அன்பு: தெய்வீகத் தன்மை வாய்ந்தது

ஏப்ரல் 13, 2013

ரிஷிகேஷ், இந்தியா 


கேள்வி - பதில்கள்

கே: குருதேவ்! யாரோ ஒருவர் நம்மை உண்மையிலேயே நேசிக்கிறார் என்று எப்படி மதிப்பிடுவது?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் யாரிடம் இருந்து அன்பை பெறுகிறீர்களோ, தெய்வத்திடம் இருந்து கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளவும். நீங்கள் ஒரு மிக உயர்வான சக்தியிடம் இருந்து அன்பை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய பாசமும் அந்த உயர்வான சக்தியை நோக்கி செலுத்தப்படுவதே! மற்றும் நீங்கள் அன்பை இந்த நபரிடம் இருந்தோ அல்லது அந்த நபரிடம் இருந்தோ பெற்று கொண்டிருக்கிறீர்கள். இதை அறிந்து அமைதியாக இருக்கவும். அந்த நபர் உண்மையானவரா அல்லது பொய்யானவரா, சரியானவரா அல்லது தவறானவரா, போன்ற மனப்பொறிகளில் விழ வேண்டாம். ஜன்னல் வழியாக சூரிய ஒளி கிடைக்கிறது என்றால், அது  சூரியனுடைய ஒளி ஜன்னலுடைய ஒளி அல்ல என்று உங்களுக்கு தெரியும். எனவே இந்த அளவு மட்டும் புரிந்து கொண்டு அமைதியாக இருக்கவும். 

கே: குருதேவ்! நாம் எதனால் யாரோ ஒருவரிடம் பந்தத்தை வளர்த்துக் கொள்ளுகிறோம்?

ஸ்ரீ ஸ்ரீ: நாம் சேவை செய்யாத போதும், அதற்கான அர்ப்பணிப்பை அளிக்காத போதும் பந்தம் உண்டாகிறது. நாம் சேவை செய்யும் போது பந்தம் மறைந்து விடுகிறது. சேவை செய்வதற்கான உறுதியையும் விருப்பத்தையும் வைத்துக் கொள்ளவும்.உங்கள் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் போது, பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்றீர்கள். குழந்தைகள் உங்கள் மூலமாக இவ்வுலகிற்கு வந்துள்ளன. அவர்களுடன் கொண்டு வந்துள்ள சொந்த கர்ம வினைகளின் பலன்களை கடந்து செல்ல வேண்டும்.  பெற்றோர்களாக, நாம் அவர்களை கவனித்து சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு என்ன தேவையோ அதை நாம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக, நாம் என்ன செய்கிறோம்? நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒ! எனக்கு என்ன ஆகும்? குழந்தைகளுக்கு என்ன ஆகும்? என்பது போல்.

நேற்று கௌஹாத்தியில் ஒருவர் தன மனைவி, மகள், மருமகன் ஆகியோரோடு என்னிடம் வந்தார். தந்தையார் தன்னுடைய மகள் தனக்கு பிடிக்காத ஒருவரோடு சென்று திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் தான் அவனை கொன்று விடப்போவதாகவும் கூறினார். ஏன் என்று கேட்ட போது அவருக்கு அவனை பிடிக்கவில்லை என்றார். நான் அவரை உட்கார வைத்து அவரிடம பேசினேன். அவரது மகளிடமும் "நீ உன்னுடைய தந்தையாருக்கு சிறிது அவகாசம் கொடு. அதன் பிறகும் அவர் உங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நீ உன் விருப்பம் போல் உன் வாழ்க்கையை வாழலாம்" என்று கூறினேன். அவர் பயங்கரமான கோபத்தை கொண்டிருந்தார். அவர் உண்மையிலேயே பயங்கரமான ஏதோ ஒன்றை செய்து விடுவார் போல தோன்றியது. அவர் சிறைச்சாலை செல்லக் கூட தயாராக இருந்தார், ஆனால் அவருடைய மருமகனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

