மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சியளியுங்கள்

28 ஏப்ரல், 2014

பெங்களூரு, இந்தியா


இன்று ஆத்மாவிற்கும் மனதிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை பற்றி ஆழ்ந்து சிந்திப்போம். ஆத்மா மாற்றம் இல்லாதது, எப்போதும் ஒரே நிலையில் இருப்பது, ஆனால் மனம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.  அதனால் தான் மனம் சந்திரனுடன் (வளரும் தேயும் சந்திரனைக் குறிப்பிட்டு) ஒப்பிடப்படுகின்றது. ரிக் வேதத்தில் புருஷசுக்தத்தில் ' சந்த்ரமா மனசோ ஜாயதே' (பொருள்: இறைமையின் விண் மனதிலிருந்து எழுந்தது சந்திரன்) என்று கூறப்படுகின்றது. 

சந்திரனுக்கும், மனதிற்கும் ஒரு  ஆழ்ந்த தொடர்பு உள்ளது. சந்திரன் வளர்ந்து தேய்வது போன்று நம் மனத்திலும் எழுச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும். சில சமயங்களில் விரியும், சில சமயங்களில் சுருங்கும். எந்த காரணமும் இன்றி சில சமயங்களில் மகிழும், சமயங்களில் துன்புறும்.
அதனால் தான், நெடுங்காலமாக மக்கள்,"மனதை வெல்வபவன் இவ்வுலகையே வெல்கின்றான்" என்று கூறி வருகின்றார்கள். கட்டுப்படுதலுக்கும், விட்டு விடுதலையாவதற்கும் மனமே காரணம். ஏதாவது தளைகளில் சிக்கிக்கொண்டது போன்று நாம் உணருவதற்கும், விடுதலையாக உணருவதற்கும் மனமே காரணம். அதனால் நம் மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சியளிக்க வேண்டும். "மனைவ மனுஷ்யாநாம் கரணம் பந்த- மோக்ஷயோ" 

இதன் பொருள் என்னவென்றால்,கட்டுண்டிருத்தலுக்கும், விடுதலைக்கும் மனம் மட்டுமே காரணம் ஆகும். தளைகளில் சிக்கிக் கொண்டது போன்று நாம் உணருவதற்கும்விடுதலையாக உணருவதற்கும் மனமே காரணம். அதனால் நாம் நம் மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சியளிக்க வேண்டும். இது தான் ஞானத்தின் சாரம். இடைவிடாமல் தொடர்ந்து இதை பயிற்சி செய்து கொண்டிருந்தால், தொடர்ந்து பிரச்சனைகளை சந்திக்கும் ஒருவன் எவ்வாறு அவற்றை ஒரு புன்னகையுடன் சந்திக்கும் திறன் அடைகிறானோ அவ்வாறு நாம் சித்தி (அசாதரணமான திறன்) அடைந்து மனதை வசப்படுத்தலாம். அந்நிலையில் எந்தப் பிரச்சினையும் துன்பத்தை அளிக்காது.
முதன்முறை ஒரு குழந்தையை திட்டும் போது அது வருத்தம் அடைகின்றது. ஆனால் தினமும் அதைத் திட்டிக் கொண்டிருந்தால், அக்குழந்தை அதற்குப் பழகி, எந்த உணர்வும் இன்றி ஆகி விடுகின்றது."ஒ! எப்போதும் நான் திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றேன், இது ஒன்றுமே இல்லை" என்று அக்குழந்தை வேதனை இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.

அது போன்று, நாம் வாழ்வின் அனுபவங்களை (இனியவை, இனிமையற்றவை) எதிர்கொண்டால், ஒரு காலகட்டத்தில், நம்முள் "எல்லாமே ஒன்றுமில்லாதவை" என்னும் மெய்யுணர்வு எழும். அப்போது  தான் நாம் ஆத்மாவில் நிலை பெறுகின்றோம்.ஆத்மாவில் நிலை பெறுவது என்பதன் பொருள் என்னவென்றால், மனிதர்களோ, பொருட்களோ, சூழ்நிலைகளோ எது நம் முன் வந்தாலும் நமது புன்னகையையும், உள்ளச் சமநிலையையும் ஒரு கணம் கூட இழக்காமல் இருப்பது என்பதாகும். அப்படி இழந்தாலும் அது க்ஷண நேரத்திற்குத்தான், உடனேயே நாம் மீண்டும் அதை  அடைகின்றோம். பின்னர் நாம் மேலும் பலமாகவும்ஸ்திரமாகவும் நமது ஆத்மாவில் நிலை பெறுகின்றோம்.

சிறிய அற்பமான விஷயங்களுக்கெல்லாம்நாம் தொல்லை அடைவதில்லை. அடைந்தாலும் அது நீடித்திருப்பதில்லை. நீரில் வரையப்பட்ட கோடு நிலைத்திருக்கும் காலம் தான் அதன் பாதிப்பு நிலைத்திருக்கும். கல்லில் செதுக்கப்பட்ட கோடு போன்று நிலைத்திருப்பதில்லை.ஆத்மாவில் உண்மையில் நிலைபெற்றிருக்கும் ஒருவன் சித்தன் (முழுநிறைவடைந்தவன்) ஆகின்றான்.ஆனால் இந்நிலையை அடைவதற்கு நாம் நமது மனதிற்கு இடைவிடாமல் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அதுதான் மனதை வெல்வது அல்லது சிலர் கூறுவது போன்று மனதை கொல்வதாகும்.
சிலர் மனதை வெல்ல வேண்டும் என்று கூறுவார்கள், சிலர் மனதை கொல்ல வேண்டும் என்று கூறுவார்கள். இரண்டும் ஒன்று தான், கூறும் விதம் தான் வெவ்வேறு.மனதின் மீது வெற்றி கொள்வதும், மனதை முறியடிப்பதும் ஒன்றே ஆகும். இதை அடைவதற்கு குருவே வழி.குரு தோன்றும் போது மனம் மறைந்து விடுகின்றது. ஏன் அப்படி? ஆழ்ந்த நம்பிக்கையே காரணம். (ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் போது, மனம் சரணடைந்த நிலையில் இருக்கின்றது)

