர்ந்த காற்று என்று குறிப்பிடப்படுவது நல்லிணக்கமே ஆகும்.பஹ்ரைனும் கீழை நாடாகும். நாம் அனைவரும் கீழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். இன்று கீழை நாடுகள் மேலை நாடுகள் என்னும் பாகுபாடு கிடையாது. நாம் அனைவரும் ஒன்றாகி விட்டோம்.ஆயினும் இந்த நல்லிணக்கச் செய்தியானது உலகின் மூலை முடுக்கு எங்கிலும் சென்று அடையவேண்டும். குண்டு வெடிப்புகள் அதனால் மக்கள் மரணம் என்னும் செய்திகள் என்னைத் துயர் அடைய வைக்கின்றன. சிரியா மற்றும் எகிப்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் என்னை வேதனைப்படுத்துகின்றன.
இன்று காலை உலக நிலையை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். அனைவருமே அதைப் பற்றி மிகவும் கவலை கொண்டிருக்கின்றனர். ஆயின் கடவுள் இறுதியில் அனைத்தையும் காப்பார் என்னும் நம்பிக்கையும் உள்ளது. இருந்தும் நமது கடமையை நாம் செய்ய வேண்டும்நமது பணி என்னவென்றால், மக்களை ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்த வேண்டும். அவர்களை உள்நோக்கிப் பார்த்து அவர்களது அழகையும், அவர்களுக்குள் இருக்கும் நல்ல சக்தியையும் உணரச் செய்ய வேண்டும்..

நமக்குள் இருக்கும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நேர்மறை சக்தியினை தூண்டினால்   ஒவ்வொருவரையும்  முகத்திலும் புன்முறுவலுடன்  நாம் கனவு காணும் உலகினில் நிச்சயம் காணலாம். மீண்டும் சிறு குழந்தைகளாகி நிகழும் காலத்தை வாழத் துவங்கலாம்.
வாழும் கலையில் ஐந்து கோட்பாடுகள் மட்டுமே உள்ளன.
1.   வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உண்டு என்பதை அறிவோம். நல்ல, மற்றும் நல்லது அல்லாத நிகழ்வுகள் ஏற்படலாம்.முதல் கோட்பாடு எல்லா சூழ்நிலைகளிலும் மனதின் சம நிலையைக் காக்க வேண்டும். அனைத்தும் நாம் விரும்பிய முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது நாம் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம் ஆயின் நாம் விரும்பாத நிகழ்வுகள் ஏற்படும் போது, சோர்வும் கோபமும் அடைகின்றோம். சம நிலையில் இருப்பது மிகவும் முக்கியமான முதல் கோட்பாடு ஆகும்.

2.   அடுத்தது, பிறரை எவ்வாறு இருக்கின்றார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.  வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களது இயல்பு, கொள்கை எதுவானாலும் சரி அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமான கோட்பாடு ஆகும்.

3.   மூன்றாவது, பிறரது கருத்துகளுக்கு உதை பந்தாக இருக்காதீர்கள். பிறர் உங்களை பற்றி என்ன எண்ணுகின்றார்கள் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். உண்மையில் யாருக்கும் உங்களைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லை. உங்களுக்குள் நோக்கி, எது உங்களுக்குச் சரி, எது சரியல்ல என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

4.   அடுத்தது, பிறரது தவறுகளுக்கு உட்கருத்துத் தேடாதீர்கள். இது மிகவும் முக்கியமானது ஆகும்.  ஒவ்வொரு குற்றவாளிக்குள்ளும் ஒரு பாதிக்கப் பட்டவன் உதவி கேட்டு அழுது கொண்டிருப்பான். அதைக் கண்டறியுங்கள்.

5.   இந்தக் க்ஷணத்தில் வாழுங்கள். இவை தாம் நாம் மனதில் கொள்ள வேண்டிய ஐந்து கருத்துக் கோட்பாடுகள். அடிப்படைக் கோட்பாடுகள் மூலம் என்ன நிகழ்கின்றது? மூன்று நிகழ்வுகள் ஏற்படுகின்றன. தூய்மையான இதயம், தெளிவான மனம், நேர்மையான செயல்பாடு ஆகியவை ஆகும்.