யோக சாதனைகளின் சக்தி

புதன்கிழமை 29 ஏப்ரல், 2015

வாஷிங்டன் டி.சி.  யூ.எஸ்.ஏ


(பின் வருவது யோக சாதனைகள் மற்றும் தியானம் மூலம் அமைதியை வளர்ப்பது என்ற உரையின் தொடர்ச்சி.)

கேள்வி - பதில்கள்

என் கேள்வி பதட்டத்தை பற்றியது. யோக சாதனைகள் மற்றும் தியானம் மூலம் கடந்தகால வாழ்க்கையிலிருந்து எப்படி விடுபடலாம்? வார்த்தைகள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. ஆனால் அதை எப்படி நடைமுறையில் கொண்டுவர முடியும்?

உன் கேள்விக்கு நீயே விடையளித்து விட்டாய் என்று நினைக்கிறேன். அது ஒரு கேள்வியாக இருக்க முடியாது. சில நிமிட தியானத்துக்குப் பின்பு உன்னால் ஓய்வாக இருக்க முடிகிறது. நீ ஓய்வாக இருக்கும் போது, உன் பிரச்சினைகளை சிறந்த வழியில் கையாள முடியும். துப்பாக்கி முனையில் உன்னை யாரும் பயமுறுத்தாத வரை இது முடியும். அப்படி யாராவது செய்யும் போது, ஒரு நிமிடம் இரு! நான் கண்களை மூடி தியானம் செய்து விட்டு வருகிறேன் என்று சொல்ல முடியாது. அது சாத்தியமில்லை. அதிர்ஷ்டவசமாக ஒரு தீவிரமான சங்கடத்தில் இல்லாதவரை, ஒருவரால் மூன்று உபாயங்களை மேற்கொள்ள முடியும்.

·         கடந்து வந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார். இப்படிப்பட்ட பல சூழ்நிலைகளை நீ பார்த்திருப்பாய். இது முதல் தடவையல்ல. மன அழுத்தத்துக்குள்ளான பல சந்தர்ப்பங்கள் உன் வாழ்க்கையில் இருந்திருக்கின்றன. அவைகளை கடந்து வந்திருக்கிறாய். நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். எப்படியோ இயற்கை உனக்கு உதவியாக இருந்திருக்கிறது. நீ இதை உணர்ந்தால்,உன் கண்ணோட்டம் மாறும். இந்தப்  பிரச்சினையை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வோம் என்று நினைப்பாய். எனவே உன்மீது நம்பிக்கை; அல்லது உனக்குளிருக்கும் ஆத்ம சக்தியின் மீது நம்பிக்கை; அல்லது இறைவன் மீது நம்பிக்கை; இவை உன் மனதை ஓய்வாக வைக்கும்.

·         தன்னம்பிக்கையை நாடுதல்; சுய நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது. மன அழுத்தம் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? தன்னம்பிக்கையின் பற்றாக்குறை; உன்னைச் சுற்றியிருப்பவர்கள் மேல் நம்பிக்கை குறைவாக இருப்பது; உன் திறமையின் மேல் நம்பிக்கை குறைவாக இருப்பது. இந்த மூன்றும் உனக்கு பதட்டத்தை ஏற்படுத்தும்.

·         தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் உன் பதட்டத்தை ஒழிக்கும். நீ ஒரு தொழில் நுட்பம் அறிந்தவனாக இருந்தும், இப்பயிற்சிகள் மேல் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், இப்பயிற்சிகள் உன் பதட்டத்தை, கவலையை ஒழிக்க வேலை செய்யும் என்பதைத் தெரிந்து கொள்.

என் உடல், மனம் மற்றும் ஆத்மாவை ஒருங்கிணைப்பது எப்படி?

உன் உடல், மனம் மற்றும் ஆத்மா ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நாம் அப்படித் தான் இருக்கிறோம். அதனால் தான் கேட்டுப் புரிந்து கொள்கிறோம். உடல் மனம் ஆத்மாவிடையே ஒருங்கிணைப்பு இல்லாதிருந்தால் நாம் (உயிரோடு) இருக்கவே முடியாது. உடல் மண்ணுக்குள் இருக்கும்.ஆத்மா எங்கேயோ, மனம் எங்கேயோ இருக்கும்.

மூன்றுமே ஒன்றாக இருக்கின்றன. அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தியானம் செய்யலாம்.ஒவ்வொரு ஆண்டிலும், நாலைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, இங்கு மேல் நிலை தியானம் மற்றும் மௌனப்பயிற்சிக்கு வந்து, இயற்கையோடு இணைந்து தியானம் செய்யவேண்டும் என்று னைவருக்கும் பரிந்துரைப்பேன். (சிபாரிசு செய்கிறேன்.) சரியான உணவு, போதிய தூக்கம், தினசரி ஒவ்வொரு வேளையும் முறையான தியானம் எல்லோருக்கும் அவசியம்.

பொதுவாக மேல் நிலை தியானம் மற்றும் மௌனப் பயிற்சி முகாம் 5 நாட்களுக்கு நடத்துகிறோம். அது உங்கள் பேட்டரிகளை ஒரு ஆண்டுகால தேவைக்கு ரீசார்ஜ் செய்து விடும். ஒரு ஆண்டு கழித்து, மீண்டும் இங்கு வந்து பயிற்சியில் சேர்ந்து பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், ஆண்டுக்கு நான்கு முறை இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
தினசரி வாழ்க்கையில் நாம் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் தியானம் செய்ய இயலாமலிருக்கும். எனவே மூன்று நான்கு மாதங்களுக்கொரு முறை மேல் நிலை தியானம் / மௌனப் பயிற்சிக்கு வருவது நல்லது.

ப்ரோசக் போன்ற மருந்துகளால் மனச்சிதைவைக் (டிப்ரஷன்) குணப்படுத்த இயலாது. மனச் சிதைவை குணப்படுத்த யோக சாதனைகளைச் செய்ய வேண்டுமென்று சொன்னீர்கள். மக்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, தற்கொலை எண்ணங்களோடு போராடும் போது, அவர்கள் எப்படி யோக சாதனையை நாடுவார்கள்? இதற்கு நீண்ட காலம் தேவையாக இருக்கலாம். உங்கள் தர்க்கம் எனக்குப் புரியவில்லை.

புது டில்லி எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தினராலும், (ஏ.ஐ.எம்.எஸ்) பெங்களூர் நிம்ஹன்ஸ் என்ற தேசிய மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் விஞ்ஞான நிறுவனத்தாலும் (என்.ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ்) நடத்தப்பட்ட சுதர்சன கிரியா சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப்பாருங்கள். இந் நிறுவனங்களில் நடத்திய ஆராய்ச்சிப்படி, சுதர்சன கிரியா மற்றும் தியானம் மூலம் மனச் சிதைவுக்குள்ளான நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள்

விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து கண்டறிந்த தரவுகளின் படி, இப்பயிற்சிகளை மருந்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். மன அழுத்தத்தால், மனச் சிதைவால் பாதிக்கப்பட்டு என்னிடம் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், 5 நாள் பயிற்சிக்குப் பின் குணமடைந்து திரும்பிப் போவதை நான் என் அனுபவத்தில் காண்கிறேன்.

கேள்வியின் தொடர்ச்சி: மருத்துவ ரீதியில் (கிளினிகல் டிப்ரஷன்) மனச் சிதைவடைந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

மனச்சிதைவு (டிப்ரஷன்) எப்போதும் மருத்துவ ரீதியில் குறிப்பிடப்படுகிறது. இது ஒருவரின் மனதில் உள்ளது.மன நோயால் வருந்தும் பலரை நிம்ஹன்ஸில் குணப்படுத்தியுள்ளார்கள். நிம்ஹன்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பெங்களூரில் உள்ள முதல் தரமான தேசிய மனநோய் மருத்துவ நிலையமாகும்.

சமீபத்தில் புதுடில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தினரால் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் 800 மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள். பல மருத்துவ வல்லுனர்கள், தாங்கள் நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சர்க்கரை நோய் (டயாபிடிஸ்), கொழுப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் (கொலஸ்ட்ரால்), இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல நரம்பு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் செய்வது நோயாளிகளின் நோயைக் கட்டுப்படுத்தி விரைவில் குணமடைய உதவி செய்வதாகச் சொல்லப்பட்டது. பல கட்டுரைகளின் முடிவுகள் இதை உறுதி செய்தன.

நான் ஒரு சாதாரண மனிதன். டாக்டர் அல்ல. (என்னிடம் கௌரவ டாக்டர் பட்டம் மட்டுமே இருக்கிறது). ஒரு மருத்துவர் போல பேச எனக்குத் தகுதி கிடையாது. இருந்தாலும், நானறிந்தவரை, தியானம் செய்வதால் உடலில் கார்டிஸான்களின் அளவு குறைகிறது. மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்கள் குறையும். உடலுக்குத் தேவையான ஆக்க பூர்வமான சக்தி அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் நீங்கி விடும்.

உங்களுக்குத் தெரியுமா? எனக்கு ஒவ்வொரு நாளும் 700 – 800 இ.மெயில் வருகின்றன. நம்முடைய பயிற்சிகளால் மக்கள் எப்படி குணமடைந்தார்கள் என்பதைத் தெரிவிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். மங்கோலியா, ஜப்பான், அர்ஜென்டினா மற்றும் உலக நாடுகள் அனைத்திலிமிருந்து இ-மெயில் வருகின்றன. இங்கு அமெரிக்காவிலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (மனதின் மீது தியானத்தின் தாக்கம் பற்றி) ஆராய்ச்சி நடத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. நார்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆஸ்லோ பல்கலைக் கழகத்திலுள்ள டாக்டர் ஃபரித் என்பவர் மரபணுக்களின் மேல் தியானத்தின் தாக்கத்தை பற்றி ஆராய்ந்து வருகிறார். அவர் ஆராய்ச்சியின்படி, தியானம் நம் மரபணுக்களில் (ஜெனீஸ்) மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சுவாராஸ்யமான தகவல். நீங்கள் விரும்பினால் மேல் விவரங்களுக்கு, டாக்டர் ஃபரீதை தொடர்பு கொள்ளலாம்.

