எதையும் யாரிடமிருந்தும், பெற்றுக் கொள்ளாதீர்கள்

புதன்கிழமை, 18 ஜூன் 2014,

பெங்களூரு, இந்தியா


(ஞானோபதேசம் என்னும் ஆய்வுப் பொருள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், யோகா சூத்ராவில் அபரிக்ரஹா (உடைமைப் பற்றின்மை அல்லது பேராசையின்மை என்னும் கோட்பாடு ) மூலம் ஒருவன் தன்னுடைய முற்பிறவிகளை பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையா?

குருதேவ்: ஆம். நீங்கள் யாரிடமிருந்தும் எதையும் வசை மொழிகளை கூட பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் நீங்கள் மிகுந்த மையம் உள்ளவராகின்றீர்கள். பொருட்கள் என்பது வேறு. ஒருவர் உங்களுக்கு ஏதேனும் பொருள் கொடுத்தால் அதைப் பெற்றுக் கொள்ளாமல் மறுப்பது எளிது. ஆனால் மக்கள் உங்களைப் பழிக்கும் போது அச்சொல்லை மறுக்க முடியாது. உண்மையில், ஒருவர் உங்களை அவமானப் படுத்தும்போது, அவர் அதைக் கூறி முடிக்கும் முன்னரே நீங்கள் அந்த அவமானத்தை ஏற்றுக் கொண்டு விடுகின்றீர்கள். அவர் உங்களை இன்னும் முழுவதுமாக தூற்றி அவமானப்படுத்தி முடிக்கவில்லை, அவர் அப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றார் ஆனால் அதற்குள்ளேயே நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள்.

அதனால் தான் அபரிக்ரஹா முக்கியமானது என்று கூறப்படுகின்றது. அதாவது யாருடைய   தூற்றுதலையும், புகழுரைகளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். புகழுரைகள் உங்கள் தலைக்கேறி, ஆணவம் பிடித்தவராக்கி விடும். தூற்றுதல் உங்கள்  மனதிற்குள் சென்று ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தும். எனவே அபரிக்ரஹா என்பது நேர்மறை அல்லது எதிர்மறை எதுவானாலும் அவற்றை பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ளாமை ஆகும். அவ்வாறு அவர்கள் கொடுக்கும்போது, வெறும் புன்முறுவலுடன் நிறுத்திக் கொள்ளுங்கள், அதை மனதில் உழல விடாதீர்கள். ஆகவே, உங்களைப் பற்றிய மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலை கொள்ளாத நிலையே அபரிக்ரஹா ஆகும். எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஒருவர் என்ன பொருள் கொடுக்கின்றார், எவ்வளவு பொருள் கொடுக்கின்றார் என்றெல்லாம் அமர்ந்து ஆராயாத நிலைதான் அபரிக்ரஹா ஆகும்.

நாம் எவ்வாறு இந்த ஞானோபதேச நிலையை அடைய முடியும்?

குருதேவ்: அதற்குத்தான் தியானம் செய்யுமாறு கூறுகின்றோம்.. ஏன் பாடுகிறோம்? அப்போது மூளையின் வலதுபுறம் செயல்படுகின்றது. ஞானச் செய்திகளையும்,தர்க்கரீதியான விஷயங்களையும் ஏன் விவாதிக்கின்றோம்? அப்போது மூளையின் இடதுபுறம் செயல் படுகின்றது. அதற்குத்தான் இவ் விரண்டையும் சத்சங்கத்தில் செய்து, மூளையின் இரு பகுதிகளையும் சம நிலையில் வைக்கின்றோம். இது முற்றிலும் விஞ்ஞான ரீதியானது ஆகும். ஒருவர் "இது இயலாத விஷயம்" என்று கூறினால் நீங்கள் அவருக்கு என்ன கூற முடியும்?" சரி! அதுதான் உங்கள் அனுபவம்” என்றுதான் கூற முடியும். முக்கியமானது என்னவென்றால், ஒருவர் அனுபவங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். இது தான் சரி. எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருவர் இருந்தால் அவரிடம் எதுவும் கூறிப் பயனில்லை. வெறி உணர்வுடன் "இதுதான் சரி, எனக்கு எல்லாம் தெரியும்" என்று எண்ணினால் அது சரியல்ல.

