அறியாமையே உண்மையான திருடன்

திங்கள், 03/06/2014

பெங்களூரு, இந்தியா


(இது சூர்ய ஒளியின் ஓளி என்ற பதிவின் தொடர்ச்சி)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் சொல்கிறார், ‘மோகாசா மோக-கர்மானோ மோக-ஞான விசேதசஹ. ராக்ஷசிம் அசுரிம் ச்சைவ ப்ராக்ரிதிம் மோஹினிம்-ஸ்ரீதஹ்.’ (9.12)

மனிதர்களிடம் மூன்று சக்திகள் உள்ளன. அவை, ஆசையின் சக்தி, செயலின் சக்தி மற்றும் ஞானத்தின் சக்தி. இந்த மூன்றும் பற்றால் பாதிக்கப்பட்டால் அல்லது ஆதிக்கம் செய்யப்பட்டால் அது ஒருவரை தமோ குணம் கொண்டவராக்கும்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் இங்கே மோக ஆசை பற்றி பேசுகிறார். அதாவது பலனோ அல்லது குறிக்கோளோ அல்லாத ஆசை. நம் வாழ்க்கையில் எந்தவித பயனும் அளிக்காத,குறிக்கோளில்லாத ஆசைகள் சில உள்ளன. நம்மை சுற்றி உள்ளவரோ அதனால் எந்தவித மகிழ்ச்சியையும் வசதியையும் பெறுவதில்லை. ஆனாலும் அந்த ஆசையை நாம் நம் மனதிலும் இதயத்திலும் தொடர்ந்து சுமந்து வருகிறோம்.

பிறகு, தங்கள் செயலால் தமக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் செயல்களை செய்யும் சிலர் இருக்கிறார்கள்.அத்தகைய செயல்கள் மோக கர்மா என்று அழைக்கப்படுகிறது. பயனுமளிக்காத தீராத பற்றின் அல்லது தாபத்தின் உந்துதலால் செய்யப்படும் செயல்கள். அதே போல மோக ஞானம்,அதாவது தவறான அல்லது முழுமையடையாத ஞானம். அப்போது தான் நீங்கள் எல்லாவற்றையும் தலைகீழாக அல்லது வக்கிரமாக பார்க்கிறீர்கள்.

மனிதனிடம் மூன்று சக்திகள் இருக்கின்றன:இச்சா சக்தி (ஆசையின் சக்தி), கிரியா சக்தி (செயலின் சக்தி) மற்றும் ஞான சக்தி (அறிவின் சக்தி). இந்த மூன்று சக்திகளும் பற்றினால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஆதிக்கம் செய்யப்படும் போதோ அது ஒருவரை தமோ குணம் கொண்டவராக ஆக்குகிறது. தமோ குணம் என்பது மந்தம், அறியாமை மற்றும் எதிர்மறை தன்மைகள் கொண்ட நிலை. அசுரத்தன்மை, எதிர்மறை மற்றும் கொடுந்தன்மை கொண்ட மக்கள் தமோ குணத்தில் மூழ்கியவர்கள். அத்தகைய மக்கள் ஆசை கொண்டிருக்கிறார்கள், செயல்களும் செய்கிறார்கள், அவர்கள் செய்யும் செயலைப் பற்றிய அறிவும் அவர்களிடம் இருக்கிறது. அதில் ஆத்மார்த்தம் இல்லை. அவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. 

ஒரு ஞானியிடம் சென்ற ஒரு திருடன் கூறினான், ‘மகானே, நீங்கள் சொல்லும் எதையும் நான் செய்கிறேன்; திருடுவதை நிறுத்திவிடு என்று மட்டும் என்னிடம் கூறிவிட வேண்டாம். அது என்னுடைய இயல்பு,  நான் தொடர்ந்து திருடுவேன். இதைத் தவிர நீங்கள் எந்த அறிவுரை கூறினாலும் நான் விருப்பத்துடன் கேட்பேன்.’ அந்த மகான் கூறினார், ‘அப்படியே ஆகட்டும், நீ சொன்னபடி செய். நீ மேற்கொண்டு திருடலாம், திருடும் போது முழு விழிப்புணர்வுடன் உன் பேருணர்வில் ஆழ்ந்தபடி செய்யவேண்டும்.யாரையாவது திட்ட வேண்டும் என்றால் கூட உன் முழு உணர்வோடு செய். கோபப்பட வேண்டும் என்றாலும் முழு விழிப்புணர்வோடு செய்.அந்தத் திருடன் கூறினான், ‘சரி, நீங்கள் சொல்வதைச் செய்வது எளிது. திருடுவது எனக்குப் பழக்கம்,தூங்கும் போது கூட திருடிவிட்டு என்னால் தப்பித்துவிட முடியும். திருடுவதில் நான் மிகுந்த வல்லமை உள்ளவன். இதை நான் முழு உணர்வோடு செய்ய வேண்டும் என்று மட்டுமே நீங்கள் கேட்பதால், இதை நான் நிச்சயம் கடை பிடிக்கிறேன்.’

