மன்னிப்பு நிகழும் போது

வெள்ளி - 20, ஜூன், 2014



(‘விமர்சனத்தை எதிர்கொள்வது’ என்ற பதிவின் தொடர்ச்சி)

கேள்வி - பதில்கள்

குருதேவ், மன்னிக்கக் கற்றுகொள்வது எப்படி?

குருதேவ்: ஏன் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? ஏன் அந்தத் தொல்லை? உங்கள் வெறுப்பை அப்படியே தக்க வைத்துக் கொள்ளுங்கள், அது முடியாத போது, நீங்கள் ஏற்கனவே மன்னித்து விட்டீர்கள். ஒருவரின் மீதான வெறுப்பை தக்க வைத்துக்கொள்வது எளிதல்ல. நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், ‘இந்த வெறுப்புணர்வினால் நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்,’ என்று சொல்வீர்கள். வெறுப்பு வீழ்ந்த அடுத்த கணமே நீங்கள் மன்னித்துவிட்டீர்கள். மன்னிப்பு ஒரு உயிர்ப்பான செயல்பாடு அல்ல, ‘ஓ, நான் இந்த கணத்திலிருந்து உன்னை மன்னிக்கிறேன்,’ என்பதல்ல. இப்படிப்பட்ட ஒரு ஈடுபாடான மன்னிப்பு உங்கள் அகங்காரத்தை தான் வளர்க்கும். அந்த வெறுப்பை தாளமுடியாமல், அந்தப் பகையைத் தாள முடியாமல், அந்தக் கோபத்தைத் தாளமுடியாமல், அந்த இயலாமையினாலேயே மன்னிப்பு நிகழ்கிறது.

நீங்கள் யார்மீதாவது மிகுந்த கோபம் கொண்டிருந்து, ஆனால் சமயத்தில் நீங்கள் கூறுகிறீர்கள், ‘இதை விட்டுத் தொலைக்கிறேன், எனக்கு இதுபற்றி கவலை இல்லை.’ அப்போது நீங்கள் அவரை மன்னிக்கிறீர்கள். எவ்வளவு காலம் தான் நீங்கள் அந்த வெறுப்பை கொண்டிருப்பீர்கள்? அது உங்களைச் சோர்வடையச் செய்கிறது. பலவீனமாகவும், மிகச் சோர்வாகவும், நோய்ப்பட்ட ஒரு தன்மையையும் உணர்வீர்கள். ஒரு கட்டத்தில், எனக்கு இந்த நோய் வேண்டாம் என்று நீங்கள் சொல்வீர்கள், பிறகு நீங்கள் தானாகவே மன்னித்து விட்டீர்கள். அகங்காரம் இல்லாமல் இருப்பதே மன்னிப்பு. நீங்கள் மன்னிக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது. ‘விட்டுத் தள்ளிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம்,’ என்பீர்கள்.

‘என் முழு உணர்வோடு உன்னை இன்று மன்னித்து விட்டேன்’, என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மன்னிக்கவில்லை! இன்னும் எதையோ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அவர் இப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது மிகவும் சூட்சுமமானது.

அன்பு குருதேவ், பொருட்களை அதன் வடிவத்தில் வைத்திருக்கும் சக்தி எது? இரவில் தூங்கச் சென்று காலையில் விழித்துப் பார்த்தால், எல்லா வீட்டுப் பொருட்களும் அப்படியே இருக்கிறது. வெளி உலகத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது எது? இயற்பியலில் நான் கண்ட பதில் திருப்திகரமாய் இல்லை.

குருதேவ்இது புத்திசாலித்தனம் என்று அழைக்கப்படுகிறது. ஏதோ ஒரு புத்திசாலித்தனம் இந்தக் கேள்வியை உங்களைக் கேட்க வைக்கிறது; அதுவே உங்கள் மூளையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. உங்கள் மூளையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அதே சக்தி தான் வீட்டுப் பொருட்களையும் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறது! பேருணர்வு அமர்வதற்கான நாற்காலி தான் மூளை. புரிந்ததா? உங்களிடம் அது இருந்தால், உங்களுக்குக் கிடைத்துவிட்டது. உங்களிடம் இருக்கிறது என்பது நிச்சயம், இல்லையென்றால் இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்!

சாதாரண மக்கள் இவையெல்லாம் அப்படித்தான் என்று பொதுவாக கருதிவிடுவார்கள். வாழ்கையின் நிதர்சனங்களை கவனிப்பதற்கு அசாதாரணமான மூளை தேவை. பிரபஞ்சத்தில் உள்ள இந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்புங்கள், அறிவியல் புத்தகங்களில் இருப்பதைக் கொண்டு திருப்தியடைந்து விடாதீர்கள். ஏனென்றால் அவை மாறிக்கொண்டே இருக்கிறது. தினம் தினம் புதுப்புது தத்துவங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையான புத்திசாலிகளே அறிவியலைத் தாண்டிப் பார்கிறார்கள்; அவர்கள் அறிவியல் ஆராய்சிகளில் கூட திருப்தியடைவதில்லை. மேலும் மேலும் நிரூபனம் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். உங்கள் தலையையும் அதன் உள்ளே இருக்கும் சக்தியையும் பாராட்டி கொள்ளுங்கள். உங்கள் முதுகை தட்டிக் கொடுங்கள், அதிலுள்ள சக்தியையும் தட்டிக் கொடுங்கள். நான் சொல்கிறேன் அது கட்டுக்கோப்பாகவே இருக்கிறது!

