ஞானோபதேசம் என்னும் ஆய்வுபொருள்

புதன்கிழமை, 18 ஜூன், 2014,

பெங்களூரு, இந்தியா


இந்த ஆன்மீகத் தலைவரின் உரைகளை நான் கடந்த ஓராண்டு காலமாக கேட்டு வருகின்றேன். அவர் ஞானோபதேசம் என்பது உடற்கூறு மற்றும் உடலியக்கம் சார்ந்தது, அதில் எவ்விதமான சமய சம்பந்தமும் கிடையாது என்றே கூறுகின்றார். அவர் மற்றெல்லா கருத்து கோட்பாடுகளையும் மறுத்து எந்த அமைப்பு மற்றும் வழிமுறைகளும் ஞானோபதேசத்திற்கு நடத்தி செல்லாது என்கின்றார்.

குருதேவ்! உண்மையில் ஞானோபதேசம் என்று ஒன்று இருக்கின்றதா?

குருதேவ்: இவ்வுலகில், வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு கருத்துக்களும் பார்வை கோணங்களும் கொண்டுள்ளார்கள். அவரவர் கருத்துக்கள் அவரவருக்கு, ஆனால் உண்மை நிலை என்பது வேறு. பாலைவனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர், பூவுலகில் மரங்களே கிடையாது என்று கூறலாம். அதுதான் அவரது அனுபவம். அதே நேரத்தில், நாம் "ஒ! நிறைய மரங்கள் உள்ளன. ஏராளமான தண்ணீர் உள்ளது, அதுவும் மிக இனிப்பாக உள்ளது என்று கூறுகின்றோம்.ஆனால் பாலைவனத்தில் உள்ளவனின் அனுபவம் அது அன்று. அவர்கள் சுவைக்கும் நீர் உப்பானது. மக்களுக்கு அவரவர் உணர்வுபடி புரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. ஞானோபதேசம் என்பது கிடையாது என்றால் அதற்கு முன், அதன் பொருள் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். அதன் பொருள் "மனதிற்கு மேற்பட்ட நிலையை அடைந்து உங்களின் இயல்பான உள்ளுயிர்த்தன்மையை அடைதல்“ என்பதாகும். அது உங்கள் தலையில் வந்து விழும் ஒரு பொருள் அல்ல. "எது நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன், என்னும் உணர்வு நிலையே ஞானோபதேசம் ஆகும்.

ஞானோபதேசம் என்று ஒன்று இல்லையெனில் ஏன் பல நூற்றாண்டுகளாக மக்கள் அதை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்? பல நூற்றாண்டுகளாக மக்கள் "நான் இந்த உடல் இல்லை" என்னும் அனுபவத்தை அடைந்திருக்க வேண்டும். மேலும், மேலும் நீங்கள் படித்துக் கொண்டே இருந்தால் தான் இந்த அனுபவம் கிட்டும் என்பது இல்லை. பலர் எதுவுமே படிக்காமல் சுதர்சன்க் க்ரியா செய்யும்போது படித்தறிந்தவர்களை போன்றே இந்த அனுபவத்தை அடைகின்றார்கள். நீங்கள் கூறும் இந்த மனிதரை சுதர்சனக் க்ரியா மற்றும் சக்தி க்ரியா செய்யச் சொல்லுங்கள் அவர், சுதர்சனக்ரியா சக்திக்ரியா மற்றும் தியானம் செய்தால் புரிந்து கொள்ளக் கூடும். மிகப் பிரபலமான ஒருவர்" மனதில் எழும் எண்ணங்களை ஒரு நொடி கூடத் தடை செய்ய முடியாது. எண்ணங்கள் எழாவிட்டால், பைத்தியம் பிடித்துவிடும்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.

இது நமது அனுபவம் அல்ல, இல்லையா? நீங்கள் இங்கு தியானம் செய்யும் போது உங்கள் அனுபவம் என்ன? நீடித்த கால அளவில், உங்கள் மனம் சலனமற்றும், திடமாகவும், சாந்தமாகவும் இருக்கின்றது அல்லவா? (அனைவரும் ஆம் என்கின்றனர்) எண்ணங்கள் அற்ற மனநிலையை அனுபவிக்கின்றீர்கள்! (அனைவரும் ஆம் என்கின்றனர்) இக்காலத்தில், இந்நிலையானது,கருவிகளின் உதவியுடன் அளக்க முடியும். மூளையின் இடது மற்றும் வலது அரைக்கோளத்தில் ஒத்திசைவும், உடனதிர்வு நரம்பு மண்டலத்தின் ஒத்திசைவும் நிகழும் போது, வேறுபட்ட விழிப்புணர்வு நிலை உருவாகின்றது. அத்தகைய வேறுபட்ட விழிப்புணர்வு நிலையை இயற்பொருள் ரீதியாக அளக்கும் நிலையே ஞானோபதேச நிலை என்று அழைக்கப்படுகின்றது.

இதுவரை பெற்ற துன்பத்திலிருந்து எவ்வாறு விடுவித்துக் கொள்ளுவது? வருங்காலத்தில் வேதனையை பெற்றுக்கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: யோகாவும் தியானமும் தான் ஒரே வழி. இவ்வுலகில் எல்லாமே வேதனைதாம். எந்த மகிழ்வளிக்கும் விஷயம் கூட அதிகமானால் வேதனைதான் ஏற்படும். மகிழ்வான ஒன்றை விரும்பும் போது வேதனை ஏற்படுகின்றது. அதை அடைந்த பின்னரும், அதை இழந்து விடுவோமோ என்னும் பயத்தில் வேதனை உண்டாகின்றது. அது முடிந்து போய்விட்ட பின்னர் அதைப் பற்றிய நினைவுகள் வேதனையை ஏற்படுத்துகின்றது.