நான் வாரத்தில் 3 முறை யோகப் பயிற்சிகள் செய்து வருகிறேன். வகுப்பில் சற்றுநேரம் தியானம் செய்கிறேன். தியானம் செய்யும் போது, மனதில் எண்ணங்கள் மேலும் மேலும் வருகின்றன. எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

பெரிய பிரச்சினை இது தான். எண்ணங்களை மனதிலிருந்து நீக்க விரும்புகிறோம். தியானத்தின் போது மனதில் எண்ணங்களிருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். தியானம் என்றால் மனதை ஒருமுகப்படுத்துவது என்று நினைக்கிறோம். துரதிஷ்டவசமாகப் தியானத்தின் போது மனதை ஒருமுகப்படுத்த  வேண்டுமென்று,  எதிர்மறை எண்ணங்களை மனதிலிருந்து நீக்க வேண்டும்; மனதில் ஆக்கபூர்வமான எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று சொல்லியிருப்பார்கள்.
இப்படி இல்லை. தியானம் ஒரு கலை. மனதை ஓய்வெடுக்கச் செய்ய ஒரு வழி. அதற்காக ஒரு முயற்சியும் தேவையில்லை. இங்கு வாழும் கலை ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். யாராவது ஒருவரிடம் பேசித் தெரிந்து கொள்ளுங்கள்.

யோகா மற்றும் தியானத்தின் மூலம் அமைதியினை உருவாக்குங்கள்

புதன்கிழமை - 29 ஏப்ரல் - 2015 

வாஷிங்க்டன் டிசி,  அமெரிக்க ஐக்கிய நாடுகள்


இன்றைய விவாததத்திற்கான தலைப்பு அமைதியையினை வளர்த்தல் என்னும் பரந்த தலைப்பு. அமைதி பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏன் அமைதி தேவை? அமைதி என்பது இயற்கையான நிலைமையா? குழந்தையினை " உனக்கு அமைதி வேண்டுமா அல்லது லாலிபாப் வேண்டுமா?” என்று கேட்டால் அது லாலிபாப் என்றே கூறும்.

இங்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்தைக் காண்கின்றேன். அவரைப் பற்றிய ஓர் கதை நினைவுக்கு வருகின்றது. லண்டனில் ஒரு பேராசிரியர் சுவாமி விவேகானந்தரை, "ஒரு அறிவு நிறைந்த நூலும் சிறிது பணமும் இருந்தால்  நீ எதை எடுத்துக் கொள்வாய்?" என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி," நான் பணத்தையே எடுத்து கொள்வேன்" என்று கூறினார். பேராசிரியர், அவரைக் கேலி செய்து, "நீ அறிவினை மதிப்பதில்லை,பணத்தையே எடுக்க விரும்புகிறாய். நானாக இருந்தால் அந்தப் புத்தகத்தையே எடுத்துக் கொள்வேன் என்று கூறினார். சுவாமி விவேகானந்தர்," ஐயா! யாரிடம் எது இல்லையோ அதையே எடுத்துக் கொள்வோம்"என்று பதிலிறுத்தார்.

யோகாவின் நிறுவனர், யோகாவின் நோக்கம் "ஹேயம் துக்கம் அனாகதம்"- துன்பம் வரும் முன்னரே அதைத் தடுத்து நிறுத்துவது என்று கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு அமைதியின் மீது மதிப்பில்லை. ஏன் தெரியுமா? ஏனெனில் அவர்களுக்கு அது நிறைந்திருக்கின்றது. ஒரு க்ஷணம் அழும் குழந்தை அடுத்த  நொடியிலேயே  கண்ணீர் சற்றும் காயாத நிலையிலேயே சிரிக்கும், அவர்களால் சிரிக்க முடியும். ஆனால் வளர்ந்த நாம், இந்த நெகிழ்வுத் தன்மையை இழந்து விட்டோம். யோகா இந்த நெகிழ்வுத் தன்மையினை நமது உடலில் மட்டுமின்றி மனதிலும் எடுத்து வரும். துரதிர்ஷ்டவசமாக இன்று யோகா ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சியாக கருதப்படுகின்றது. அவ்வாறில்லை. யோகாவினை தோற்றுவித்தவர் அதன் நோக்கத்தை, ஹேயம் துக்கம் அனாகதம் என்று கூறுகின்றார் அதாவது  துன்பம் வருவதற்கு முன்னரே அதனைத் தடுத்து நிறுத்துவது. உடல் நோய்கள் அவற்றில் ஒன்று ஆகும். ஆகவே யோகப் பயிற்சியினை இடைவிடாது செய்தால் மருத்துவரை நாடுவதைத் தவிர்க்கலாம்..
மற்றொரு அம்சம் செயல்திறன். 

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், யோகாஹ் கர்மாசு கௌஷலம் என்று கூறுகின்றார். செயல் திறன், தொடர்புத் திறன், அதாவது மனதோடு மனம்,ஆத்மாவுடன் ஆத்மா தொடர்பு கொள்ள முடியும். வாயால் பேசுவதை விட நமது இருப்பின் மூலம் மேம்பட்ட தொடர்பு நிலை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி யோசித்திருக்கின்றீர்களா? நாம் அனைவருமே அதனை அனுபவித்திருப்போம் என்று நான் உறுதியாக எண்ணுகின்றேன். சரியா? ஒருவர் அன்பினைப் பற்றி இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டே இருக்கலாம், ஆனால் ஒரு சிறிய குழந்தை அதனை தன்னுடைய ஒரு பார்வையினாலேயே தெரிவித்து விடும். அல்லது ஒரு நாய் உங்களை சுற்றி ஓடி அன்பினைத் தெரிவித்து விடும். யோகா என்பது தொடர்புத் திறன், மக்களுடன் உறவினைப் பிணைத்துக் கொள்ளும் திறன்.

ஒரு வேளை சதாம் ஹுசைனுக்கு, ஜார்ஜ் புஷுடனும் புஷ்ஷிற்கு சதாம் ஹுசைனுடனும் தொடர்புத் திறன் சிறப்பாக இருந்திருந்தால் இன்று உலகம் மேம்பட்ட நிலையில் இருந்திருக்கும். தன்னிடம் பெருமளவு அழிக்கும் போர்க்கருவிகள் இல்லை என்பதை சரியான முறையில் தெளிவு படுத்தியிருந்தால் நிகழ்வுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மோசமான நிலையில் இன்று இருக்கின்றோம். நீங்கள் நான் கூறுவதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவலாம், ஆனால் தொடர்பு நிலை அறுபடுவதாலேயே போர் துவங்குகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சொற்களால் சமாதானப்படுத்தி நம்ப வைக்க முடியாத போது போர்க் கருவிகளை எடுக்கின்றோம். அவை பயனற்றுப் போகும் போது மீண்டும் பேச முயல்கின்றோம்.அதுவும் பயன் தருவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்த சுழற்சியிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றோம். இந்த ரோலர் கோஸ்டர்  பல்வேறு மோதல்களுக்கு வழி வகுக்கின்றது. இவற்றின் விளைவாக இன்று உலகில் அதிக அளவில் துப்பாக்கிக் கடைகள் உள்ளன, அதிக பயம் மற்றும் நம்பிக்கையின்மை எங்கும் காணப் படுகின்றன.

மன அழுத்தத்திற்கு யோகாவே மருந்து ப்ரோசெக் மாத்திரைகள் அல்ல. ப்ரோசெக் மாத்திரை தார்க்காலிக  நிவாரணம் அளிக்கலாம், ஆனால் நாளடைவில் பயன் தருவதை  நிறுத்தி விடும்.

நமது குழந்தைகளுக்கு அந்த நிலை ஏற்படுவதை நிச்சயம் நாம் விரும்ப மாட்டோம் அல்லவா? குழந்தைகளுக்கு மேம்பட்ட சூழலையும் உலகையும் அளிக்க விரும்பும் இங்குள்ள ஆண்களும் பெண்களும் நான் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான இடம் தேவை. இதை அடையும் வழி, அனைவரையும் ஒன்று திரட்டுவதுதான். பல்வேறு மனங்கள், பண்பாடுகள், சமயங்கள், நாகரீகங்கள் ஒன்றிணைய வேண்டும். அனைத்து வயதினர் அனைத்துத் தலைமுறையினர் ஒன்றிணைய வேண்டும். இது மிகவும் முக்கியமானது ஆகும். உலகெங்கும் ஒரு பெரிய தலைமுறை இடைவெளியினை காண்கின்றோம்.தந்தையும் மகனும் ஒத்துப் போவதில்லை. தாய்க்கும் மகளுக்குமிடையே புரிதல் இல்லை. அதனால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. குடும்ப பண்புகள் சரியாக இருந்தால், மன அழுத்தம் இத்தனை பெரிய பிரச்சினையாக ஆகியிருக்காது. உலக சுகாதார நிறுவனம் வரும் பத்தாண்டுகளில் மன அழுத்தம் உயிர்க் கொல்லிகளில் ஒன்றாக விளங்கும் என்று கூறியிருக்கின்றது. ஐரோப்பாவில் 40 விழுக்காடு மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

மகரிஷி பதஞ்சலி "ஹேயம் துக்கம் அனாகதம்" என்று கூறுவது போன்று துக்கம் உங்கள் வீட்டு வாயிலில் வரும்போதே அதைத் தடுத்து நிறுத்துங்கள். அதுவே யோகா, அதுவே தியானம், ப்ராணாயாமத்தின்  நோக்கமும் அதுவேயாகும். இவற்றின் நல்ல பயனை நாங்கள் 152 நாடுகளில் கண்டறிந்திருக்கின்றோம். இந்த நாட்டிலும் அனேகமாக மக்கள் சாதாரண நிலைக்குத் திரும்ப உதவியிருக்கின்றது.

