மன அழுத்தமும் மகிழ்ச்சியும்

செவ்வாய்கிழமை, 24 ஜூன், 2014 

வாஷிங்டன் - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

மகிழ்ச்சி என்னும் விவாதிக்கப்படும் விஷயத்தை நான் ஆராய்ந்திருக்கின்றேன். என்னுடைய கணக்கெடுப்பில் அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினரே தாங்கள் மகிழ்ச்சியாக  இருப்பதாக கருதுகின்றனர். பரபரப்பான வாழ்வியலில் உள்ள மீதிப் பெரும்பான்மையினருக்கு தாங்கள் கூற விரும்பும் ஒரு ஆலோசனை என்ன?


குருதேவ்: ஒன்று எனக் கூறி என்னுடைய பரப்பெல்லையை குறைத்துவிட்டீர்கள். ஏன் ஒன்று மட்டும்? நான் 25 செய்திகள் கூற விரும்புகின்றேன்!! பல்வேறு சூழ்நிலைகளை சந்திக்கின்றோம்.  ஆனால் முக்கியமாக மன அழுத்தமே நமது மகிழ்வை மூடி மறைக்கின்றது.


மனஅழுத்தம் என்பது முற்றிலும் சக்தியற்ற மிகக் குறைந்த காலத்தில் அதிகப்பணி செய்யும் நிலை. ஒன்று உங்கள் சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள் அல்லது பணி அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், அப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தங்களது வாழ்க்கையில் நீங்கள் இப்போதிருக்கும் நிலையினை அடைவதற்கு யாரெல்லாம் காரணமாகவும், உதவியாகவும்  இருந்தார்கள்?

குருதேவ்: அதை கூறுவது கடினம். ஒரு சில பெயர்களை மட்டும் இங்கு எடுத்துக் கூறினால் அது நியாயமாகாது. என்னுடைய தாயாரிடமிருந்து ஆரம்பிக்கின்றது. இந்தக் க்ஷணத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டால், உங்கள் மனம் இங்கு மட்டுமே இருப்பதாக கொண்டால், அப்போது உங்களை சுற்றி இருக்கும் அனைவரிடமிருந்தும் நீங்கள் அகத் தூண்டுதலைப் பெற்றதாகக் கொள்ளலாம்.  எக்காலத்திலும், எங்கு ஆயினும் பிறரால் உங்களுக்கு அகத் தூண்டுதலை ஏற்படுத்த முடியும். இது ஒரு உள்ளார்ந்த நிகழ்வுத் தோற்றப்பாடு.

அகத் தூண்டுதல் என்பது ஒருவருக்குள்ளிருந்து எழும் சக்தி, யார் வேண்டுமானாலும் ஊக்கியாக செயல்பட முடியும். தெருவில் உள்ள குழந்தை, ஒரு தச்சன், ஒரு தோட்ட வேலை செய்பவர் என்று யார் வேண்டுமானாலும் உங்களுக்கு அகத் தூண்டுதலை ஏற்படுத்த முடியும் தேவையானது என்னவென்றால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

புனிதமானவரே! சந்தோஷத்தின் ரகசியம் என்ன?

குருதேவ்: உங்களுடைய இயல்பான நிலையிலேயே இருந்து, அனைவரும் வரமாகப் பெற்றிருக்கும் உள்அமைதி பெருக்கத்தைக் கண்டுணர்தல் ஆகும். இயல்பாக இருங்கள்.

மௌனத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றீர்களா? அதை எவ்வாறு பயிற்சி செய்வது?

குருதேவ்: (சில நொடிகள் மௌனமாக இருக்கின்றார்) இப்படித்தான்! ஒரு நொடி நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் மூச்சினைக் கவனியுங்கள். மனதை அமைதிப்படுத்தி, உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் அற்புதமான அமைதியையும், அன்பினையும் அறிவீர்கள்.
நாம் அனைவரும் இத்தகைய அன்பு மற்றும் அமைதியைப் பரிசாகப் பெற்றிருக்கின்றோம். எவ்வாறோ, மிக முக்கியமானதாகிய நமக்குள் நோக்கிப் பார்ப்பதை மறந்துவிட்டோம். சில நொடிகள் தன் உள்ளத்தைத் தானே காண்பது மிகத் தேவையானது. கண்கள் திறந்தோ, அல்லது மூடியோ, இந்தக் கணத்தில் நிலைத்து இளைப்பாறும் போது, திடீரென்று உங்கள் உள்மனதுடன் இணைக்கப்படுவீர்கள்.

தங்களது சொந்தப்  பிரச்சினைகளை பற்றிப் பேசமுடியுமா? உங்களது பிரச்சினைகள் யாவை?

குருதேவ்: என்னுடைய தலையாய பிரச்சினை என்னவென்றால்,நான் கனவு காண்பவன். வன்முறை உள்ளது, அதனால் பிரச்சினைகள் உள்ளன என்றெல்லாம் அறிந்தும் வன்முறையற்ற சமுதாயத்தையும் வன்முறையற்ற உலகினையும் அடைய கனவு காண்கின்றேன்.அது ஏற்பட வெகு காலம் ஆகும் என்று அறிந்தாலும், என்னுடைய கனவை விட முடிவதில்லை. இதுதான் என் பெரிய பிரச்சினை.அதையே பிடித்துக் கொண்டிருக்கின்றேன். செய்தித் தாட்களைப் படித்தாலும், தொலைக் காட்சியைப் பார்த்தாலும், இக்கனவிலிருந்து நாம் வெகு தொலைவில் இருப்பது தெரிகின்றது. ஆயினும் இவ்வுலகம் அனைத்தும் அன்பிலும் அமைதியிலும் ஒற்றுமைப்பட வேண்டும் என்னும் இக்கனவையே நான் கண்டு கொண்டிருக்கின்றேன். வன்முறையற்ற, மன அழுத்தமற்ற சமுதாயமே என் கனவு.

வாழ்கையை இரண்டு விதமாகக் காணலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். ஒன்று, " இந்த குறிப்பிட்ட இலட்சியத்தை அடைந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் " என்பது. மற்றொன்று என்னவானாலும் சரி, நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்" எனபது. இவையிரண்டில் எது மேலானது?

குருதேவ்: நிச்சயமாக இரண்டாவது, உங்களுக்குள்ளேயே மகிழ்ச்சியைக் காண்பது, அம்மகிழ்ச்சி எந்த நிபந்தனையுமற்றது என்பதே. முதலாவது  பெற்றுக் கொள்ளுதல், மற்றது கொடுத்தல்.   குழந்தைகளாக இருக்கும் போது பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது, முதிர்ந்த வயதில், கொடுப்பதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இது முதிர்ச்சியடைந்த சந்தோஷம் ஆகும். வயது முதிர்ந்த பாட்டி பல்வேறு உணவு வகைகளை தயாரித்து, குடும்பத்தில் அனைவருக்கும் பரிமாறும்போது மகிழ்ச்சி அடைகின்றார்.