பகவான் மகாவீரர் (ஜைன சமயத்தைப் போதித்த ஆன்மீக குரு) அறிவினை கையாளும் சயத்வா என்னும் அறிவியல் ரீதியான வழியை தந்துஅருளினார். அது, "ஒரு வேளை எனக்குத் தெரியாத ஒன்று ஏதோ இருக்கின்றது" என்னும் புரிதல் ஆகும். யாராவது," இதுதான் சரியானது, எனக்கு எல்லாம் தெரியும்" என்று கூறினால் அது சரியல்ல. அதற்கே அவர் சயத்வா பற்றிக் கூறினார். "ஒருவேளை வேறெதுவும் வழி இருக்குமோ என்றும் எண்ண வேண்டும். எதுவுமே இருக்கலாம், இப்படித் தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இதுதான் முதிர்ச்சியடைந்த அறிவு நிலை எனப்படும், இல்லையெனில் முதிர்ச்சியற்ற நிலை ஆகும்.

ஒருவர் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி புத்தகங்களை ஏராளமாக எழுதலாம். ஞானோபதேசம் பெற்றுவிட்டதாக கூறிக்கொள்ளும் போலி அறிவுஜீவிகள் இவ்வுலகில் பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றார்கள். தங்களை குரு என்றெல்லாம் அழைத்துக்கொண்டு மிகுந்த அகந்தையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். பிறரைக் குறைகூறி விமரிசிக்கின்றார்கள். ஒருவர், குழந்தையைப் போன்று களங்கமில்லாமல் இருத்தல் என்பது முட்டாள்தனம் என்று கூறுகின்றார்.  இத்தகையவர்கள் முட்டாள் தனம் மற்றும் களங்கமின்மை இவற்றை எல்லாம் என்ன வென்று புரிந்து கொள்ளாமலேயே விமரிசனம் செய்கின்றார்கள்! பொது மக்களிடையே மதிப்புள்ளவர்களின் முதுகில் சவாரி செய்ய எண்ணி அவர்களைப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் இவ்வாறு பிறரின் மதிப்பில் சவாரி செய்ய மாட்டார்கள் தங்களுக்கு எது தெரியுமோ எதைச் செய்ய விரும்புகின்றார்களோ அதையே செய்வார்கள்.

பிறர் என்ன கூறுகின்றார்கள் என்பதைப் பற்றி நாம் கருத்துக் கூறத் தேவையில்லை.முக்கியமானது என்னவென்றால் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய அறிவையோ, அறியாமையையோ வெளிக் காட்டிக் கொள்ளும் உரிமை உள்ளது. இதுதான் எனது கூற்று. ஒவ்வொருவருக்கும் தங்களது அறிவை மட்டுமல்ல, அறியாமையையும் வெளிக்காட்டிக் கொள்ளும் உரிமை உள்ளது.

குருதேவ், என்ன கூறப்பட வேண்டுமோ அது கூறப்பட்டு விட்டது. ஆனால் மக்கள் அதைக் கேட்டு  ஏற்றுக் கொண்டு விட்டார்களா? இதனால் தான் நிறைய ஆன்மீகத் தலைவர்கள் மீண்டும் தோன்றிக் கொண்டிருக்கின்றார்களா? இப்போது மக்கள் கவனித்தறிகின்றார்கள் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ளுவது?

குருதேவ்: விவசாயி இந்தக் கேள்விக்கு சரியாகப் பதிலளிக்க முடியும். ஒரு விவசாயி என்ன செய்கின்றான்? நிலத்தை உழுது, விதைகளை விதைக்கின்றான். சில விதைகள் முளைக்கின்றன. சில விதைகள் முளைப்பதில்லை. அவன் ‘இந்த விதை முளைத்து விட்டது, அந்த விதை முளைக்கவில்லையே’ என்றெல்லாம் எண்ணிக் கவலைப்படுவதில்லை. அவன் விதைகளை விதைக்கின்றான். முளைப்பவை முளைக்கின்றன, முளைக்காதவை முளைக்கவில்லை. சரியாக உழப்பட்ட நிலத்தில் விதைகள் பெரும்பாலும் முளைத்து விடும். சரியான காலத்தில் விதைக்கபட்டால் விதைகள் முளைத்து விடும். இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.செய்வதில் எத்தனை இலக்கினை எட்டும், எட்டாது, என்பதை பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்.