செப்டம்பர் 11 நிகழ்விற்கு பின்னர் நாங்கள் யோகா, ப்ராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை தீயணைப்பு வீரர்களுக்கும் காவலர்களுக்கும் கற்றுக் கொடுக்கத் துவங்கினோம். ஓர் சிறிய மையத்தினைத் துவக்கினோம், இன்று அது பெரிதாக வளர்ந்து பல மக்கள் தினந்தோறும் வந்து பயன் பெறுகின்றனர்.வீட்டிற்கு நல்வரவு என்னும் குழுவினைத் துவக்கினோம். அது இராக், ஆப்கன் வியட்நாம் போர்களில் போரிடுபவர்களுக்காகத் துவங்கப்பட்டது. அவர்கள் இந்த மூச்சுப் பயிற்சி, தியானம் சில ஆசனங்கள் ஆகியவற்றைக் கற்று அவர்களது வாழ்வே முற்றிலும் மாறி விட்டது. பெரும் மாற்றம் தோன்றியது. அவர்களில் சிலரை நான்  சில செனட் உறுப்பினர்களுடன் நாளை சந்திக்கப் போகின்றேன்.

நான் ஓர் முக்கியமான கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எதியோப்பியா ஒரு ஜனநாயகக் குடியரசாக மாறிய போது மக்களுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியவை பற்றிக்  கற்பிக்க வேண்டியிருந்தது. அறியாமை நிறைந்த அவர்களுக்கு இவை எதுவும் பற்றித் தெரியவில்லை. எதிர்க் கட்சி ஆளும்கட்சியை ஆதரித்தும், ஆளும் கட்சியினர் தங்களுக்குள்ளேயே எதிர்த்துக் கொண்டும் இருந்தனர். ஜனநாயகத்தின் கோட்பாடுகள் பற்றி எதுவும் தெரியாததால் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் அவர்களுக்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பற்றிக் கற்பித்தனர். அதனால் வேறொரு பிரச்சினை தோன்றியது. கட்சிகள் இரண்டும் மிகுந்த பகைமைக்கு ஆளாகி ஒருவரையொருவர் சந்திக்கக் கூட விருப்பமில்லாத அளவுக்கு வெறுக்கத் துவங்கினர். அப்போது அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் ஒன்றிணைந்து இந்திய தூதரகத்தின் உதவியுடன் ஓர் வாழும்கலை பட்டறைக்கு ஏற்பாடு செய்தன. இந்திய தூதுவரின் மனைவி ஓர் வாழும்கலை ஆசிரியர். அவர் வேறு சில ஆசிரியர்களுடன் சேர்ந்து வாழும்கலைப் பயிற்சியினை அளித்தார்.

நான் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கு வாழும்கலை என்று பெயரிட்டேன், ஏனெனில் அப்போதெல்லாம் யோகா என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.இந்தப் பயிற்சிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நல்லிணைப்பு ஏற்பட்டது. அவர்கள் என்னை அங்கு  பேசவும் அழைத்தார்கள். மக்களின் மனங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஊழல் மிகுந்தவர்கள் கருணை மிக்கவர்களாக மாறினார்கள். தங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.எங்கு சார்பின்மை ஏற்படுகின்றதோ  அங்குதான் ஊழல் என்பதே துவங்கும். யோகா அனைவரிடமும் ஓர் நல்ல இணைப்பினையும் சார்புடைமையையும் தோற்றுவிக்கின்றது.

ஆனந்தத்திற்கு அர்ப்பணிப்பு

சனிக்கிழமை 25 ஏப்ரல், 2015

பாரிஸ் பிரான்ஸ்(உணர்ச்சிகளை ஆரோக்கியமாக சமாளிக்கும் விதம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

ஒருவர் எவ்வாறு உறவுகளில் நல்லிணக்கத்தை பராமரிப்பது?

அதைப் பற்றிப் பேச நான் தகுதி பெற்றவன் அல்ல. ஆயினும் உலகெங்கும் பல தம்பதிகளை கவனித்திருக்கின்றேன். அதனால் சில கருத்துக்களைக் கூற முடியும். மூன்று கருத்துக்களை கூறுகிறேன். ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று .இருவருக்கும் சேர்த்து ஒன்று..

முதலில் பெண்களுக்கு. ஒரு ஆணின் ‘தான்‘  என்னும் அகந்தையில் குறுக்கிடாதீர்கள். உலகமே உங்கள் துணைவரை முட்டாள் என்று கூறினாலும் நீங்கள் அவ்வாறு கூறக்கூடாது. தன்னுடைய தகுதியினை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியத்தை அவருக்கு ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் அவரிடம்,"இந்த உலகிற்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் அறிவாளி. புத்தியினை பயன்படுத்தாமல் இருப்பதால் நீங்கள் புத்தியற்றவர் என்று கூற முடியாது" என்றே கூறுங்கள். அவருடைய அகந்தையை தூண்டி, தன்னம்பிக்கையினை உயர்த்துங்கள். ஒரு மனிதன் வெளி உலகில் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் அமைதியினையும் ஓய்வினையும் எதிர் நோக்கியே வருவார். அங்கேயும் அவர் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிலையினை நீங்கள் ஏற்படுத்தக் கூடாது. அவரது "தான்" என்னும் தன்மையினை நீங்கள் தூண்டி  விட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு எந்த இடையூறும் இல்லை.

இனி ஆண்களுக்கு ஓர் அறிவுரை. ஒரு பெண்ணின் உணர்ச்சிகளுக்குள் ஊடுரவக் கூடாது. அவள் உங்களிடம் தன்னுடைய சகோதரன், சகோதரி, தந்தை, மற்றும்  தாய் பற்றிப் புகார் கூறலாம், ஆனால் நீங்கள் குறை கூறினால் அது சரியாக இருக்காது. இவ்வாறு தான் இந்தியா அமெரிக்கா இங்கு பிரான்சில் கூட நிகழ்கின்றது. சரியா? பெண்ணிற்கு எந்த உணர்வுகள் முக்கியமானவையோ அவற்றைப் பேணி வளர்க்க வேண்டும்.

இரு தரப்பினருக்கும் ஓர் அறிவுரை. உங்கள் மீது வைத்துள்ள அன்பினை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கேட்காதீர்கள். நீண்ட நாட்களாக தம்பதியாக வாழும்போது அன்பின் வெளிப்பாடு குறைந்தார்ப்போன்று தோன்றும். மீண்டும் "என்னை நேசிக்கிறாயா" என்று கேட்காதீர்கள். அல்லது இப்போதெல்லாம் நீ என்னை நேசிப்பதே இல்லை என்றும் குறை கூறாதீர்கள். உங்களுடைய அன்பினை சந்தேகித்தால் அதை நிரூபிப்பது உங்களுக்குப் பெரும் சுமையாகி விடும் அல்லவா? அது போன்றே  பிறர் தங்களுடைய அன்பினை உங்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். நீ என்னை விரும்பவில்லை, நீ இதை செய்யவில்லை என்றெல்லாம் குறை கூறுவதற்குப் பதிலாக ஏன் என்னை இந்த அளவு விரும்புகிறாய் என்று கேட்கத் துவங்குங்கள். குறை கூறுவதை நிறுத்துங்கள்.

எந்த உறவிலும் புகார் கூறிக் கொண்டே இருந்தால், அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அது ஆற்றலைக்  குறைக்கும், உங்களுடைய பணி ஆற்றலை அதிகப்படுத்துவதே ஆகும். நம்முடைய மனதின் மீது நமக்கு அதிகாரம் இருக்கட்டும். "என்னுடைய மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு. வேறு யாரும் இல்லை. .நானே ஓட்டுனர் இருக்கையில் உள்ளேன். என்னை சோர்வடையச் செய்ய  ஆயிரக்கணக்கான காரணங்கள் இருந்தாலும் "என்னைச் சுற்றியிருக்கும் இந்த உலகம் என்னை உயிருடன் புதைக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் என்னும் ஒரே கோட்பாட்டுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். இதுதான் ஆன்மா  இதுவே ஆன்மீகம். இதை அடைய நான் உங்களுக்குத் துணையிருக்கின்றேன். குதித்தோடும் ஆனந்தம் மற்றும் உற்சாகம் உங்களுக்கு உயர்ந்தெழ நான் என்னை அர்ப்பணிக்கின்றேன்.

நம்மிடம் பல பயிற்சிகள் உள்ளன. சிறிது நேரம் ஒன்றாக செலவழிக்கலாம். நிச்சயம் அனைவரும் விரும்பும் வகையில்  நீங்கள் அழகான உறுதியான ஒருவராக மலர்ந்தெழுவீர்கள் என்று உறுதியாக எண்ணுகின்றேன். 

கணவரின் நான் என்னும் அகந்தைக்குள் நுழையக் கூடாது என்று கூறினீர்கள். ஆனால் நான் என்னும் அகந்தை அனைத்துத் துன்பங்களின் மூல காரணம் அல்லவா?ஆன்மீக வழிக்குப் புறம்பானது அல்லவா?