ஒரு பக்தனுக்கு குருவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதற்குக் காரணம் அவன் தனது மனதின் இயல்பினை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்றான். மனம் நம்பத்தகுந்ததல்ல,அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி ஊசலாடிக் கொண்டிருக்கும். சில சமயம் இதை விரும்பும், சில சமயம் அதை விரும்பும். சில சமயம் ஆம் என்றும் சில சமயம் இல்லை என்றும் கூறும். பிரக்ஞையுடன் ஒருவன் கவனிக்கும் போது தான் அருகிலிருப்பதையும் (நிகழ்காலம்) தொலைவிலிருப்பதையும் (வருங்காலம்) தடுமாற்றமில்லாத தெளிவுடன் காண முடியும்.

எல்லாவற்றையும் மனதின் மூலமே அறிய முற்பட்டால், அமைதியற்ற நிலை ஏற்படும். (ஏனெனில் மனம் ஒன்றிலிருந்து வேறொன்றுக்குத் தாவிக் கொண்டிருக்கும்). அதனால் தான், இளம் வயதினர் வாழ்க்கையில் பணி பற்றிய முடிவுகள் எடுக்கும் போது மூன்று, நான்கு மெய்யறிவார்ந்தவர்களை கலந்து ஆலோசிக்கின்றார்கள். ஒரு தொழிலைச் செய்ய தீவிர விருப்பம் இருப்பினும், சிறிது அதை ஒத்தி வைத்து, அத்தொழிலை செய்து கொண்டிருக்கும் அனுபவம் மிக்கவர்களை கலந்து ஆலோசிக்கின்றார்கள். ஏன்ஏனெனில், நாம் ஒன்றிலிருந்து ஒன்றிற்குத் தாவும் நமது மனதை மட்டுமே நம்பி இருக்க முடியாது. மனம் அடிக்கடி  மாறும் இயல்புள்ளது, சிலசமயம் சில பிடிக்கும், பிடிக்காது. இவ்வுலகிலேயே நாம் நம்பமுடியாதது நமது மனம் தான். மற்றவையெல்லாம் அடுத்தபடியாக வருகின்றன. நம்மை ஏமாற்றுவதில் முதல் இடம் நம் மனதிற்கு தான். நமது மனம் நம்மை மயக்குவது ஆகும். அதனால் தான், நாம் மீண்டும் மீண்டும் முயற்சித்து, நமது மனதை மௌனமாக்கி ஆத்மாவில் நிலை பெறவேண்டும்.

நிலையான, மாற்றம் இல்லாத, அசைக்க முடியாதவிரிவும் சுருக்கமும் அற்ற ஆத்மாவில்  உங்களை தாழிட்டுக் கொள்ளுங்கள். அது தான் நீங்கள், அது தான் நான், அதுவே கடவுள்.
கடவுள் யார்? கடவுள் எப்படி இருப்பார்? எங்கு இருக்கின்றார் என்றெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். மிக உயர்ந்த ஒரு சக்தி அனைத்தையும் நிகழச் செய்கின்றது என்பதில் ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த உயரிய சக்தி உங்களை சார்ந்தது, உங்களுள் இருக்கின்றது. இந்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் இளைப்பாறுங்கள். அப்போது தியானம் எந்த முயற்சியும் இன்றியே நிகழும்.

உங்களது மனதையும் ஞானத்தையும் மீண்டும் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாவிடின், நமது மனம், உண்ணுதல், குடித்தல் போன்ற பிற ஆசைகளில் ஈடுபட்டு மங்கலாகவும்அமைதியற்று போகும்.அறிவு ஸ்திரமற்றுப் போகும். எனவேமனதை ஒரே நிலையாக ஞானத்தை நோக்கியே செலுத்துங்கள். 

இன்று ஒரு அறிவியல் ஆய்வாளர் என்னைக் காண வந்திருந்தார். அவர் ஒரு நரம்பியல் நிபுணர். என்னிடம் ஒரு சிறந்த படத்தொகுப்பை காட்டினார். அவர் என்னிடம் கூறியது சுவையானதாக இருந்தது. ஒருவன் 84 லட்சம் பிறவிகள் எடுத்த பின்னரே மனிதப் பிறவி எடுக்கின்றான். அந்த அறிவியல் ஆய்வாளர் இந்த செய்தியை மூளையின் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புப்படுத்திக்  கூறினார். மனித மூளையின் கீழ்ப்பகுதி (மூளைத்தண்டு) ஊர்ந்து செல்லும் உயிரின மூளை என்று அழைக்கப்படுகின்றது. இது விலங்குகளிடமும் உள்ளது. இதற்கு சற்றே  மேற்பட்ட அடுக்கு (சற்று அதிக அளவு வாழ்வியல் பண்புகளைக் கட்டுப்படுத்தும்) பாலூட்டும் உயிரினங்களிடம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. மனித மூளையின் முன் பகுதி மடல் டால்பின் மீன் இனத்தினை ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே மூளையின் அமைப்பு வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு வகையாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. 84 லட்சம் பிறப்புக்கள் என்று நாம் கூறுவது போன்று உடல் உறுப்பு என்னும் முறையில், மூளை வெவ்வேறு உயிரினங்களுக்கு பல்வேறு வகையாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது.

மூளை என்பது அதிசயமான ஒன்று ஆகும். பண்டையக் கால ரிஷிகள், படைப்பின் பல்வேறு தத்துவங்களைக் கணக்கெடுக்கும் போது மூளையையும் சேர்த்துக் கணக்கிட்டார்கள். நமது வேதநூல்களில் இந்த ஞானத்தில் நாம் சற்று ஆர்வம் கொள்ள வேண்டும். தினமும் சற்று நேரம் ஒதுக்கி இந்த ஞானத்தைக் கேட்டறிய வேண்டும். அனைவரும் யோகாவசிஷ்டா நூலை படியுங்கள். அஷ்ட வக்கிர கீதை யைத் திரும்பத் திரும்பப் படியுங்கள். ஒரு முறை படித்தால் போதாது.

