நம்பிக்கை ஞானத்தைக் கொண்டு வரும்

வெள்ளிக்கிழமை 25 ஏப்ரல், 2014
பெங்களூர், இந்தியா
கே: குருதேவா! மகாபாரதத்தில் துரோணாசாரியாருக்கு பிடித்த சீடன் யார்? ஏகலைவனா? அர்ஜுனனா? எப்படி ஏகலைவனால் வில் வித்தையில் அதீதமான திறமை பெற முடிந்தது. குருவிடம் நேரில் பயிற்சி பெறாமல்! குருவின் உருவச் சிலையை வைத்து, அதன் முன் வில்வித்தை பழகியதாக அறிகிறோம். எப்படி முடியும் ?
குருதேவர்: “ஷ்ரத்தாவான் லபதே ஞானம் மத் பராஸ்ஸம்யத் இந்திரியஹ” யாரிடம் நம்பிக்கை உள்ளதோ அவன் ஞானம் பெறுவான் என்பது பொருள். நம்பிக்கை உள்ளவனிடம் ஞானம் ஓடிச் சென்றடையும். யாரும் ஏகலைவனை சரணடைய சொல்லவில்லை. குருவிடம் நம்பிக்கை வைக்க சொல்லவில்லை. ஆனால் அர்ஜுனனுக்கு சொல்ல வேண்டியிருந்தது. கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் “நீ நான் சொல்வதை கேள்“ என்று சொல்ல வேண்டியிருந்தது.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நம்பிக்கை வை என்று சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் ராதைக்கு சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யசோதைக்கோ, விதுரருக்கோ சொல்லவில்லை. ஆனால் அர்ஜுனனுக்கு “என் மேல் நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவாயாக” என்று பகவான் சொன்னார். முதலில் அவர் சொல்கிறார். “ஈஸ்வரஹ சர்வ பூதானாம் ஹ்ருததேஸ் அர்ஜுனா தீஷ்ததி“ “அர்ஜுனா! கடவுள் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார். உன் இதயத்திலும் இருக்கிறார். அவரை சணடைவாயாக“ என்று சொன்னார். கடைசியில் அவர் சொன்னது. “மம ஏகம் சரணம் வ்ரஜ“ “நீ என்னிடம் மட்டும் சரணடை” என்று சொன்னார். பின்பு அவர் அர்ஜுனனுக்கு மூன்று விதமான மனிதர்களை பற்றிச் சொன்னார். “அவன், நீ, நான்“ “படர்கை, முன்னிலை, தன்னிலை“. இந்த மூன்று நிலைகளிலும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்தார்.
இது ஒரு அருமையான பாடம். நீ அமர்ந்து சிந்திக்க வேண்டும். எல்லா கோணங்களிலிருந்தும் ஞானம் வருகிறது. இது ஒரு ஆச்சரியமான விஷயம்.
ஆனால், அர்ஜுனனுக்கு பகவான் சொல்ல வேண்டியிருந்தது. அர்ஜுனனின் மனம் அலை பாய்ந்ததால், “நீ என்னை சரண் புகுவது நல்லது“ என்று சொன்னார். மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய நிலை வரவில்லை. அது தான் வித்தியாசம். ஏகலைவனுக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. குருவிடம் அவனுக்கு திடமான நம்பிக்கை இருந்தது.
கே: குருதேவா ! எதிர்மறையான எண்ணங்கள் வரும் போது என்ன செய்ய வேண்டும் ?
குருதேவர்: அதற்குப் பல காரணங்கள் உண்டு. உனக்கு மலச் சிக்கல் இருக்கும்போது பல விதமான எதிர் மறை எண்ணங்கள் வரும். எனவே உடலை சுத்தமாக வைப்பது அவசியம். உன்னுடைய ஜீரண சக்தி சரியாக வேலை செய்யும்போது உன் மனமும் தூய்மையாக இருக்கும்.
இரண்டாவது: நீ ப்ராணயாமம் செய்வது அவசியம். ப்ராணயாமம் செய்தால் எதிர்மறை எண்ணங்கள் வராது.