இல்லை. ஒருவர் தன்னுடைய ‘தான்’ என்னும் அகந்தையை அகற்ற, தானே உழைக்க வேண்டும், பிறர் அல்ல. உங்களுடைய அகந்தை தான் உங்கள் கவலை என்றால் நீங்கள் தான் அதை அகற்ற  உழைக்க வேண்டும். உங்கள் மனைவி அல்ல. வேறொருவர் உங்கள் அகந்தையை அகற்ற முற்பட்டால் அது மேலும் மோசமாகி விடும். ‘தான்’ என்னும் அகந்தைக்கு ஆன்மீகத்தில் பல விளக்கங்கள் உள்ளன. ‘தான்’ என்பது ஓர் அடையாளம். அது குறிப்பிட்ட அடையாளத்திலிருந்து ஒரு பெரிய அளவிற்கு விரிவடையும்போது, அது மிகவும் நல்லதே. அப்போது ' தான் ' என்பது தெளிவாக வெளிப்படையாகத் தெரியும். வேறொருவர் உங்கள் 'தான்' என்னும் அகந்தையினை அடக்க முற்பட்டால் அது மன அழுத்தத்தையும் வேதனையையுமே உருவாக்கும். “ஞானம்  தேடுபவருக்கு ஞானச் செய்தி” மற்றும் “மௌனம் ஒரு கொண்டாட்டம்” என்னும் நூல்களை நீங்கள் படிக்க வேண்டும். அவற்றில் நான் இருப்பின் ஏழு நிலைகளைப் பற்றி விவரித்திருக்கின்றேன். ‘தான்’ எனும் அகந்தைக்கும் பல விளக்கங்கள் அவற்றில் உள்ளன. இங்கு நான் வேறொரு சூழலில் அதைப் பற்றிப் பேசியிருக்கின்றேன்.

போர் நிகழும் உலகில் நாம் என்ன செய்யக் கூடும்?

இந்த இக்கட்டான சூழ்நிலை எனக்குப் புரிகின்றது. எனக்கும் அதே நிலை தான். போர் நிறைந்த உலகில் நாம் செய்யக் கூடியது என்ன நானும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். போருக்கு இறையானவர்களுக்கு உதவ பாரிசுக்குள் 3 மில்லியன் மக்கள் வந்திருக்கின்றனர். 1,80,000 முதல் 2,00,000 வரையில் மக்கள் மும்பையில் அவர்களுக்காகத் தியானம் செய்திருக்கின்றனர்.
தீவிரவாதத்தினை அகற்ற மக்களின் மனதில் கவனம் செலுத்த வேண்டும் சுவர்க்கத்தின் திறவுகோல் தங்களிடமே உள்ளது ,மற்றவர்கள் அனைவரும் நரகத்திற்கே செல்வர் என்றெண்ணிக் கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் நரகத்தைனையே உருவாக்குகின்றனர். இவர்கள் தவறாக வழி நடத்தப் பட்டவர்கள். அறியாமையில் இருப்பவர்கள். ஆன்மீக அனுபவத்தினை அடைய சற்றும் வாய்ப்பில்லாதவர்கள்.

எமது வலைத்தளத்திற்கு சென்று பார்த்தால்,  மூச்சுப் பயிற்சி  மற்றும் தியானம் செய்து பல தீவிரவாதிகள் முற்றிலும் மாற்றம் அடைந்துவிட்டதை காண்பீர்கள். அவர்களது கருத்துக்களை அவர்களது வாயிலாகவே கேட்பீர்கள். இந்தியாவில் சுமார் 1000 தீவிரவாதிகள் தங்களது போர்க் கருவிகளை துறந்து விட்டனர். இந்தத் துறையில் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இது பரந்த பரப்பில் உள்ள பிரச்சினையாகையால் இன்னும் அதிக மக்களும் பொருட்களும் அதிக ஆசிரியர்களும் தேவைப் படுகின்றனர். இன்னும் அதிகமான உதவிக் கரங்கள் இருந்தால், நிச்சயம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நம்மை சுற்றிப் பரப்ப முடியும். எனக்கு எதுவும் வேண்டாம். ஏனெனில் என்னிடம் எல்லாமே இருக்கின்றது. ஆனந்தம் அமைதி ஆகியவற்றைத் தரவே விரும்புகின்றேன். இது போன்று நிறையப் பேர் உள்ளதாகவே நான் கருதுகின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், விழித்தெழுந்து நமது பணியினைச் செய்ய வேண்டும்.

குழந்தைகளாக இருந்த போது அதிகத் திறமைகள் பெற்றிருந்த நாம் ஏன், எவ்வாறு அவற்றை இழந்தோம் ?

ஏன் எப்படி என்றெல்லாம் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதை விட எவ்வாறு அவற்றை எவ்வாறு கண்டெடுப்பது என்று யோசியுங்கள் ஏன் இழந்தோம் என்பதற்கு பல கோட்பாடுகள் மற்றும் சூத்திரங்கள்  இருக்கலாம், அவற்றால் பயன் எதுவும் இல்லை. ஒரு குழந்தை ஒரு நாளுக்கு நானூறு தடவைகள் புன்முறுவல் பூக்கின்றது. மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு செல்லும் போது பதினேழு தடவைகள் மட்டுமே புன்முறுவல் தோன்றுகிறது. அது ஏனெனில் நாம் தன்னை பற்றி, தனது மனதைப் பற்றி அல்லது வாழ்க்கையைப் பற்றி எதுவும் நாம் கற்றுத் தருவதில்லை.

நான் எவ்வாறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது?

மூச்சின் மூலம். மூச்சிற்கு சூழல், உடல், உணர்ச்சிகள் அனைத்துடனும் தொடர்பு இருக்கின்றது. சில மூச்சுப் பயிற்சிகளை, அதாவது ப்ராணாயாமா க்ரியா இவற்றைக் கற்றுக் கொண்டால், அவை உங்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதவும்.

தாங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது பற்றிப் பேசினீர்கள். அவற்றுடனேயே வாழ்வது மேம்பட்டதல்லவா?

இல்லை. உணர்ச்சிகள் உங்களைக் கட்டுப்படுத்தினால் குழப்பமே ஏற்படும். உணர்ச்சிகளை நீங்கள் வெளிப்படுத்தலாம்.அவற்றை அடக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒன்று உணர்ச்சிகளை அடக்குவது மற்றொன்று உணர்ச்சிகளுக்கு இரையாவது. உலகில் பெரும்பான்மையான குற்றங்கள்  மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளுக்கு இரையாவதாலேயே ஏற்படுகின்றன.

உணர்ச்சிகளை சமாளிக்க ஆரோக்கியமான வழி

சனிக்கிழமை, ஏப்ரல்-25-2015

பாரிஸ், பிரான்ஸ்

Bonjour Comment ca ya? (ஹலோ, எப்படி இருக்கீங்க?) அருமை! உங்களுடன் இருப்பது அவ்வளவு அருமையாக இருக்கிறது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு இங்கு வருகிறேன்;பல பழைய முகங்கள், இன்னும் அதே புன்னகையுடன். அன்பான ஒன்றை பற்றி இன்று மாலை நாம் உரையாடலாம். உண்மையாகவே நமது இதயத்துக்கு நெருக்கமான ஒன்றை பற்றிப் பேச, முறைமைகள் தவிர்த்த, சகஜமான மனதிற்கு இதமான சூழல் வேண்டும்; முறைமையான சூழல் வசதியில்லை.


நம் தினசரி வாழ்க்கையில், அக்கறையான பல விசாரிப்புகளை பரிமாறிக் கொள்கிறோம். யாரவது உங்களுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வந்து தந்தால், நீங்கள்,“மிக்க நன்றி, merci beaucoup” என்று சொல்கிறீர்கள்.அதிலுள்ள merci beaucoup (மிக்க)க்கு எந்தப் பொருளும் இல்லை; இல்லையா? நாம் அப்படிச் சொல்லும் பெரும்பாலான முறைமை சொற்கள், எல்லாம் அல்ல, உதட்டிலிருந்து வருபவை, இதயத்திலிருந்து அல்ல. விமானத்திலிருந்து வெளி வரும்போது விமான பணிப்பெண், “இந்த நாள் நன்றாக இருக்கட்டும்!” என்கிறார்.அதை அவர்கள் பொருளுணர்ந்து சொல்வதில்லை. ஆனால் அதே வார்த்தைகளை உங்களுக்கு நெருக்கமானவர் சொன்னால் அதில் ஒரு அதிர்வு இருக்கிறது. “இந்த நாள் நன்றாக அமையட்டும்!” என்று உங்கள் பாட்டியோ அல்லது தாத்தாவோ சொல்வதற்கும் விமானப் பணிப்பெண் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

நாம் வார்த்தைகள் மூலமாக கொஞ்சம் தான் சொல்கிறோம், நம் அதிர்வுகள் மூலமாகவே அதிகம் சொல்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஏராளமாக அதிர்வுகள் கொண்டிருக்கிறோம். அதிர்வுகளே நம்மை நண்பராகவோ அல்லது எதிரியாகவோ ஆக்குகிறது, அதிர்வுகளே ஒரு விஷயத்தை நடத்தி முடிக்கிறது அல்லது முடிக்காமல் தடுக்கிறது! அனைவரும் நேர்மறையான அதிர்வுகள் கொள்ள விரும்புகிறோம், ஆனால் எப்படியோ மனதில் சிக்கிக்கொண்டோம்; கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டோம். பிறகு என்ன நடக்கிறது? நமது அதிர்வுகள் எதிர்மறையாய் ஆகி மனஅழுத்தம் ஏற்படுகிறது. கோபம், அன்பு போன்ற உணர்சசிகள் எல்லாம் அதிர்வுகள் மூலமே சொல்லப்படுகிறது.
நம் வாழ்கையை நாம் மேலோட்டமாக வாழ்ந்தால், விரைவில் அது நம்மை மன அழுத்தத்திற்கு கொண்டு சென்று விடும். இதுதான் இன்று நம் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 

ஐரோப்பாவில் 40% மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால், எப்படி நமது அதிர்வுகளை சுத்தம் செய்வது, எப்படி அதை நேர்மறையான அதிர்வுகளாக மாற்றுவது என்று வீட்டிலோ அல்லது பள்ளியிலோ சொல்லித் தருவதில்லை. நாம் மனிதர்கள், நமது வாழ்வின் பெரும்பகுதியை ஆள்வது உணர்ச்சிகளே. உணர்ச்சிகள் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. எப்படி நமது உணர்ச்சிகளை நேர்மறையாக்குவது அல்லது எது சரியான உணர்ச்சி தண்ணீரில் வரைந்த கோடு எவ்வளவு நேரம் இருக்கிறதோ அவ்வளவு நேரமே எதிர்மறை உணர்ச்சிகள் நம்மிடம் தங்க வேண்டும் என்று கூறும் ஒரு பழமொழி பண்டைய இந்தியாவில் உண்டு. நீங்கள் கோபப்படக் கூடாது, வருத்தம் கொள்ளக் கூடாது அல்லது பொறாமை கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை; பரவாயில்லை! நீங்கள் கத்தலாம், கோபப்படலாம்,வருத்தப்படலாம்; ஆனால் அது சில நிமிடங்களுக்கு மேல் தங்கக்கூடாது; அப்போது தான் அது ஆரோக்கியமானது. 