இவ்வாறு செய்வதன் மூலம் படிப்படியாக மனதை வெல்லும் சித்தியை அடையலாம்.சித்தி என்பதன் பொருள் முழு நிறைவு என்பதாகும். நம் மனதை வெற்றிகொள்தல், அல்லது அமைதியற்ற மனதை அடக்கி ஆளுதல் ஆகும். இந்த செயற்திறனை பெறுதல் சிறப்பானதாகும். நாம் அனைவரும் இதை செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். நம்மில் சிலர் மட்டுமே இதை செய்யமுடியும், மற்றவர்களால் முடியாது என்பது இல்லை. இல்லவே இல்லை. உண்மையில் இது அடைவதற்கு  மிகவும் எளியது ஆகும்.


தொடரும்.......

தவறுகள் சாதரணமாக நிகழும்

ஏப்ரல் 28, 2014.

பெங்களூரு இந்தியா

(மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளியுங்கள் என்னும் பேருரையின் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)கேள்விகளும் - பதில்களும்

குருதேவ், ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் சிசுபாலனின் நூறு தீச்செயல்களை மன்னித்ததாகக் கூறப்படுகின்றது. சிசுபாலன் தனது  நூற்றியோராவது தீச்செயலை செய்த பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கிரத்தை சுழற்றி அவனது தலையைக் கொய்து விட்டார். சிசுபாலன் 99 வது தவறை செய்யும்போதே அவனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தால் ஒரு வேளை இது தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம்.  இதைப் பற்றித் தயவு செய்து கூறுங்கள்.

குருதேவ்: தீயசெயல்கள் செய்யப்பட்ட ஒவ்வொரு முறையும் ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கை விடுத்தார். சிசுபாலன் 99 வது முறையாக எச்சரிக்கப்பட்ட போதும், நிறுத்தவில்லையாதலால், ஸ்ரீ கிருஷ்ணர் அவன் தலையைக் கொய்ய வேண்டியதாயிற்று. சிசுபாலனுக்கு அவனது தவறை உணர்த்தாமல் ஸ்ரீ கிருஷ்ணர் அவனை மன்னிக்கவில்லை. ஒவ்வொரு முறையும், அவனுக்கு அவன் செய்த தவறை உணர்த்திய பின்னரே அவனை மன்னித்தார். ஒருவன் செய்யும் தவறினை அவனுக்கு உணர்த்தாமல் அவனை மன்னித்து என்ன பயன்? அப்போது அவன் தனது தவறையே உணர மாட்டான். ஆகவே, ஒவ்வொரு முறையும், சிசுபாலனுக்கு அவனது தவறை உணர்த்திய பின்னரே ஸ்ரீகிருஷ்ணர் அவனை மன்னித்தார். 

தவறுகள்  நிகழக்கூடும். ஆனால் நாம் என்ன சாதாரணமாக செய்கின்றோம் என்றால், அதையே எண்ணி வருந்திக் கொண்டிருக்கின்றோம். "ஒ! நான் தவறு செய்து விட்டேன்! என்றெண்ணி குற்ற உணர்வுடன் இருக்கின்றோம் அல்லது தவறே நிகழாத மாதிரி பாவனை புரிகின்றோம் அல்லது நிகழ்ந்தது தவறே அல்ல என்று நிரூபிக்க முயற்சி செய்கின்றோம்.ஆனால் இந்த அணுகுமுறைகள் அனைத்தும் ஒருவனுக்கு கேடு விளைவிக்கின்றன. தவறினை மறுக்கும் அணுகுமுறையும், உடல்நிலை சீர்கேடு அடையும் அளவுக்கு தவறினை எண்ணி, வெட்கமும் வருத்தமும் அடைவதும் சரியல்ல. இவ்விரண்டிற்கும் இடையே ஆன பாதையையே மேற்கொள்ள வேண்டும். ஆகையால், நீங்கள் ஒரு தவறு செய்யும் போது மீண்டும் மீண்டும் அதையே எண்ணித் துன்பம் அடையாதீர்கள். அதே சமயம், நீங்கள் தவறு செய்து விட்டதையும் மறுக்காதீர்கள். இரண்டுக்குமிடையே வழி என்னவென்றால்,ஒரு தவறு செய்யும் போது அதிலிருந்து எதையாவது கற்றுக் கொள்கின்றீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் உங்கள் தவறையும் ஒப்புக் கொள்கின்றீர்கள், ஆனால் அதிலேயே சிக்குண்டு குற்ற உணர்வினை அடைவதும் இல்லை. தவறிலிருந்து பாடம் கற்று முன்னேறிச் செல்கின்றீர்கள்.

இந்த வழியை நீங்கள் பின்பற்றுங்கள், யாரேனும் ஒரு தவறு செய்தால் அவர் அதை உணர வேண்டும் என்று திரும்பத் திரும்பக்  கூறி நச்சரித்து  கொண்டிருந்தால், அவருடன் உங்கள் உறவு முறிந்துவிடும். உங்களை யாரேனும் நீங்கள் செய்த தவறை திரும்பத் திரும்பக் கூறி உங்களை நச்சரித்துக் கொண்டிருந்தால் அவருடன் இருக்க நீங்கள் விரும்புவீர்களா? உங்கள் தவறினை நினைவுறுத்திக் கொண்டிருக்கும் அவரிடமிருந்து விலகி விடவே விரும்புவீர்கள். யாருமே தெரிந்து தவறு செய்வதில்லை. விழிப்புணர்வு குறைந்த  நிலையிலேயே தவறுகள் நிகழ்கின்றன