பெற்றுக் கொள்ளுதல் அல்லது பேராசையுடன்  பற்றிக் கொள்ளுதல் இவற்றை விட, கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஏதாவது ஒரு கால கட்டத்தில், பெறுதல் நிலையிலிருந்து கொடுத்தல் என்னும் படி நிலைக்கு நாம் செல்ல வேண்டும். நாம் தான் மகிழ்ச்சியின் தோற்றுவாய் என்று கண்டு கொண்டு, என்னவானாலும் சரி நான் மகிழ்ச்சியாக இருப்பேன், என்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியைப் பரப்புவேன் என்றிருப்பதுதான் ஞானம்.

புனிதமானவரே! தாங்கள் தீங்கு என்பதை நம்புகின்றீர்களா?

குருதேவ்: தீங்கு என்பதை நான் நம்பவில்லை, ஆனால் அது நற்குணக் குறைவு என்பதன் நிழல் என்று அறிகின்றேன். அது நன்மை இன்மை, அன்பின்மை, மற்றும் ஒளியற்றது ஆகும்.இந்தியாவில் ஆறு விதமான தீங்குகள் நம்பப்படுகின்றன. கர்வம், பேராசை, ஆணவம், பொறாமை, கோபம் மற்றும் காமம். அன்பின் உருக்குலைவு, அறிவுக் குறைவு, ஞானக் குறைவு இவை யாவும் ஒருவரது வாழ்க்கையை அழித்து விடக் கூடும்.

அன்புக் குறைவே தீங்கிற்கு காரணம் என்றால் அதிக அன்பு என்பது மட்டுமே தீர்வாகக் கூடுமா?

குருதேவ்: முற்றிலும் சரி. ஒளியை நோக்கித் திரும்புங்கள். தீங்கனைத்தும் மறைந்து விடும்.

பணியின் மதிப்பினை பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேசி வருகின்றோம். பணம் சார்ந்த நன்மைகளைத் தவிர பணியின் மதிப்பினைப் பற்றி உங்கள் கருத்துக்களைக் கூற முடியுமா?

குருதேவ்: கடுமையான பணி உங்களைப் பிரச்சினைகளிலிருந்து அகற்றி வைக்கின்றது. எதையும் செய்யாமல் சும்மா இருந்தால் உங்கள் மனம் எங்கு செல்ல நீங்கள் விரும்பவில்லையோ அங்கு விரைந்து செல்கின்றது. வேலை என்பது நீங்கள்  சுறுசுறுப்பாகவும், நிதான புத்தியுடனும் படைப்பாற்றலுடனும் இருக்க தேவையான ஒன்று. பணியிலும் சில நெறிமுறைகள் உள்ளன. பணம் சம்பாதிப்பது என்பது தவறல்ல. ஆனால் நெறியற்ற முறையில் அது ஈட்டப்பட்டால் உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் என்பது கிடைக்காது. அது உறுதி.

தங்களது கருணைத் தத்துவம் சுதந்திரமான வியாபார நிறுவனங்களுக்கும், முதலாளித்துவத்திற்கும்  பொருந்துமா?

குருதேவ்: கண்டிப்பாக. கருணையற்ற முதலாளித்துவம் நேர்மையான சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லாது. செல்வந்தனே கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். ஏழையின் கருணைக்கு மதிப்புக் கிடையாது.

கருணையும், நன்னடத்தையும் பயன்முனைப்பான பொருளாதார முறைக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அதே சமயம், பயன்முனைப்பான பொருளாதார முறை கருணைக்கு மிக முக்கியமானது என்றும் கூறுகின்றீர்கள். கருணையும், சுதந்திரமான வியாபார நிறுவனமும் ஒன்றோடொன்று இணைந்தது , ஒன்று மற்றொன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பது சரியானதா?

குருதேவ்: முதலாளித்துவம், தொழிலாளித்துவம், சமயச் சார்பற்ற உலகியல்வாதம் எதுவானாலும் சரி அது மனித நேயம் இன்றி வேலை செய்யாது. மனித நேயத்தின் முக்கியக்கூறு கருணை.. அது மிக அவசியமான ஒன்று. அதுவின்றி எதுவும் வேலை செய்யாது. அனைத்தும் பயனற்றுப் போகும். இதை நாம் உலகெங்கிலும் கண்டிருக்கின்றோம். நிறைய உதாரணங்கள் உள்ளன.மனித நேயம் இல்லாதபோது அத்தனை கொள்கைகளும் புத்தகங்களில் மட்டுமே வெற்றிகரமானவையாக காணப்படுகின்றன, உண்மையில் அல்ல.

நமது செல்வத்தைப் பகிர்ந்து கொள்வோம்

செவ்வாய் கிழமை, 24 ஜூன், 2014,

அமெரிக்க ஐக்கிய நாடுகள்


(மனஅழுத்தமும், மகிழ்ச்சியும் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

நாம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்விலும், பொருட்கூறுகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்துவது? நமது சுதந்திர சமுதாயங்களுக்கு எவ்வாறு அதை கற்பிப்பது?

குருதேவ்: நான் ஏற்கனவே கூறியபடி நுகர்வுக்கூறு ஒரு பிரச்சினை. செல்வந்தராக இருப்பதில் தவறில்லை, ஆனால் பூமியையும்,மக்களையும் சுரண்டுவது தவறாகும். இதுதான் தற்போது நடை பெற்று வருகின்றது. பல இடங்களில்,மக்கள் சுற்றுச்சூழல், சட்டங்கள் ஆகியவற்றை புறக்கணித்து, செல்வந்தராக முனைகின்றார்கள். இங்கு தான் பிரச்சினை துவங்குகின்றது.கூட்டு நிறுவன சமுதாய பொறுப்பு என்பதை ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு, சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யுங்கள்.

இப்போது இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் லாபத்தில் 3 சதவீதம் கூட்டுநிறுவன சமுதாய பொறுப்புக்கு முதலீடு செய்யவேண்டும் என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமுதாயத்திற்கு திருப்பி தரவேண்டும் என்னும் உணர்வை சட்டத்தின் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். செல்வம் சேருதல் என்பது அதை பகிர்ந்துகொள்ளுதல் என்பதுடன் இணைந்திருக்க வேண்டும். நீங்கள் உருவாக்குகின்றீர்கள், நீங்கள் கொடுக்கின்றீர்கள்.அனைத்தையும் வைத்துக் கொள்ளக்கூடாது. அங்கு தான் பிரச்சினை எழுகின்றது. ஒருவருக்கு செல்வமானது  தார்மீகப் பொறுப்பினை ஏற்படுத்துகின்றது என்பது உங்களது கருத்து ஆகுமா?

