மன அழுத்தமும் மகிழ்ச்சியும்

செவ்வாய்கிழமை, 24 ஜூன், 2014 

வாஷிங்டன் - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

மகிழ்ச்சி என்னும் விவாதிக்கப்படும் விஷயத்தை நான் ஆராய்ந்திருக்கின்றேன். என்னுடைய கணக்கெடுப்பில் அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினரே தாங்கள் மகிழ்ச்சியாக  இருப்பதாக கருதுகின்றனர். பரபரப்பான வாழ்வியலில் உள்ள மீதிப் பெரும்பான்மையினருக்கு தாங்கள் கூற விரும்பும் ஒரு ஆலோசனை என்ன?


குருதேவ்: ஒன்று எனக் கூறி என்னுடைய பரப்பெல்லையை குறைத்துவிட்டீர்கள். ஏன் ஒன்று மட்டும்? நான் 25 செய்திகள் கூற விரும்புகின்றேன்!! பல்வேறு சூழ்நிலைகளை சந்திக்கின்றோம்.  ஆனால் முக்கியமாக மன அழுத்தமே நமது மகிழ்வை மூடி மறைக்கின்றது.


மனஅழுத்தம் என்பது முற்றிலும் சக்தியற்ற மிகக் குறைந்த காலத்தில் அதிகப்பணி செய்யும் நிலை. ஒன்று உங்கள் சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள் அல்லது பணி அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், அப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தங்களது வாழ்க்கையில் நீங்கள் இப்போதிருக்கும் நிலையினை அடைவதற்கு யாரெல்லாம் காரணமாகவும், உதவியாகவும்  இருந்தார்கள்?

குருதேவ்: அதை கூறுவது கடினம். ஒரு சில பெயர்களை மட்டும் இங்கு எடுத்துக் கூறினால் அது நியாயமாகாது. என்னுடைய தாயாரிடமிருந்து ஆரம்பிக்கின்றது. இந்தக் க்ஷணத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டால், உங்கள் மனம் இங்கு மட்டுமே இருப்பதாக கொண்டால், அப்போது உங்களை சுற்றி இருக்கும் அனைவரிடமிருந்தும் நீங்கள் அகத் தூண்டுதலைப் பெற்றதாகக் கொள்ளலாம்.  எக்காலத்திலும், எங்கு ஆயினும் பிறரால் உங்களுக்கு அகத் தூண்டுதலை ஏற்படுத்த முடியும். இது ஒரு உள்ளார்ந்த நிகழ்வுத் தோற்றப்பாடு.

அகத் தூண்டுதல் என்பது ஒருவருக்குள்ளிருந்து எழும் சக்தி, யார் வேண்டுமானாலும் ஊக்கியாக செயல்பட முடியும். தெருவில் உள்ள குழந்தை, ஒரு தச்சன், ஒரு தோட்ட வேலை செய்பவர் என்று யார் வேண்டுமானாலும் உங்களுக்கு அகத் தூண்டுதலை ஏற்படுத்த முடியும் தேவையானது என்னவென்றால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

புனிதமானவரே! சந்தோஷத்தின் ரகசியம் என்ன?

குருதேவ்: உங்களுடைய இயல்பான நிலையிலேயே இருந்து, அனைவரும் வரமாகப் பெற்றிருக்கும் உள்அமைதி பெருக்கத்தைக் கண்டுணர்தல் ஆகும். இயல்பாக இருங்கள்.

மௌனத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றீர்களா? அதை எவ்வாறு பயிற்சி செய்வது?

