தியானம் - முழு ஈடுபாடு

திங்கள் கிழமை, 9 ஜூன், 2014, 

பெங்களூரு, இந்தியா


அன்புள்ள குருதேவ், நான் தங்களைப் பற்றி, எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கின்றீர்கள், தங்கள் கண்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன, தங்கள் புன்முறுவல் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கின்றது என்றெல்லாம், எண்ணிக் கொண்டே தியானம் செய்தல் சரியா? தங்களது உருவத்தின் மீது தியானம் செய்தல் சரியாகுமா?

குருதேவ்: யாரையாவது அல்லது எதையாவது நினைவில்  இருத்தி  முயற்சியற்ற தியானம் செய்ய முடிந்தால் அது சரியானதே. யோக சூத்திரத்தில் பதஞ்சலி, ஏதேனும் உருவம் உங்கள் நினைவில் வந்து, அல்லது உங்களுக்கு விருப்பமான எதையேனும் நினைவில் கொண்டு தியானம் செய்தால், பரவாயில்லை என்று கூறுகின்றார்.

தியானத்திற்குப் பல அணுகுமுறைகள் உள்ளன: இங்கு நமது முதிர்நிலை தியான பயிற்சியில், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் காலியான வெற்றிடம் என்று கூறி, பொருள் சார்ந்த உலகை நோக்கிக் கொண்டிருக்கும் உங்கள் மனதை  உள்முகமாகத் திருப்புகின்றோம். சுற்றியுள்ள  அனைத்தும் காலியான வெற்றிடம் என்னும் விழிப்புணர்வு ஏற்படும் போது ஒரு ஆழ்ந்த புரிந்துணர்வு மலர்கின்றது. ஆகவே தியானம் என்பது மிக எளிதாக நிகழக் கூடியது ஆகும். ஆனால் நீங்கள் தியானத்தில் ஆழும் முன்னரே குருதேவின் உருவம் ,அவர் எப்படி இருப்பார் என்றெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள முயன்றால், அப்போது தியானம் நிகழாது. ஏதேனும் உருவத்தை ஆழ்ந்து நினைத்து தியானம் செய்யக் கற்றுக் கொடுக்கும் மரபும் உண்டு. யோக சூத்ராவில் "வித்ராக் விஷயம் வ சித்தம் " என்று கூறப்பட்டுள்ளது. ஒரு பற்றற்ற மற்றும் ஞானசித்தியடைந்த ஒரு ஆத்மாவை மனதில் எண்ணி ஒருவர் ஆழ்ந்த தியானத்திற்குச் செல்ல முடியும் என்று கூறப் பட்டுள்ளது. அதனால் தான் குருவை எண்ணி தியானம் செய்கிறார்கள். அது தானாகவே உண்மையில் நிகழ்ந்தால் சரி. அவ்வாறு நிகழவில்லையெனில், தியானம் செய்யும் பொருட்டு  குருவை மனதில் எண்ணிக் கொள்ள அதிக முயற்சி செய்ய வேண்டாம்.

குருவிடம் தொடர்பு நிகழும்போது உங்கள் இதயம் அவருடன் ஒன்றி விடும். உங்களில் அன்பு மலரும் தியானம் முயற்சியின்றி  தானாகவே நிகழும். இவ்வாறு தான் கோபிகையர் (பிருந்தாவனத்துக் கன்னிகையர் ) ஸ்ரீ கிருஷ்ணரிடம் முழுமையான காதலுடன் இருந்தனர். கோபிகையர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பூரண அன்பில் திளைத்து முயற்சியின்றி தியானத்தில் ஆழ்ந்தனர். ஆழ்ந்த அன்பு ஏற்படும் தருணத்தில் தியானம் தானாகவே நிகழும். மற்றொரு அணுகுமுறை புத்தரால் கற்பிக்கப்பட்டது. புத்த பகவான்  உங்களை சுற்றியுள்ள அனைத்தும் தற்காலிகமானதும் நிலையற்றதுமாகும். எதுவும் எப்போதும் நீடித்திருக்காது அனைத்தும் ஒரு நாள் மறைந்து விடும். இதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி தியானம் கற்பித்தார். தியானம் செய்ய இன்னொரு வழியாகும்.

குருதேவ்,  மனம், அறிவு, நினைவாற்றல் மற்றும் ஆத்மா இவை அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று வேற்பட்டது என்பதை எவ்வாறு ஒருவன் அனுபவித்தறிய முடியும்?

குருதேவ்: நான் கூறிக் கொண்டிருப்பதை உங்கள் காதுகளின் வழியாக நீங்கள் கேட்டுக் கவனிக்கின்றீர்கள். இசையை உங்கள் மனதின் மூலம் கேட்டு அனுபவிக்கின்றீர்கள். ஆனால் எதையாவது பற்றிக் கேள்விகள் கேட்கும்போது, நீங்கள் உங்கள் அறிவின் மூலம் கேட்கின்றீர்கள். ஆனால் மனம் தான் இசையை கேட்கின்றது, தொடுகையின் சூடு மற்றும் குளுமையை அனுபவிக்கின்றது. அதை இயற்கை திறன் அல்லது உயிர்நிலைப் படிவம் மூலம் புரிந்து கொண்டு அனுபவித்தறிகின்றீர்கள். பின்னர், இது வேண்டும், இது வேண்டாம் என்று ''தான் என்னும் அகந்தை'' உணர்ந்து கொள்கின்றது. இந்த அனைத்து அனுபவங்களையும் ஞாபகத்தில் கொள்வது நினைவாற்றல். இவை ஒரே விழிப்புணர்வின் நான்கு விதமான நிகழ்முறைகள்.