உங்களுக்குள், விழிப்புணர்வு மலரும்போது அறியாமையால் தவறு செய்துவிட்டதை உணருகின்றீர்கள். அதைப் புரிந்து கொண்டவுடனேயே அத்தவறில் இருந்து வெளிவந்து விடுகின்றீர்கள். விழிப்புணர்வு ஏற்பட்டவுடனேயே நீங்கள் களங்கமில்லாதவராக விடுபட்டு விடுகின்றீர்கள். விழிப்புணர்வு ஏற்பட்டவுடனேயே உங்கள் களங்கமற்ற தன்மையை உணர்ந்தும் கொள்கின்றீர்கள். எனவே செய்த தவறினையே மென்று கொண்டிராமல், உங்கள் களங்கமற்ற தன்மையை உணர்ந்துகொண்டு, முன்னேறுங்கள். உங்கள் களங்கமின்மையில் முழு நம்பிக்கை கொள்வது மிக முக்கியமானது ஆகும். அதே சமயம், பிறரின் தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி அவர்களைக் குற்ற உணர்வுக்குத் தள்ளுவதும் நல்லதல்ல. அவர்கள் உங்களிடமிருந்து விலக முற்படுவார்கள். எனவே அவ்வாறு செய்யாதீர்கள்.

பிறரைக் குற்ற உணர்வில்லாமல் அவர்களது தவறினை உணரச் செய்வது என்பது ஒரு திறன். அது ஒரு கலை. அவர்களைத் திறனுடன் குற்ற உணர்வின்றித் தங்களது தவறினை உணரச் செய்து, ஊக்குவித்து, "பரவாயில்லை. தவறுகள் நிகழக் கூடும், நான் அதை மறந்து விட்டேன், எனவே நீங்களும் அதை மறந்து விடுங்கள்'' எனக் கூறி அவர்களை முன்னேறச் செய்ய வேண்டும். யாரும் குற்ற உணர்வில் சிக்குண்டு குற்றவாளி போன்று உணரச் செய்யாதீர்கள். எப்போதும் குற்றவாளி போன்று ஒருவனை உணரவைத்தால், அவன் மேலும் மேலும் தீய செயல்களைச் செய்து கொண்டிருப்பான். ஒரு போதும், தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டான். மனத்தைக் காக்கும் பொருட்டு, அதைக் குற்றவாளி உணர்விலிருந்து காக்க வேண்டும். நான் கூறுவதை புரிந்து கொள்கின்றீர்களா?

குற்றவாளி உணர்வு என்பது என்னவென்றால், இடைவிடாமல்," நான் தவறிழைத்தவன். நான் ஒரு தீய செயலைச் செய்து விட்டேன்" என்று எண்ணிக் கொண்டிருப்பது ஆகும். இக்குற்ற உணர்வானது ஒருவனை முழுவதுமாக விழுங்கி, அவன் ஆன்மீக வழியில் முன்னேற விடாமல் செய்யும். ஆன்மீகத்தின் முதல் படி,குற்ற உணர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தான். அடுத்தபடி, தான் என்னும் அகந்தையிலிருந்து விடுபடுவது. பொதுவாக மக்கள் , தான் செய்த செயல்களின் சிறப்பைப் பற்றியும் தானே சிறந்தவன் என்றும் தற்பெருமையுடன் இருப்பார்கள். இதுவும் ஆன்மீக மார்கத்திற்கு உகந்ததல்ல. நீங்கள் அகிஞ்சன்  ஆக வேண்டும்.

இதற்கு ஒன்றுமற்றவனாக ஆக வேண்டும் என்று பொருளல்ல. சொல் வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சொற்களில் சிக்கிக் கொண்டால், எண்ண வலைகளையும், எண்ணப் பதிவுகளையும் உருவாக்குவீர்கள். அதனால் தான், எளிமையாகவும் சாதரணமாகவும் இருங்கள் என்று கூறுகின்றேன். எளிமையுடன் இயல்பாக இருந்தால், எல்லாப் பிரச்சினைகளும் சிக்கல்களும் முயற்சியின்றித் தானாகவே தீர்ந்து தெளிவாகி விடும்.

குருதேவ், பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தில் எவ்வாறு போர் துவங்குவதற்கு முன்னர் ஒரு போர் வீரன் தனது  சொந்த சங்கினை ஊதுகின்றான் என்பது விவரிக்கப் பட்டிருக்கின்றது. பல்வேறு சங்குகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறு எடுத்துரைப்பதன் பொருள் என்ன என்று தயவு செய்து கூறுங்கள்.

குருதேவ்: இதற்குப் பின்னால் ஒரு ரகசியம் இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன். அவ்வரிகளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சங்கின் பெயருக்கும் ஒரு பொருள் இருக்க வேண்டும். ஆய்வில் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் மனதை இதில் ஈடுபடுத்தி அந்த ரகசியப் பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும். கூறப்பட்டுள்ள அத்தனை சங்குகளின் பெயர்களுமே மிக அழகானவை. பகவத் கீதையில்"பாஞ்ச ஜன்யம் ஹ்ரிஷிகேஷோ தேவதாம் தனஞ்சய  புந்தரம் தத்மௌ மகா சங்கம் பீமா கர்ம வ்ருகோதர" (1.15)

இந்த வரிகள் சாதரணமாக எழுதப்பட்டவை அல்ல. இவை அந்தப் பெயரின் குணங்களோடு சம்பந்தப்பட்டவை ஆகும். ஒவ்வொரு பெயரும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும். உதாரணமாக, சமஸ்க்ரிதத்தில்  'பர்ண' என்றால் இலை என்பது பொருள்.ஆனால் உண்மையில் அது எதைக் குறிக்கின்றது தெரியுமா? அதாவது சூரியனின் பிரகாசமான ஒளிக்கதிர் வீச்சினைத் தன்னுள் ஈர்த்துக் கொள்ளுதல் என்பது பொருளாகும். இலைகள் ஒளித் தொகுப்பு செய்யும் (photosynthesis) என்பது நமக்குத் தெரியும்.ஒரு இலையானது சூரிய ஒளியையும், சுற்றுச் சூழலில் உள்ள ஈரதன்மையையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, பசுமையை (chlorophyll) உருவாக்குகின்றது. இந்தப் பொருளே அந்தப் பெயரில் அழகாக இசைந்துள்ளது.

