நமது செல்வத்தைப் பகிர்ந்து கொள்வோம்

செவ்வாய் கிழமை, 24 ஜூன், 2014,

அமெரிக்க ஐக்கிய நாடுகள்


(மனஅழுத்தமும், மகிழ்ச்சியும் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

நாம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்விலும், பொருட்கூறுகளின் எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்துவது? நமது சுதந்திர சமுதாயங்களுக்கு எவ்வாறு அதை கற்பிப்பது?

குருதேவ்: நான் ஏற்கனவே கூறியபடி நுகர்வுக்கூறு ஒரு பிரச்சினை. செல்வந்தராக இருப்பதில் தவறில்லை, ஆனால் பூமியையும்,மக்களையும் சுரண்டுவது தவறாகும். இதுதான் தற்போது நடை பெற்று வருகின்றது. பல இடங்களில்,மக்கள் சுற்றுச்சூழல், சட்டங்கள் ஆகியவற்றை புறக்கணித்து, செல்வந்தராக முனைகின்றார்கள். இங்கு தான் பிரச்சினை துவங்குகின்றது.கூட்டு நிறுவன சமுதாய பொறுப்பு என்பதை ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு, சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யுங்கள்.

இப்போது இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் லாபத்தில் 3 சதவீதம் கூட்டுநிறுவன சமுதாய பொறுப்புக்கு முதலீடு செய்யவேண்டும் என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமுதாயத்திற்கு திருப்பி தரவேண்டும் என்னும் உணர்வை சட்டத்தின் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். செல்வம் சேருதல் என்பது அதை பகிர்ந்துகொள்ளுதல் என்பதுடன் இணைந்திருக்க வேண்டும். நீங்கள் உருவாக்குகின்றீர்கள், நீங்கள் கொடுக்கின்றீர்கள்.அனைத்தையும் வைத்துக் கொள்ளக்கூடாது. அங்கு தான் பிரச்சினை எழுகின்றது. ஒருவருக்கு செல்வமானது  தார்மீகப் பொறுப்பினை ஏற்படுத்துகின்றது என்பது உங்களது கருத்து ஆகுமா?

குருதேவ்: ஆம், நிச்சயமாக 

தங்களது வாழும்கலை மையம், சமீபத்தில் பாகிஸ்தானில் எரிக்கப்பட்டுள்ளது. கடவுள் அருளால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. பாகிஸ்தானில் வாழும்கலை மையத்திற்கு ஏற்படப் போகும் நிகழ்விற்கு முன்னரே தங்களுக்குத் தோன்றிய விசித்திரமான முன்னுணர்வு பற்றிக் கூறுங்கள்.

குருதேவ்: இந் நிகழ்வு ஏற்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அந்த இடத்தில், நாங்கள் ஒரு மௌன நோன்பு பயிற்சி (முதிர்நிலைப் பயிற்சி) கொள்வதாக இருந்தோம். பின்னர் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். அந்த வார இறுதி நாட்களில் 60 பேர் மௌன நோன்பிருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. சாதரணமாகவே நமது மையங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். சுமார் நூறு முதல் நூற்றைம்பது பேர் வரை வந்திருந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள். கடவுள் அருளால், அல்லது ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் அந்த வார இறுதி நாட்களில் நாங்கள் வேறிடத்திற்கு மாற்றம் செய்தோம். அப்போது தான் அவர்கள் அம்மையத்தை எரித்து நாசமாக்கி, எங்களது ஆசிரியர்களுக்கும் பயமுறுத்தும் கடிதங்களை அனுப்பினார்கள்.

இது முற்றிலும் அறியாமை ஆகும். "என் வழியே ஒரே வழி" என்னும் மனப்போக்கு இன்றைய உலகில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. பாகிஸ்தானில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே தான். மாறாமரபேர்ப்புக் கோட்பாளர்கள், சமய வெறியாளர்கள், தீவிரவாதிகள் ஆகியோர் இந்தத் தத்துவத்திலேயே பேணி வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று, பல வகைப்பட்ட சமய நம்பிக்கை, பல்வேறு கலாசாரம் பற்றிய கல்விமுறை, ஆகியவற்றை சிறு வயதிலிருந்தே தர வேண்டியது மிக அவசியம் என்று நான் கருதுகின்றேன். அப்போது ஒரு குழந்தை " நான் மட்டுமே ஸ்வர்கத்திற்கு செல்வேன், கடவுளைப் பற்றி நானே சரியாக அறிந்து கொண்டுள்ளேன், மற்றவர்கள் அதை அறிய வில்லை" என்னும் எண்ணத்துடனேயே வளராமல் இருக்கும். நான் மட்டுமே சுவர்க்கத்திற்கு செல்வேன், மற்றவர் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள் என்று எண்ணினால் அவர்கள் பிறர் அனைவருக்கும் பெரும் நரகத்தைப் போன்ற கேடு விளைவிக்கின்றார்கள். 