குருதேவ், ஒரு தியானத்தில் தாங்கள், "நாசி காலியான வெற்றிடம், தொண்டை காலியான வெற்றிடம்" என்று கூறுகின்றீர்கள். தியானத்தின் போது காலியான வெற்றிடங்களாக உள்ளவற்றின் மீது கவனத்தை எடுத்து செல்வதன் பயன் என்ன? அதற்குப் பதிலாக நாம் கடவுளை எண்ணித் தியானம் செய்ய வேண்டாமா?

குருதேவ்: கடவுளை  நோக்கிச் செல்வதற்கு புல்லாங்குழலைப் போன்று உங்களை காலியான வெற்றிடமாக ஆக்கிக் கொள்வது நலம். அப்போது இறைமையின் ஒத்திசைவு உங்களூடே பாய்வதை உணரலாம். நமது குருபரம்பரையில், " நேதி நேதி " (இது இல்லை, இது இல்லை) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இறைமை இது அன்று, அதுவும் அன்று, இவ்வாறு அவர்கள் இறுதியில், அனைத்தும் ஒரே விழிப்புணர்வு நிலை அதற்கு மேற்பட்டு எதுவுமே இல்லை என்று புரிந்தரிந்து கொள்ளும் வரையில், கடவுளை வரையறுக்கப்பட்ட உருவமாக புரிந்து கொள்ளுதலை மறுத்து வந்தார்கள். 

கடவுள் ஒரு மனிதன் அல்ல, வரையறுக்கப்பட்ட உருவும் அல்ல. படைப்பின் அனைத்தின் பின் புலமாகும் உயர் சக்தி ஆகும். இறைமை இந்தப் படைப்பின் மெல்லிய இனிய ஒத்திசைவாகும். இவ்விசையினை புரிந்து கொள்ளவும், இறைமையின் இசையைக் கேட்டறியவும் காலியான வெற்றிடமாக ஆவது அவசியம்.(அதாவது வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள், அற்ப ஆசைகள், மற்றும் புரிதல் இவற்றை விட்டு விடுதல்) அதனால் தான் காலியான தன்மையை அனுபவித்து விழிப்புணர்வு அடைதல் தேவையானதாகும். அப்போது தான் இறைமையின் முழுமையை அனுபவித்தறிய முடியும்.

குருதேவ், நான் ராதாசுவாமியின் மரபினை பின்பற்றி வருகின்றேன். தங்களை காணும் ஆவலுடன், மகிழ்ச்சி வகுப்பினை எடுத்து சுதர்சனக்ரியாவும் கற்றுக் கொண்டேன். இப்போது நான் செய்தது தவறோ என்று குற்ற உணர்வு கொள்கின்றேன். ஒரே சமயத்தில் இரு வேறுபட்ட ஆன்மீகத் தலைவர்களை பின்பற்றுவது இயலாத ஒன்றா?


குருதேவ்: குற்ற உணர்வு தேவையே இல்லை. நீங்கள் நேர்மையாக ஒரு ஆன்மீக வழியை பின்பற்றி அங்கு நிறைய நற்தொண்டாற்றி, அதன் பயனாக மற்றொரு மரபினைப் பின்பற்றுதலைப் பரிசாகப் பெற்றீர்கள். இந்த வாழும்கலை தியானப் பயிற்சிகளை செய்யும்போது அவற்றை நீங்கள் ஏற்கனவே கற்றவற்றுடன் கலக்க வேண்டாம் என்று கூற விரும்புகின்றேன். இங்கு கற்பிக்கப்பட்ட செய்முறைப் பயிற்சிகளுடன் நீங்கள் ஏற்கனவே கற்றுக் கொண்ட வேறுபட்ட ஒன்றைக் கலந்து விட வேண்டாம். இங்கு என்ன கற்றுக் கொண்டீர்களோ அவற்றை அப்படியே செய்யுங்கள். வேறொரு ஆன்மீக மரபில் கற்றுக் கொண்டவற்றை அங்கு கற்றுக் கொண்டபடியே தொடர்ந்து செய்து மரியாதை செலுத்துங்கள். அனைத்து ஞானமும் ஒன்றே - அது ஆத்மஞானம். வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு மனிதர்களால் வெவ்வேறு ஆன்மீக மரபுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்று நோக்கினால் ஆன்மீக மரபுகளிடையே எந்தவிதமான முரண்பாடும் கிடையாது. அது வெறும் மனவலை தான். அதை பற்றி அதிகமாக கவலைப்படத் தேவையில்லை.அனைவரையும் அனைத்து மரபுகளையும் கௌரவியுங்கள். ஒன்றினையே முழுமையான ஈடுபாட்டுடன் பின்பற்றுங்கள்.