பிறகு அந்த மகானிடம் ஆசிகள் பெற்று தன் வழியே சென்றான். தன்னுடை அடுத்த திருட்டை செய்ய விழையும் போது மகானின் வார்த்தைகள் ஞாபகம் வந்தது, ‘திருடு ஆனால் உன் முழு உணர்வோடு திருடு.முழு உணர்வோடு திருட முயற்சித்தான், ஆனால் அவனால் அதை செய்யவே முடியவில்லை. அவன் எண்ணினான், ‘நான் தோற்றுவிட்டேன், ஆனால் இது முதல் முறை தான். பரவாயில்லை. அந்த மகானின் சந்திப்பு ஏதோ கொஞ்சம் பயத்தை என்னுள் உண்டாக்கியிருக்கிறது. நாளை திருடலாம்.’ஆனால் மறுநாள் திருடச் சென்ற போதும் அவனால் முடியவில்லை.மூன்றாம் நாளும் அப்படியே நடந்தது. பிறகு அந்தத் திருடன் நினைத்தான்,’எத்தகைய மகான் அவர், அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பாதிப்பு கொஞ்ச காலம் இருக்கத்தான் செய்யும். ஒரு வாரம் கூட இருக்காதா என்ன, அதற்கு மேல் ஆகாது. ஒரு வாரம் சும்மா இருப்போம். பிறகு என் இயல்பான திறமை திரும்ப வந்துவிடும்.’

பெரும்பாலும் சத்சங்கத்திற்கு வரும் போது மக்களுடைய இயல்பு மாற்றமடைகிறது. அதை விட்டு வெளியே சென்ற அடுத்த கணம் அவர்கள் தங்கள் தீயபழக்கத்தில் மறுபடி விழுகிறார்கள். அந்தத் திருடனும் அப்படியே நினைத்தான், ‘ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் மௌனம் இவற்றினுடைய விளைவு ஒன்றிரண்டு வாரங்கள் அல்லது அதிகபட்சம் ஒரு மாதம் இருக்கும் பிறகு எல்லாம் மெதுவாகப் போய்விடும். எனவே ஒரு வாரத்திற்கு பிறகு எனக்கு நிச்சயம் என்னுடைய இயல்பு திரும்ப வந்துவிடும் என்னால் வழக்கம்போல திருடமுடியும். ஒரு வாரம் சென்றது, அந்தத் திருடன் தன்னுடைய திருடும் முயற்சியை ஆரம்பித்த போது அவனால் முடியவில்லை. ஒரு மாதம் கழிந்தது, அப்போதும் அவனால் திருட முடியவில்லை.நடுக்கத்திற்குள்ளானான். தனக்குள்ளே யோசித்தான், ‘எனக்கு என்ன நடக்கிறது? இவற்றை எல்லாம் வெகு எளிதாக செய்து வந்தேன். ஆனால் இப்போது, முழு விழிப்புணர்வோடு ஒருவருடைய சட்டைப் பையிலுள்ளதை எடுக்க முயற்சித்தால் படபடப்பாகிறது, இதயம் குதிக்கிறது மற்றும் என் முழு உடம்பும் நடுங்குகிறது. எவ்வளவு முயற்சித்தாலும், இதற்குமேலும் என்னால் திருட முடியாது!’

திருடன் சென்று அந்த மகான் காலில் விழுந்தான். அவன் கூறினான், ‘மகானே! என்னை என்ன செய்தீர்கள்? என்னுடைய பிழைப்பையே கெடுத்துவிட்டீர்கள்.’ அந்த மகா ஞானி புன்னகைத்தவாறு கூறினார், ‘இது எல்லாம் உன்னுடைய பேருணர்வினால் தான். தான் செய்வது என்ன என்று முழுவதுமாக உணராததாலேயே எல்லாத் தவறுகளும் நடக்கிறது.’ முழுமையாக உணர்ந்த ஒருவரால் எப்போதும் கோபம் கொள்ள முடியாது, எந்த தீயச் செயலையும் செய்ய முடியாது. அறியாமை நிலையிலும், விழிப்புணர்வு இல்லாத நிலையிலுமே எல்லாத் தவறுகளும் நடக்கிறது.

இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் சொல்கிறார். பற்றினால் ஆதிக்கம் செய்யப்படுபவர்கள் (மோக-ஆசை, மோக-கர்மா, மற்றும் மோக-ஞானம்) எதிர்மறை தன்மைகளால் ஆதிக்கம் செய்யப் படுபவர்கள் உணர்விழந்து இறந்து போனவர்களுக்கு சமம். மோக ஆசையினால் இதுதான் நடக்கிறது. அசுர மற்றும் எதிர்மறை தன்மைகளை (மோக-ஆசை, மோக-கர்மா மற்றும் மோக-ஞானம்) சார்ந்து இருப்பவர்களை தமோ குணம் மூழ்கடிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘எதிர்மறை தன்மைகளில் சிக்கி இருப்பவர்களால் என்னை எப்படி அறிய முடியும்? அவர்கள் நிஷேத கர்மாவில் ஈடுபடுகிறார்கள், அதாவது தன்னுடைய பேருணர்வை அசுத்தப்படுத்தி மந்தமாகும் செயல்களைச் செய்கிறார்கள்.பேருணர்வு பங்கமடைகிறது என்று சொல்வது சரியல்ல. 

அதாவது, அத்தகைய செயல்கள், மோகத்தாலும் அசுரதன்மையாலும் சூழப்பட்டிருப்பதால் அவை பேருணர்வை தாழ்த்துகிறது. இத்தகைய செயல்கள் நிஷேத கர்மா எனப்படுகிறது. உதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள், ஆனால் அதை அவர்கள் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். தங்கள் இயல்புகள் ஒன்று போலில்லை, அதனால் நெடுநாள் சேர்ந்து வாழ்வது கடினம் என்பதை அந்த ஆணும் பெண்ணும், தங்களுக்குள் வெகு ஆழத்தில் நன்கு உணர்ந்திருப்பார்கள். ஆனாலும் தங்களுக்கிடையே ஆன கவர்ச்சியில் சிக்கி இருப்பார்கள்.

சேர்ந்திருக்கும் போது எல்லாம் சண்டையிட்டவாறு இருப்பார்கள், தொடர்ந்து தங்கள் உறவைத் தொடர்ந்தபடி இருப்பார்கள். இதுதான் பற்று என்பது. சேர்ந்திருப்பது வலியை ஏற்படுத்துகிறது என்றால், ஒருவரை ஒருவர் பிரிந்திருப்பது துயரமாகவும் இருக்கிறது. தொண்டையில் சிக்கிய உணவுத் துணுக்கு போல அது மிக இனிப்பாக இருந்தால் அதைத் துப்பிவிட விருப்பமில்லை,மிகக் கசப்பாய் இருந்தால் அதை விழுங்கிவிட விருப்பமில்லை. மக்கள் இத்தகைய சூழ்நிலையிலும் உறவிலும் சிக்கிக் கொள்கிறார்கள். இதுதான் பற்று அல்லது பந்தம் உறவிலும் நிலைத்து இருக்க முடியவில்லை பிரியவும் மனமில்லை. அத்தகைய பற்றிலும் ஆசை வேட்கையிலும் சிக்கி, மக்கள் தம் பேருணர்வை இழந்து எதிர்மறை உணர்வில் சுழல்கிறார்கள். அந்த நிலையில் தங்களை தாங்களே காணும் மக்கள், அதிலிருந்து எப்படி வெளிவருவது என்பதும் தெரியவில்லை.

அதற்கான முயற்சியையும் செய்ய முடியவில்லை. அந்த நிலையில் மேலும் மூழ்கி ஆழத்திற்கு சென்றபடி இருக்கிறார்கள். ஒருவரை கவர்ந்து வளைத்து இழுத்து தன் பிடிக்குள் முழுமையாக கொண்டு சென்று மாயையில் ஆழ்த்தும் மாய சக்தி கொண்டது இயற்கை. உதாரணமாக மதுவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் மக்கள் மதுவிற்கு அந்த அளவு அடிமையாகிறார்கள்? அவர்களுடைய பேருணர்வு மலர்வதற்கு எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களுக்கு நீண்ட மகிழ்ச்சியையும் எந்த வித வசதியையும் அது அளிப்பதில்லை. அதை விடுவது வலியையும் பிரச்சினையையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பவர்களுக்கும் அதே கதிதான். புகை பிடிப்பதால் நீங்காத பேரின்பம் கிடைக்குமென்றால் நான் அனைவரையும் பிடிக்குமாறு சிபாரிசு செய்வேன்.அது உண்மை என்றால், புகை பிடிப்பவர்களின் முகம் ஆனந்தத்தாலும், மகிழ்ச்சியினாலும் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கும். இத்தகைய மகிழ்ச்சியை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? புகை பிடிப்பவர்கள் பிரகாசமாய் இருந்து பார்த்ததுண்டா? அவர்களுடைய ஒவ்வொரு துளியும் நீங்கா மகிழ்ச்சி கொண்டு ஆனந்தத்தால் மின்னும்படி தெரிகிறார்களா என்ன? (சிரிப்பு)

