தவறுகள் சாதரணமாக நிகழும்

ஏப்ரல் 28, 2014.

பெங்களூரு இந்தியா

(மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளியுங்கள் என்னும் பேருரையின் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)



கேள்விகளும் - பதில்களும்

குருதேவ், ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் சிசுபாலனின் நூறு தீச்செயல்களை மன்னித்ததாகக் கூறப்படுகின்றது. சிசுபாலன் தனது  நூற்றியோராவது தீச்செயலை செய்த பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கிரத்தை சுழற்றி அவனது தலையைக் கொய்து விட்டார். சிசுபாலன் 99 வது தவறை செய்யும்போதே அவனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தால் ஒரு வேளை இது தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம்.  இதைப் பற்றித் தயவு செய்து கூறுங்கள்.

குருதேவ்: தீயசெயல்கள் செய்யப்பட்ட ஒவ்வொரு முறையும் ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கை விடுத்தார். சிசுபாலன் 99 வது முறையாக எச்சரிக்கப்பட்ட போதும், நிறுத்தவில்லையாதலால், ஸ்ரீ கிருஷ்ணர் அவன் தலையைக் கொய்ய வேண்டியதாயிற்று. சிசுபாலனுக்கு அவனது தவறை உணர்த்தாமல் ஸ்ரீ கிருஷ்ணர் அவனை மன்னிக்கவில்லை. ஒவ்வொரு முறையும், அவனுக்கு அவன் செய்த தவறை உணர்த்திய பின்னரே அவனை மன்னித்தார். ஒருவன் செய்யும் தவறினை அவனுக்கு உணர்த்தாமல் அவனை மன்னித்து என்ன பயன்? அப்போது அவன் தனது தவறையே உணர மாட்டான். ஆகவே, ஒவ்வொரு முறையும், சிசுபாலனுக்கு அவனது தவறை உணர்த்திய பின்னரே ஸ்ரீகிருஷ்ணர் அவனை மன்னித்தார். 

தவறுகள்  நிகழக்கூடும். ஆனால் நாம் என்ன சாதாரணமாக செய்கின்றோம் என்றால், அதையே எண்ணி வருந்திக் கொண்டிருக்கின்றோம். "ஒ! நான் தவறு செய்து விட்டேன்! என்றெண்ணி குற்ற உணர்வுடன் இருக்கின்றோம் அல்லது தவறே நிகழாத மாதிரி பாவனை புரிகின்றோம் அல்லது நிகழ்ந்தது தவறே அல்ல என்று நிரூபிக்க முயற்சி செய்கின்றோம்.ஆனால் இந்த அணுகுமுறைகள் அனைத்தும் ஒருவனுக்கு கேடு விளைவிக்கின்றன. தவறினை மறுக்கும் அணுகுமுறையும், உடல்நிலை சீர்கேடு அடையும் அளவுக்கு தவறினை எண்ணி, வெட்கமும் வருத்தமும் அடைவதும் சரியல்ல. இவ்விரண்டிற்கும் இடையே ஆன பாதையையே மேற்கொள்ள வேண்டும். ஆகையால், நீங்கள் ஒரு தவறு செய்யும் போது மீண்டும் மீண்டும் அதையே எண்ணித் துன்பம் அடையாதீர்கள். அதே சமயம், நீங்கள் தவறு செய்து விட்டதையும் மறுக்காதீர்கள். இரண்டுக்குமிடையே வழி என்னவென்றால்,ஒரு தவறு செய்யும் போது அதிலிருந்து எதையாவது கற்றுக் கொள்கின்றீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் உங்கள் தவறையும் ஒப்புக் கொள்கின்றீர்கள், ஆனால் அதிலேயே சிக்குண்டு குற்ற உணர்வினை அடைவதும் இல்லை. தவறிலிருந்து பாடம் கற்று முன்னேறிச் செல்கின்றீர்கள்.