குருதேவ்: ஆம், நிச்சயமாக 

தங்களது வாழும்கலை மையம், சமீபத்தில் பாகிஸ்தானில் எரிக்கப்பட்டுள்ளது. கடவுள் அருளால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. பாகிஸ்தானில் வாழும்கலை மையத்திற்கு ஏற்படப் போகும் நிகழ்விற்கு முன்னரே தங்களுக்குத் தோன்றிய விசித்திரமான முன்னுணர்வு பற்றிக் கூறுங்கள்.

குருதேவ்: இந் நிகழ்வு ஏற்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அந்த இடத்தில், நாங்கள் ஒரு மௌன நோன்பு பயிற்சி (முதிர்நிலைப் பயிற்சி) கொள்வதாக இருந்தோம். பின்னர் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். அந்த வார இறுதி நாட்களில் 60 பேர் மௌன நோன்பிருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. சாதரணமாகவே நமது மையங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். சுமார் நூறு முதல் நூற்றைம்பது பேர் வரை வந்திருந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள். கடவுள் அருளால், அல்லது ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் அந்த வார இறுதி நாட்களில் நாங்கள் வேறிடத்திற்கு மாற்றம் செய்தோம். அப்போது தான் அவர்கள் அம்மையத்தை எரித்து நாசமாக்கி, எங்களது ஆசிரியர்களுக்கும் பயமுறுத்தும் கடிதங்களை அனுப்பினார்கள்.

இது முற்றிலும் அறியாமை ஆகும். "என் வழியே ஒரே வழி" என்னும் மனப்போக்கு இன்றைய உலகில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. பாகிஸ்தானில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே தான். மாறாமரபேர்ப்புக் கோட்பாளர்கள், சமய வெறியாளர்கள், தீவிரவாதிகள் ஆகியோர் இந்தத் தத்துவத்திலேயே பேணி வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று, பல வகைப்பட்ட சமய நம்பிக்கை, பல்வேறு கலாசாரம் பற்றிய கல்விமுறை, ஆகியவற்றை சிறு வயதிலிருந்தே தர வேண்டியது மிக அவசியம் என்று நான் கருதுகின்றேன். அப்போது ஒரு குழந்தை " நான் மட்டுமே ஸ்வர்கத்திற்கு செல்வேன், கடவுளைப் பற்றி நானே சரியாக அறிந்து கொண்டுள்ளேன், மற்றவர்கள் அதை அறிய வில்லை" என்னும் எண்ணத்துடனேயே வளராமல் இருக்கும். நான் மட்டுமே சுவர்க்கத்திற்கு செல்வேன், மற்றவர் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள் என்று எண்ணினால் அவர்கள் பிறர் அனைவருக்கும் பெரும் நரகத்தைப் போன்ற கேடு விளைவிக்கின்றார்கள். 

சமயம் பற்றிய பரந்த அறிந்துணர்வு ஒவ்வொருவர்க்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். உலகெங்கிலும் இதை ஒரு முக்கியமான தேவையாக யூனேஸ்கோ (UNESCO) அறிவிக்க வேண்டும். பல்வேறு சமய அல்லது பல்வேறு கலாசார கல்விமுறை உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் மிகத் தேவையானது ஆகும்.

தீவிரவாதம் மற்றும் அமைதியை நாடுவோருக்கு அளிக்கப்படும் பயமுறுத்தல்கள் இவற்றைக் கவனிக்கும் போது அதில் ராணுவ தலையீடு பற்றி தங்களது கருத்து என்ன?

குருதேவ்: ராணுவத் தலையீடு என்பது இறுதிகட்ட தேர்வாக இருத்தல் வேண்டும் என்பது என் கருத்து. அதற்கு முன்னர் தேவையான அளவு ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் நடைபெற வேண்டும். நம்பிக்கையை வளர்த்தல், தகவல் தொடர்பு வலுப்படுத்தும் முயற்சிகள், ஆகியவை செய்யப்பட வேண்டும்.எப்போதையும் விட அதிகமாக இரண்டாம் நிலை ராஜதந்திரம்,மனிதர்களிடையே அல்லது குழுக்களிடையே அரசு சார்பற்ற, அதிகார முத்திரையற்ற தொடர்புகளும், செயல்பாடுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். பல்வேறு இனத்தவரிடையே வர்த்தகர்கள் நல்லதொரு பாலம் அமைக்க முடியும். அவர்களது பங்கு முக்கியமானதாகும். அவர்கள் தங்களது முழு முயற்சியையும் அளித்து பங்கெடுக்க வேண்டும். இவையனைத்தும் பயனளிக்க வில்லையென்றால், கடைசிப்பட்சமாக ராணுவத் தலையீடு நிகழலாம்.

தாங்கள் அதை முற்றிலும் தவிர்க்க வில்லை என்பது சரியா?

குருதேவ்: நான் விரும்பும் தேர்வு அது இல்லையெனினும், அந்த தேர்வு கடைசிப்பட்சமாக இருக்க வேண்டும். களங்கமற்றவர்கள் ஏன் உயிரிழக்க வேண்டும்?
 
ஐரோப்பாவிலுள்ள நமது நண்பர்கள் சமயம் என்பதிலிருந்து முற்றிலும் விடுபட முயல்கின்றார்கள். இது பற்றித் தங்கள் கருத்து என்ன?

குருதேவ்: சமயம் என்பதற்கு அதற்குறிய  இடம் உள்ளது. ஆன்மிகம் என்பது சமயத்திற்கு மேம்பட்டு மக்களுடைய இதயங்கள் மற்றும் மனங்களை இணைப்பது ஆகும். சமயத்திலும் ஆன்மீகப் பண்புகள் உள்ளன. பல்வேறு சமயப் பிரிவுகள் செய்து வரும் சமயாச்சாரப்  பழக்கங்களை விட இப்பண்புகளை கோடிட்டுக் காட்டுவது முக்கியமான தேவையாக நான் கருதுகின்றேன். வேற்றுமையில் ஒற்றுமை தேவை, அதே சமயம் பூமியின் அழகு மிக்க சிறப்பியல்பாகிய வேற்றுமைகளை வளமூட்ட வேண்டும். நாம் அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள், வெவ்வேறு விதமான சடங்குகள், பழக்கங்கள் நிலவி வருகின்றன, இவற்றில் எதையும் நாம் இழந்து விடக்கூடாது. ஒவ்வொன்றுக்கும் அதற்குறிய தனி மதிப்பு உள்ளது.
அனைத்து சமயங்களுக்கும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்னவென்றால், கருணை, அன்பு ஒற்றுமை ஆகியவை ஆகும். இவற்றையே நாம் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒழுங்கில்லாத மக்களாட்சியின் காரணமாக இந்தியா வீழ்ந்து கொண்டிருப்பதாக சந்தேகப் பேர்வழிகள் கருதுகின்றார்கள். தங்களது கருத்துக்கள் யாவை?