வருத்தப்பட்டு சோர்வடைவது சாதாரணமானது தான்,அதை மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தக்க வைத்துக் கொள்வது அசாதாரணம். நீங்கள் குழந்தைகளை போல இருக்க வேண்டும். குழந்தைகள் அழும்போது பார்த்திருக்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்,அழுகையிலிருந்து மீண்டு புன்னகைக்க. ஆனால்,பெரியவர்கள் அழுதால், மறுபடி புன்னகைக்க பல மாதங்கள் கூட ஆகலாம்; உண்மையில் நமக்கு எவ்வளவு காலம் அப்படி இருக்கிறோமென்று கூடத் தெரியாது. எப்படி முடியும்? 

குழந்தைகளை போல புன்னகையை திரும்பப் பெறுவது எப்படி? உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன்! உங்களை யாரவது பாராட்டும் போதோ அல்லது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதோ நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கவனித்ததுண்டா? உங்களில் ஏதோ ஒன்று விரிவடைகிறது, சரியா?  உங்களை யாராவது இகழும் போது எப்படி உணர்கிறீர்கள்? உங்களில் ஏதோ ஒன்று உடைகிறது. வெளியிலிருந்து வரும் தூண்டல்களுக்கு ஏற்ப உங்களுக்குள் விரிந்து சுருங்கும் தன்மையுள்ள அந்த ஒன்றுதான் பேருணர்வு . பேருணர்வு அல்லது மனம் விரிந்து சுருங்கும் திறனுள்ளது. இது உங்களுக்கு தெரிந்தால், இதைப் புரிந்துகொண்டு அனுபவித்திருந்தால், யாராலும் உங்களிடமிருந்து புன்னகையை பறிக்க முடியாது. இதை சுயத்தை அறிதல் என்று பெரிய வார்த்தைகளில் கூறுவார்கள்.ஆனால் நான் சொல்கிறேன், இது வெகு எளிது! மூச்சு நுட்பங்கள், 

தியானம் இவையனைத்தும் உங்கள் அதிர்வுகளை நேர்மறையாக்கும் நோக்கம் கொண்டவை.
குழந்தைகளின் பார்வை எப்படிப்பட்டது தெரியுமா?அவர்கள் உங்களைப் பார்க்கும்போது அவர்களின் மனம் நூறு சதவீதம் உங்கள் மீது இருக்கிறது. ஆனால் நீங்கள் யாரையாவது பார்க்கும் போது, உங்கள் மனம் வேறு எதையாவது நினைத்துக்கொண்டிருக்கிறது. நம்மிடம் உள்ள உயிர்ச்சக்தியை தூண்டும் போது, நாம் மறுபடி குழந்தைகளை போல ஆகிறோம்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு யோகி; ஒவ்வொரு குழந்தையும் எல்லா யோகாசனங்களையும் செய்கிறது. நாம் எல்லோரும் குழந்தைகளாக இருந்த போது, இதைச் செய்திருக்கிறோம். மூன்று மாதத்திலிருந்து மூன்று வயதுவரை ஒரு குழந்தையை நன்கு கவனித்தால் நமக்கு யோகா சொல்லித்தர ஆசிரியர் தேவையில்லை.அது அர்ஜெண்டினாவாக இருந்தாலும், மங்கோலியாவாக இருந்தாலும், ஜப்பானாக, சீனாவாக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தக் குழந்தையும் எல்லா யோகாசனங்களையும் செய்கிறது, சுவாசத்தை வித்தியாசமாக செய்கிறது.குழந்தை சுவாசிப்பதற்கும் வளர்ந்த மனிதர் சுவாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது;ஏனென்றால் குழந்தைக்கு மன அழுத்தம் இல்லை.

நமது அதிர்வுகளை எப்படி சுத்தம் செய்வது, மனதை எப்படி சுத்தம் செய்வது, எப்படி அமைதியை அடைவது எப்படி என்பதெல்லாம் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ யாரவது சொல்லித் தருகிறார்களா? இந்தக் கல்வி மிக்க அவசியம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அமேசான் காடுகளில்,ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வாழும் மக்கள் பற்களை சுத்தம் செய்வதில்லை. இதை அவர்களுக்கு யாரும் கற்றுத் தரவில்லை. இதனால் அவர்களில் பலருக்கு சில பற்களே இருக்கிறது. நம் எல்லோருக்கும் பற்களை சுத்தம் செய்ய சொல்லித் தந்திருக்கிறார்கள்; இது பற்களின் ஆரோக்கியம்; இது நமது கலாசாரம்.அதைப் போல மன ஆரோக்கியம் கற்க வேண்டும், அதாவது தியானம். நம் மனதிலிருந்து கோபம்,பேராசை,பொறாமை மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மனதிலிருந்து எப்படிக் களைவது என்பதை நம் மக்களுக்கு நாம் சொல்லித் தந்தாக வேண்டும். 

சுவாசப் பயிற்சியினால்,தியானத்தினால்,நம்மை நாமே உயிர்ப்போடும்,அன்போடும்,அக்கறையோடும், காருன்யத்தோடும், புத்தியோடும் வைத்துக்கொள்ள வேண்டும். தியானமும் ஆன்மீகப் பயிற்சிகளும் என்ன செய்கிறது?அதாவது புதியதை கண்டுபிடிக்கும் திறன், உள்ளுணர்வு, ஊக்கம் மற்றும் புத்திசாலித்தனம். சந்தேகத்தை பற்றி ஒரு விஷயம்;மனிதர்களாக நாம் எப்போது அனுமானம் செய்துகொண்டு சந்தேகப்படுகிறோம்? சந்தேகம் கொள்வது நல்லது தான். நான் இப்போது பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் கேட்கிறீர்கள்,ஆனால் உங்கள் மனதில், “இல்லை, இதை நான் ஏற்கமாட்டேன், அது எப்படி இப்படி?” அல்லது, “ஆம், இதை ஏற்கிறேன்.” உங்களுக்குள் ஒரு உரையாடல் நடக்கிறது, அதுவே புத்தி.

சந்தேகத்தின் இயல்பை அறிந்து கொள்ளவேண்டும். சந்தேகம் ஒரு நேர்மறையான விஷயத்தை பற்றி மட்டுமே வருகிறது; ஒருவரின் நேர்மையை சந்தேகப்படும் நீங்கள் அவரின் நேர்மையின்மையை சந்தேகிப்பதே இல்லை. இதை உணர்ந்திருக்கிறீர்களா? நேர்மையின்மையை சந்தேகிப்பதே இல்லை. யாராவது உங்களை, “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்,” என்று சொன்னால், நீங்கள் “உண்மையாகவா?”. ஆனால் யாராவது உங்களிடம், “நான் உன்னை வெறுக்கிறேன்”, என்று சொன்னால் நீங்கள், “உண்மையாகவா?” என்று கேட்பதில்லை. சந்தேகம் எப்போதும் நேர்மறையான ஒன்றைப் பற்றி மட்டுமே.

யாராவது உங்களிடம், “நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களா?”, என்று கேட்டால், நீங்கள் சற்று யோசித்து, “எனக்குத் தெரியவில்லை” என்றே கூறுகிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியை சந்தேகப் படுகிறீர்கள். யாராவது உங்களிடம், “நீங்கள் மனத்தாழ்ச்சி கொண்டிருக்கிறீர்களா?” என்றால், நீங்கள் நிச்சயம் உங்கள் மனத்தாழ்ச்சியை உறுதி செய்கிறீர்கள். ஏன் ஒரு மருத்துவரே வந்து உங்களிடம், “உங்களுக்கு மனத்தாழ்ச்சி ஏதுமில்லை”, என்று கூறினால், நீங்கள், “இல்லை, மருத்துவருக்கு என்ன தெரியும்,எனக்கு மனத்தாழ்ச்சி இருக்கிறது,” என்றே கூறுவீர்கள். நமது மகிழ்ச்சியை சந்தேகப்படும் நாம் நம் மனத்தாழ்சியை சந்தேகப்படுவதில்லை.

நம் வாழ்க்கையில் ஏதாவதொன்றில் நாம் சிக்கிவிட்டால், பொதுவாக ஒரு நிலைப்பாட்டில் சிக்கி விடுகிறோம்; புத்தி தான் சிக்கிகொள்கிறது, இதைத் தான் முன் அனுமானம் என்கிறார்கள். அதைப் போலவே, நமது ஞாபகமும் எதிர்மறை விஷயத்தையே பற்றி கொள்ள விழைகிறது. யாரவது நம்மைப் பற்றி பத்து பாராட்டுகள் தெரிவித்து விட்டு ஓரே ஒரு குறை கூறினாலும், நீங்கள் எதைப் பற்றிக் கொள்கிறீர்கள்? பத்து பாராட்டுகளையும் மறந்துவிட்டு ஒரே ஒரு எதிர்மறை விஷயத்தையே பிடித்துக்கொள்கிறோம். இதை நீங்கள் தலைகீழாக மாற்ற வேண்டும்; எதிர்மறை விஷயத்தை நாடுவதிலிருந்து நேர்மறை விஷயதிற்கு உங்கள் நாட்டத்தை தலைகீழாக மாற்றுவது யோகப் பயிற்சியும் தியானமும் தான்.

