புகார் செய்வதை நிறுத்தி விட்டு, வாழ துவங்குகள்...

திங்கள்கிழமை 9 ஜூன் 2014

பெங்களூர், இந்தியா

“உன் திறமைகள் மற்றவர்களுக்காக“ என்ற விஷயத்தை பற்றிய உரையாடலின் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கேள்வி – பதில்கள்

நாம் குழந்தைகளாக இருந்தபோது நம் பெற்றோர்களிடம் புகார் செய்கிறோம். பள்ளிக்கு செல்லும்போது நம் ஆசிரியர்களை பற்றியும், மற்ற நண்பர்களைப் பற்றியும் புகார் செய்கிறோம். வேலை செய்யும் இடத்தில் நம் மேலாளரைப் பற்றியோ, நம்முடன் வேலை செய்பவர்களை பற்றியோ புகார் சொல்கிறோம். எப்போதும் புகார் செய்யும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?

குருதேவர்: எப்போது நீ உன் புகார் செய்யும் போக்கை உணர்கிறாயோ, அப்போதே அதிலிருந்து விடுபட்டு விட்டாய் என்பதை தெரிந்துகொள். மனம் பொதுவாக கடந்து போன நிகழ்ச்சிகளை பற்றிப் புகார் செய்கிறது. நாம் எப்போது ஆக்க பூர்வமான மன நிலையில் வருங்காலத்தை எதிர் பார்க்காமல் இருக்கிறோமோ, எப்போது நம் ப்ராண சக்தி குறைவாக இருக்கிறதோ, அந்த சமயத்தில் நம் மனம் கடந்து போன நிகழ்வுகளில் சிக்கி வருத்தப்படும் அல்லது புகார் செய்யும். அதனால் தான் அறிஞர்கள் “கடந்து போன எல்லா நிகழ்ச்சிகளையும், குப்பையை தூக்கிப் போடுவது போல் போட்டுவிட்டு மலர்ந்த முகத்தோடு மேலே செல்“ என்று சொல்கிறார்கள். உன் புகார், கடந்து போன நிகழ்ச்சிகளுக்கு எந்தத் தீர்வும் அளிக்காது.

நீண்ட காலமாக நான் தொடர்ச்சியாக உடல் நலமில்லாமல் இருக்கிறேன். கடந்த காலத்தில் பல விபத்துகளால் வருத்தப்பட்டிருக்கிறேன். அதிகமாக வலியை தாங்க முடியவில்லை. என்ன செய்யலாம்?

குருதேவர்: நீ அப்படி உடல் நலமில்லாமல் இருந்தால் இங்கு (ஆசிரமத்துக்கு) வந்திருக்க முடியாது. நாம் எவ்வளவு நலமுடன் இருக்கிறோம் என்பதை எப்போதும் கவனிப்பதில்லை. உனக்கு இருக்கும் சின்ன சின்ன உடல் அசௌகரியங்களையும், வாழ்க்கை பிரச்சினைகளையும் நினைத்து துன்பப்படுகிறோம். ஒருவர் எப்போதும் பிறந்ததிலிருந்து உடல் நலமில்லாமல் இருக்கமுடியாது. அப்படிப்பட்ட ஒருவரால் இங்கு சத்சங்கத்தில் வந்து பேச முடியாது. மிகவும் கஷ்டப்பட்டு இங்கு வந்து பேசுவதாக நினைக்காதே. நீ ஏற்கனவே உடல் நலத்தோடு மலர்ந்த முகத்தோடு இருக்கிறாய். உனக்கு மன அளவில் மாறுதல் அவசியம். வாழ்க்கையை பார்க்கும் கண்ணோட்டத்தில் மாற்றம் வேண்டும்.