அவர் என்னிடம் "நான் மாட்டிறைச்சியை கொண்டு வந்து உங்கள் முன் வைத்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்களா? அதை உண்ணுவீர்களா? இந்த மருமகனும் எனக்கு அதே போல தான்" என்று கேட்டார். உன்னுடைய எண்ணத்தை ஸ்தாபிக்க எதற்காக தவறான உதாரணங்களை கூறுகிறாய் என்று அவரிடம் நான் சொன்னேன். சிறிது நேரம் அமர்ந்து விளக்கமாக பேசியதன் பிறகு அவர் அமைதி அடைந்து புன்னகைத்தார். எல்லா நேரங்களிலும் இம்மாதிரியான சூழ்நிலைகள் ஏற்படும். அம்மாதிரியான மோதல்களை தீர்த்து வைக்க இருக்கும் வழி ஞானம் அல்லது மெய்யறிவு மார்க்கம் மட்டுமே.

நீங்கள் ஒருவரிடம் இருந்து வன்முறை போக்குகளை நீக்க விரும்பினால், அதற்கு தியானம் மற்றும் ஞானம் தவிர வேறு வழி இல்லை. இங்கே அமர்ந்து இருக்கும் நம் அனைவருக்கும் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் ஆலோசகராக ஆகி மக்களுக்கு அறிவுரைகள் கூற வேண்டும். நாம் அடிக்கடி,  நம்மிடம் கேட்கப்படாத போது கூட, அறிவுரைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்போது நாம் அவர்களுக்கு மனப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய நல்ல ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கொடுக்கலாம். நம்மால் செய்யக் கூடியது நிறைய உள்ளது.

நான்கு அல்லது ஆறு மாதங்களுக்கு முன் நான் நம்முடைய தன்னார்வலர்களை “ஆனந்த மதிப்பாய்வு” நடத்துமாறு வலியுறுத்தினேன். ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ளவர்கள்   மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்று கண்டறியுமாறு கூறினேன். உங்களில் எவ்வளவு பேர்  அந்த மதிப்பாய்வு செய்தீர்கள். மக்களை சந்தித்து பேசியவர்களுக்கு அற்புதமான அனுபவங்கள் கிடைத்துள்ளன, மற்றும் நேர்முகம் செய்யப்பட்டவர்களும் நன்றாக இருந்ததை உணர்ந்தனர்.     

நீங்கள் மதிப்பாய்வு செய்யும்போது, பொது மக்களும் அவர்கள் மீது அக்கறை கொள்வதை உணர்ந்து அது பற்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள். சிலர் "முதல் முறையாக என்னை ஒருவர் சந்தோஷமாக இருக்கிறேனா? நான் சந்தோஷமாக இல்லாததற்கு என்ன காரணம்" என்று கேட்டார்கள். அறுபது வயதில் இருந்த ஒரு மூதாட்டி" இத்தனை வருடங்களில் ஒருவர் கூட நான் ஏன் சந்தோஷமாக இல்லை என்று கேட்டது இல்லை. இப்போது என் மேல் அக்கறை காட்டவும் சிலர் இந்த உலகத்தில் உள்ளனர் என்பதை உணருகிறேன்" என்றார். மக்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்பதை கண்டு பிடிக்குமாறு  நான்  தன்னார்வலர்களிடம் கூறினேன். இது மக்களை அவர்கள் ஏன் சந்தோஷமாக இல்லை என்று யோசிக்க வைத்தது. பல சமயங்களில் அவர்கள் சந்தோஷமாக இல்லை என்பதைக் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் அந்த சந்தோஷம் இல்லாமை என்னும் அலையிலே அடித்துச் செல்லப்படுகின்றனர். அந்த மக்களுக்கு ஒரு மாற்றத்தையும், வலுவையும் கொண்டு வருவது அவசியமாகிறது.