சமயம் பற்றிய பரந்த அறிந்துணர்வு ஒவ்வொருவர்க்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். உலகெங்கிலும் இதை ஒரு முக்கியமான தேவையாக யூனேஸ்கோ (UNESCO) அறிவிக்க வேண்டும். பல்வேறு சமய அல்லது பல்வேறு கலாசார கல்விமுறை உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் மிகத் தேவையானது ஆகும்.

தீவிரவாதம் மற்றும் அமைதியை நாடுவோருக்கு அளிக்கப்படும் பயமுறுத்தல்கள் இவற்றைக் கவனிக்கும் போது அதில் ராணுவ தலையீடு பற்றி தங்களது கருத்து என்ன?

குருதேவ்: ராணுவத் தலையீடு என்பது இறுதிகட்ட தேர்வாக இருத்தல் வேண்டும் என்பது என் கருத்து. அதற்கு முன்னர் தேவையான அளவு ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் நடைபெற வேண்டும். நம்பிக்கையை வளர்த்தல், தகவல் தொடர்பு வலுப்படுத்தும் முயற்சிகள், ஆகியவை செய்யப்பட வேண்டும்.எப்போதையும் விட அதிகமாக இரண்டாம் நிலை ராஜதந்திரம்,மனிதர்களிடையே அல்லது குழுக்களிடையே அரசு சார்பற்ற, அதிகார முத்திரையற்ற தொடர்புகளும், செயல்பாடுகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். பல்வேறு இனத்தவரிடையே வர்த்தகர்கள் நல்லதொரு பாலம் அமைக்க முடியும். அவர்களது பங்கு முக்கியமானதாகும். அவர்கள் தங்களது முழு முயற்சியையும் அளித்து பங்கெடுக்க வேண்டும். இவையனைத்தும் பயனளிக்க வில்லையென்றால், கடைசிப்பட்சமாக ராணுவத் தலையீடு நிகழலாம்.

தாங்கள் அதை முற்றிலும் தவிர்க்க வில்லை என்பது சரியா?

குருதேவ்: நான் விரும்பும் தேர்வு அது இல்லையெனினும், அந்த தேர்வு கடைசிப்பட்சமாக இருக்க வேண்டும். களங்கமற்றவர்கள் ஏன் உயிரிழக்க வேண்டும்?
 
ஐரோப்பாவிலுள்ள நமது நண்பர்கள் சமயம் என்பதிலிருந்து முற்றிலும் விடுபட முயல்கின்றார்கள். இது பற்றித் தங்கள் கருத்து என்ன?

குருதேவ்: சமயம் என்பதற்கு அதற்குறிய  இடம் உள்ளது. ஆன்மிகம் என்பது சமயத்திற்கு மேம்பட்டு மக்களுடைய இதயங்கள் மற்றும் மனங்களை இணைப்பது ஆகும். சமயத்திலும் ஆன்மீகப் பண்புகள் உள்ளன. பல்வேறு சமயப் பிரிவுகள் செய்து வரும் சமயாச்சாரப்  பழக்கங்களை விட இப்பண்புகளை கோடிட்டுக் காட்டுவது முக்கியமான தேவையாக நான் கருதுகின்றேன். வேற்றுமையில் ஒற்றுமை தேவை, அதே சமயம் பூமியின் அழகு மிக்க சிறப்பியல்பாகிய வேற்றுமைகளை வளமூட்ட வேண்டும். நாம் அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள், வெவ்வேறு விதமான சடங்குகள், பழக்கங்கள் நிலவி வருகின்றன, இவற்றில் எதையும் நாம் இழந்து விடக்கூடாது. ஒவ்வொன்றுக்கும் அதற்குறிய தனி மதிப்பு உள்ளது.
அனைத்து சமயங்களுக்கும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்னவென்றால், கருணை, அன்பு ஒற்றுமை ஆகியவை ஆகும். இவற்றையே நாம் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒழுங்கில்லாத மக்களாட்சியின் காரணமாக இந்தியா வீழ்ந்து கொண்டிருப்பதாக சந்தேகப் பேர்வழிகள் கருதுகின்றார்கள். தங்களது கருத்துக்கள் யாவை?