ஒரு பாடகன் பாடிக் கொண்டிருக்கின்றான். எத்தனை பேர் கவனிக்கின்றாகள் என்று பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவர் புல்லாங்குழல் அல்லது சிதார் வாசித்து கொண்டிருக்கும் போது பார்வையாளர்களில் உள்ள ஒவ்வொருவரும் அதைக் கவனித்துக் கொண்டிருப்பதாகக் கருத முடியாது. சிலர் கண் அயரக் கூடும். அது அவர்களது தனிப்பட்ட உரிமை.

பல சமயங்களில் சிலர் இனிமையற்ற வகையில் சிலவற்றை என்னிடம் கூறும் போது, அந்த சந்தர்ப்பத்தில் என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. பிறகு, அதைப் பற்றியே திரும்ப நீண்ட நேரத்திற்கு எண்ணிக் கொண்டிருக்கின்றேன். இப்படி கூறியிருக்கலாமோ என்றெல்லாம் எண்ணுகின்றேன்.

குருதேவ்: அங்கு தான் ஞானம் உதவுகின்றது. உங்கள் மனதை இது நெடு நாட்களாக அரித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் அறிகின்றேன். அதனால் தான், "அனைத்துமே ஒன்றுமில்லை, அனைத்தும் மறைந்து விடும்." இவர்கள் அனைவருமே ஒரு பொருட்டில்லை. அனைவருமே ஒரு நாள் மறைந்து விடுவார்கள். மூளை சில அபிப்பிராயங்களை தந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நாக்கு ஏதோ உளறிக் கொண்டிருக்கின்றது. செவிகளை சென்றடைந்து விட்ட வாயிலிருந்து வரும் சப்தமானது, மனதை சலசலக்க வைக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. இதை அறிவியல் ரீதியாகப் பாருங்கள். அதனால் தான், ஞானம் விஞ்ஞானம் இரண்டுமே முக்கியமானது. இரண்டிலுமே எதுவுமே ஒரு பொருட்டில்லை என்பது தான் கருத்து. இதை புரிந்து கொள்வது, உங்களுக்கு ஆழ்மன உறுதியுடன் கூடிய புன்னகையை கொடுக்கும்.

குருதேவ், ஒருவர் இடைவிடாது தீயவற்றையே பேசிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: ஒருவர் இடைவிடாது எதையாவது செய்து கொண்டிருந்தால் அது அவரது சுபாவம் ஆகும். தினமும் நாய் குறைக்கின்றது என்று கூறுவீர்களா? நாயால்தான் குறைக்க முடியும்! ஒரு நாய் " மியாவ் " என்று குரல் கொடுக்காது. அது போன்று இதையும் அவரவர்  சுபாவம் என்று நீங்கள் புரிந்து  கொள்ள வேண்டும். இடைவிடாது ஒருவர் ஏதேனும் செய்தால் நீங்கள் நன்றாக இளைப்பாற வேண்டும். எப்போதாவது ஒருவர் எதையாவது செய்தால்," என்ன ஆயிற்று? எதையாவது தவறாக உட்கொண்டுவிட்டாரா என்ன" என்று கருதிக் கவலைப்படலாம். ஒருவர் இடைவிடாது அரற்றிக் கொண்டிருந்தால், உங்களுக்கு அது விடுதலையை தருகின்றது. அவர்கள் அப்படித்தான் என்று தான் கருத வேண்டும். ஏன் கவலைப்படுகின்றீர்கள்? அந்த நாய் உங்கள் வீட்டில் இருக்கின்றது, அடுத்த வீட்டில் அல்ல.! உங்கள் வீட்டில் இருப்பதால், எதையாவது தின்பதற்குக் கொடுத்து அதன் வாயை மூடலாம். அதுவே அடுத்த வீட்டு நாயானால் பகல் முழுவதும் குறைப்பு, இரவு முழுவதும் அழுகை என்றிருந்தால், உங்களால் எதுவுமே செய்ய முடியாது. எனவே எப்படி சூழல் அமைகின்றதோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இதை உங்கள் மனதிற்கு எடுத்துக் கூறிக்கொண்டே முன்னேறிச் செல்லுங்கள். நல்ல காது அடைப்புக் குமிழிகளை வாங்கி காதுகளில் அணிந்து கொள்ளுங்கள். அல்லது, நாய் தாலாட்டு பாடுவதாக கருதி, தூங்கி விடுங்கள்!