குருதேவ்: (சில நொடிகள் மௌனமாக இருக்கின்றார்) இப்படித்தான்! ஒரு நொடி நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் மூச்சினைக் கவனியுங்கள். மனதை அமைதிப்படுத்தி, உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் அற்புதமான அமைதியையும், அன்பினையும் அறிவீர்கள்.
நாம் அனைவரும் இத்தகைய அன்பு மற்றும் அமைதியைப் பரிசாகப் பெற்றிருக்கின்றோம். எவ்வாறோ, மிக முக்கியமானதாகிய நமக்குள் நோக்கிப் பார்ப்பதை மறந்துவிட்டோம். சில நொடிகள் தன் உள்ளத்தைத் தானே காண்பது மிகத் தேவையானது. கண்கள் திறந்தோ, அல்லது மூடியோ, இந்தக் கணத்தில் நிலைத்து இளைப்பாறும் போது, திடீரென்று உங்கள் உள்மனதுடன் இணைக்கப்படுவீர்கள்.

தங்களது சொந்தப்  பிரச்சினைகளை பற்றிப் பேசமுடியுமா? உங்களது பிரச்சினைகள் யாவை?

குருதேவ்: என்னுடைய தலையாய பிரச்சினை என்னவென்றால்,நான் கனவு காண்பவன். வன்முறை உள்ளது, அதனால் பிரச்சினைகள் உள்ளன என்றெல்லாம் அறிந்தும் வன்முறையற்ற சமுதாயத்தையும் வன்முறையற்ற உலகினையும் அடைய கனவு காண்கின்றேன்.அது ஏற்பட வெகு காலம் ஆகும் என்று அறிந்தாலும், என்னுடைய கனவை விட முடிவதில்லை. இதுதான் என் பெரிய பிரச்சினை.அதையே பிடித்துக் கொண்டிருக்கின்றேன். செய்தித் தாட்களைப் படித்தாலும், தொலைக் காட்சியைப் பார்த்தாலும், இக்கனவிலிருந்து நாம் வெகு தொலைவில் இருப்பது தெரிகின்றது. ஆயினும் இவ்வுலகம் அனைத்தும் அன்பிலும் அமைதியிலும் ஒற்றுமைப்பட வேண்டும் என்னும் இக்கனவையே நான் கண்டு கொண்டிருக்கின்றேன். வன்முறையற்ற, மன அழுத்தமற்ற சமுதாயமே என் கனவு.

வாழ்கையை இரண்டு விதமாகக் காணலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். ஒன்று, " இந்த குறிப்பிட்ட இலட்சியத்தை அடைந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் " என்பது. மற்றொன்று என்னவானாலும் சரி, நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்" எனபது. இவையிரண்டில் எது மேலானது?

குருதேவ்: நிச்சயமாக இரண்டாவது, உங்களுக்குள்ளேயே மகிழ்ச்சியைக் காண்பது, அம்மகிழ்ச்சி எந்த நிபந்தனையுமற்றது என்பதே. முதலாவது  பெற்றுக் கொள்ளுதல், மற்றது கொடுத்தல்.   குழந்தைகளாக இருக்கும் போது பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது, முதிர்ந்த வயதில், கொடுப்பதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இது முதிர்ச்சியடைந்த சந்தோஷம் ஆகும். வயது முதிர்ந்த பாட்டி பல்வேறு உணவு வகைகளை தயாரித்து, குடும்பத்தில் அனைவருக்கும் பரிமாறும்போது மகிழ்ச்சி அடைகின்றார்.

பெற்றுக் கொள்ளுதல் அல்லது பேராசையுடன்  பற்றிக் கொள்ளுதல் இவற்றை விட, கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஏதாவது ஒரு கால கட்டத்தில், பெறுதல் நிலையிலிருந்து கொடுத்தல் என்னும் படி நிலைக்கு நாம் செல்ல வேண்டும். நாம் தான் மகிழ்ச்சியின் தோற்றுவாய் என்று கண்டு கொண்டு, என்னவானாலும் சரி நான் மகிழ்ச்சியாக இருப்பேன், என்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியைப் பரப்புவேன் என்றிருப்பதுதான் ஞானம்.

புனிதமானவரே! தாங்கள் தீங்கு என்பதை நம்புகின்றீர்களா?