எனவே, எதிர்மறை விஷயத்தையே நமது ஞாபகம் தக்க வைத்துக் கொள்கிறது. குழந்தைகள் விஷயத்தில் அப்படி அல்ல; அவர்கள் நிகழ் கணத்தில் வாழ்கிறார்கள். நமது மனதை, நமது மூளையை நிகழ் காலத்தில் இருக்க வைக்கவேண்டும். அதிக படைப்புத்திறன் கொண்டவராகவும் மிக மகிழ்ச்சியானவராகவும் மாற முடியும். வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனம், தயக்கமில்லா புத்தி, கலவரமற்ற ஞாபகம் மற்றும் துயரில்லா ஆன்மா, இவையே ஒவ்வொரு தனி மனிதரின் பிறப்புரிமை. குருதேவ் ஏன் இந்தப் பக்கம் பார்க்கவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? (மாடிப்பகுதியில் அமர்ந்திருந்த அவையோரை நோக்கி) சரியா? எத்தனை பேர் அப்படி நினைத்தீர்கள்? பாருங்கள், எண்ண அதிர்வுகள் தெரிகிறது. நமது மனம் மிக அருமையான ஒரு கருவி. நாம் ஒவ்வொருவருடனும் தொடர்பிலுள்ளோம்; நாம் எல்லோரும் தொடர்பிலிருக்கிறோம்; நாம் அனைவரும் ஒரு உயிரின் பகுதி, ஒரு மனித மனம். இந்தச் சிறிய மனங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக்கும் ஒரு பெரிய மனம் இருக்கிறது; ஒரு பெரிய மனம், மிக வியப்பானது!

சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கிடையே நல்லிணக்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015,

பாரிஸ், பிரான்ஸ்(பூஜ்ய குருதேவ் சமயங்கள்  மற்றும்  கலாசாரங்களுக்கிடையே  நல்லிணக்கம் என்பதை பற்றி பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் 24 ஏப்ரல் அன்று உரையாற்றினார். அந்த உரை கீழே தரப்பட்டுள்ளது)

வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் முக்கியம் என்று நான் கருதுகின்றேன். கல்வி, கல்வி, மற்றும்  கல்வி. ஒருவரது வாழ்க்கையில் பெரும் பங்கினை வகிப்பது கல்வியே. கல்வி என்பது செய்திகளை சேகரிப்பது என்று எண்ணிக் குழப்பிக் கொள்ளக்கூடாது. என்னை பொருத்தவரையில், ஒரு மனிதரின் முழுமையான தனித்திறன் குண நலன்களை வளர்ப்பது கல்வியேயாகும். மாறுபட்ட உலகில் நாம் வாழ்கின்றோம். இறைவனுக்கு வேற்றுமைகளற்ற உலகம் வேண்டுமாயின் ஒரே ஒரு விதமான மீன், பூ, பழம் மற்றும் காய் இவையே இருந்திருக்கும். இந்தப் பிரபஞ்சம், உலகம் பல வகைகளை உடையது. இது ஒரு மலர்க் கொத்து.

இந்த அழகிய பிரபஞ்சத்தில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் நமக்கு அளிக்கும் செய்தி என்னவென்றால், நாம் பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த உலகில் வாழ்கிறோம், அந்த வேற்றுமைகளே வாழ்க்கையை அழகாக்குகின்றன என்பதேயாகும்.

எப்படியோ சகிப்புத்தன்மை என்னும் சொல்லை நான் விரும்புவதில்லை. ஏன் தெரியுமா? அதற்கு ஒரு எதிர்மறை தாத்பரியம் உள்ளது. சாதரணமாக உலகெங்கும் சமய நம்பிக்கைகள் பயிற்சிகளில் நாம் " சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்" என்று கூறுகின்றோம். இது ஒரு தவறான சொல் என்றே நான் எண்ணுகின்றேன். சகித்துக் கொள்வது என்பது உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை குறிப்பிடுவதாகும். இப்போது வேற்றுமைகளை கொண்டாடி, பாராட்டுவதற்கான நேரம் ஆகும், சகித்துக் கொள்வதற்கானது அல்ல. இதை நாம் சற்றுக் கூர்ந்து காணவேண்டும். பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு வேற்றுமைகளை பாராட்டி, அனுபவித்துக், கொண்டாட வேண்டும்.

நான் மக்களிடம் "நாம் உலகின் பல பகுதிகளிலுள்ள உணவு வகைகளை ஏற்கின்றோம், உலகின் பல்வேறு இசையினை ஏற்கின்றோம், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழில்நுட்பத்தினை ஏற்கின்றோம், எங்கிருந்து இந்த தொழில்நுட்பம் வந்தது என்று நாம் கேட்பதில்லை. ஆனால் ஞானம் என்று வரும் போது ஏதோ ஒரு விதத்தில் மறுப்பு தோன்றுகிறது. ஒரு சுவர் எழுப்பி, இது யூதர் ,இது ஹிந்து, இது புத்தசமயம் என்று கூறுகின்றோம். ஒரு தவறான அபிப்பிராயத்துடன் விலகி நிற்கின்றோம். இந்த திரிபு தொடரும் வரையில், உலகம் அமைதியான இடமாக இருக்காது. உலகின் ஒரு சிறிய பகுதியில் அவர்களிடம் மட்டுமே ஸ்வர்க்கத்தின் திறவுகோல் உள்ளது, பிறர் அனைவரும் நரகத்திற்கே செல்வர் என்று எண்ணினால் அவர்கள் இவ்வுலகில் உள்ள மற்ற அனைவருக்கும் நரகத்தையே உருவாக்குகின்றனர்.
  
எனவே நம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. நமது மக்களுக்கு பல்வேறு வகைக் கலாசார மற்றும் பல்வேறு வகை சமய கல்வியினை அளிக்க வேண்டும். தற்கால இணைய  தொழில் நுட்பத்தால் இது சாத்தியமாகும்.ஆயினும் மிகப் பெரிய அளவு மக்கள் தாங்கள் மட்டுமே சுவர்க்கத்தின் திறவுகோலை கொண்டுள்ளதாக கருதி,அறியாமையுடன் இருக்கின்றனர். நாம் இரண்டு முக்கிய பிரச்சனைகளை உலகில் பிரச்சினையாக வகைப்படுத்த முடியும்: 

தவறான அபிப்பிராயம்

இன்றைய உலகில், இனம்,பாலினம், சமயம் வகுப்பு அனைத்திலும் தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. செல்வந்தர்கள் எப்போதுமே அடக்குமுறை செய்பவர்கள், பணக்கார நாடுகள் பிற நாடுகளை அடக்கியாளுகின்றன என்றெல்லாம் சமுதாயத்தின் சில பகுதியினர், கருதுகின்றனர். இந்தத் தவறான கருத்துக்கள்  விலக்கப்பட வேண்டும். அப்போது தான் நாம் ஓரளவு கல்வி, பண்பு நாகரீகம் உள்ள நிலையினை அடைகிறோம் என்று கூறுவேன்.

மன அழுத்தம்

மனித வாழ்வின் மற்றொரு அம்சம் மன அழுத்தம். பரபரப்பான சமுதாயத்தில், நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. உண்மையில் மிகக் குறைந்த நேரத்தில் குறைந்த ஆற்றலுடன் செய்ய வேண்டியது மிக அதிகமாகவே உள்ளது. இதுதான் மன அழுத்தம் என்பதன் விளக்கம். அழுத்தத்தின் சூத்திரம்: மிக அதிகப் பணி,மிகக் குறைந்த நேரம் தேவையான அளவு ஆற்றல் இன்மை. அனைவருக்குமே 24 மணி நேரம் உள்ளது. அது எழுத்தராயினும், பிரதமராயினும் அனைவருக்கும் 24 மணி நேரமே ஒரு நாளில் உள்ளது. இதை மாற்ற முடியாது. உங்களுடைய பணிகள் என்று வரும்போது, பெரும்பாலானோருக்கு செய்ய வேண்டியவற்றை குறைத்துக் கொள்ள முடியாது. எனவே ஒரே ஒரு வழிதான் உள்ளது, அது உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள வேண்டியது. 

உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள, தொன்று தொட்டே ஏறக்குறைய பாதுகாக்கப்பட்ட ரகசியங்களாக சில பயிற்சிமுறை நுட்பங்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளன. இந்த நுட்பங்கள் பிரபுக்கள், இளவரசர்கள் மற்றும் உயர்தர மக்களுக்கே அளிக்கப்பட்டு அவர்கள் தம் பங்கில் வளர்ச்சியினை ஏற்படுத்தினர். ஆனால் இப்போது இந்த தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகள், அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றோம். 

வீட்டிலோ பள்ளியிலோ எவ்வாறு அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்று யாரும் கற்பிக்க வில்லை. உணர்ச்சிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று யாரும் கற்பிப்பதில்லை.
மனக்கஷ்டம் சாதாரணமானது தான். ஆனால் அதை நாள் முழுவதும் வாரம் முழுவதும் சில சமயங்களில் மாதக்கணக்கில் எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல. உங்களுடைய உடைகள் அழுக்காகி விட்டால், அழுக்கை எவ்வாறு நீக்குவது என்று உங்களுக்குத் தெரியாமல் அந்த அழுக்கு ஆடையுடனேயே சுற்றிக் கொண்டிருப்பது போல் ஆகும்.ஆகவே மக்களுக்கு அழுத்தத்திலிருந்து வெளி வரக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதை மன சுகாதாரம் என்று கூறுவேன். பல் சுகாதாரம் பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோம் ஆனால் யார் மீதும் வெறுப்பு அல்லது எதிர்மறை உணர்வு கொள்ளக்கூடாது போன்ற மன சுகாதாரம் பற்றிக் கற்றுக் கொடுப்பதில்லை.