மூன்றாவது: நாள் முழுதும் ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால் உடலில் இரத்த ஓட்டம் போதிய அளவு இல்லாமல் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க ஏதாவது உடற்பயிற்சி செய். அல்லது நீண்ட தூரம் நடந்து செல். உடற்பயிற்சி செய்தால் உடலும் மனமும் நல்ல நிலையில் செயல்படும். இரத்த ஓட்டம் சீர் படும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது. ப்ராண சக்தி (உயிர் சக்தி) குறைவாக இருக்கும் போது ப்ராணயாமம், தியானம் செய். சத்சங்கத்துக்கு செல். எளிமையான உணவு எடுத்துக் கொள். இவை நம் மனதை நல்ல நிலையில் வைக்க உதவும். இதற்குப் பின்னும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால், அவற்றை சாட்சியாகப் பார்.
கே: குருதேவா ! என்னிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் ? நான் அதை எப்படி அறிவேன்?
குருதேவர்: அதை விட்டு விடு. அன்பை அளக்க முடியாது. ஏனென்றால் அன்பு அளவிட முடியாதது. அன்புக்கு எல்லை கிடையாது. ஆனால் அறிவதற்கு எல்லை உண்டு. சிந்தித்துப் பார்!
கே: குருதேவா ! பின்னால் வருத்தப்படாமல், நான் நல்ல நேரத்தில் நல்ல காரியத்தை எப்படி செய்வேன் ?
குருதேவர்: அதிகமாக யோசிக்காதே! ஏதாவது கெடுதல் நேர்ந்தாலும் பரவாயில்லை. அதற்காக உன்னை கெட்ட காரியம் செய்யத் தூண்டவில்லை. அதே சமயம் அதிக அளவு சுய சிந்தனை மனதை குழப்பத்தில் ஆழ்த்த வல்லது. எனவே நடுநிலையில் செல். கவனமில்லாமல் காரியம் செய்யாதே. அதே சமயம் அதிகமாக யோசனை செய்ய வேண்டாம்.
கே: குருதேவா! இன்று பதஞ்சலி யோக சூத்திரத்தில், உண்மையை பற்றி (ஆத்மாவைப் பற்றிய அறிவு) படித்தேன். அது பிறவியில் வருவதா அல்லது வளர்க்க வேண்டிய ஒன்றா ?
குருதேவர்: இரண்டுமே! அது பிறவியில் இருக்கிறது. அதை உணர்ந்து அதிகமாக்கி கொள்ள வேண்டும். அரிசி நெல்லுக்குள் இருப்பது போல உண்மை இருக்கிறது. ஆனால் அதை மூடியிருக்கும் உமியை நீக்கினால் தான் அரிசியைப் பார்க்க முடியும்.
கே: குருதேவா! சந்தேகத்தை போக்குவது எப்படி? சந்தேகப்படும் மனிதரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
குருதேவர்: இதற்கு ஒரு தீர்வும் கிடையாது. ஒருவர் சந்தேகப்படுபவர் என்று உனக்குத் தெரியும் போது, அவர் சொல்வதை நீயும் நம்பமாட்டாய். சந்தேகம் வாழ்வில் தேவை. ஆனால் உணவில் எவ்வளவு உப்பு இருக்கிறதோ, அந்த அளவு மட்டும் தான் சந்தேகம் இருக்க வேண்டும். அதை விட அதிகமானால் அது ஒரு நோயாக மாறிவிடும். அதை ஆங்கிலத்தில் “பாரநாய்” என்று சொல்வார்கள்.
சந்தேகம் சரியான அளவில் இருந்தால் ஒருவர் கவனத்தோடு நடக்க உதவும். கெட்ட சகவாசத்திலிருந்து தப்பிக்கலாம். எனவே உணவில் எவ்வளவு உப்பு தேவையோ, அந்த அளவு சந்தேகம் இருக்கலாம். அதை தவிர்க்க முடியாது. தேவைக்கு அதிகமாக சந்தேகம் வரும் போது ப்ராணயாமம்,தியானம் செய்வது உதவும்.