இதனால் தான் மனம் சோர்வடைகிறது

ஜனவரி 4, 2014

பெங்களுரு, இந்தியா


ஞானம் நம்முடைய மனதை சுத்தமாக்குகிறது,அமைதியை தருகிறது. மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களிடம் குறைகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்காதீர்கள். இன்று திருமணம் நிச்சயம் செய்து கொண்டவர்களுக்கு நான் ஒரு அறிவுரை கூறுகிறேன். உங்களுக்கு பிரியமானவர்களிடம் அவர்களின் அன்பை பற்றி கேள்வி கேட்காதீர்கள்.அவரகளிடம்" என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள்?" என்று கேட்க வேண்டாம். அவர்களுடைய அன்பு சற்று குறைவாக இருந்தாலும், "ஏன்  என்னை இவ்வளவு நேசிக்கிறீர்கள்?" என்று கேட்கவும்.

கேட்டுபெறுவது  அன்பை முறித்து விடும் ஆகவே எப்போதும் கேட்பதை செய்யவேண்டாம். நீங்கள் இங்கே கொடுப்பதற்கு மட்டுமே இருக்கின்றீர்கள். உறவு முறைகளில் இருவருமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால்,"நான் என்னுடைய 100 சதவீதத்தை மற்றவருக்கு கொடுக்கவே இங்கே இருக்கின்றேன்" என்பதே. நீங்கள் இதை செய்தால் உங்களிடையே உள்ள உறவு வலுவானதாகவும் நீண்ட காலம் நிலைப்பதாகவும் இருக்கும். இதற்கு மாறாக, நாம் என்ன செய்கின்றோம்? நாம் மற்றவர்களிடம் "நீங்கள்  ஏன் எனக்கு இதை செய்யவில்லை" என்று கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கேட்க ஆரம்பித்தால் அன்பு குறைய ஆரம்பித்து விடும். ஆகவே கேட்பது கூடாது. ஒருவருக்கு ஒருவர் பங்களிப்பது மட்டுமே இருக்க வேண்டும்.

எதுவும் தேவை இல்லை. நான் பங்களிக்கவே விரும்புகிறேன். என் வாழ்வே பங்களிப்பதற்காக தான் உள்ளது. என்னும்  உணர்வுகளுடன்   இங்கிருந்து செல்லவும். இந்த ஒரு மனப்போக்குடன் உறவுகளில் ஈடுபட்டால் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை காணலாம்.

கேள்வி பதில்கள்:

மனமானது இரண்டு வாழ் நாட்களுக்கு இடையேயும்  பரிணாம வளர்ச்சியை தொடருகிறதா?  அப்படியென்றால் பரிணாம வளர்ச்சிக்கு உடலும் சூழ்நிலையும் தேவைப்படுமா? 

ஆமாம். உடல் தேவை. அதனால் தான் மனித உடல் மிகவும் மதிப்புமிக்கது. உங்களுக்கு தெரியுமா! தினசரி வாழ்க்கையில் நாம் பல வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது, சில நேரங்களில் நாம் சக்தியை இழக்கின்றோம். சக்தி குறையும் போது  நம்முடைய மனமும் சோர்வடையும்.  உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதா? நேரங்களில் நம்முடைய மனம் ஏன் சோர்வடைகிறது என்று ஆச்சரியம் அடைகின்றோம். பலர் இந்த கேள்வியை கேட்கின்றனர். "என்னுடைய மனம் சோர்வாக உள்ளது. உற்சாகம் இன்றி   உள்ளது. எதிலுமே ஒரு ஆர்வம் இல்லை" என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  

இதற்கு சில காரணங்கள் உள்ளன.