குருதேவ்: ஊழலும்,எண்ணிக்கை விளையாட்டும் தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை.மக்கள் தொகை அதிகமான இந்தியாவில்  பல பிரச்சினைகள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் எண்ணிக்கை விளையாட்டானது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்படுத்தவல்ல நல்ல தலைவர்கள் இருந்த போதிலும் அவர்கள் மாநிலக் கட்சிகளினால் அல்லது ஒன்றோடொன்று இணங்காத கூட்டணியால் பின் தள்ளப்பட்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த முறை அவர்கள் தெளிவான ஆட்சிக் கட்டளை உரிமையை பெற்றுள்ளனர். பல்வேறு கட்சிகள் அடங்கிய கூட்டணி அல்ல. விரைவான முன்னேற்றத்திற்கு இது உதவும்.ஒன்று நிச்சயம், முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், நாம் மக்களாட்சியையே விரும்புகின்றோம், வேகமான முன்னேற்றத்தை தரக்கூடிய வல்லாட்சியை அல்ல. மக்களாட்சியில் பல குரல்கள் கேட்கப்படலாம், ஆனால் வல்லாட்சியில் அவ்வாறு அல்ல. ஒருபோதும் வல்லாட்சியை ஏற்க மாட்டோம்.

பயங்கரவாதம்,மற்றும் சமய தீவிரவாதம் ஆகிய பிரச்சினைகள்  இன்று உலகெங்கும் பெருகிக் கொண்டிருப்பதை எவ்வாறு நாம் கையாள்வது?

குருதேவ்: இது ஒரு பெரிய பிரச்சினை. நான் ஏற்கனவே கூறியபடி, அதற்குக் காரணம் புரிதல் இன்மை மற்றும் சார்பற்ற உணர்வுநிலை ஒருவருக்கொருவர் மற்றும் சமூகங்களிடையே நம்பிக்கையின்மை, இவை தவிர, புனிதநூல்களின் தவறான பொருள் விளக்கம் ஆகியவை ஆகும்.
ஒவ்வொரு குழந்தையும் உலக சமயங்கள் அனைத்தையும் பற்றிய சில கருத்துக்களை அறிதலும், அனைத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுதலும் தேவையானது என்று கருதுகின்றேன். அப்போது அவர்கள் பரந்த மனப்பான்மையுடன், வளர முடியும். தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப் படக் கூடும். ஆன்மீகத்திற்கு இதில் ஒரு பெரும் இருக்கின்றது. பல்வேறு சமயத்தினரையும், ஒரு சமயத்திலுள்ள பல்வேறு பிரிவினரையும் ஒருங்கிணைத்து, நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்னும் புரிதலை ஏற்படுத்துகின்றது.

ஒரு குறிப்பிட்ட சமயம் அல்லது கலாசாரத்தை சேர்ந்தவர்களின் அடையாள உணர்வு தான் மக்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. நான் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவன், அதன் அடையாளத்தைக் காப்பதற்காக நான் உயிரையும் தியாகம் செய்வேன் என்னும் உணர்வு உள்ளது. ஆனால் நாம் ஒரு பெரிய அடையாளம் அதாவது, மனித சமுதாயம் என்னும் பெரிய அடையாளத்தை பிடித்துக் கொண்டால், அப்போது, தற்சமயம் நிகழ்ந்து வரும் வன்முறை செயல்கள், தற்கொலை வெடிகுண்டு தாக்குதல், ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட்டுவிடும். அறிவியல் கல்விமுறையும் ஆன்மீகக் கல்விமுறையும் இணைந்து அளிக்கப்பட வேண்டும். 

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இதை யுனெஸ்கோ எடுத்துவர வேண்டும். உலகெங்கிலும் தடுப்பூசியேற்றம் கட்டாயமாக்கியது போன்று உலகெங்கிலும் இதுவும் கட்டாயமானது என்று ஐநா சபை கூறலாம். இது தீவிரவாதத்திற்கெதிரான தடுப்பு ஊசி ஆகும்.

சரியான முறையில் ஈன்ற செல்வம்.

செவ்வாய்கிழமை, 24 ஜூன், 2014,

வாஷிங்க்டன் அமெரிக்க ஐக்கிய நாடுகள்(நமது செல்வத்தை பகிர்ந்து கொள்வோம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

சமய நம்பிக்கைகள், பொருளாதார கருத்துக்களை பாதிக்கலாம். தங்களது நம்பிக்கையின்படி, மனித வளத்தினை ஊக்குவிக்கும் சுயேச்சையான வணிக நிறுவன அமைப்பு (அரசு சார்பற்ற ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் தனி வணிக நிறுவன அமைப்பு) பற்றிய கருத்து என்ன?  தவிர செல்வவளப் பெருக்கம், மற்றும் வெற்றிக்காக உழைத்தல் இவை பற்றி கூறுவதும் என்ன?

குருதேவ்: இந்தியாவில், சுயேச்சையான வணிக அமைப்பு உண்டு. எப்போதுமே சுதந்திரம் உண்டு. சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு செல்வத்தைப் பெருக்கினால் நன்று. ஏழ்மை புனிதமானதே அல்ல, செல்வம் ஒரு பாவம் அல்ல. ஏழ்மை சோம்பலின் விளைவென்றால் அது பாவம். செல்வம் பேராசை மற்றும் நெறியற்ற வழிகளில் ஈட்டப்பட்டால் பாவம். இதுதான் அளவுகோல். எவ்வாறு செல்வத்தை உருவாக்குகின்றீர்கள்? உங்களது செல்வத்தை சேர்க்கும் செயல்பாடுகள், பலருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றதா? அவ்வாறெனில் அது நல்லதல்ல.ஆனால்,உங்களது செல்வதை உருவாக்கும் செயலினால் பலருக்கு நன்மை, வேலை வாய்ப்பு மற்றும் ஆறுதல் ஏற்பட்டால்,அது மிக நல்லது. தொடர்ந்து செய்யுங்கள்.

உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்களை பின்பற்றுகின்றார்கள். அவர்கள் சுய மகிழ்ச்சியை அடைய தடையாக எவற்றை எதிர்கொள்கின்றார்கள்? இத்தடைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றனவா? அல்லது மனித இனம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரே விதமான காரணங்களாக இருக்கின்றனவா? உதாரணமாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெவ்வேறாக இருக்கின்றதா?

குருதேவ்: ஆம். வெவ்வேறு விதமான கலாச்சாரங்களும் மொழிகளும் இப்பூமியில் உள்ளதால், அந்த அளவுக்கு சவால்களும் உள்ளன. அடிப்படையில் நான்கு விதமாக அவற்றை பிரிக்கலாம்.

