நெருக்கடி நீங்கும்

திங்கள்கிழமை, 2 ஜூன், 2014, 

பெங்களூரு, இந்தியா


போஸ்னியா, ஹெர்செகோவினா,செர்பியா, குரோஷியா, மாசிடோனியா, அல்பேனியா  ஆகிய நாடுகளில் வரலாறு காணாத மிக மோசமான வெள்ளத்தால் கோடிக்கணக்கான மக்கள் மே14 - 17, 2014 வரை பாதிக்கப்பட்டிருந்தனர். லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகளும்,கட்டிடங்களும் பயன்பாட்டிற்கு இல்லாமல் போய் விட்டன. ஒரு கோடி மக்கள் சுத்தமான குடிநீர் வசதியிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டனர். பால்கனின் பல பகுதிகளிலும் ஐரோப்பிய வாழும் கலைத் தொண்டர்கள் மீட்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருட்டு பூஜ்ய குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் 2 ஜூன் 2014 ஒரு சிறப்பு தியானம் நிகழ்ந்தது. இதில் உலகெங்கிலும் இருந்து ஆயிரக் கணக்கானோர் பங்கெடுத்துத் தியானம் செய்து அமைதி மற்றும் சீராக்கத்திற்கு பிரார்த்தனை செய்தனர்.

(குருதேவின் செய்தி கீழே தரப்பட்டுள்ளது)

பால்கன் மக்களுடன் நமது கூட்டுப் பொறுப்புணர்வை தெரிவிக்கும் வேளையில், சுற்றுச் சூழலை காக்கும் ஒரு உறுதி மொழியையும் நாம் எடுத்துக் கொள்கின்றோம். தற்காலத்தில் பஞ்சம், வறட்சி, வெள்ளம் இவையே நிகழ்ந்து வருகின்றன.மனித இனம் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வது, நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.

நான் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், மழை பொழிந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டுகளில் இத்தகைய பலத்த மழையை நாம் அடைந்ததில்லை. வானில ஆராய்ச்சித் துறை இந்த ஆண்டு மிகக் குறைவான மழையே இருக்கும், அதனால் வேளாண்மை பாதிக்கப்படும் என்று கூறியது. இன்று நாம் காணும் மழையானது அக்கூற்றை தவறு எனக் கருத வைக்கின்றது. பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் நான் சில கிராமங்களின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தேன். பல ஏரிகள் நான்கு ஆண்டுகளாக வற்றிப் போயிருந்தன. கால்நடைகளுக்கு நீர் இல்லை. குடிநீர் இல்லை.

வேளாண்மைக்கு நீர் இல்லை. இன்றைய மழை பிரார்த்தனைக்கு விடை என்றே எண்ணுகின்றேன். இதனால் கிராமங்களில் நிறையத் தண்ணீர் கிடைக்கும்.  பால்கன் நாடுகளில், நாம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதன் மூலம் வெள்ளம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்த முடியாத நேரங்களில், வானிலைத் துறை மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட எச்சரிக்கை செய்ய வேண்டும். மீட்புப் பணியில், அதிர்ச்சி நீக்கும் பணியில் மற்றும் தியான கூட்டத் தொடர் இவற்றிலெல்லாம் வாழும்கலைத் தொண்டர்கள் 100% முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். இது மிக முக்கியமானது.
இயற்கையை அமைதிப்படுத்த தியானம் உதவும். சவாலான நிலைமையை சமாளிப்பதற்கு தியானம் உதவும். எந்தச் செயல் விரும்பிய மற்றும் பயனுள்ள விளைவுகளை தரும் என்று அறிய, மிகத் தேவையான தன்னம்பிக்கையையும் உள்ளுணர்வையும் தியானம் நமக்குத் தரும்.

தியானம், நெருக்கடியான நேரத்தில் மக்களிடையே ஒரு குழு உணர்வையும் ஏற்படுத்தும். எனவே, மனதைத் தளரவிடாதீர்கள். நெருக்கடி தீரும். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கின்றோம். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நெருக்கடி, துயர் பின்னர் மகிழ்ச்சி அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். மக்கள் விழித்து, தங்களுடைய சுயநலத்தைத் தாண்டி பார்ப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமும் ஆகும். வாழ்க்கையில், உயர்ந்த இலட்சியங்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, முன்னேற வேண்டும்.
நெருக்கடி மக்களை ஒருங்கிணைக்கும். இந்த நெருக்கடியும் மக்களை ஒன்று சேர்த்துள்ளது. தங்களுடைய பகைமை, வேறுபாடுகள் அனைத்தையும் மறந்துவிட்டனர். போஸ்நியாவிலும் வேறு சில பகுதிகளிலும் இன மற்றும் சமய வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் இந்தத் தருணத்தில், ச்லோவனியர், க்ரோஷியர் அல்லது போச்னியர் என்னும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்துவிட வேண்டும். அனைத்து வேற்றுமைகளையும் மறந்து விட்டு ஒரே மனித இனம் என்னும் உணர்வுடன் ஒருங்கிணைந்து பணி புரிந்து பால்கனில் இயல்பு நிலையை மீட்டு வர வேண்டும்.