இது போன்று அபர்ணா என்றால் என்ன பொருள்? ஒளியை ஈர்த்துக் கொள்ளாத என்பது பொருள். அதாவது, எதையும் ஈர்த்துக் கொள்ளாத எதனாலும் தீண்டப்படாதது என்பது அதன் பொருள் ஆகும். சுபர்ணா என்றால்,எது மிளிருமோ, அல்லது எது பறக்ககூடியதோ என்பது பொருள்.(விஷ்ணுவின் வாகனம்) சுபர்ணா என்று குறிக்கப்படுகின்றது ஏனெனில் அது பறக்கும். அது தனது இறக்கைகளை பயன்படுத்தி காற்றை கீழே தள்ளி வானத்தில் மேல் நோக்கிப் பறக்கின்றது. இது போன்று ஒவ்வொரு சொல்லும் யதார்த்தமான ஒரு பொருளை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது. அதுதான் சமஸ்க்ருதத்தின் சிறப்பியல்பு. 

குருதேவ், சத்வ சுத்தைர கார்ய சித்தி ( ஒருவன் தூய்மையையும் நேர்மறையையும் அதிகரித்துக் கொள்வதன் மூலம் தன்னுடைய விருப்பங்களில் வெற்றி அடைகின்றான்) தூய்மைப்படுத்திக் கொளவது மட்டுமே காரிய சித்திக்குப் போதுமானது ஆகுமா அல்லது பல காரணக் கூறுகளில் அது ஒன்று ஆகுமா?

குருதேவ்: சமஸ்க்ருதத்தில் "ரவீர்யர்த்தேவந்த்யம் பிரதிதினம் உபரஸ்ய நரபஸ்யாஹ் க்ரியாசித்திர் பவதி சத்வே - மஹதம் நோப கரேனே (ஸ்ரீ காளிதாசரின் ரகுவம்சத்திலிருந்து) ஒரு செய்யுள் உள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், ஒருவன் உபகரணத்தின் மூலம் (விருப்பத்தினை அடையும் சாதனம்) தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவன் சத்வ (நேர்மறை வழி) குணங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலமே தனக்குத் தேவையானவற்றை அடைய முடியும். ஆனால் எந்தவிதமான அடிப்படைப் பொருள் அல்லது சாதனங்கள் இல்லாமல் என்று பொருளல்ல. இதை இவ்வாறு புரிந்து கொள்ளுங்கள்.அடுப்பில் நெருப்பு இருந்தால் தான் ரொட்டியை வேகவைக்க முடியும். நெருப்பு இல்லாவிடின் ரொட்டி வேகாது. ரொட்டி செய்ய மாவு, தண்ணீர், வேகவைக்கும் பாத்திரம் (பொருள்கூறுகள்) ஆகியவையும் தேவையாகும். அப்போது தான் ரொட்டிக்கான மாவு தயார் ஆகும். எனவே வெறும் மாவு மட்டுமோ அல்லது நெருப்பு மட்டுமோ இருந்தால் ரொட்டி செய்ய முடியாது.

நான் நேர்மரையானவன் நான் சத்விக் குணம் உடையவன் என்று மட்டுமே கூறிக் கொண்டு, எல்லாமே அடைந்துவிடலாம் என்று எண்ணினால் நடக்காது. உங்களுக்குத் தேவையானதை அடைவதற்குரிய கருவிகள் மிக அவசியமானது ஆகும். ஒரு எண்ணம் அல்லது விருப்பம் மனதில் எழும்போதே அது நிறைவேறிவிடும் நிலையும் உண்டு. நைஷ்கர்ம சித்தி  என்று அழைக்கப்படும். இது மிகவும் அரியது .ஒரு எண்ணம் மனதில் எழும்போதே அது நிறைவேறிவிடும் நிலையை யார் அடைய முடியும்? உள்ளார்ந்த முழுத் திருப்தியோடு, வினைகள் மற்றும் அவற்றின் பற்றுதல் இவைகளிலிருந்து முழுமையாக விடுபட்டவனே நைஷ்கர்ம சித்தி பெற்றவன் ஆவான். பக்தியில் முழுமையாகத் திளைத்து எதிலும் ஆசையின்றி இருப்பவனுக்கும் நைஷ்கர்ம சித்தி  நிகழும். நெடுங்காலம் உழைத்தாலே அத்தகைய நிலையை அடைய முடியும்.அந்த நிலையை அடைந்தவன் என்ன நினைத்தாலும் அது நடைபெறத் துவங்கும்.

அத்தகைய பிரம்மஞானி (பிரம்மனை அல்லது மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அறிந்தவன்) எந்த முயற்சியும் இன்றி நைஷ்கர்ம சித்தியை அடைகின்றான். ஆனால் பிரம்மஞானி காலப் போக்கில் கூட இதை அடைய முடியும். எப்போது சரியான காலம் கூடி வருகின்றதோ, எப்போது ஒருவன் முழுமுதிர்ச்சி அடைகின்றானோ அப்போது அவன் நைஷ்கர்ம சித்தியை அடைகின்றான்.
உங்களில் எத்தனை பேர் இவ்வாறு நீங்கள் எண்ணுவது நடப்பதை அனுபவித்திருக்கின்றீர்கள்? ஆம், இதுதான் நைஷ்கர்ம சித்தி என்று அழைக்கப்படுவது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் அரைகுறையாக இதை கண்டிருக்கலாம், ஆனால் முழுமையாக அடைய சற்றுக் காலம் ஆகும்.

வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்

ஞாயிறு, 27 ஏப்ரல் 2014,  

பெங்களூரு, இந்தியாகேள்வி - பதில்கள்

குருதேவ், இந்த பிறவியில் நான் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என் முற்பிறவியின் கர்மவினை தான் என்பதை அறிந்து நான் மிகவும் துயரப்படுகிறேன். இதை நான் எப்படி எதிர்கொள்வது?

உங்கள் தலையை பின்பக்கம் திருப்பிப் பார்க்காதீர்கள். முன்னே பார்த்தவாறு செல்லுங்கள். தலையை திருப்பி பின்பக்கம் பார்த்தவாறு முன்னே நடக்க முனைகிறீர்கள். இதனால் தான் துயரடைகிறீர்கள். போகட்டும் விடுங்கள்! இறந்தகாலத்தை அலசி ஆராய்வதால் என்ன நன்மை? அவையெல்லாம் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் தம் வாழ்வில் மகிழ்ச்சியான காலத்தையும் துன்பமான காலத்தையும் கடந்து செல்கிறார்கள். எனவே தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்.

ஏராளமான ஞானமும் ஆனந்தமும் இந்தப் பாதையில் இருக்கிறது. இவையெல்லாம் இருந்தும், நீங்கள் துன்பமயமாக உணர்வீர்கள் என்றால் ஞானத்தின் பயனென்ன? ஆகச்சிறந்தது மட்டுமே உங்களுக்கு நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை கொள்ளுங்கள் போதும். எனவே, இப்போது, இந்தக் கணம், கடினமான சிலவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால்தான் என்ன? அவற்றை தைரியமாக புன்னகையோடு எதிர்கொள்ளுங்கள். சும்மா இருக்காமல் ஏதாவதொரு வேலையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

பெரு நிறுவனங்களின் இன்றைய முதலாளிகள் மற்றும் முதல்வர்கள், ஒரு காலத்தில் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வேலை கிடைப்பது கூட அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஒரு அரசு வேலை கூடக் கிடைக்காமல் பலர் இருந்தனர். ஆனால் அவர்கள் மனம் சோர்ந்து விடவில்லை. அவர்கள் தங்கள் நிறுவனத்தை ஒரு சிறிய கடையாகத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்து இன்றைய சாம்ராஜ்ஜியத்தை உருவாகியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பின்பற்றத்தக்க முன்னுதாரணங்களாக வரலாற்றில் பலர் இருப்பதை நீங்கள் காணலாம். 

எனவே சும்மா உட்கார்ந்துகொண்டு எல்லா நேரமும் கவலைப் பட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அல்லது ஒரு அருமையான நாளில் கடவுள் உங்களுக்கு அருள் மழை பொழிந்து எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்காதீர்கள். இப்படி ஒரு நாளைக் கூட வீணாக்காதீர்கள். நாம் பொதுவாக என்ன செய்கிறோம்? காலையில் எழுந்து செய்தித்தாளை படிக்கிறோம். ஒரு நாளில் விலைமதிப்பில்லா ஒன்றரை மணி நேரத்தை செலவழிக்கிறோம். பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொலைகாட்சி பார்த்துக் கழிக்கிறோம். பத்திரிகைகளை எடுத்தால், பயனில்லாதவை என்று தெரிந்தும் பக்கங்களை புரட்டியபடி இருக்கிறோம். இப்பொழுதெல்லாம் இணையத்தில் வேறு கணிசமான நேரம் செலவழிக்கிறோம். யாராவது விருந்தினர் வந்தால் அவர்களுடன் அரட்டை அடித்து புரளிகள் பேசி நேரம் கழிக்கிறோம். சற்று நேரம் சாப்பிடுவதில் கழிகிறது, பிறகு இரவில் அயர்ந்து தூங்கப் போய்விடுகிறோம். ஒரு நாளை கழிக்க இதுவல்ல வழி.

காலையில் எழுந்து உங்கள் தினசரி யோக தியானப் பயிற்சிகளைச் செய்யுங்கள். பிறகு உங்கள் தினசரி கடமைகளில் மூழ்குங்கள். அன்று என்னென்ன வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது, எங்கு போக வேண்டும், என்ன வாங்க வேண்டும் என்ற குறிப்புகளை எழுதுங்கள். அந்த நாளை எப்படி கழிக்க வேண்டியிருக்கிறது என்று திட்டம் போடுங்கள். யாரையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று எழுதுங்கள். திட்டமும் குறிப்பும் ஒருங்கியவுடன், உங்கள் வேலையை உடனே ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வேலை முடிந்தவுடன் அதை குறித்துவிடுங்கள்.

மாலையில், திட்டமிட்ட வேலைகளை முடித்தவுடன், சற்று நேரம் அமர்ந்து ஓய்வாய் இருங்கள், ஏதாவது அருமையான இசையை கேளுங்கள். அல்லது மெதுவாக இயற்கையை அனுபவித்தவாறு ஒரு நடைப் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு மாலையிலும் உங்களுக்கென சிறிது நேரம் செலவழியுங்கள். மாலையில் மறுபடியும் 15 – 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். வாழ்க்கையில் அவ்வளவு மகிழ்ச்சியை காண்பீர்கள். பிறகு, வலிமையாகவும் சக்தி நிறைந்தும் உணர்வீர்கள், சோர்வோ சோம்பலோ இருக்காது. பொதுவாக நாம் பயனில்லாத வேலைகளில் அதிக நேரம் வீணாக்கிவிட்டு சோர்வடைந்து ஓய்வெடுக்கிறோம். இப்படிச் செய்யக்கூடாது. எனவே காலையில் எழுந்தவுடன் அன்று மாலை வரை என்னவெல்லாம் வேலைகள் இருக்கிறது என்று பட்டியல் தயார் செய்துகொள்ளுங்கள்.