1. வேலை வாய்ப்பு மற்றும் பணி சார்ந்த பிரச்சினைகள்.
2. பொருளாதாரப் பிரச்சினைகள்
3. உறவு முறைப் பிரச்சினைகள்
4. உடல் நலப் பிரச்சினைகள்

சிலருக்கு, தான் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கின்றோம் என்றே தெரிவதில்லை. இது வேறுவிதமான பிரச்சினை. இதனால் தான் மகிழ்ச்சியற்று இருக்கின்றேன் என்று குறிப்பிட்டு கூற இயலாமல் இருக்கின்றார்கள். இவைதாம் பொதுவான விஷயங்கள். ஒரு பிரச்சினையானது நீடித்து இருந்தால் மக்கள் அதற்கு பழகிக் கொண்டு விடுகின்றார்கள். அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே தோன்றுவதில்லை. எங்கேயோ பிரச்சினையை பற்றிய கூருணர்வே இல்லாமல் இருப்பதுவும் ஒரு பிரச்சினை தான். உதாரணமாக, சுற்றுச் சூழல் பற்றிய கூருணர்வு இன்மை. ஒரு சேரியில் வசித்து, அதை அப்படியே ஏற்றுக் கொண்டால், அதுவும் சமுதாயத்திற்கு பிரச்சினை தான்.

மோசடிகளும் சேரிகளும் இந்தியாவில் நிறையப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.ஆனால் அமெரிக்காவில் வகுப்பறைகளில் வன்முறை உள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு என்ன ஆகும் என்று தெரியாத நிலை உள்ளது. குழந்தைகள் பத்திரமாக வீட்டுக்குத் திரும்பும்வரை பெற்றோர் பீதியிலேயே உள்ளனர். குண்டு கலாச்சாரமும் உள்ளது. அமெரிக்காவில்  மளிகைசாமான் கடைகளை விட துப்பாக்கி விற்கும் கடைகள் அதிகமாக உள்ளன. செய்தித்தாட்களில் படிக்கும் இவ்விஷயம் திடுக்கிட வைப்பதாக உள்ளது. ஐரோப்பாவிலுள்ள நாற்பது சதவீதம் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் பெரிய பிரச்சினைகள். இந்தியாவில் மன அழுத்தம் ஒரு பிரச்சினை அல்ல, ஆனால் ஊழலும் வறுமையும் பிரச்சினைகள். குடும்பப் பண்புகள் சிதைவு மற்றுமொரு பிரச்சினையாகும்.

ஏற்கனவே கூறியுள்ளபடி,சமுதாயத்தில் மனிதப் பண்புகளை மீண்டும் நிலைநிறுத்தும் போது மக்கள் செயல்முனைப்படைந்து ஊழலை எதிர்க்கின்றார்கள், அதைத் தான் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காண்கின்றோம். சமுதாயத்தின் தீங்குகளை எதிர்த்து நிற்கின்றார்கள். போதைக்கு அடிமையாதல் இந்தியாவில் மற்றுமோர் பெரிய பிரச்சினை. கடந்த மூன்று ஆண்டுகளில் மது அருந்துதல் மூன்று மடங்காகக் கூடி விட்டது. இரண்டு வட இந்திய மாநிலங்கள் போதை பொருட்களால் முழுதும் விழுங்கப்பட்டு விட்டன. கண்டிப்பான சட்ட அமுல்படுத்துதல் மிகுந்த கடினமான பிரச்சினையாகிவிட்டது. ஆனால் இங்கே (அமெரிக்காவில்) சட்டங்கள் மிக நல்ல முறையில் அமைந்துள்ளன, அவை நல்லமுறையில் அமுல்படுத்தபட்டுள்ளன. இந்தியாவில் இத்தகைய சவால்கள் சந்திக்கப் பட வேண்டியுள்ளன, இந்தியாவின் பெரும் மக்கள்தொகை அதற்கு தடையாக  உள்ளது. 

இன்று உலகம் பல நிலைகளில் இது வரை கண்டிராத  சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் தலைவர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் அதிருப்திக்கிடையே  21 வது நூற்றாண்டு சவால்களை பயனுள்ள வகையில் எதிர்கொள்ள எவ்வகையான தலைமை தேவைப்படுகின்றது?

குருதேவ்: கல்வியறிவுள்ள சமுதாயத்தில், "நான் தலைவன்" என்று கூறிக் கொண்டிராமல், பின்னிருந்து தலைமை தாங்கும் ஒரு தலைவர் நமக்கு தேவை. நான் தலைவர், நான் தான் வழிகாட்டுவேன் என்னும் மனபோக்கில் இல்லாமல் பின்னிருந்து தலைமையை மேம்படுத்துதல்,  அதிகாரத்தை விட உத்வேகம் காட்டிப் பணிபுரிதல் ஆகிய  பண்புகள் கொண்ட ஒரு தலைவர் கல்வியறிவுள்ள சமுதாயத்தில் அதிக பணிபுரியக் கூடும்.

அடிப்படைக் கல்வி குறைவாயுள்ள சமுதாயத்திற்கு, தீர்மானிக்கும் ஆற்றலுள்ள தலைவர் தேவை. ஒரு டாக்டரிடம் நீங்கள் செல்லும் போது, அவர்," ஒரு வேளை  இந்த மருந்து பயனளிக்கலாம், முயற்சி செய்து பாருங்கள்" என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவீர்கள், அல்லவா? ஒரு டாக்டர் தீர்மானிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.இந்த மருந்து வேலை செய்யும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும். அறிவுபூர்வமான முயற்சிகளில் உயர் நிலையில் இல்லாத மக்களுக்கு நம்பிக்கையுள்ள தலைவர் பெரிதும் பயனுள்ளவராகின்றார். அதே சமயம், விவேகமும், அறிவார்ந்த மனப்போக்கும் உள்ள மக்களுக்கு  அவர்களை பின்னிருந்து மேம்படுத்தும் தலைவரே தேவை. எனவே ஒரு தலைவனுக்கு யாரை, எங்கே , தான் வழிநடத்துகின்றோம், என்பது தெரிந்திருக்க வேண்டும்.

குருதேவ், தற்கால தொழில்நுட்பம் மற்றும் கேளிக்கைகள்  காரணமாக உலக மக்கள் நம்பிக்கை மற்றும்கருணை ஆகிய பண்புகளுக்கு அண்மையில் இருக்கின்றார்களா அல்லது தொலைவில் உள்ளார்களா?

குருதேவ்: உலகில் மிக அதிகமான மக்கள் கைபேசி மற்றும் தொலைக்காட்சி வசதிகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நீங்கள் அறிய வேண்டும். எனவே இதில் பொது விதி காணமுடியாது.நான் ஏற்கனவே கூறியுள்ள படி உலகெங்கும் சுற்றிப் பார்த்தால் வெவ்வேறு வகையான மக்களைக் காண்பீர்கள். பதினேழாம் நூற்றாண்டிலிருப்பது போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்   இப்போதும் உள்ளார்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவானவையாக திகழ்பவை அன்பு, கருணை, சார்புடைமை ஆகும். உண்மையில் ஊடகங்களற்ற கிராமப் பகுதிகளில் மற்றும் ஒதுக்கமாயுள்ள பகுதிகளில் இவை மிக அதிகமாகவே உள்ளன. மனித நேயமும் மனிதப் பண்புகளும் மக்களுக்கு அதிகம் உள்ளன. மக்களுடன் நேயத் தொடர்பும் நேர்மையும் அவர்களுக்கு உள்ளன.