குருதேவ்: தீங்கு என்பதை நான் நம்பவில்லை, ஆனால் அது நற்குணக் குறைவு என்பதன் நிழல் என்று அறிகின்றேன். அது நன்மை இன்மை, அன்பின்மை, மற்றும் ஒளியற்றது ஆகும்.இந்தியாவில் ஆறு விதமான தீங்குகள் நம்பப்படுகின்றன. கர்வம், பேராசை, ஆணவம், பொறாமை, கோபம் மற்றும் காமம். அன்பின் உருக்குலைவு, அறிவுக் குறைவு, ஞானக் குறைவு இவை யாவும் ஒருவரது வாழ்க்கையை அழித்து விடக் கூடும்.

அன்புக் குறைவே தீங்கிற்கு காரணம் என்றால் அதிக அன்பு என்பது மட்டுமே தீர்வாகக் கூடுமா?

குருதேவ்: முற்றிலும் சரி. ஒளியை நோக்கித் திரும்புங்கள். தீங்கனைத்தும் மறைந்து விடும்.

பணியின் மதிப்பினை பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேசி வருகின்றோம். பணம் சார்ந்த நன்மைகளைத் தவிர பணியின் மதிப்பினைப் பற்றி உங்கள் கருத்துக்களைக் கூற முடியுமா?

குருதேவ்: கடுமையான பணி உங்களைப் பிரச்சினைகளிலிருந்து அகற்றி வைக்கின்றது. எதையும் செய்யாமல் சும்மா இருந்தால் உங்கள் மனம் எங்கு செல்ல நீங்கள் விரும்பவில்லையோ அங்கு விரைந்து செல்கின்றது. வேலை என்பது நீங்கள்  சுறுசுறுப்பாகவும், நிதான புத்தியுடனும் படைப்பாற்றலுடனும் இருக்க தேவையான ஒன்று. பணியிலும் சில நெறிமுறைகள் உள்ளன. பணம் சம்பாதிப்பது என்பது தவறல்ல. ஆனால் நெறியற்ற முறையில் அது ஈட்டப்பட்டால் உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் என்பது கிடைக்காது. அது உறுதி.

தங்களது கருணைத் தத்துவம் சுதந்திரமான வியாபார நிறுவனங்களுக்கும், முதலாளித்துவத்திற்கும்  பொருந்துமா?

குருதேவ்: கண்டிப்பாக. கருணையற்ற முதலாளித்துவம் நேர்மையான சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லாது. செல்வந்தனே கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். ஏழையின் கருணைக்கு மதிப்புக் கிடையாது.

கருணையும், நன்னடத்தையும் பயன்முனைப்பான பொருளாதார முறைக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அதே சமயம், பயன்முனைப்பான பொருளாதார முறை கருணைக்கு மிக முக்கியமானது என்றும் கூறுகின்றீர்கள். கருணையும், சுதந்திரமான வியாபார நிறுவனமும் ஒன்றோடொன்று இணைந்தது , ஒன்று மற்றொன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பது சரியானதா?

குருதேவ்: முதலாளித்துவம், தொழிலாளித்துவம், சமயச் சார்பற்ற உலகியல்வாதம் எதுவானாலும் சரி அது மனித நேயம் இன்றி வேலை செய்யாது. மனித நேயத்தின் முக்கியக்கூறு கருணை.. அது மிக அவசியமான ஒன்று. அதுவின்றி எதுவும் வேலை செய்யாது. அனைத்தும் பயனற்றுப் போகும். இதை நாம் உலகெங்கிலும் கண்டிருக்கின்றோம். நிறைய உதாரணங்கள் உள்ளன.மனித நேயம் இல்லாதபோது அத்தனை கொள்கைகளும் புத்தகங்களில் மட்டுமே வெற்றிகரமானவையாக காணப்படுகின்றன, உண்மையில் அல்ல.