இந்த வழியை நீங்கள் பின்பற்றுங்கள், யாரேனும் ஒரு தவறு செய்தால் அவர் அதை உணர வேண்டும் என்று திரும்பத் திரும்பக்  கூறி நச்சரித்து  கொண்டிருந்தால், அவருடன் உங்கள் உறவு முறிந்துவிடும். உங்களை யாரேனும் நீங்கள் செய்த தவறை திரும்பத் திரும்பக் கூறி உங்களை நச்சரித்துக் கொண்டிருந்தால் அவருடன் இருக்க நீங்கள் விரும்புவீர்களா? உங்கள் தவறினை நினைவுறுத்திக் கொண்டிருக்கும் அவரிடமிருந்து விலகி விடவே விரும்புவீர்கள். யாருமே தெரிந்து தவறு செய்வதில்லை. விழிப்புணர்வு குறைந்த  நிலையிலேயே தவறுகள் நிகழ்கின்றன

உங்களுக்குள், விழிப்புணர்வு மலரும்போது அறியாமையால் தவறு செய்துவிட்டதை உணருகின்றீர்கள். அதைப் புரிந்து கொண்டவுடனேயே அத்தவறில் இருந்து வெளிவந்து விடுகின்றீர்கள். விழிப்புணர்வு ஏற்பட்டவுடனேயே நீங்கள் களங்கமில்லாதவராக விடுபட்டு விடுகின்றீர்கள். விழிப்புணர்வு ஏற்பட்டவுடனேயே உங்கள் களங்கமற்ற தன்மையை உணர்ந்தும் கொள்கின்றீர்கள். எனவே செய்த தவறினையே மென்று கொண்டிராமல், உங்கள் களங்கமற்ற தன்மையை உணர்ந்துகொண்டு, முன்னேறுங்கள். உங்கள் களங்கமின்மையில் முழு நம்பிக்கை கொள்வது மிக முக்கியமானது ஆகும். அதே சமயம், பிறரின் தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி அவர்களைக் குற்ற உணர்வுக்குத் தள்ளுவதும் நல்லதல்ல. அவர்கள் உங்களிடமிருந்து விலக முற்படுவார்கள். எனவே அவ்வாறு செய்யாதீர்கள்.

பிறரைக் குற்ற உணர்வில்லாமல் அவர்களது தவறினை உணரச் செய்வது என்பது ஒரு திறன். அது ஒரு கலை. அவர்களைத் திறனுடன் குற்ற உணர்வின்றித் தங்களது தவறினை உணரச் செய்து, ஊக்குவித்து, "பரவாயில்லை. தவறுகள் நிகழக் கூடும், நான் அதை மறந்து விட்டேன், எனவே நீங்களும் அதை மறந்து விடுங்கள்'' எனக் கூறி அவர்களை முன்னேறச் செய்ய வேண்டும். யாரும் குற்ற உணர்வில் சிக்குண்டு குற்றவாளி போன்று உணரச் செய்யாதீர்கள். எப்போதும் குற்றவாளி போன்று ஒருவனை உணரவைத்தால், அவன் மேலும் மேலும் தீய செயல்களைச் செய்து கொண்டிருப்பான். ஒரு போதும், தன்னைத் திருத்திக் கொள்ள மாட்டான். மனத்தைக் காக்கும் பொருட்டு, அதைக் குற்றவாளி உணர்விலிருந்து காக்க வேண்டும். நான் கூறுவதை புரிந்து கொள்கின்றீர்களா?

குற்றவாளி உணர்வு என்பது என்னவென்றால், இடைவிடாமல்," நான் தவறிழைத்தவன். நான் ஒரு தீய செயலைச் செய்து விட்டேன்" என்று எண்ணிக் கொண்டிருப்பது ஆகும். இக்குற்ற உணர்வானது ஒருவனை முழுவதுமாக விழுங்கி, அவன் ஆன்மீக வழியில் முன்னேற விடாமல் செய்யும். ஆன்மீகத்தின் முதல் படி,குற்ற உணர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தான். அடுத்தபடி, தான் என்னும் அகந்தையிலிருந்து விடுபடுவது. பொதுவாக மக்கள் , தான் செய்த செயல்களின் சிறப்பைப் பற்றியும் தானே சிறந்தவன் என்றும் தற்பெருமையுடன் இருப்பார்கள். இதுவும் ஆன்மீக மார்கத்திற்கு உகந்ததல்ல. நீங்கள் அகிஞ்சன்  ஆக வேண்டும்.