உலகம் இப்போது மேம்பட்டு வருவதாகக்  கருதுகின்றீர்களா?

குருதேவ்:சில பகுதிகளில் ஆம், சில இடங்களில் இல்லை. பொது விதியாகக் கொள்ள முடியாது. இங்கு வாஷிங்டனில் பிரகாசமாக இருப்பதாக் கூறினால், ஆம், ஆனால் உலகின் வேறு ஏதோ பகுதியில் இருளாக உள்ளது. ஆகவே, சில பகுதிகள் மேம்பாடு அடைகின்றன, வேறு சில பகுதிகள் பின்னடைவையே காண்கின்றன. எனவே, உலக சமூகம் விழிப்படைந்து எவ்வாறு அதிகமான ஒத்திசைவைக் கொண்டு வருவது என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு விதத்தில் நடைபெற்றும் வருகின்றது.

நாம் கற்பதை எவ்வாறு செயல்படுத்துவது? முன்னேற்றத்திற்கும் நல்ல மனித நாகரீகத்திற்கும் நமக்கு கிடைத்திருக்கும் வியத்தகு வழி வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ளும் பொறுப்பைத் தாங்கள் எங்களுக்குத் தந்திருக்கின்றீர்கள். இதுதான் எங்களது பொறுப்பு ஆகுமா?

குருதேவ்: மிகச் சரி! நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு துன்பத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டிருப்போரின் துயரையும் வேதனையையும் குறைக்க வேண்டும்.பல இடங்களில் குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. சமூகத்தில் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வரும் தொடர்பு இடைவெளியை அகற்றிப் பாலமாக செயல்பட வேண்டும்.

குருதேவ், பலர் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்தரமோதியை பற்றி அரசியல்வாதி என்னும் முறையில் எழுதியுள்ளார்கள். தாங்கள் அவரைத் தனி மனிதனாக அறிவீர்கள். மோதி ஒரு மனிதர் என்னும் முறையில், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?


குருதேவ்: அவர் ஒரு மென்மையான இதயம் கொண்ட கடினமான மனிதர். எப்போதும் அலுவலே குறியாக இருப்பார். மிகச் சிலரே அவரது மென்மையான இதயத்தினை அறிவார்கள். இதுவே அவரைப் பற்றிய அனைத்தையும் தெரிவிக்கும் என்று எண்ணுகின்றேன்.

மன்னிப்பு நிகழும் போது

வெள்ளி - 20, ஜூன், 2014(‘விமர்சனத்தை எதிர்கொள்வது’ என்ற பதிவின் தொடர்ச்சி)

கேள்வி - பதில்கள்

குருதேவ், மன்னிக்கக் கற்றுகொள்வது எப்படி?

குருதேவ்: ஏன் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? ஏன் அந்தத் தொல்லை? உங்கள் வெறுப்பை அப்படியே தக்க வைத்துக் கொள்ளுங்கள், அது முடியாத போது, நீங்கள் ஏற்கனவே மன்னித்து விட்டீர்கள். ஒருவரின் மீதான வெறுப்பை தக்க வைத்துக்கொள்வது எளிதல்ல. நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், ‘இந்த வெறுப்புணர்வினால் நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்,’ என்று சொல்வீர்கள். வெறுப்பு வீழ்ந்த அடுத்த கணமே நீங்கள் மன்னித்துவிட்டீர்கள். மன்னிப்பு ஒரு உயிர்ப்பான செயல்பாடு அல்ல, ‘ஓ, நான் இந்த கணத்திலிருந்து உன்னை மன்னிக்கிறேன்,’ என்பதல்ல. இப்படிப்பட்ட ஒரு ஈடுபாடான மன்னிப்பு உங்கள் அகங்காரத்தை தான் வளர்க்கும். அந்த வெறுப்பை தாளமுடியாமல், அந்தப் பகையைத் தாள முடியாமல், அந்தக் கோபத்தைத் தாளமுடியாமல், அந்த இயலாமையினாலேயே மன்னிப்பு நிகழ்கிறது.

நீங்கள் யார்மீதாவது மிகுந்த கோபம் கொண்டிருந்து, ஆனால் சமயத்தில் நீங்கள் கூறுகிறீர்கள், ‘இதை விட்டுத் தொலைக்கிறேன், எனக்கு இதுபற்றி கவலை இல்லை.’ அப்போது நீங்கள் அவரை மன்னிக்கிறீர்கள். எவ்வளவு காலம் தான் நீங்கள் அந்த வெறுப்பை கொண்டிருப்பீர்கள்? அது உங்களைச் சோர்வடையச் செய்கிறது. பலவீனமாகவும், மிகச் சோர்வாகவும், நோய்ப்பட்ட ஒரு தன்மையையும் உணர்வீர்கள். ஒரு கட்டத்தில், எனக்கு இந்த நோய் வேண்டாம் என்று நீங்கள் சொல்வீர்கள், பிறகு நீங்கள் தானாகவே மன்னித்து விட்டீர்கள். அகங்காரம் இல்லாமல் இருப்பதே மன்னிப்பு. நீங்கள் மன்னிக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது. ‘விட்டுத் தள்ளிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம்,’ என்பீர்கள்.

‘என் முழு உணர்வோடு உன்னை இன்று மன்னித்து விட்டேன்’, என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மன்னிக்கவில்லை! இன்னும் எதையோ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அவர் இப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது மிகவும் சூட்சுமமானது.

அன்பு குருதேவ், பொருட்களை அதன் வடிவத்தில் வைத்திருக்கும் சக்தி எது? இரவில் தூங்கச் சென்று காலையில் விழித்துப் பார்த்தால், எல்லா வீட்டுப் பொருட்களும் அப்படியே இருக்கிறது. வெளி உலகத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது எது? இயற்பியலில் நான் கண்ட பதில் திருப்திகரமாய் இல்லை.

குருதேவ்இது புத்திசாலித்தனம் என்று அழைக்கப்படுகிறது. ஏதோ ஒரு புத்திசாலித்தனம் இந்தக் கேள்வியை உங்களைக் கேட்க வைக்கிறது; அதுவே உங்கள் மூளையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. உங்கள் மூளையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அதே சக்தி தான் வீட்டுப் பொருட்களையும் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறது! பேருணர்வு அமர்வதற்கான நாற்காலி தான் மூளை. புரிந்ததா? உங்களிடம் அது இருந்தால், உங்களுக்குக் கிடைத்துவிட்டது. உங்களிடம் இருக்கிறது என்பது நிச்சயம், இல்லையென்றால் இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்!