மகிழ்வற்ற ஒன்று உடனேயே வேதனையை ஏற்படுத்துகின்றது. ஆனால் இன்பமான ஒன்றும் வேதனையையே உண்டாக்குகின்றது ஏனெனில் அதைப் பற்றிய விருப்பம், ஆசை வேதனையை உருவாக்குகின்றது. இவ்வாறு தான் பல முறைகள் நிகழ்கின்றன. ஒருவர் அமைச்சர் பதவியை விரும்புகின்றார். அதை அடையும் முன்னர் அடைவதற்கான முயற்சியில் வேதனை ஏற்படுகின்றது. அதை அடைந்த பின்னர் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேதனை உருவாகின்றது. பின்னர் அப்பதவியிலிருந்து நீங்கியபின்னரும் வேதனையே, ஏனெனில் யாரும் அவரை மதிப்பதில்லை. ஆனால் நீங்கள் முற்றிலும் பற்றின்றி இருந்தால் துன்பம் மறைந்து விடும். அதனால்தான், "தேன த்யக் தேன பூஞ்சி தஹ்" என்று கூறப்பட்டுள்ளது. அனைத்தும் இறைவனையே சார்ந்தது, பற்றுக்களை அகற்றி விட்டு மகிழ்ச்சியாக இருங்கள் பதவியை அடைவது தவறு என்றோ இன்பத்தைத் அனுபவிப்பது மோசமானது என்றோ நான் கூறவில்லை. இல்லவே இல்லை. பற்றுதலை அகற்ற வேண்டும் அவ்வளவு தான்.

எவ்வாறு புத்தர் சாதனா, சேவா, மற்றும் சத்சங்கம் இவையில்லாமல் ஞான நிலையை அடைந்தார்?

குருதேவ்: புத்தர் தியானம் செய்ய வில்லை என்று யார் கூறியது? தியானம் தான் சாதனா.!  புத்தர் பல இடங்களுக்கு பயணம் செய்து மக்களுக்கு தொண்டு செய்தார். ஒவ்வொருவரின் பிரச்சினையையும் கேட்டு, அவர்களுக்குத் தியானம் கற்பித்தார். அது சேவை இல்லையா? அவர் சத்சங்கம் செய்ய வில்லை என்று யார் கூறியது? ஒவ்வொரு நாளும் அவரும் அவரை சார்ந்த அனைவரும் சத்சங்கத்தில் ஈடுபட்டார்கள். அனைத்து புத்த மத புனிதநூல்களும் சத்சங்கத்திலிருந்து உருவானவையே ஆகும். அவர் பாலி மொழியில் பேசியும் பாடியும் இருக்கின்றார்.

புத்தர் தான் "பவது  சபா  மங்களம் ரக்காந்து சபா  தேவதா" (அனைத்து ஜீவன்களும் மகிழ்வுடன் இருக்கட்டும். அனைத்துக் கடவுளரும் அவர்களைக் காக்கட்டும்" என்று கூறியுள்ளார். அக்காலத்தில் உபயோகிக்கப் பட்ட மொழி பாலி ஆகும், எனவே புத்தர் அம்மொழியில் பேசியும், பாடியும் உள்ளவை தாம் புத்தசமய புனித நூல்களாக இப்போது வெளி வந்துள்ளன. இதை போன்றே ஸ்ரீ கிருஷ்ணரும் ஏராளமாக செய்துள்ளதை காணலாம்.அவர் பகவத்கீதையினை அருளியுள்ளார். புத்தர் அருளியவை,அவரது தியானம், அவரது விரதம் ஆகியவை ஏராளமானவை ஆகும். ஒவ்வொருவரும் என்ன வேண்டினரோ அதைச் செய்தார். இவ்வாறு செய்து முடித்துக் களைத்த பின்னர் தான் அவருக்கு ஞானோபதேசம் நிகழ்ந்தது. புத்தர் செய்த சாதனாவும் அதிகம். ஸ்ரீ கிருஷ்ணர் அதிக சாதனா செய்ய வில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் குறும்புக்காரர், இங்குமங்குமாக பல குறும்புகளைச் செய்து கொண்டிருந்தார், அதனால் தான் அவை கிருஷ்ணலீலா (கிருஷ்ணரின் விளையாட்டுக்கள்) என்றும், புத்த கதா (புத்தரின் கதை) என்றும் அழைக்கப்படுகின்றன.    

குருதேவ்! பக்திசூத்ராவில் தாங்கள் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு வரி உண்டு என்று கூறியிருக்கின்றீர்கள். பக்திக்கும் வரி உள்ளதா?

குருதேவ்: தான் என்னும் அகந்தைதான் பக்திக்கு செலுத்தப்பட வேண்டிய வரி

எப்போது ஒருவன் உலக வாழ்க்கையில் ஈடுபடுவதை நிறுத்தி முற்றிலும் விடுதலை அடைய வேண்டும்?

குருதேவ்: உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும்போதே நீங்கள் விடுதலையை உணர வேண்டும்! நீங்கள் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போதுதான் உலக பந்தத்திலிருந்து விடுபட வேண்டும். மீண்டும் செயல்நிலைக்கு வரும்போது, கூர்மையான கவனம் வேண்டும். அத்தகைய மன நிலையையும் கூர்ந்த விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.