இதற்கு ஒன்றுமற்றவனாக ஆக வேண்டும் என்று பொருளல்ல. சொல் வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சொற்களில் சிக்கிக் கொண்டால், எண்ண வலைகளையும், எண்ணப் பதிவுகளையும் உருவாக்குவீர்கள். அதனால் தான், எளிமையாகவும் சாதரணமாகவும் இருங்கள் என்று கூறுகின்றேன். எளிமையுடன் இயல்பாக இருந்தால், எல்லாப் பிரச்சினைகளும் சிக்கல்களும் முயற்சியின்றித் தானாகவே தீர்ந்து தெளிவாகி விடும்.

குருதேவ், பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தில் எவ்வாறு போர் துவங்குவதற்கு முன்னர் ஒரு போர் வீரன் தனது  சொந்த சங்கினை ஊதுகின்றான் என்பது விவரிக்கப் பட்டிருக்கின்றது. பல்வேறு சங்குகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறு எடுத்துரைப்பதன் பொருள் என்ன என்று தயவு செய்து கூறுங்கள்.

குருதேவ்: இதற்குப் பின்னால் ஒரு ரகசியம் இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன். அவ்வரிகளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சங்கின் பெயருக்கும் ஒரு பொருள் இருக்க வேண்டும். ஆய்வில் விருப்பம் உள்ளவர்கள் தங்கள் மனதை இதில் ஈடுபடுத்தி அந்த ரகசியப் பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும். கூறப்பட்டுள்ள அத்தனை சங்குகளின் பெயர்களுமே மிக அழகானவை. பகவத் கீதையில்"பாஞ்ச ஜன்யம் ஹ்ரிஷிகேஷோ தேவதாம் தனஞ்சய  புந்தரம் தத்மௌ மகா சங்கம் பீமா கர்ம வ்ருகோதர" (1.15)

இந்த வரிகள் சாதரணமாக எழுதப்பட்டவை அல்ல. இவை அந்தப் பெயரின் குணங்களோடு சம்பந்தப்பட்டவை ஆகும். ஒவ்வொரு பெயரும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும். உதாரணமாக, சமஸ்க்ரிதத்தில்  'பர்ண' என்றால் இலை என்பது பொருள்.ஆனால் உண்மையில் அது எதைக் குறிக்கின்றது தெரியுமா? அதாவது சூரியனின் பிரகாசமான ஒளிக்கதிர் வீச்சினைத் தன்னுள் ஈர்த்துக் கொள்ளுதல் என்பது பொருளாகும். இலைகள் ஒளித் தொகுப்பு செய்யும் (photosynthesis) என்பது நமக்குத் தெரியும்.ஒரு இலையானது சூரிய ஒளியையும், சுற்றுச் சூழலில் உள்ள ஈரதன்மையையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, பசுமையை (chlorophyll) உருவாக்குகின்றது. இந்தப் பொருளே அந்தப் பெயரில் அழகாக இசைந்துள்ளது.

இது போன்று அபர்ணா என்றால் என்ன பொருள்? ஒளியை ஈர்த்துக் கொள்ளாத என்பது பொருள். அதாவது, எதையும் ஈர்த்துக் கொள்ளாத எதனாலும் தீண்டப்படாதது என்பது அதன் பொருள் ஆகும். சுபர்ணா என்றால்,எது மிளிருமோ, அல்லது எது பறக்ககூடியதோ என்பது பொருள்.(விஷ்ணுவின் வாகனம்) சுபர்ணா என்று குறிக்கப்படுகின்றது ஏனெனில் அது பறக்கும். அது தனது இறக்கைகளை பயன்படுத்தி காற்றை கீழே தள்ளி வானத்தில் மேல் நோக்கிப் பறக்கின்றது. இது போன்று ஒவ்வொரு சொல்லும் யதார்த்தமான ஒரு பொருளை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது. அதுதான் சமஸ்க்ருதத்தின் சிறப்பியல்பு. 

குருதேவ், சத்வ சுத்தைர கார்ய சித்தி ( ஒருவன் தூய்மையையும் நேர்மறையையும் அதிகரித்துக் கொள்வதன் மூலம் தன்னுடைய விருப்பங்களில் வெற்றி அடைகின்றான்) தூய்மைப்படுத்திக் கொளவது மட்டுமே காரிய சித்திக்குப் போதுமானது ஆகுமா அல்லது பல காரணக் கூறுகளில் அது ஒன்று ஆகுமா?