முதல் காரணம் "நேரம்". எல்லோருக்கும் வாழ்க்கை சக்கரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அவர்களுடைய மனதின் சக்தி குறைவதை உணருகின்றனர். இரண்டாவது காரணம் அதிகமாக சிந்திப்பதும், அதிகமான ஆசைகளும். மனம் அதிக இலட்சியங்களாலும், ஆசைகளாலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது, நிச்சயமாக அது மன உற்சாகமின்மைக்கு வழி வகுக்கும். திரும்ப திரும்ப சிந்தனை செய்வதிலும்,கனவு காண்பதிலும் மற்றும் இது வேண்டும் அது வேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சக்தியை இழப்பதனால் மனம் சோர்வடைகிறது. ஆகவே அதிகமான ஆசைகளே மனதை சோர்வடைய செய்கிறது. அதனால் தான் உற்சாகம் இன்மையை எதிர்கொள்ள சாந்தம் அத்தியாவசியமானதாகிறது. சாந்தமாக இருந்தால் நீங்கள் உற்சாகம் இன்றி இருக்க மாட்டீர்கள். சாந்தம் குறைவாக இருப்பதே உற்சாகமின்மையை உருவாக்குகிறது. ஆகவே மிக அதிகமான ஆசைகளும் லட்சியங்களுமே உங்கள் மனதின் சக்தியை இழக்கச் செய்கிறது, உற்சாகமின்மையை உண்டாக்குகிறது. 

மூன்றாவது காரணம் உடலின் சக்தி குறைவாக இருப்பது.உடல் வலிமையற்றிருப்பது. உங்களிடம் போதுமான சக்தி இல்லாத போதும் நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் மனமும் சக்தி இழந்து விடுகிறது.இது வியாதி அல்லது தவறான உணவு பழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
சில நேரங்களில் உங்களுடைய உடல் அமைப்பிற்கு ஒவ்வாத உணவுகளை உண்பதாலும் அல்லது அதிக உணவு உண்பதாலும் உங்களுக்கு உற்சாகமின்மை ஏற்படும். உற்சாகமில்லாமல் இருப்பதால் அதிகம் உண்பார்கள் அல்லது அதிகம் உண்பதால் உற்சாகமின்மை ஏற்படும். நீங்கள் உற்சாகம் இன்றி இருக்கும்போதோ அல்லது சக்தி குறைவாக இருக்கும்போதோ, சில நாட்களுக்கு அதிகமான உணவு உண்பதை தவிர்த்து விடவும். எளிய உணவுகளையும் பழங்களையும் உண்பதன் மூலமாக உங்களுக்கு திடீரென நல்ல சக்தி கிடைப்பதை உணர முடியும்.

அதிகமாக உண்ணாவிரதமும் இருக்கவேண்டாம். அதுவும் நல்லதல்ல. உண்ணாவிரதம் இருப்பது ஓரளவு நல்லதே. எளிய உணவு உண்பது உங்களுடைய மனதின் சக்தியை அதிகரிக்கும். இது பற்றி நீங்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். நீங்கள் தனியாக இருக்கும் போதும் உற்சாகம் இன்றி இருக்கும் போதும் உங்களுக்கு அதிகமாக சாப்பிட வேண்டும் எனும் போக்கு ஏற்படும். அதிக உணவு சாப்பிட அது உங்களுக்கு மேலும் உற்சாகமின்மையை ஏற்படுத்தும். உற்சாகம் இல்லாமல் இருப்பதால் நீங்கள் அதிகம் உண்கிறீர்கள், இந்த தீய வட்டத்தில் சிக்கிக் கொள்ளுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய உணவில் கவனம் செலுத்தி சரியான உணவை சரியான அளவில் சரியான நேரத்தில் உண்டால் உங்களுடைய சக்தி அதிகரிக்கும். உற்சாகமின்மையை எதிர்கொள்ள இது ஒரு வழி ஆகும்.