உடலில் சில பிரச்சினைகள் இருக்கும். ஆனால் திடமான நெஞ்சம் தேவை. வாழ்க்கையில் சில நோய்கள் வரும். வலியால் வருத்தப்பட நேரிடும். விபத்து ஏற்படும். இது இயல்பு. ஏற்றுக்கொள். மற்றவர்களுக்கு சேவை செய். உன் யோக சாதனைகளை விடாமல் செய். சத்சங்கத்துக்கு செல். எல்லாம் சரியாகிவிடும். எனவே ஆசிரமத்தில் நம் உடல் நலத்தை காத்து வளர்க்க எல்லா வசதிகளையும் செய்திருக்கிறோம். ஆயுர்வேத மருத்துவ வசதிகள் உள்ளன. உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க பல விதமான செயல் முறைகள் (யோக சாதனைகள், ப்ராணயாமம், தியானம்) உள்ளன. உன் மன நிலையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைப்பது மிகவும் அவசியம்.

புருஷார்த்தத்தை (தர்ம, அர்த்த, காம, மோட்சம்) அடைவது எப்படி?

குருதேவர்: அர்த்த (பொருட் செல்வம் மற்றும் வாழ்க்கை வசதிகள்) மற்றும் காம (ஆசை, பேரார்வம்),வாழ்க்கையின் போக்கில் ஒருவருடைய தேவைக்கேற்ப எழுவது இயல்பு. தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். அதே சமயம் பேராசை மற்றும் அதி தீவிரமான காம இச்சைகளில் சிக்காமல் இருக்க தர்மம் மற்றும் மோட்சம் பொறுப்பாகிறது. மோட்சம் என்றால் துன்பத்திலிருந்து விடுபடுவது)

நம் வாழ்வின் முக்கியமான இலக்கு தர்மமும் மோட்சமும் தான். வாழ்க்கையின் ஓட்டத்தில் பொருட் செல்வத்தை நாடி, இன்பத்தை நாடிச் செல்கிறோம். அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் போது அதில் சிக்கி விடுகிறோம். அதிலிருந்து விடுபடுவதற்காக நாம் தர்மத்தை அநுசரித்துச் செல்வது அவசியம். தர்மத்துக்கு எதிராகச் செயல்படக் கூடாது. பொருட்செல்வத்தை நேர்மையான வழியில் அடைவது சரியாகும். புருஷார்த்தமான இந்த நான்கும் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது. மோட்சம் ஒன்று தான் வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும். எப்போதும் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்யும்போது பொருட்செல்வமும், வாழ்வில் இன்பமும் தானே வந்தடைவதை நீ அனுபவத்தில் பார்க்கலாம்.

என் ஆத்மா அன்பு, அமைதி மற்றும் திருப்திக்காக தவிக்கும் போது, ஏன் யோக சாதனைகளை செய்யாமல் இருக்கிறேன் ?

குருதேவர்: இந்தக் கேள்வியை உன்னைக் கேட்டுக் கொள்! உனக்கு மருந்து சாப்பிடப் பிடிக்க வில்லை.அது உனக்கு நல்லது என்று தெரிந்தாலும் அதை சாப்பிடுவதை தவிர்க்க முயல்கிறாய். டாக்டரிடம் வாங்கி வந்த மருந்துகளை சாப்பிடாமல் தலையணைக்கு அடியில் வைத்துத் தூங்குவது போல், நீயும் யோக சாதனைகளைச் செய்யாமலிருக்கிறாய். நமக்கு மிகவும் அமைதியையும், திருப்தியையும் அளிக்கக்கூடிய யோக சாதனைகளை செய்யாமலிருக்க ஏன் சாக்கு சொல்கிறோம்? நானும் இந்த கேள்வியை தான் கேட்கிறேன்.

உங்களிடமிருந்து ஏதாவது கேட்க வேண்டுமென்றால், தயவு செய்து என்ன கேட்க வேண்டுமென்று சொல்லுங்கள்.

குருதேவர்: இதைக்கூட நான் சொல்ல வேண்டுமா? எப்படி இருந்தாலும் வாழ்வில் உனக்கு வேண்டியதெல்லாம் கேட்காமலே அதிக முயற்சியின்றி கிடைக்கிறது. சரியா? ஓய்வாக இரு.