வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்

ஞாயிறு, 27 ஏப்ரல் 2014,  

பெங்களூரு, இந்தியா



கேள்வி - பதில்கள்

குருதேவ், இந்த பிறவியில் நான் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என் முற்பிறவியின் கர்மவினை தான் என்பதை அறிந்து நான் மிகவும் துயரப்படுகிறேன். இதை நான் எப்படி எதிர்கொள்வது?

உங்கள் தலையை பின்பக்கம் திருப்பிப் பார்க்காதீர்கள். முன்னே பார்த்தவாறு செல்லுங்கள். தலையை திருப்பி பின்பக்கம் பார்த்தவாறு முன்னே நடக்க முனைகிறீர்கள். இதனால் தான் துயரடைகிறீர்கள். போகட்டும் விடுங்கள்! இறந்தகாலத்தை அலசி ஆராய்வதால் என்ன நன்மை? அவையெல்லாம் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் தம் வாழ்வில் மகிழ்ச்சியான காலத்தையும் துன்பமான காலத்தையும் கடந்து செல்கிறார்கள். எனவே தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்.

ஏராளமான ஞானமும் ஆனந்தமும் இந்தப் பாதையில் இருக்கிறது. இவையெல்லாம் இருந்தும், நீங்கள் துன்பமயமாக உணர்வீர்கள் என்றால் ஞானத்தின் பயனென்ன? ஆகச்சிறந்தது மட்டுமே உங்களுக்கு நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை கொள்ளுங்கள் போதும். எனவே, இப்போது, இந்தக் கணம், கடினமான சிலவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால்தான் என்ன? அவற்றை தைரியமாக புன்னகையோடு எதிர்கொள்ளுங்கள். சும்மா இருக்காமல் ஏதாவதொரு வேலையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

பெரு நிறுவனங்களின் இன்றைய முதலாளிகள் மற்றும் முதல்வர்கள், ஒரு காலத்தில் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வேலை கிடைப்பது கூட அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஒரு அரசு வேலை கூடக் கிடைக்காமல் பலர் இருந்தனர். ஆனால் அவர்கள் மனம் சோர்ந்து விடவில்லை. அவர்கள் தங்கள் நிறுவனத்தை ஒரு சிறிய கடையாகத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்து இன்றைய சாம்ராஜ்ஜியத்தை உருவாகியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பின்பற்றத்தக்க முன்னுதாரணங்களாக வரலாற்றில் பலர் இருப்பதை நீங்கள் காணலாம். 

எனவே சும்மா உட்கார்ந்துகொண்டு எல்லா நேரமும் கவலைப் பட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அல்லது ஒரு அருமையான நாளில் கடவுள் உங்களுக்கு அருள் மழை பொழிந்து எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்காதீர்கள். இப்படி ஒரு நாளைக் கூட வீணாக்காதீர்கள். நாம் பொதுவாக என்ன செய்கிறோம்? காலையில் எழுந்து செய்தித்தாளை படிக்கிறோம். ஒரு நாளில் விலைமதிப்பில்லா ஒன்றரை மணி நேரத்தை செலவழிக்கிறோம். பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொலைகாட்சி பார்த்துக் கழிக்கிறோம். பத்திரிகைகளை எடுத்தால், பயனில்லாதவை என்று தெரிந்தும் பக்கங்களை புரட்டியபடி இருக்கிறோம். இப்பொழுதெல்லாம் இணையத்தில் வேறு கணிசமான நேரம் செலவழிக்கிறோம். யாராவது விருந்தினர் வந்தால் அவர்களுடன் அரட்டை அடித்து புரளிகள் பேசி நேரம் கழிக்கிறோம். சற்று நேரம் சாப்பிடுவதில் கழிகிறது, பிறகு இரவில் அயர்ந்து தூங்கப் போய்விடுகிறோம். ஒரு நாளை கழிக்க இதுவல்ல வழி.

காலையில் எழுந்து உங்கள் தினசரி யோக தியானப் பயிற்சிகளைச் செய்யுங்கள். பிறகு உங்கள் தினசரி கடமைகளில் மூழ்குங்கள். அன்று என்னென்ன வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது, எங்கு போக வேண்டும், என்ன வாங்க வேண்டும் என்ற குறிப்புகளை எழுதுங்கள். அந்த நாளை எப்படி கழிக்க வேண்டியிருக்கிறது என்று திட்டம் போடுங்கள். யாரையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று எழுதுங்கள். திட்டமும் குறிப்பும் ஒருங்கியவுடன், உங்கள் வேலையை உடனே ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வேலை முடிந்தவுடன் அதை குறித்துவிடுங்கள்.