நான்காவது காரணம் செயலாற்றாமல் இருப்பது. மிக அதிகம் செயலாற்றுபவராக இருந்தாலும் உங்களுக்கு உற்சாகமின்மை ஏற்படும். செயலற்றவராக எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலோ அல்லது எந்த விதமான நோக்கமும் இன்றி சேவை மனப்பான்மை இன்றி மற்றவர்களுக்காக அல்லாது உங்களுக்காக மட்டுமே எதையாவது செய்து கொண்டிருந்தாலும் உற்சாகமின்மை ஏற்படுவது நிச்சயம். அதனால் தான் பண்டைய காலங்களில் ஆசிரமங்களில் மக்களை ஏதாவது   சேவைகள் செய்வதற்கு அனுப்புவார்கள். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், இடங்களை சுத்தம் செய்தல், தரையை சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் செய்ய வைப்பார்கள்.

நீங்கள் உங்களை வேலையிலேயே வைத்திருங்கள். ஏதாவது ஒரு வேலையில் மூழ்கியிருப்பதும் உங்களை உற்சாகம் இன்மையில் இருந்து  தடுக்கும். எனவே இங்கே மிக அதிகமாக வேலைகளில் ஈடுபடுபவர் அல்லது உடல் உழைப்பு இல்லாமல் தன்னை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர் அனைவருமே உற்சாகமின்மையை அடைவர். எனவே இதற்கு இடைப்பட்ட ஒரு பாதையே இதில் இருந்து தப்பிக்க வழி. அவ்வப்போது ஆழ்ந்த தியான நிலைக்கு செல்லவும். பிறகு எதிர்பார்ப்பும் இல்லாமல் உத்வேகமாக வேலையில் ஈடுபடவும்.

உலகத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறதோ அவைகளை செய்யவும். நேரமும் சூழ்நிலையும் உங்களை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறதோ அதை செய்வது தான் சேவை. உங்களுடைய மனதின் சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் வழி வகுக்கும். ஐந்தாவது விஷயம் என்னவென்றால், அனைவரும் பாடுவது, ஆடுவது, மந்திரங்கள் ஜபிப்பதை கேட்பது, பூஜைகளில் அமர்வது ஆகிய அனைத்துமே உங்களுடைய சக்தியை மேம்படுத்தும்.

நான் பூஜையில் மட்டுமே அமர்வேன் அல்லது மந்திரங்கள் மட்டுமே ஜபிப்பேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது. வேலை செய்யாது அல்லது நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டு விட்டு வந்து பூஜையில் அமர்வேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அது வேலை செய்யாது. நான் உட்கார்ந்து நாள் முழுவதும் தியானம் செய்து கொண்டிருப்பேன் வேறு ஏதும் செய்யமாட்டேன் என்று கூறினால் அது வீண், ஏனென்றால் உங்களால் அதிக தியானத்தில் ஆழம் செல்ல முடியாது. அதனால் தான் நீங்கள் பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள "எப்போதுமே செயல் மற்றும் ஒய்வு இரண்டையுமே சமநிலை வைத்திருக்க வேண்டும்" என்னும் வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். சரியான அளவில் உணவு, சரியான அளவில் வேலைகள் மற்றும் சரியான அளவில் சேவைகள் என்பது மிகவும் அத்தியாவசியமானது. இதை கடைப்பிடிக்கும் போது உங்களுடைய துயரங்கள் உங்களை விட்டு விலகி ஓடி விடும். நீங்கள் இந்த சூழ்நிலைகளை கடைப்பிடிக்கும் போது இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுபட்டு விடுவீர்கள்.(யோக நிலை), துயரங்கள் விலகி ஓடும், புன்னகையுடன் இருப்பீர்கள்.  

குருதேவ்! கால பைரவரைப் பற்றி சற்று கூறமுடியுமா?

கால பைரவர் என்பவர் காலத்தின் கடவுள். காலம் என்பதே தெய்வீகமானது. கால பைரவருடைய வாகனம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அது ஷ்வனா(புள்ளி) ஷ்வ என்றால் நேற்று அல்லது நாளை. என்றால் இல்லை. ஆகவே, ஷ்வனா என்பது நேற்றோ அல்லது நாளையோ அல்ல, இன்று ஆகும். எனவே கால பைரவர் எங்கே வசிக்கிறார்? அது இப்போது, இன்று.