குருதேவ், எனக்கு வாத நாடி சமமில்லை. பெரும்பாலான நேரங்களில் என் மனம் நிலையாய் இல்லை. ஆழ்ந்து தியானம் செய்ய முடிவதே இல்லை. என்ன செய்வது?

குருதேவ்இந்த சமான நிலையின்மை நிரந்தரம் அல்ல. அது நிரந்தரமில்லாததாலேயே அதை நிலையின்மை என்று அழைக்கிறோம். நீண்ட நேரம் இருக்க முடியாது. வாத நாடி சமமில்லை என்பது அப்படியே இருக்காது. நல்ல ஓய்வு, ஆயுர்வேத அபயங்கம், உணவில் சற்று கவனம், ஆழ்ந்த தூக்கம், இவை போதும். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும். இதைப் பற்றி உட்கார்ந்து அதிகம் யோசித்து கொண்டிருக்கக் கூடாது. இது உடம்பின் இயல்பு. சில நேரம் விறைப்பாகவும் சில நேரம் தளர்ந்தும் இருக்கும். தலைக்கும் அதே நிலை தான்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இயற்கை அப்படி தான். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், செய்ய வேண்டியதை செய்து விட்டு மேலே சென்று கொண்டேயிருங்கள்.

நான் சரியானவற்றை தான் செய்கிறேனா என்று எப்படித் தெரிந்து கொள்வது? சில நேரம் மிகவும் குழம்பிவிடுகிறேன். 

குருதேவ்நீங்கள் சரியானவற்றை செய்யாத போது, ஏதோ உங்களை இடிக்கிறது, ஏதோ ஒன்று உங்களை எரிச்சல் மூட்டுகிறது; சரியானவற்றை செய்யவில்லை என்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் சொல்கிறது. இப்படித்தான் தெரிந்துகொள்வீர்கள். சரியானவற்றை செய்யும் போதும், சில நேரம் சந்தேகமும் வரும். எனவே, சந்தேகம் வந்தால் நீங்கள் செய்வது சரிதான் என்று தெரிந்து கொள்ளுங்கள். எரிச்சல் ஏற்பட்டால் நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சந்தேகம் எப்போதும் நல்லவற்றை பற்றியே.மேலும், உங்களில் பிராண சக்தி குறைவாய் இருக்கும்போது சந்தேகம் வருகிறது. அதிகம் தியானம் செய்வதன் மூலம் பிராண சக்தியை அதிகரிக்கலாம். பிறகு இந்தச் சந்தேகங்கள் மனதில் எழாது.

குருதேவ், இந்த உலகில் இப்போதும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. உலக அமைதி எப்படி ஏற்படும்?

குருதேவ்சில நேரம் அப்படி நீங்கள் உணர்வீர்கள். நான் கூட அப்படி உணர்ந்திருக்கிறேன், 2003ல் இருந்து ஈராக்கில் ஏராளமான வேலைகள் செய்து வருகிறோம். சமூகங்கள் ஒன்றாய் வாழ முயற்சி எடுத்திருக்கிறோம். ஆயிரக்காணக்கான ஈராக்கியப் பெண்கள் முகத்தில் புன்னகைகளை வரவழைத்திருக்கிறோம். போருக்குப் பிறகு ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறோம். சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை தொட்டிருக்கிறோம்,அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். மேலும் அவர்கள், மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஊன்று கோலாய் இருந்து வருகிறார்கள். இப்போது திரும்பிப் பாருங்கள், நாம் செய்த வேலைகள் அனைத்தும் வீணாகி விட்டார் போல இருக்கிறது. எல்லா வேலைகளும் வீணாகப் போய்விட்டது. இந்த எண்ணம் எங்களிடமும் வரத்தான் செய்கிறது. ஆனாலும், நாம் ஏதோ செய்திருக்கிறோம்.

எப்படியும் பயனில்லை, அதனால் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால்? இந்த 10,000 பேர் வாழ்க்கையில் ஏற்பட்ட அமைதி இருந்திருக்காது. நம்மால் முடிந்த அளவு சிறப்பாக செய்து விட்டோம், மேலும் செய்து வர வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மனம் சோர்ந்துவிடக் கூடாது. நம் வேலையைத் தொடர்ந்து செய்துவரவேண்டும். சரித்திரத்தில், வன்முறைகளே கொஞ்சமும் இல்லாத ஒரு காலகட்டம் இல்லவே இல்லை. உலகின் பல இடங்களில் நடு நடுவே அமைதியும் வளமும் இருந்து வருகிறது. நாம் செய்துவருவதை நிறுத்த எந்தக் காரணமும் இல்லை என்றே நினைக்கிறேன். சூழ்நிலை மோசமாக இருந்தாலும், நம்மை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் நாம் தொடர்ந்து நம் வேலையைச் செய்து வரவேண்டும் என்றே நினைக்கிறேன். நம்முடைய இலட்சியத்திலிருந்து நம்மை எதனாலும் விலக்க முடியாது.