பொதுவாக என்ன நடக்கிறது? அன்றைய தினத்துக்கான வேலைகளின் பட்டியலை நமது செயலாளர் தருவார். நான் பொதுவாக மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை இன்றே வாங்கிவிடுவேன்! நான் பார்க்க வேண்டியவர்களின் பட்டியல், மாலை வரை செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் அந்தப் பட்டியலில் இருக்கும். எப்படியோ பிற்பகலில் ஓய்வெடுக்க எனக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தருவார்கள். ஆனால், அதன் பிறகு வேலைகள் இரவு 12 மணிவரை தொடரும். நான் இந்தியாவில் இருக்கும் போது இதுதான் என் தினசரி அட்டவணை.

நான் பயணத்தில் இருக்கும்போதும் வேலைகள் நிறையவே இருக்கும். நான் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்னுடையை அட்டவணையை நிரப்பிவிடுவார். எனக்கும் அவ்வாறு வேலையில் மூழ்கி இருப்பது பிடிக்கும். ஒரு நாளில் என்னுடைய ஒவ்வொரு வினாடியும் ஆக்கபூர்வமாக எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.  அப்படி ஒவ்வொரு நாளும் வேலையிலேயே கழிவதால், செய்திகள் ஏதும் படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ நேரம் இருக்காது. சில வேளைகளில், விமானத்திலோ அல்லது காரிலோ பயணிக்கும் போது செய்தித்தாள் படிப்பதுண்டு. என்னுடன் வேலை செய்பவர்கள், கைபேசி குறுந்தகவலாக செய்திகளை அனுப்பி வைப்பார்கள். நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு.

நீங்கள் அனைவரும் அவ்வளவு அன்போடு அனுப்பும் கடிதங்கள் அனைத்தையும் படிக்கிறேன். பலர், சிறிய சிறிய எழுத்துக்களில் கடிதம் அனுப்புவதால் அதைப் படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கிறது. ஏன் காகிதம் உபயோகிப்பதில் அவ்வளவு கருமிகளாய் இருக்கிறார்கள் என்று வியப்பேன். சிலர் தமது கடிதத்தை மடித்து மடித்து சிறிய அளவாய் ஆக்கி என்னைப் பார்க்கும் போது என் கைகளுக்குள் திணித்துவிடுவார்கள். என்னைத் தொடுவதற்கு வாய்ப்பாக இந்த தந்திரத்தை உபயோகிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். சமீபத்தில் யாரோ இதைக் கண்டுபிடித்து என்னிடம் கூறினார்கள். சரியான அளவு காகிதத்தில் சாதரணமாக மடித்துக் கொடுத்தால் என்னைத் தொடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காது என்று பல மடிப்புகள் மடித்துச் சிறிதாக்கி கொடுத்தால் அப்போது என்னைத் தொடலாம் என்று இப்படிச் செய்கிறார்களாம். அதைப் பிரித்துப் படிப்பது கடினம். எப்படியோ இதுவரை கண்ணாடி அணிந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை வரவில்லை, ஆனால் இப்படி சிறிய சிறிய கடிதங்கள் கொடுத்தால் கூடிய வரைவில் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்போல் இருக்கிறது. 

நீங்களைனைவரும் உங்கள் நேரத்தை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலைக்குள் முடிக்க வேண்டிய வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 
சிலர் என்னிடம், “குருதேவ், என் வியாபாரம் நன்றாகப் போகவில்லை”, என்று கூறி வேதனைப் படுகிறார்கள். அவர்களுக்கு நான் கூறுவது, “உங்கள் வியாபாரம் சரியாகப் போகவில்லை என்றால் வேறு ஒரு வியாபாரம் செய்யுங்கள்.” இந்தச் சமூகத்திற்குச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நமது ஆசிரமத்தில் உள்ள மனித வளத் துறையினரிடம் சென்று உங்களுக்குத் தொண்டு செய்ய விருப்பம் இருப்பதை சொல்லி உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். செய்வதற்கு ஏதும் இல்லை என்று பலர் என்னிடம் கூறுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தம் பெயரைப் இங்கே பதிவு செய்து கொள்ளலாம். செய்வதற்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. வேலைகளில் உங்கள் முழுநேரத்தையும் செலவிடுங்கள்.

தொண்டு செய்ய உண்மையான விருப்பம் இருப்பவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளும் செய்வதற்கு ஏராளமான தொண்டுகளும் இங்கே இருக்கிறது. உங்களுக்கு வியாபாரம் செய்வதில் விருப்பம் இருந்தால், ஏராளமான வியாபார வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கே அவ்வளவு பெரிய வாழும்கலை குடும்பம் இருக்கிறது. இங்கே எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

தம் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் அமையவில்லை என்று என்னிடம் சிலர் வந்து வருத்தப்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக இங்கே திருமணத் தகவல் மையம் ஒன்று ஏற்படுத்தி இருக்கிறோம். அதற்காக தனியாக ஒரு இணைய தளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்.இப்போது அந்த இணைய தளத்தில் சில பிரச்சினைகள் இருக்கின்றன, நமது தொண்டர்கள் அதை இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்துவிடுவார்கள். பிறகு நீங்கள் எளிதாக அதில் பதிவு செய்துகொண்டு அவர்களுக்கான துணையைத் தேடலாம். எனவே, இதைப் போன்ற உலகாய செயல்களும் கடமைகளும் நடந்தவாறு இருக்கும். ஆனால் அவை எல்லாம் மிகக் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கவோ அல்லது முயலவோ வேண்டாம். உலகாய வேலைகளில் சில குறைபாடுகள் எப்போதும் இருக்கும். ஆன்மீகப் பாதையிலும் தியானத்திலும் ஆழமாகப் போகும் போதுதான் வாழ்க்கையில் உள்ள இந்தச் சிறு சிறு பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் சமாளித்து அதைத் தாண்டி மேலே செல்ல முடியும். அப்போதுதான் உண்மையான பேரானந்தத்தை அனுபவிக்க முடியும்.