சாதாரண மக்கள் இவையெல்லாம் அப்படித்தான் என்று பொதுவாக கருதிவிடுவார்கள். வாழ்கையின் நிதர்சனங்களை கவனிப்பதற்கு அசாதாரணமான மூளை தேவை. பிரபஞ்சத்தில் உள்ள இந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்புங்கள், அறிவியல் புத்தகங்களில் இருப்பதைக் கொண்டு திருப்தியடைந்து விடாதீர்கள். ஏனென்றால் அவை மாறிக்கொண்டே இருக்கிறது. தினம் தினம் புதுப்புது தத்துவங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையான புத்திசாலிகளே அறிவியலைத் தாண்டிப் பார்கிறார்கள்; அவர்கள் அறிவியல் ஆராய்சிகளில் கூட திருப்தியடைவதில்லை. மேலும் மேலும் நிரூபனம் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள் தலையையும் அதன் உள்ளே இருக்கும் சக்தியையும் பாராட்டி கொள்ளுங்கள். உங்கள் முதுகை தட்டிக் கொடுங்கள், அதிலுள்ள சக்தியையும் தட்டிக் கொடுங்கள். நான் சொல்கிறேன் அது கட்டுக்கோப்பாகவே இருக்கிறது!

குருதேவ், எனக்கு வாத நாடி சமமில்லை. பெரும்பாலான நேரங்களில் என் மனம் நிலையாய் இல்லை. ஆழ்ந்து தியானம் செய்ய முடிவதே இல்லை. என்ன செய்வது?

குருதேவ்இந்த சமான நிலையின்மை நிரந்தரம் அல்ல. அது நிரந்தரமில்லாததாலேயே அதை நிலையின்மை என்று அழைக்கிறோம். நீண்ட நேரம் இருக்க முடியாது. வாத நாடி சமமில்லை என்பது அப்படியே இருக்காது. நல்ல ஓய்வு, ஆயுர்வேத அபயங்கம், உணவில் சற்று கவனம், ஆழ்ந்த தூக்கம், இவை போதும். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும். இதைப் பற்றி உட்கார்ந்து அதிகம் யோசித்து கொண்டிருக்கக் கூடாது. இது உடம்பின் இயல்பு. சில நேரம் விறைப்பாகவும் சில நேரம் தளர்ந்தும் இருக்கும். தலைக்கும் அதே நிலை தான்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இயற்கை அப்படி தான். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், செய்ய வேண்டியதை செய்து விட்டு மேலே சென்று கொண்டேயிருங்கள்.

நான் சரியானவற்றை தான் செய்கிறேனா என்று எப்படித் தெரிந்து கொள்வது? சில நேரம் மிகவும் குழம்பிவிடுகிறேன். 

குருதேவ்நீங்கள் சரியானவற்றை செய்யாத போது, ஏதோ உங்களை இடிக்கிறது, ஏதோ ஒன்று உங்களை எரிச்சல் மூட்டுகிறது; சரியானவற்றை செய்யவில்லை என்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் சொல்கிறது. இப்படித்தான் தெரிந்துகொள்வீர்கள். சரியானவற்றை செய்யும் போதும், சில நேரம் சந்தேகமும் வரும். எனவே, சந்தேகம் வந்தால் நீங்கள் செய்வது சரிதான் என்று தெரிந்து கொள்ளுங்கள். எரிச்சல் ஏற்பட்டால் நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சந்தேகம் எப்போதும் நல்லவற்றை பற்றியே.மேலும், உங்களில் பிராண சக்தி குறைவாய் இருக்கும்போது சந்தேகம் வருகிறது. அதிகம் தியானம் செய்வதன் மூலம் பிராண சக்தியை அதிகரிக்கலாம். பிறகு இந்தச் சந்தேகங்கள் மனதில் எழாது.

குருதேவ், இந்த உலகில் இப்போதும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. உலக அமைதி எப்படி ஏற்படும்?

குருதேவ்சில நேரம் அப்படி நீங்கள் உணர்வீர்கள். நான் கூட அப்படி உணர்ந்திருக்கிறேன், 2003ல் இருந்து ஈராக்கில் ஏராளமான வேலைகள் செய்து வருகிறோம். சமூகங்கள் ஒன்றாய் வாழ முயற்சி எடுத்திருக்கிறோம். ஆயிரக்காணக்கான ஈராக்கியப் பெண்கள் முகத்தில் புன்னகைகளை வரவழைத்திருக்கிறோம். போருக்குப் பிறகு ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறோம். சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை தொட்டிருக்கிறோம்,அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். மேலும் அவர்கள், மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஊன்று கோலாய் இருந்து வருகிறார்கள். இப்போது திரும்பிப் பாருங்கள், நாம் செய்த வேலைகள் அனைத்தும் வீணாகி விட்டார் போல இருக்கிறது. எல்லா வேலைகளும் வீணாகப் போய்விட்டது. இந்த எண்ணம் எங்களிடமும் வரத்தான் செய்கிறது. ஆனாலும், நாம் ஏதோ செய்திருக்கிறோம்.

எப்படியும் பயனில்லை, அதனால் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால்? இந்த 10,000 பேர் வாழ்க்கையில் ஏற்பட்ட அமைதி இருந்திருக்காது. நம்மால் முடிந்த அளவு சிறப்பாக செய்து விட்டோம், மேலும் செய்து வர வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மனம் சோர்ந்துவிடக் கூடாது. நம் வேலையைத் தொடர்ந்து செய்துவரவேண்டும். சரித்திரத்தில், வன்முறைகளே கொஞ்சமும் இல்லாத ஒரு காலகட்டம் இல்லவே இல்லை. உலகின் பல இடங்களில் நடு நடுவே அமைதியும் வளமும் இருந்து வருகிறது. நாம் செய்துவருவதை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை என்றே நினைக்கிறேன். சூழ்நிலை மோசமாக இருந்தாலும், நம்மை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் நாம் தொடர்ந்து நம் வேலையைச் செய்து வரவேண்டும் என்றே நினைக்கிறேன். நம்முடைய இலட்சியத்திலிருந்து நம்மை எதனாலும் விலக்க முடியாது.