மாலையில், திட்டமிட்ட வேலைகளை முடித்தவுடன், சற்று நேரம் அமர்ந்து ஓய்வாய் இருங்கள், ஏதாவது அருமையான இசையை கேளுங்கள். அல்லது மெதுவாக இயற்கையை அனுபவித்தவாறு ஒரு நடைப் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு மாலையிலும் உங்களுக்கென சிறிது நேரம் செலவழியுங்கள். மாலையில் மறுபடியும் 15 – 20 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். வாழ்க்கையில் அவ்வளவு மகிழ்ச்சியை காண்பீர்கள். பிறகு, வலிமையாகவும் சக்தி நிறைந்தும் உணர்வீர்கள், சோர்வோ சோம்பலோ இருக்காது. பொதுவாக நாம் பயனில்லாத வேலைகளில் அதிக நேரம் வீணாக்கிவிட்டு சோர்வடைந்து ஓய்வெடுக்கிறோம். இப்படிச் செய்யக்கூடாது. எனவே காலையில் எழுந்தவுடன் அன்று மாலை வரை என்னவெல்லாம் வேலைகள் இருக்கிறது என்று பட்டியல் தயார் செய்துகொள்ளுங்கள்.

பொதுவாக என்ன நடக்கிறது? அன்றைய தினத்துக்கான வேலைகளின் பட்டியலை நமது செயலாளர் தருவார். நான் பொதுவாக மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை இன்றே வாங்கிவிடுவேன்! நான் பார்க்க வேண்டியவர்களின் பட்டியல், மாலை வரை செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் அந்தப் பட்டியலில் இருக்கும். எப்படியோ பிற்பகலில் ஓய்வெடுக்க எனக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தருவார்கள். ஆனால், அதன் பிறகு வேலைகள் இரவு 12 மணிவரை தொடரும். நான் இந்தியாவில் இருக்கும் போது இதுதான் என் தினசரி அட்டவணை.

நான் பயணத்தில் இருக்கும்போதும் வேலைகள் நிறையவே இருக்கும். நான் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்னுடையை அட்டவணையை நிரப்பிவிடுவார். எனக்கும் அவ்வாறு வேலையில் மூழ்கி இருப்பது பிடிக்கும். ஒரு நாளில் என்னுடைய ஒவ்வொரு வினாடியும் ஆக்கபூர்வமாக எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.  அப்படி ஒவ்வொரு நாளும் வேலையிலேயே கழிவதால், செய்திகள் ஏதும் படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ நேரம் இருக்காது. சில வேளைகளில், விமானத்திலோ அல்லது காரிலோ பயணிக்கும் போது செய்தித்தாள் படிப்பதுண்டு. என்னுடன் வேலை செய்பவர்கள், கைபேசி குறுந்தகவலாக செய்திகளை அனுப்பி வைப்பார்கள். நேரம் கிடைக்கும் போது படிப்பதுண்டு.

நீங்கள் அனைவரும் அவ்வளவு அன்போடு அனுப்பும் கடிதங்கள் அனைத்தையும் படிக்கிறேன். பலர், சிறிய சிறிய எழுத்துக்களில் கடிதம் அனுப்புவதால் அதைப் படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கிறது. ஏன் காகிதம் உபயோகிப்பதில் அவ்வளவு கருமிகளாய் இருக்கிறார்கள் என்று வியப்பேன். சிலர் தமது கடிதத்தை மடித்து மடித்து சிறிய அளவாய் ஆக்கி என்னைப் பார்க்கும் போது என் கைகளுக்குள் திணித்துவிடுவார்கள். என்னைத் தொடுவதற்கு வாய்ப்பாக இந்த தந்திரத்தை உபயோகிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். சமீபத்தில் யாரோ இதைக் கண்டுபிடித்து என்னிடம் கூறினார்கள். சரியான அளவு காகிதத்தில் சாதரணமாக மடித்துக் கொடுத்தால் என்னைத் தொடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காது என்று பல மடிப்புகள் மடித்துச் சிறிதாக்கி கொடுத்தால் அப்போது என்னைத் தொடலாம் என்று இப்படிச் செய்கிறார்களாம். அதைப் பிரித்துப் படிப்பது கடினம். எப்படியோ இதுவரை கண்ணாடி அணிந்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை வரவில்லை, ஆனால் இப்படி சிறிய சிறிய கடிதங்கள் கொடுத்தால் கூடிய வரைவில் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்போல் இருக்கிறது. 