குருதேவ்: சமஸ்க்ருதத்தில் "ரவீர்யர்த்தேவந்த்யம் பிரதிதினம் உபரஸ்ய நரபஸ்யாஹ் க்ரியாசித்திர் பவதி சத்வே - மஹதம் நோப கரேனே (ஸ்ரீ காளிதாசரின் ரகுவம்சத்திலிருந்து) ஒரு செய்யுள் உள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், ஒருவன் உபகரணத்தின் மூலம் (விருப்பத்தினை அடையும் சாதனம்) தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவன் சத்வ (நேர்மறை வழி) குணங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலமே தனக்குத் தேவையானவற்றை அடைய முடியும். ஆனால் எந்தவிதமான அடிப்படைப் பொருள் அல்லது சாதனங்கள் இல்லாமல் என்று பொருளல்ல. இதை இவ்வாறு புரிந்து கொள்ளுங்கள்.அடுப்பில் நெருப்பு இருந்தால் தான் ரொட்டியை வேகவைக்க முடியும். நெருப்பு இல்லாவிடின் ரொட்டி வேகாது. ரொட்டி செய்ய மாவு, தண்ணீர், வேகவைக்கும் பாத்திரம் (பொருள்கூறுகள்) ஆகியவையும் தேவையாகும். அப்போது தான் ரொட்டிக்கான மாவு தயார் ஆகும். எனவே வெறும் மாவு மட்டுமோ அல்லது நெருப்பு மட்டுமோ இருந்தால் ரொட்டி செய்ய முடியாது.

நான் நேர்மரையானவன் நான் சத்விக் குணம் உடையவன் என்று மட்டுமே கூறிக் கொண்டு, எல்லாமே அடைந்துவிடலாம் என்று எண்ணினால் நடக்காது. உங்களுக்குத் தேவையானதை அடைவதற்குரிய கருவிகள் மிக அவசியமானது ஆகும். ஒரு எண்ணம் அல்லது விருப்பம் மனதில் எழும்போதே அது நிறைவேறிவிடும் நிலையும் உண்டு. நைஷ்கர்ம சித்தி  என்று அழைக்கப்படும். இது மிகவும் அரியது .ஒரு எண்ணம் மனதில் எழும்போதே அது நிறைவேறிவிடும் நிலையை யார் அடைய முடியும்? உள்ளார்ந்த முழுத் திருப்தியோடு, வினைகள் மற்றும் அவற்றின் பற்றுதல் இவைகளிலிருந்து முழுமையாக விடுபட்டவனே நைஷ்கர்ம சித்தி பெற்றவன் ஆவான். பக்தியில் முழுமையாகத் திளைத்து எதிலும் ஆசையின்றி இருப்பவனுக்கும் நைஷ்கர்ம சித்தி  நிகழும். நெடுங்காலம் உழைத்தாலே அத்தகைய நிலையை அடைய முடியும்.அந்த நிலையை அடைந்தவன் என்ன நினைத்தாலும் அது நடைபெறத் துவங்கும்.

அத்தகைய பிரம்மஞானி (பிரம்மனை அல்லது மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அறிந்தவன்) எந்த முயற்சியும் இன்றி நைஷ்கர்ம சித்தியை அடைகின்றான். ஆனால் பிரம்மஞானி காலப் போக்கில் கூட இதை அடைய முடியும். எப்போது சரியான காலம் கூடி வருகின்றதோ, எப்போது ஒருவன் முழுமுதிர்ச்சி அடைகின்றானோ அப்போது அவன் நைஷ்கர்ம சித்தியை அடைகின்றான்.
உங்களில் எத்தனை பேர் இவ்வாறு நீங்கள் எண்ணுவது நடப்பதை அனுபவித்திருக்கின்றீர்கள்? ஆம், இதுதான் நைஷ்கர்ம சித்தி என்று அழைக்கப்படுவது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் அரைகுறையாக இதை கண்டிருக்கலாம், ஆனால் முழுமையாக அடைய சற்றுக் காலம் ஆகும்.