குருதேவ்: ஊழலும்,எண்ணிக்கை விளையாட்டும் தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை.மக்கள் தொகை அதிகமான இந்தியாவில்  பல பிரச்சினைகள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் எண்ணிக்கை விளையாட்டானது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்படுத்தவல்ல நல்ல தலைவர்கள் இருந்த போதிலும் அவர்கள் மாநிலக் கட்சிகளினால் அல்லது ஒன்றோடொன்று இணங்காத கூட்டணியால் பின் தள்ளப்பட்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த முறை அவர்கள் தெளிவான ஆட்சிக் கட்டளை உரிமையை பெற்றுள்ளனர். பல்வேறு கட்சிகள் அடங்கிய கூட்டணி அல்ல. விரைவான முன்னேற்றத்திற்கு இது உதவும்.ஒன்று நிச்சயம், முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், நாம் மக்களாட்சியையே விரும்புகின்றோம், வேகமான முன்னேற்றத்தை தரக்கூடிய வல்லாட்சியை அல்ல. மக்களாட்சியில் பல குரல்கள் கேட்கப்படலாம், ஆனால் வல்லாட்சியில் அவ்வாறு அல்ல. ஒருபோதும் வல்லாட்சியை ஏற்க மாட்டோம்.

பயங்கரவாதம்,மற்றும் சமய தீவிரவாதம் ஆகிய பிரச்சினைகள்  இன்று உலகெங்கும் பெருகிக் கொண்டிருப்பதை எவ்வாறு நாம் கையாள்வது?

குருதேவ்: இது ஒரு பெரிய பிரச்சினை. நான் ஏற்கனவே கூறியபடி, அதற்குக் காரணம் புரிதல் இன்மை மற்றும் சார்பற்ற உணர்வுநிலை ஒருவருக்கொருவர் மற்றும் சமூகங்களிடையே நம்பிக்கையின்மை, இவை தவிர, புனிதநூல்களின் தவறான பொருள் விளக்கம் ஆகியவை ஆகும்.
ஒவ்வொரு குழந்தையும் உலக சமயங்கள் அனைத்தையும் பற்றிய சில கருத்துக்களை அறிதலும், அனைத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுதலும் தேவையானது என்று கருதுகின்றேன். அப்போது அவர்கள் பரந்த மனப்பான்மையுடன், வளர முடியும். தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப் படக் கூடும். ஆன்மீகத்திற்கு இதில் ஒரு பெரும் இருக்கின்றது. பல்வேறு சமயத்தினரையும், ஒரு சமயத்திலுள்ள பல்வேறு பிரிவினரையும் ஒருங்கிணைத்து, நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்னும் புரிதலை ஏற்படுத்துகின்றது.

ஒரு குறிப்பிட்ட சமயம் அல்லது கலாசாரத்தை சேர்ந்தவர்களின் அடையாள உணர்வு தான் மக்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. நான் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவன், அதன் அடையாளத்தைக் காப்பதற்காக நான் உயிரையும் தியாகம் செய்வேன் என்னும் உணர்வு உள்ளது. ஆனால் நாம் ஒரு பெரிய அடையாளம் அதாவது, மனித சமுதாயம் என்னும் பெரிய அடையாளத்தை பிடித்துக் கொண்டால், அப்போது, தற்சமயம் நிகழ்ந்து வரும் வன்முறை செயல்கள், தற்கொலை வெடிகுண்டு தாக்குதல், ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட்டுவிடும். அறிவியல் கல்விமுறையும் ஆன்மீகக் கல்விமுறையும் இணைந்து அளிக்கப்பட வேண்டும். 

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இதை யுனெஸ்கோ எடுத்துவர வேண்டும். உலகெங்கிலும் தடுப்பூசியேற்றம் கட்டாயமாக்கியது போன்று உலகெங்கிலும் இதுவும் கட்டாயமானது என்று ஐநா சபை கூறலாம். இது தீவிரவாதத்திற்கெதிரான தடுப்பு ஊசி ஆகும்.