புகைப் படிப்பவரை பார்க்கும் போது, அவருடைய பேருணர்வு மலர்ந்து விரிவடைவது போலவா தெரிகிறது? புகைக்கும் போது அவருடைய ஆன்மா ஆனந்தக் கூத்தாடுவது போலவா இருக்கிறது? அப்படி ஒருவரை கூட எங்கும் காணமுடியாது. அனைவரும் மிகச் சோர்ந்தும் உயிரோட்டம் இல்லாமலும் காணப்படுகிறார்கள்! மது அருந்தியவர்களும் அப்படியே. எல்லோரும் கல் வீசி துரத்தும் நோய்பிடித்த தெரு நாயைப் போல.பாவப்பட்ட விலங்குகளைப் பார்த்து பரிதாபப்படுவீர்கள். அதை போலவே, புகை பிடிப்பவர்களும் மது அருந்துபவர்களும் அப்படி ஒரு பாவப்பட்ட நிலையை அடைகிறார்கள். இவை எல்லாம் மோக-ஆசை, மோக-கர்மா, மற்றும் மோக-ஞானத்தினால். 

ஒரு வயதில் முதிர்ந்த பெண்மணியை அவருடைய மகன் கைவிட்டு விட்டான். மேலும் அவரை தாழ்மையாய் பேசி வீட்டை விட்டே வெளியில் துரத்திவிட்டான். தன் மகனின் பேச்சை எண்ணி எண்ணி மனத் தாழ்வு கொண்டார் அந்த முதியவள். ஆனால்,எவ்வளவு காலம் தான் அழ முடியும்? கொஞ்ச காலத்திற்குப் பிறகு கண்ணீர் வற்றி விடுகிறது,பிறகு பற்றின் காரணத்தால் மந்தத் தன்மை மேலோங்கி அவருடைய பேருணர்வை மழுங்கச் செய்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் ஏறக்குறைய உயிரற்றவராகவே காணப்படுகிறார். உலகெங்கும் அப்படி பலரைப் பார்க்கலாம். 

வாழும்கலை நிகழ்ச்சி ஒன்றிர்காக தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தேன். முதியோர் இல்லத்திலிருந்து நான்கு பேருந்துகள் நிறைய மக்கள் என்னை சந்திக்கவும் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவும் வந்திருந்தனர். அவர்களைப் பார்க்க அவ்வளவு பாவமாய் இருந்தது. குப்பையை வீசுவது போல தங்கள் பிள்ளைகளால் வீட்டை விட்டு வெளியே வீசப்பட்டவர்கள். இவர்கள் அந்த முதியோர் இல்லத்தில் எந்தவித ஆன்மீக செயல்பாடுகளும் இல்லாமல், ஒரு சத்சங்கமோ, யோகப் பயிற்சியோ இல்லாமல் வாழ்ந்து வந்தனர். சாப்பிட்டுவிட்டு ஏதும் செய்யாமல் தினசரி சும்மா உட்கார்ந்தே இருந்தனர். தங்கள் பிள்ளைகள் மீது வைத்த பற்றால் அவர்கள் வாழ்கை மிகவும் கொடுமையாய், உயிரோடு இருந்தும் பார்ப்பதற்கு உயிரற்றவர்களை போல இருந்தார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலை இந்தியாவில் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.
இங்குள்ள முதியோர் இல்லங்களில், சத்சங்கங்களும், ஞானத்தை பற்றிய உரையாடல்களுமாவது  நடக்கிறது. குறைந்தபட்சம் தாங்கள் பற்றினால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்,இதிலிருந்து மீள வேண்டும் என்ற விழிபுணர்வாவது இருக்கிறது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு, தாங்கள் பற்றின் பிடியில் எவ்வளவு ஆழமாய் சிக்கியிருக்கிறோம் அதிலிருந்து மீள வேண்டுமே என்ற உணர்வே இல்லை.அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘அப்படிப்பட்ட பற்றிலும், ஆசையின் வேட்கையிலும் சிக்கி ஒருவர் தன்னுடைய பேருணர்வை இழந்து எதிர்மறைகளில் சுழலுகிறார்.’அப்படிப்பட்ட நிலையில் தம்மைக் காணும் ஒருவருக்கு அதிலிருந்து மீள்வது எப்படி என்றும் தெரியவில்லை அதைச் செய்ய முயல்வதற்கும் அவரால் இயலவில்லை. அதில் மேலும் மூழ்கிக்கொண்டேதான் இருக்கிறார்.