அதனால் தான் நமது வாழும் கலையின் முதல் பகுதி வகுப்பை, அடிப்படை பயிற்சி வகுப்பு என்பதிலிருந்து ஆனந்த நிகழ்ச்சி என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறோம். மக்கள் இந்தப் பயிற்சிக்கு வந்து பேரானந்தத்தை அவர்களாகவே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தப் பயிற்சியை எடுப்பதால் அவர்களின் பிரச்சினைகளும் துயரங்களும் தீர்கிறது. ஞானத்தின் உதவியால் இந்தப் பிரச்சினைகளையும் வேதனைகளையும் தாண்டி அவர்களால் மேலே எழ முடிகிறது.

ரிஷிகேஷில் நமது சத் சங்கத்திற்கு வந்த ஒரு சாதுவை சமீபத்தில் சந்தித்தேன். அவர் கூறினார், “பொதுவாகப் பள்ளிகளில், மாணவர்கள் தேர்வில் வென்றபின் அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். ஆனால் இந்தப் பள்ளி (வாழும் கலையை கூறுகிறார்) தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. இங்கு வருபவர்கள் தேர்வடைவதில்லை. ஒரு முறை வந்தபின் (இந்தப் பாதைக்கு) இங்கேயே தங்கி விடுகிறார்கள். ஏனென்றால் வாழ்கையின் உண்மையான மகிழ்ச்சியை காண்கிறார்கள். ஞானத்தின் பாதை மிக ரசமானது மகிழ்ச்சி நிரம்பியது. உங்களை நேர்மையான செயல்களின் பாதைக்கு உங்களைக் கொண்டுவருகிறது. அப்படி ஒரு முழுமையான நித்தியமான அன்பின் அனுபவத்தைத் தந்து உங்களை நீங்காத அமைதியனை காணவைக்கிறதுவாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு முன்னேறலாம். அதனால்தான், “சறைவேதி! சறைவேதி! சறைவேதி!” என்று உபநிடதங்களில் கூறப்படுகிறது. (அதன் பொருள், மேலும் நகருங்கள்! மேலும் நகருங்கள்! மேலும் நகருங்கள்!) நமது வேதங்களும் அதையே சொல்கிறது,எதிலும் சிக்கி கொள்ளாமல் மேலே நகர்ந்து செல்லுங்கள். சுயத்தை பற்றிய ஞானத்தில் நிலைகொண்டு, வாழ்க்கையில் முன்னேறி செல்பவர்கள், வாழ்கையின் உன்னத இலக்கை அடைகிறார்கள்.
  
நம் நாட்டில் நடக்கும் அவ்வளவு வளர்ச்சிகளையும், இங்கே கொட்டிக் கிடக்கும் ஏராளமான ஆன்மீக ஞானத்தையும் தாண்டி, நமது இளைஞர்கள் இன்னும் ஏன் வெளி நாட்டிற்குச் செல்ல ஏக்கம் கொள்கிறார்கள்? இந்தியா அவர்களுக்கு வாழத் தகுந்த இடமாகத் தெரியவில்லை.

நமது மக்கள் வெளி நாட்டிற்கு செல்வது நல்லதே. மற்ற நாடுகளில் அவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைய நாளில், மக்கள் பல நாடுகளுக்கும் பயணம் செய்து வேர் பதிக்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமே பயணம் செய்து வேரூன்றுவது இல்லை. எது முக்கியம் என்றால், வெளி நாட்டில் குடிபெயர்ந்தாலும், மாற்றமடையாமல், நமது கலாசாரத்தை மறக்காமல், நமது மரபை கடைபிடிக்க வேண்டும். வெளிநாட்டிலும் நமது கலாசார அடையாளத்தை காத்து வரவேண்டும்.

வெளி நாட்டில் குடியேறியதும் மக்கள் தங்கள் பெயர்களை மாற்றி கொள்வதுண்டு. உதாரணமாக ‘சவுகான்’ என்ற பெயர் கொண்டவர் தன்னை ‘பீட்டர்’ என்று பெயர் மாற்றம் செய்து கொள்வார். ‘கிருஷ்ணா’ என்பவர் ‘கிரிஸ்’ ஆகிவிடுவார். முன்பெல்லாம் இப்படி நிறைய நடக்கும். ஆனால் இப்போது அப்படி அல்ல. நகரங்களில் இருக்கும் தொலைபேசி சேவை மையங்களில் வேலை செய்பவர்கள் மட்டும் வேலை நிமித்தம் தமது பெயர்களை மாற்றி கொள்கிறார்கள். நமது உண்மையான பெயரை மாற்றி கொள்ளுதல் கூடாது. உங்கள் பெயரையும் கலாசார அடையாளத்தையும் அப்படியே பாதுகாக்க வேண்டும்.

சீன மக்கள் பெருவாரியாக வாழுமிடங்களில் பெயர் பலகைகளில், வழி காட்டும் பலகைகளில் சீன மொழியான மாண்டரின் மொழியில் தான் எழுத்துக்கள் இருக்கிறது ஆங்கிலத்தில் அல்ல. அதைப் போல, கனடா நாட்டின் வான்குவர் நகரத்தின் சில பகுதிகளில் வழிகாட்டும் பலகைகளில் பஞ்சாபி எழுத்துக்களை பார்க்கலாம். இது ஏனென்றால், தொழில் நிமித்தம் கனடாவிற்கு குடிபெயர்ந்த பஞ்சாபி மக்கள் தங்கள் கலாசாரம் மற்றும் மரபை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.

இன்றும், அங்கே குருத்வாராக்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். பல பஞ்சாபிகள் விவசாயத்தை முழு நேரத் தொழிலாகக் கொண்டு நன்கு சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. தங்கள் மொழியையும் கலாசாரத்தையும் அவர்கள் மறக்கவில்லை. அப்படியான ஒரு உணர்வு நிலையை நாம் இந்தியாவிலும் வளர்க்க வேண்டும். இந்திய மக்கள் தமது மொழி மற்றும் கலாசாரம் மீது ஒரு பெருமை கொள்ள வேண்டும். இதை நோக்கி நாம் முயற்சி எடுக்க வேண்டும்.