விமர்சனத்தை எதிர்கொள்ளுதல்

பேட்  ஆண்டோகஸ்ட் ,  ஜெர்மனி

ஜூன் 20, 2014

கேள்வி - பதில்கள்

கே: அன்பு குருதேவ்! யாரவது என்னை விமர்சிக்கும் போது நான் ஒளிந்து கொள்ளுகிறேன். சண்டை அல்லது வாதம் செய்யாமலும் எப்படி விமர்சனத்தை சமாளிப்பது ?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் பெருந்தன்மையானவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் விமர்சனத்தை எதிர்கொள்ளும் போதும் நீங்கள் கடல் போல பரந்திருப்பவர் என்றும் எதையும் உள்ளே வாங்கிக் கொள்ளக் கூடியவர் என்றும் தெரிந்து இருக்கவும், நீங்கள் குறுகியவர் என்னும் எண்ணம் இருக்கும் போது தான் உங்களால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று தோன்றும். நீங்கள் பரந்தவர் என்னும் எண்ணம் தான், நான் இந்த விமர்சனத்தை விட பெரியவன் என்னால் இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தோன்றும்.

கே: குருதேவ்! கிரியாயோகா ஏற்கனவே இருக்கும் போது, சுதர்சன கிரியாவை அறிமுகம் செய்ததின் காரணம் என்ன? இரண்டுமே பின்பற்றுபவர்களை ஒரே இலக்கிற்கு கொண்டு செல்லுமா?

ஸ்ரீ ஸ்ரீ: மற்றொரு கிரியா எதனால் வந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது நல்லதே, ஏன் என்றால் கிரியாயோகா செய்ததை விட அதிகமானவர்களுடைய வாழ்க்கையில் உதவி செய்துள்ளது. மற்றொருபுறம், பிற உத்திகளை பற்றி கருத்துகள் கூற நமக்கு உரிமை கிடையாது.

அந்த சமயத்தில் மக்களுக்கு அது உபயோகமாக இருந்தது.இன்று இது மிகவும் உபயோகமாக உள்ளது. இன்றும் சிலருக்கு கிரியாயோகா பயனுள்ளதாக இருக்கும். சுதர்சன கிரியா அதிக மக்களுக்கு மிகவும் பயன் தருவதாக இருக்கின்றது என்பது நமக்கு நிச்சயமாக தெரியும். எனவே நாம் அதை ஏற்றுக்கொள்ளுவோம் இதை  கொண்டாடுவோம்.  

கே: குருதேவ்! பஜனைகள் பாடுவதை நேசிக்கிறேன், ஆனால் சில நேரங்களில் மிகவும் மேலோட்டமாக இருப்பது போலவும் ஒரு நல்ல இசையை மட்டுமே கொடுப்பது போலவும் தோன்றுகிறது. நான் எவ்வாறு பாடும் போது உண்மையான பக்தியை கண்டுபிடிப்பது?

ஸ்ரீ ஸ்ரீ: இயல்பாக இருக்கவும். உங்களுடைய உணர்ச்சிகள் பற்றி கவலைவேண்டாம். உங்களுக்கு நேற்று பக்தி இருந்தது, அடுத்த நாள் ஏற்படவில்லை என்றால், அதை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. அந்த பக்தி கூட ஒரு அன்பளிப்பே. பக்தி உயர்ந்து வரும் பொது நன்றியுடன் இருக்கவும். அது வரவில்லை என்றால் ஒரு கல் போல பொறுமையுடன் இருக்கவும். இது கடந்து செல்லும் ஒரு கட்டமாகும். இம்மாதிரியான வெற்று உணர்ச்சி வாழ்வில் சில நேரம்  ஏற்படும். ஈடுபாடு ஏதுமற்று மனக்கிளர்ச்சி இல்லாமல் இருப்பீர்கள். இந்த மாதிரி மந்தமான நிலை வரலாம், ஆனால் அது ஒரு குறுகிய நேரத்திற்கே.

அந்த மாதிரி தருணங்கள் நம் வாழ்வில் வருவதை நாம் பொருட்படுத்துவது இல்லை. நான் இன்று கண்டிப்பாக பக்தியுடன் இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொள்வது இல்லை. மேகமூட்டமான தினங்களுள் ஒன்று என எண்ணி சூரிய ஒளிக்காக காத்திருக்கவும். 

கே: குருதேவ்! எனக்கு பேசவோ அல்லது வெளிப்படுத்தவோ யாரும் இல்லாத போதும் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். இதுவரை நான் என்னுடைய வேலையில் வெற்றி அடையவில்லை மற்றும் பெரும்பாலும் அதிர்ஷ்டம் இன்றி இருக்கிறேன். என்னால் எதையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர இயலவில்லை. உங்களுடைய அறிவுரையை கொடுத்து உதவவும்.  

ஸ்ரீ ஸ்ரீ: என்னால் எதையுமே முடிக்க முடியவில்லை என்ற வலியும் அக்கறையுமே உங்களை ஒரு வேலையை முடிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும். ஓய்வாக இருக்கவும்.உங்களால் வேலைகளை முடுக்க முடியவில்ல என்னும் அக்கறை உங்களிடம் இல்லை என்றால் தான் அது பிரச்சினை. ஆனால் உங்களிடம்,ஒ என்னால் முடிக்க முடியவில்லை. முடித்துவிட விரும்புகிறேன்  என்னும் அந்த அக்கறை உள்ளது.முடிக்க வேண்டும் என்ற அந்த தீவிர ஆசை உங்களிடம் இருக்கும் வரையில் நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. அது உங்களை முடிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.

கே: குருதேவ்!தினமும் கிரியா மற்றும் தியானம் செய்த பின்னரும், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு கொண்டவர்களை என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ: அவர்கள் இன்னும் அதிக பயிற்சிகள் பயில வேண்டும் மற்றும் சத்சங்கங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்கள் அவர்களை எப்போதும் ஏதாவது வேலையிலும் மற்றும் சேவையிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.    

கே: குருதேவ்! என்னுடைய தினசரி வாழ்க்கையிலே நான் மிகவும் மெதுவாகவும் ஆழ்ந்தும் சுவாசித்தி கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் என்னால் உடல் உழைப்பு உள்ள வேலைகள் செய்வதும் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப வேலை செய்வதும் கடினமாக இருக்கிறது. தயவு செய்து அறிவுறுத்தவும்.

ஸ்ரீ ஸ்ரீ: சிறிது யோகப் பயிற்சிகளும், உடல் பயிற்சிகளும் செய்யவும். மேலோட்டமான மூச்சு தியானம் செய்ய நல்லது, ஆனால் வேலைகள் செய்து கொண்டிருக்கும் போதல்ல.
 
கே: குருதேவ்! எவ்வாறு நான் என்னுடைய சுய மதிப்பையும் சுய மரியாதையையும் அதிகரித்துக் கொள்ளுவது?

ஸ்ரீ ஸ்ரீ: இந்த பூமியில் அது சாத்தியமானதல்ல. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கே மறைந்தாலும் கூட உங்களால் உங்களுடைய சுய மரியாதையை அதிகரிக்க முடியாது. அதை ஏற்றுக்கொள்ளவும். முடிந்ததா! உங்களிடம் அது இல்லை என்று நினைத்து அதை அடைய நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றாலும், அது நடக்கப்போவது இல்லை. அது உங்களிடம் ஏற்கனவே உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவும்.