நீங்களைனைவரும் உங்கள் நேரத்தை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலைக்குள் முடிக்க வேண்டிய வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 
சிலர் என்னிடம், “குருதேவ், என் வியாபாரம் நன்றாகப் போகவில்லை”, என்று கூறி வேதனைப் படுகிறார்கள். அவர்களுக்கு நான் கூறுவது, “உங்கள் வியாபாரம் சரியாகப் போகவில்லை என்றால் வேறு ஒரு வியாபாரம் செய்யுங்கள்.” இந்தச் சமூகத்திற்குச் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நமது ஆசிரமத்தில் உள்ள மனித வளத் துறையினரிடம் சென்று உங்களுக்குத் தொண்டு செய்ய விருப்பம் இருப்பதை சொல்லி உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். செய்வதற்கு ஏதும் இல்லை என்று பலர் என்னிடம் கூறுகிறார்கள். அவர்கள் எல்லோரும் தம் பெயரைப் இங்கே பதிவு செய்து கொள்ளலாம். செய்வதற்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. வேலைகளில் உங்கள் முழுநேரத்தையும் செலவிடுங்கள்.

தொண்டு செய்ய உண்மையான விருப்பம் இருப்பவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளும் செய்வதற்கு ஏராளமான தொண்டுகளும் இங்கே இருக்கிறது. உங்களுக்கு வியாபாரம் செய்வதில் விருப்பம் இருந்தால், ஏராளமான வியாபார வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கே அவ்வளவு பெரிய வாழும்கலை குடும்பம் இருக்கிறது. இங்கே எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

தம் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் அமையவில்லை என்று என்னிடம் சிலர் வந்து வருத்தப்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக இங்கே திருமணத் தகவல் மையம் ஒன்று ஏற்படுத்தி இருக்கிறோம். அதற்காக தனியாக ஒரு இணைய தளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்.இப்போது அந்த இணைய தளத்தில் சில பிரச்சினைகள் இருக்கின்றன, நமது தொண்டர்கள் அதை இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்துவிடுவார்கள். பிறகு நீங்கள் எளிதாக அதில் பதிவு செய்துகொண்டு அவர்களுக்கான துணையைத் தேடலாம். எனவே, இதைப் போன்ற உலகாய செயல்களும் கடமைகளும் நடந்தவாறு இருக்கும். ஆனால் அவை எல்லாம் மிகக் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கவோ அல்லது முயலவோ வேண்டாம். உலகாய வேலைகளில் சில குறைபாடுகள் எப்போதும் இருக்கும். ஆன்மீகப் பாதையிலும் தியானத்திலும் ஆழமாகப் போகும் போதுதான் வாழ்க்கையில் உள்ள இந்தச் சிறு சிறு பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் சமாளித்து அதைத் தாண்டி மேலே செல்ல முடியும். அப்போதுதான் உண்மையான பேரானந்தத்தை அனுபவிக்க முடியும்.

அதனால் தான் நமது வாழும் கலையின் முதல் பகுதி வகுப்பை, அடிப்படை பயிற்சி வகுப்பு என்பதிலிருந்து ஆனந்த நிகழ்ச்சி என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறோம். மக்கள் இந்தப் பயிற்சிக்கு வந்து பேரானந்தத்தை அவர்களாகவே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தப் பயிற்சியை எடுப்பதால் அவர்களின் பிரச்சினைகளும் துயரங்களும் தீர்கிறது. ஞானத்தின் உதவியால் இந்தப் பிரச்சினைகளையும் வேதனைகளையும் தாண்டி அவர்களால் மேலே எழ முடிகிறது.

ரிஷிகேஷில் நமது சத் சங்கத்திற்கு வந்த ஒரு சாதுவை சமீபத்தில் சந்தித்தேன். அவர் கூறினார், “பொதுவாகப் பள்ளிகளில், மாணவர்கள் தேர்வில் வென்றபின் அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள். ஆனால் இந்தப் பள்ளி (வாழும் கலையை கூறுகிறார்) தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. இங்கு வருபவர்கள் தேர்வடைவதில்லை. ஒரு முறை வந்தபின் (இந்தப் பாதைக்கு) இங்கேயே தங்கி விடுகிறார்கள். ஏனென்றால் வாழ்கையின் உண்மையான மகிழ்ச்சியை காண்கிறார்கள். ஞானத்தின் பாதை மிக ரசமானது மகிழ்ச்சி நிரம்பியது. உங்களை நேர்மையான செயல்களின் பாதைக்கு உங்களைக் கொண்டுவருகிறது. அப்படி ஒரு முழுமையான நித்தியமான அன்பின் அனுபவத்தைத் தந்து உங்களை நீங்காத அமைதியனை காணவைக்கிறதுவாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு முன்னேறலாம். அதனால்தான், “சறைவேதி! சறைவேதி! சறைவேதி!” என்று உபநிடதங்களில் கூறப்படுகிறது. (அதன் பொருள், மேலும் நகருங்கள்! மேலும் நகருங்கள்! மேலும் நகருங்கள்!) நமது வேதங்களும் அதையே சொல்கிறது,எதிலும் சிக்கி கொள்ளாமல் மேலே நகர்ந்து செல்லுங்கள். சுயத்தை பற்றிய ஞானத்தில் நிலைகொண்டு, வாழ்க்கையில் முன்னேறி செல்பவர்கள், வாழ்கையின் உன்னத இலக்கை அடைகிறார்கள்.
  