உணவும், மின்சாரமும் இல்லாத சூழ்நிலையில், ஞானத்தை பிரயோகிப்பது எனக்குக் கடினமாக இருக்கின்றது.

குருதேவ்: நீங்கள் ஞானத்தை பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக இருங்கள். ஞானம் என்பது உங்களுக்குள்ளேயே கட்டமைக்க, பெற்றிருக்கின்றது. நிலைமைகளை ஏற்றுக் கொண்டு நிகழ்காலத்தில் வாழ்ந்து மக்களுக்குப் பணி புரிய வேண்டும். இதுதான் ஞானம். இதற்கு மேல் வேறெதுவும் தேவையில்லை.இயல்பாக இருங்கள். நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையுடன் இருங்கள்.உங்களது அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்னும் நம்பிக்கையுடன் இருங்கள்.

எனது நம்பிக்கை அசைக்கப்படுகின்றது. ஒரு தனி மனிதன் என்னும் முறையில் பிறர் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர என்னால் உதவ முடியுமா?

குருதேவ்: உங்களது நம்பிக்கையை அசைக்க முடியாது. அவ்வாறெனில் அது நம்பிக்கையே இல்லை. ஒவ்வொரு நெருக்கடி நேரத்திலும், உங்களுக்கு உதவி கிடைக்கும், உதவப்படுகின்றீர்கள் என்பதை முதலில் அறியுங்கள். ஒரு சக்தி உங்களுடனேயே இருக்கின்றது, அது உங்களுக்கு உதவுகின்றது. இதை தான் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கடும் மழை, அல்லது வெள்ளம், அல்லது பஞ்சம் உங்கள் நம்பிக்கையை அசைத்தால், அது உண்மையான நம்பிக்கை அன்று. அது தற்செயலான கோட்பாடு அவ்வளவுதான். இது நம்பிக்கைக்கு சோதனை காலம். எனவே நிலையுறுதியாக அதைப் வைத்துக் கொள்ளுங்கள். 

தாங்கள் 1% மக்கள் தியானம் செய்தாம் அது 99% மக்களுக்குப் பயன் தரும் என்று கூறுகின்றீர்கள். அதை விவரித்துக் கூற முடியுமா?

குருதேவ்: இப்பிரபஞ்சமே அதிர்வலைகள் தாம். உங்களால் இதைக் காண முடியும். ஒரு குழுவில் ஒருவர் ஆத்திரமடைந்தால் எப்படி அது அனைவருக்கும் பரவுகின்றது! ஒவ்வொருவரும் அதனால் பாதிக்கப்படுகின்றார்கள். அது போன்றே ஒருவர் அமைதியாக இருந்தால் அந்த அமைதி எங்கும் பிரகாசிக்கின்றது.

இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, அதில் கடவுளின் பங்கு உள்ளதா அல்லது மனிதனால் ஏற்படுவதா?

குருதேவ்: இரண்டும் தான். சில நேரங்களில் அது ஒரு மர்மமான விஷயம். எவ்வாறு நிகழ்கின்றது என்றே விவரித்துக் கூற முடியாது. பல நேரங்களில் நாம் இயற்கையிடம் கனிவோடு இருப்பதில்லை. அளவிற்கதிகமாக இயற்க்கை வளங்களை சுரண்டுகின்றோம். அதனால் தான் இயற்கையும் சீற்றத்துடன் பதிலுறுக்கின்றது.

இந்த இயற்கைப் பேரிடர் ஏராளமான அழிவை ஏற்படுத்திவிட்டது. அதே நேரத்தில், ஒற்றுமையையும் சார்புணர்வையும் கொண்டு வந்திருக்கின்றது. இதை நாம் எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்வது?


குருதேவ்: உணர்சிகளை நிலை நிறுத்த முடியாது.ஒரே மாதிரியான உணர்வுகள் எப்போதும் இருக்காது. அவை அலைகளைப் போன்றவை. வந்து போகும். மேலெழுந்து கீழிறங்கும். எனவே ஒற்றுமை உணர்ச்சியை நிலைநிறுத்தி கொள்வது பற்றிக் கவலைப்படாதீர்கள். அது இருப்பதாக எண்ணிக் கொண்டு முன்னேறி செல்லுங்கள்.