மகாத்மா காந்தி பதினோரு உறுதி மொழிகள் எடுத்துக்கொண்டார். தனது ஆஸ்ரமவாசிகளுக்கும் அளித்தார். அவற்றில் ஒன்று கோபத்தை கட்டுப்படுத்தி, கருணையுடன் இருப்பது. வாழ்க்கையில் வன்முறையின்மையை வலியுறுத்த வேண்டும். அல்லவா? நமது உலகம் மேலும் மேலும் வன்முறைகளுடன் இருப்பதால், நாமும் அந்த வன்முறைக்கு தற்காப்பு வலிமை பெற்று விடுகிறோம். என்னுடைய இளம்வயதில், வகுப்பில் யாராவது ஒரு மாணவன் திடீர் வெறி கொண்டால், நாங்கள் அனைவரும், இவனுக்கு என்ன ஆயிற்று? தன் சமநிலையினை இழந்து விட்டானே? "என்றே கூறுவோம்.

சமநிலையினை இழப்பது வெட்கத்திற்குரிய விஷயமாகவே இருந்தது. இன்று, ஆக்கிரமிப்பே பெருமைக்குரிய விஷயம் ஆகிறது, சமாதானமல்ல.மாற்ற வேண்டும்.கருணை, வன்முறையின்மை, ஆகியவையே பெருமைக்குரியனவாக வேண்டும்.ஆக்கிரமிப்பும் வன்முறையுமல்ல. அடுத்து, மூச்சும் உங்களுடைய அழுத்தத்தினைக் குறைக்கின்றது. சமுதாயத்தில் பதட்டம் ஏற்பட அழுத்தம் ஒரு காரணம் ஆகும். அது நமது தொடர்புகளைத் துண்டிக்கின்றது. நமது கருத்துக்கள் வெளிப்பாடு அனைத்தையும் பாதிக்கின்றது.

நமது சமுதாய செயல் தொடர்புகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படலாம்.
1. எவ்வாறு கண்டுணர வேண்டும்
2. எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்

நமது கண்டுணரும் மற்றும் வெளிப்படுத்தும் திறன்கள் நமது அழுத்த நிலைகளால் பாதிக்கப் படுகின்றன.

சமாதான நேரம்

வெள்ளிக்கிழமை 24-04-2014                      

பாரிஸ் - ஃப்ரான்ஸ்


(மதங்களுக்கிடையே மற்றும் கலாசாரங்களுக்கிடையே நல்லிணக்கம் என்ற கட்டுரையின் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

சக்தியின் மூலங்கள் நான்கு
·         உணவு: பண்டைய இந்தியாவில் யாராவது வேடிக்கையாக நடந்து கொண்டால், நம்மைப் பார்த்து “அவருக்கு என்ன உணவு கொடுத்தீர்கள்?” என்று மக்கள் கேட்பார்கள். அல்லது அந்த மனிதரைப் பார்த்து “ நீ ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” என்று கேட்பதற்கு பதிலாக “ நீ என்ன உணவு உண்டிருக்கிறாய்?” என்று கேட்பார்கள். ஒரு விதத்தில் இது உண்மை தான். உணவுப் பழக்கத்தை சரியாக்குவதால் நம் சக்தியின் முதல் மூலத்தை சரி செய்ய முடியும்.
·         தூக்கம் : விவேகமுள்ள ஒரு மனிதரை இரண்டு நாட்கள் தூங்க விடாமல் செய்தால், அவர் சாதாரணமாக நடந்து கொள்ள மாட்டார். அவருடைய நடத்தையில் கடுமையான மாற்றம் ஏற்படும். எனவே போதிய அளவு தூக்கமும், சரியான ஓய்வும் அவசியம்.
·         மூச்சு : மூச்சு நமது சக்தியின் மூன்றாவது மூலமாகும். தினமும் சில நிமிடங்கள் ப்ராணயாமம் மற்றும் யோக ஆசனங்கள் செய்தால்  உடலும் மனமும் சக்தி பெறும். மனநிலை மேம்படும்.
·         ஆனந்தமான மனநிலை : மனம் அழுத்தமில்லாமல் இருக்கும் போது, அமைதியாகவும் ஒருமுகப் பட்டும் இருக்கும். சில நிமிடங்கள் தியானம் செய்தால், மனதுக்கு ஆனந்தமும், ஆறுதலும் கிடைக்கும்.

மேற்சொன்ன நான்கும் நமது சக்தியின் மூலங்களாகும். மக்கள் உணவு மற்றும் தூக்கம் பற்றி ஓரளவு அறிந்திருப்பார்கள். அதைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார்கள். அடுத்த இரண்டு மூலங்களான மூச்சு மற்றும் ஆனந்தமான மனநிலை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எல்லா மக்களும் அதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவை நம் கல்வித் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

இப்போது நமக்கு மற்றொரு அம்சத்தை பற்றிய கவனம் தேவை. உலகில் மதங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகள் மற்றும் கலாசார வேறுபாடுகளை பற்றிய பேச்சு வார்த்தை நடத்தும் போது நான் சொல்வது இது தான். உலகில் தற்போது முக்கிய மதங்களின் கிளைகளை மட்டும் எடுத்துக் கொண்டால், 600 வகையான மத நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

நம் குழந்தைகள் இந்த மதங்களை பற்றி, கலாசாரங்களை பற்றி அறிவது அவசியம். இவை அனைத்தும் ஒரே தெய்வசக்தியின் பல்வேறு வெளிப்பாடுகள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டால், நாம் ஒற்றுமையாக வாழ்வதற்கு இந்த உலகம் சிறந்த இடமாகி விடும். நீங்கள் இதை ஒப்புக் கொள்கிறீர்களா ? சிலரை, சிலவற்றை நீக்குவதால் நாம் சிறந்த உலகை உருவாக்க முடியாது. எல்லோரையும் ஏற்றுக் கொள்வதால், எல்லா மக்களும் நம்மை சார்ந்தவர்கள் என்று நினைப்பதால் மட்டுமே நம்மால் ஒரு சிறந்த உலகை நிர்மாணிக்க முடியும். ஒரு முறை ஒரு கத்தோலிக்க பாதிரியாரிடமிருந்து ஒரு நல்ல கதை கேட்டேன். கடவுளுக்கு சில யோசனைகள் தேவைப்பட்டது. அயர்லாந்து நாட்டில் கலவரம் நடந்த போது அங்கு அமைதியை நிலை நாட்ட என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. எனவே அவர் ஒரு கத்தோலிக்க பாதிரியைப் பார்த்து “ நாம் இதற்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அந்தப் பாதிரி,“இது மிகவும் சுலபம். அயர்லாந்திலிருந்து ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களையும் வெளியேற்றி விடுங்கள்.” என்று சொன்னார். கடவுளுக்கு இது நல்ல யோசனையாக படவில்லை. எனவே அவர் ஒரு ப்ராட்டஸ்டண்ட் பாதிரையைப் பார்த்து “ நீ என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டார். அவர் “மிகவும் சுலபம். அயர்லாந்திலிருந்து எல்லா கத்தோலிக்க கிறிஸ்தவர்களையும் வெளியே அனுப்பி விடுங்கள்“ என்று சொன்னார்.

அப்போது கடவுள் ஒரு யூத ராபியைப் பார்த்துக் கேட்கலாம் என்று நினைத்தார். ஒரு யூத மதத் தலைவரிடம் சென்று “ இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்“ என்று கேட்டார். அதற்கு அந்த ராபி, “இரு இனத்தவர்களையும் அயர்லாந்திலிருந்து வெளியே அனுப்பி விடுங்கள். அங்கு அமைதி நிலவும்.” என்று சொன்னார். இதைக் கேட்டு கடவுள் மிகவும் வருத்தமுற்றார். “இப்போது என்ன செய்யலாம்” என்றார். நிச்சயமாக மக்களின் மனதில் நல்ல சிந்தனைகளை வரச் செய்து எல்லோரையும் ஒன்று சேர்த்தார்.

எனவே நீக்குவதை நிறுத்த வேண்டும். சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் மூட நம்பிக்கைகளை தவிர்த்து, எந்த மதமானாலும் அதற்கென்று ஒரு தனித்தன்மை, ஒரு அழகு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி பல்வேறு மதங்களை இணைந்து, பல் வேறு கலாசாரத்தினரை இணைத்து நல்ல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும், உலகின் பத்து மதக் கருத்துகளில் சிறிது தெரிந்து கொண்டால்,நாம் இப்படிப்பட்ட பல்வேறு வேற்றுமைகள் உள்ள உலகில் ஒற்றுமையாக வாழ்வது பற்றி அறிவார்கள். வேறுபாடுகள் இருந்த போதிலும், அம்மதங்களில் உள்ள நல்ல கருத்துகளை ஏற்று அவற்றை மதிப்பார்கள். மற்ற மதத்தினரிடம் அன்பு செலுத்துவார்கள். குழந்தைகளை இப்படி வளர்த்தால் தான் உலகில் தற்போது நிலவும் வன்முறைக்கு ஒரு முடிவு கட்ட முடியும். நீங்கள் இதை ஒப்புக் கொள்கிறீர்களா? இது என்னுடைய நீண்ட நாளைய கனவு.

