நீங்கள், உங்களது வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர முடியும்

திங்கள், 9 ஜூன், 2014, பெங்களூரு, இந்தியா













(குறை கூறுவதை நிறுத்துங்கள், வாழத் துவங்குங்கள்! என்னும் பதிவின் தொடர்ச்சி)

வினாக்களும் - விடைகளும்

குருதேவ், வருங்காலத்தை நிர்ணயிப்பது நமது விதியா அல்லது நமது செயல்களா?  என்ன நடக்கப் போகின்றதோ அது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு விட்டது என்பதை பல முறைகள் கேட்டிருக்கின்றேன். அது உண்மையா? அப்படியானால் நமது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு நாம் பொறுப்பாக முடியாது. வெகு காலமாக இதை பற்றிய குழப்பத்தில் இருக்கின்றேன். தயவு செய்து நான் இதைப் புரிந்து கொள்வதற்கு உதவுங்கள்.

குருதேவ்: இது ஒரு ஆழமான கருத்துப்பொருள். எல்லாமே முன்னரே நிச்சயிக்கப்பட்டது ஆனால் செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன? அப்போது சாதனா, மந்திரங்கள் உச்சாடனம், இறை வழிபாடு கூட பயனற்ற செயல்களாகி விடுகின்றன. விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இவற்றைப் பொறுத்த வரையில் அனைத்துமே இயற்கையினால் முன்னரே நிச்சயிக்கப்பட்டவை தாம். ஆனால் மனித இனத்தை பொறுத்த வரை, சில விஷயங்கள் விதியினால் முன்னரே நிச்சயிக்கப்பட்டவை, விருப்பத் தேர்வுக்கும் சற்று சுதந்திரம் உள்ளது. நல்லது மற்றும் தீயது என்று பிரித்துணரும் விவேகம் மனித இனத்துக்கு பரிசாக அளிக்கப் பட்டிருக்கின்றது. 

பறவைகளும் விலங்குகளும் தங்களது செயல்களுக்கு (நல்ல மற்றும் தீய) பலனை பெறுவதில்லை, ஏனெனில் அவற்றின் அனைத்துச் செயல்பாடுகளும், அவற்றின் DNA யிலேயே முறைத்திட்டப் படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மனித இனத்தைப பொறுத்த வரையில் எவ்வாறு செயல்படுவது என்பதற்கு சுதந்திரம் உள்ளது, தவிர ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காணும் திறனும் உள்ளது. எனவே, உங்களது விருப்பப்படி செயல் வழிகளை காண முடியும், அதனால் தான் மனித வாழ்வானது விடுதலையை அடைவதற்கு உகந்ததாக இருக்கின்றது. ஆகவே, விதிப்படி நிர்ணயிக்கப்பட்டவைகளோடு உங்களுக்கு நிகழ்வதை பொறுத்துக் கொண்டு ஏற்றுக்கொள்வதற்கும், மாற்றுவதற்குமான விருப்பத் தேர்வு திறன் உள்ளது. மனித வாழ்வு விதிப்படி முன்னரே நிச்சயிக்கப்பட்டதும், தன்னிச்சையும் கலந்த கலவை ஆகும்.

குருதேவ், தயவு செய்து உண்மையின் முரண்பாடான தன்மையினைப் பற்றி விளக்கிக் கூறுங்கள்.

குருதேவ்:  இந்தியாவில் எந்தக் கோவிலுக்கு சென்றாலும், அங்கு ஆண் பெண் தெய்வங்களின் உருவச் சிலைகளை மட்டுமன்றி, அரக்க தேவதைகளின் (எதிர்மறை மற்றும் மருட்சி இவற்றை குறிக்கும்) உருவச் சிலைகளையும் காணலாம். தெய்வங்கள் இத்தகைய அரக்கத் தேவதைகளை வெற்றி கொண்டதாலேயே தெய்வங்கள் ஆனார்கள். அரக்கர்களே இல்லையெனில் எவ்வாறு அவர்கள் அப்பதவியை அடைந்திருக்கக் கூடும்? ஆகவே எதை நீங்கள் முரண்பாடு  என்று கருதுகின்றீர்களோ உண்மையில் அவை ஒன்றுக்கொன்று ஈடு செய்து கொள்வதாகும். உதாரணமாக பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பால் நன்மையானாதா? அல்லது தீயதா? எந்த அளவு தேவையோ அந்த அளவு பால் எடுத்துக் கொண்டால் அது நன்மை, ஆனால் அதுவே அதிகமாக அருந்தினால் ஜீரணக் கோளாறை ஏற்படுத்தக் கூடும்.

அது போன்று விஷம் நல்லதா தீயதா? அனைத்து மருந்துகள் உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றில் அதிகமாக எடுத்துக் கொண்டால் விஷம் என்னும் ஒரு எச்சரிக்கை அடையாளச் சீட்டு காணப்படும். எனவே விஷம் உயிரைக் காக்கவும் உதவும், அதே சமயம் உயிரை மாய்க்கவும் செய்யும். ஆகவே தான் இயற்கையில் முரண்பாடாகத் தோற்றமளிக்கும் இவை, உண்மையில் ஒன்றுடன் ஒன்று ஈடு செய்து கொண்டே இருக்கின்றன. ஆழமாக இந்த ஞானத்தில் திளைத்து பார்த்தால் இதை கண்டறிந்து கொள்ளுவீர்கள். ஒரு திரைப்படத்தில் வில்லனும் இருந்தால் தான் கதாநாயகன் முக்கியத்துவத்தை அடைகின்றான். வில்லனே இல்லையென்றால் கதாநாயகனுக்கு உண்பதும் உறங்குவதும் தவிர வேறு வேலையே இருக்காது. வில்லன் ஏதாவது தீங்கு, அல்லது சண்டை உருவாக்கும் போது கதாநாயகனின் அனைத்துத் திறமைகள், செயல்திறன்கள் மலர்ந்து வெளிப்படுகின்றன.