நம் நாட்டில் நடக்கும் அவ்வளவு வளர்ச்சிகளையும், இங்கே கொட்டிக் கிடக்கும் ஏராளமான ஆன்மீக ஞானத்தையும் தாண்டி, நமது இளைஞர்கள் இன்னும் ஏன் வெளி நாட்டிற்குச் செல்ல ஏக்கம் கொள்கிறார்கள்? இந்தியா அவர்களுக்கு வாழத் தகுந்த இடமாகத் தெரியவில்லை.

நமது மக்கள் வெளி நாட்டிற்கு செல்வது நல்லதே. மற்ற நாடுகளில் அவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைய நாளில், மக்கள் பல நாடுகளுக்கும் பயணம் செய்து வேர் பதிக்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமே பயணம் செய்து வேரூன்றுவது இல்லை. எது முக்கியம் என்றால், வெளி நாட்டில் குடிபெயர்ந்தாலும், மாற்றமடையாமல், நமது கலாசாரத்தை மறக்காமல், நமது மரபை கடைபிடிக்க வேண்டும். வெளிநாட்டிலும் நமது கலாசார அடையாளத்தை காத்து வரவேண்டும்.

வெளி நாட்டில் குடியேறியதும் மக்கள் தங்கள் பெயர்களை மாற்றி கொள்வதுண்டு. உதாரணமாக ‘சவுகான்’ என்ற பெயர் கொண்டவர் தன்னை ‘பீட்டர்’ என்று பெயர் மாற்றம் செய்து கொள்வார். ‘கிருஷ்ணா’ என்பவர் ‘கிரிஸ்’ ஆகிவிடுவார். முன்பெல்லாம் இப்படி நிறைய நடக்கும். ஆனால் இப்போது அப்படி அல்ல. நகரங்களில் இருக்கும் தொலைபேசி சேவை மையங்களில் வேலை செய்பவர்கள் மட்டும் வேலை நிமித்தம் தமது பெயர்களை மாற்றி கொள்கிறார்கள். நமது உண்மையான பெயரை மாற்றி கொள்ளுதல் கூடாது. உங்கள் பெயரையும் கலாசார அடையாளத்தையும் அப்படியே பாதுகாக்க வேண்டும்.

சீன மக்கள் பெருவாரியாக வாழுமிடங்களில் பெயர் பலகைகளில், வழி காட்டும் பலகைகளில் சீன மொழியான மாண்டரின் மொழியில் தான் எழுத்துக்கள் இருக்கிறது ஆங்கிலத்தில் அல்ல. அதைப் போல, கனடா நாட்டின் வான்குவர் நகரத்தின் சில பகுதிகளில் வழிகாட்டும் பலகைகளில் பஞ்சாபி எழுத்துக்களை பார்க்கலாம். இது ஏனென்றால், தொழில் நிமித்தம் கனடாவிற்கு குடிபெயர்ந்த பஞ்சாபி மக்கள் தங்கள் கலாசாரம் மற்றும் மரபை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.

இன்றும், அங்கே குருத்வாராக்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். பல பஞ்சாபிகள் விவசாயத்தை முழு நேரத் தொழிலாகக் கொண்டு நன்கு சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. தங்கள் மொழியையும் கலாசாரத்தையும் அவர்கள் மறக்கவில்லை. அப்படியான ஒரு உணர்வு நிலையை நாம் இந்தியாவிலும் வளர்க்க வேண்டும். இந்திய மக்கள் தமது மொழி மற்றும் கலாசாரம் மீது ஒரு பெருமை கொள்ள வேண்டும். இதை நோக்கி நாம் முயற்சி எடுக்க வேண்டும்.