ஐக்கிய நாடுகள் சபையின் UNESCO உலக மக்களனைவருக்கும் பல்வேறு மதங்களைப் பற்றிய கல்வி அறிவை அளிக்க முன் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

அப்படிச் செய்தால் எல்லா குழந்தைகளும் மற்ற மதங்களைப் பற்றிய அறிவை, மத வழக்கங்களை பற்றிய அறிவை பெற்று எல்லா மதங்களையும் பாராட்டிக் கொண்டாடுவார்கள். அதே போல் பல நாட்டவர்களை, பல மதத்தவர்களை ஒன்று கூட்டி இப்படிப்பட்ட நல்லிணக்க திருவிழாக்களை நடத்த வேண்டும். இந்தியாவில் “வசுதேவ குடும்பகம்“ என்ற பழமொழி உள்ளது. உலக மக்களனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது இதன் அர்த்தமாகும். நீ நல்ல கல்வி அறிவு பெற்று, உன் இதயம் பெரிதாக இருந்தால் உலகம் முழுதும் உன் குடும்பமாகிவிடும். தொழில்நுட்ப வளர்ச்சி இந்த உலகை ஒரு சிறிய கிராமம் போலாக்கி விட்டது. தூரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை. மனிதாபிமானம் மற்றும் மற்றவரை மதிக்கும் பண்பு முதலியவை மக்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் தான் இவ்வுலகம் ஒரே குடும்பமாக முடியும்.

கேள்வி பதில்கள்

இன்றைய மேம்பட்ட தொழில் நுட்ப கண்டு பிடிப்புகளால், பல வேறு உபகரணங்களால், நம் வாழ்க்கை வசதிகள் பெருகி நாம் திறம்படச் செயலாற்றுகிறோம். அதே சமயம் நாம் மிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறோம். இந்த நவீன உபகரணங்கள் நமக்கு உபயோகமாக இருந்தாலும், மன அழுத்தத்தை அதிகமாக்குகின்றன. நாம் எந்த நேரத்திலும் நம் இ-மெயில் பெட்டியைத் திறந்து பார்க்கிறோம். செய்தி பற்றி அறிய விரும்புகிறோம். இந்த மன அழுத்தத்தை எப்படிக் கையாளலாம். நம் செல்ஃபோனைத் தூக்கி எறிந்து விடலாமா அல்லது இந்த சூழ்நிலையை வேறு வழியில் சமாளிக்க முடியுமா?

மொபைல் ஃபோனில் ஸ்விட்ச் ஆஃப் பொத்தான் இருக்கிறது. சில நேரங்களில் அதை அன்பாக ஆஃப் செய்து வைக்கலாம். அவ்வளவு தான். தொழில் நுட்பம் ஒரு தடையே அல்ல. நாம் தான் அதை ஒரு தடையாக்கி விட்டோம். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நம்முடைய வசதிக்காக இருக்கின்றன. அதே சமயம் தூக்கம், தியானம் மற்றும் பல காரியங்கள் நமக்கு வசதியை தருகின்றன. உண்மையில் நிச்சயமான சுகத்தைத் தருகின்றன. அதிக சுகம் கிடைக்கும் போது சில வசதிகளை ஒதுக்கி நன்றாக சற்று நேரம் ஓய்வெடுக்க வேண்டும். எனவே சில நிமிடங்கள் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கலாம். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்கலாம். அதே போல் நீங்கள் உடற்பயிற்சி, யோக சாதனைகளில் ஈடுபடும் போதும் குடும்பத்தினருடன் உணவருந்தும் போதும் அதை சைலண்ட் மோடில் வைக்கலாம்.

மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆன்மீகக் கல்வியறிவூட்ட யார் பொறுப்பு ஏற்பார்கள்?UNESCO ஆன்மீக வளர்ச்சியை ஒரு ஆடம்பரமான சிந்தனை என்று ஒதுக்காமல், ஒரு முக்கிய கருத்தாக ஏற்றுக்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வருமா?

எந்த ஒரு பெரிய சமுதாய மாற்றத்துக்கும் நான்கு அடிப்படைத் தூண்கள் உள்ளன.
    ·         அரசு
·         அரசு சாரா மக்கள் நல நிறுவனங்கள்
·         மீடியா (செய்தித்தாள்கள், டி.வி., இன்டர்நெட் சோஷியல் மீடியா…….)
·         மதச் சார்புடைய அமைப்புகள்

இந்த நான்கு வழிகளும் அல்லது நான்கு தூண்களும் ஒரு நோக்கத்துக்காக இணைந்து செயல் படும் போது ஒரு திட்டம் வெற்றி பெற முடியும். ஆன்மீகக் கல்வியோ, குழந்தைகள் கல்வியோ எதுவாக இருந்தாலும், இந்த நான்கு அமைப்புகளும் ஒரு சேர உழைக்க வேண்டும். எந்தத் திட்டமும் வெற்றி பெறுவதற்கு நான்கு மூலைகளிலிருந்தும் ஒத்துழைப்பு அவசியம். UNESCO செல்வாக்கு சமுதாயத்தின் இந்த நான்கு அமைப்புகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்க உதவும். மதச் சார்புடைய அமைப்புகளின் செல்வாக்கு, அரசு நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவை ஒன்று சேர்ந்து ஒரு திட்டத்தை நிறைவேற்ற விரும்பினால், அரசு அந்தத் திட்டத்தை அமல் படுத்தும். பள்ளி பாட திட்டத்தில் பல்வேறு மதங்களைப் பற்றிய, பல்வேறு கலாசாரங்களைப் பற்றிய அறிவை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள், தங்கள் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் 1 % இப்படிப் பட்ட சமாதானம் பற்றிய கல்வித் திட்டத்தில் செலவிட்டால், இந்த உலகம் நாம் வாழ்வதற்குச் சிறந்து இடமாகி விடும்.“ என்று நான் சொல்வேன்.

நம் அகந்தை மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த, அவர்களை அவமரியாதைக்குள்ளாக வழி வகுக்கும். மக்களை ஒன்று சேர்க்க, ஒருவருக்கொருவர் மரியாதையோடு நடந்து கொள்ள வாழும் கலையின் செய்தி என்ன?

இந்த பூமியில் நிலவும் பெரிய நெருக்கடிகளில் ஒன்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது தான். (ஐடெண்டிடி க்ரிஸிஸ்). நாம் நம்மை ஒரு விசேஷ மனிதர் என்று அடையாளம் காட்டிக் கொள்கிறோம். இந்த மாதிரி அடையாளம் இல்லாதவர்களைப் பார்க்கும் போது அவர்கள் நமக்கு எதிரிகள் என்று நினைத்து பயப்படுகிறோம் அல்லது அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த எண்ணி அவர்கள் மேல் ஆக்கிரமிப்பு செய்கிறோம். எனவே மாற்றிக் கொள்ள வேண்டியது அடையாளத்தை மட்டுமே. இந்த அடையாளத்தில் பல அடுக்குகள் உள்ளன.

·         நாம் அனைவரும் ஒரே கடவுளின் பகுதி
·         நாம் ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள்
·         அடுத்தது ஆண் அல்லது பெண்
·         நம்முடைய மதம்
·         நம் நாடு

இந்த அடையாளம் மாறுபடும் போது நாம் நம்முடைய அடிப்படை அடையாளத்தை மறந்து விடுகிறோம். அந்த அடையாளம் நாமனைவரும் ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள். நம்மை சேராதவர் என்று எண்ணுபவர்களிடம் நாம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். ஆதிக்கம் செலுத்தும் போக்குக்கு நம் அகம்பாவம் தான் காரணம். எல்லோரும் நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு தான் இதற்கு மாற்று மருந்து. என்னைப் பொறுத்தவரை, எங்கு சென்றாலும் வீட்டிலிருப்பது போல் உணர்கிறேன். ஒரு தடவை கூட வெளி நாட்டில் இருப்பதாக உணரவில்லை. வடதுருவத்திலிருந்து தென் துருவம் வரை பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். எல்லா இடமும் என் சொந்த வீடு போலவே இருந்தது. இந்த உணர்வை நம்மால் வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்க்கையை ஒரு பரந்த நோக்கில் பார்க்க வேண்டும்.

மூன்று C க்களை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

·         Context - சூழ்நிலை
·         Commitment - அர்ப்பணிப்பு
·         Compassion – கருணை

வாழ்க்கையைப் பரந்த சூழ்நிலையில் பார். அகம்பாவம் என்பது என்ன?நீ ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகிறாயா? நீ என்னவாக இருக்கிறாய்? நீ யார்? நீ ஒன்றுமில்லை. இப்படைப்பில் நீ ஒரு புள்ளி கூட இல்லை. இப்படைப்பில் கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து விட்டன. கோடிக் கணக்கான ஆண்டுகள் வர இருக்கிறது. இம்மகத்தான இடைவெளியில் நாம் வாழ்வது மிகக் குறுகிய காலமே. ஒன்றுமே இல்லை. வாழ்க்கையை இந்த சூழ்நிலையில் பார்த்தால், அகம்பாவம் கரைந்து முகத்தில் புன்னகை மலரும். அகம்பாவம் கோபப்படாது. அகம்பாவம் புன்முறுவல் பூக்கும். கருணை மற்றும் அஹிம்சை போன்ற மனிதாபிமான நற்பண்புகளோடு நம் வாழ்க்கையை பிறர் நலனுக்காக அர்ப்பணித்தால், வாழ்க்கை சரியான திசையில் செல்லும்.

கருணை என்பது நம் இயல்பான பண்பாகும். நாமனைவரும் கருணை உள்ளவர்கள். இந்த பூமியில் கருணையில்லாத மனிதரே கிடையாது. சிலருடைய கருணை வெளிப்படையாகத் தெரியாமல் மூடப்பட்டிருக்கிறது. அந்த மூடியை அகற்ற வேண்டியிருக்கிறது.