குருதேவ், குண்ட்லி (ஒருவரது ஜாதகத்தில்) என்பது என்ன? குண்ட்லியில் எழுதப் பட்டிருப்பவை அனைத்தும் உண்மையா? எனது மாமியார் அவரது குண்ட்லியின் படி ஐம்பதாவது வயதில் சன்யாசம் ஏற்றுக்கொள்ளப் போவதாகக் கூறுகின்றார். அவ்வாறு நிகழ்ந்து எங்களை விட்டு விலகிச் சென்று விடுவாரா?  

குருதேவ்: அது போன்று எதுவும் இல்லை. ஜோதிடர்கள் சில சமயங்களில் இவ்வாறெல்லாம் கூறுவார்கள். நான் ஏற்கனவே விவரித்திருப்பதன் படி, குண்ட்லி என்ன நடக்கக் கூடும் என்பதற்கு சில அறிகுறிகளை காட்டுகின்றது. உதாரணத்திற்கு உங்கள் மாமியாரை எடுத்துக் கொள்ளுங்கள். தனது  ஐம்பதாவது வயதிற்கு மேல் உணர்ச்சிவசப்படாத நடுநிலையை அடையப் போவதாக குண்ட்லியில்  கூறப்பட்டிருந்தால், அவர் குடும்பத்தைத் துறந்து விட்டு துறவி ஆகப் போவதாகப் பொருள் கொள்ள வேண்டாம். அவர் சாதனா தியானம் இவற்றைத் தொடர்ந்தால், தந்து குடும்பப் பொறுப்புக்களைச் செவ்வனே செய்து கொண்டு, அதே சமயம் ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்வதாகக் கொள்ளலாம். இவ்வாறு தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் பற்றி அதிகமாகக் கவலைப்படக் கூடாது. ஒரு வேளை நீங்கள் அவரைத் தொல்லை செய்கின்றீர்களோ என்னவோ, அதனால் அவர் இவ்வாறு கூறியிருக்கக் கூடும்.(சிரிப்பு)

குருதேவ், நான் என்னுடைய சாதனா, சேவை, சத்சங்கம் ஆகியவற்றில் ஒழுங்கு முறைப்படி பல ஆண்டுகளாக இருந்து வருகின்றேன். இருந்தும் கூட, கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரப் பிரச்சினைகளினால் மிகவும் வருந்துகின்றேன். எனக்கு அறிவுரை கூறுங்கள்.

குருதேவ்: அனைத்தும் சரி ஆகும். தாமதம் இருக்கலாம், ஆனால் நிச்சயம் சரியாகி விடும். இத்தகைய சிரமங்கள் நெடுங்காலம் நீடித்திராது. இந்த நாடே பொருளாதார பிரச்சினைகளில் இருந்து வருகின்றது. நமது தொழிலதிபர்கள் கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார்கள். நமது வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும்? எங்குமே பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கும், மக்கள் தங்களது தொழில் நஷ்டத்தினால் வருந்துவார்கள்.  இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.ஆ னால் அனைத்துமே விரைவில் மாறி விடும். நம்பிக்கை மற்றும் பொறுமையுடன் இருங்கள்.

குருதேவ், ஒருவர் இறந்த பின்னர் அவரது விலைமதிப்புள்ள உடைமைகளைத் தானம் செய்து விடும் மரபு உள்ளது.  சிலரால் இதைச் செய்ய முடிகின்றது, சிலரால் முடிவதில்லை. நமது ஹிந்து முறையில் இதன் பொருத்தம் என்ன?

குருதேவ்: பல புரோகிதர்கள் மக்களுடைய உணர்ச்சிவயக் கருத்துக்களை தன்னலப் பயன்பாட்டிற்கு வசப்படுத்திப் பணம் சம்பாதிக்கின்றார்கள். ஹரித்வார் அல்லது காசிக்குச் சென்றால், அங்குள்ள கோவில் பூசாரிகள் தானம் செய்யுமாறு கட்டாயப்படுத்துவார்கள். உங்களைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி உங்களுள் தவறிழைத்ததை போன்ற உணர்வுக்குத் தூண்டுவார்கள். அவர்கள் கூறுவதைக் கவனிக்காதீர்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதை செய்யுங்கள்.


அவர்கள் ஒரு பசு அல்லது அதற்குறிய பணம் தானம் செய்யுமாறு கேட்கலாம். உங்களால் என்ன முடியுமோ அதன்படியும், உங்கள் நம்பிக்கைக்குகந்த படியும் செய்யுங்கள். பூசாரி கூறுவதை கண்மூடித் தனமாக பின்பற்ற வேண்டாம்.