ஆனந்தத்திற்கு அர்ப்பணிப்பு

சனிக்கிழமை 25 ஏப்ரல், 2015

பாரிஸ் பிரான்ஸ்



(உணர்ச்சிகளை ஆரோக்கியமாக சமாளிக்கும் விதம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

ஒருவர் எவ்வாறு உறவுகளில் நல்லிணக்கத்தை பராமரிப்பது?

அதைப் பற்றிப் பேச நான் தகுதி பெற்றவன் அல்ல. ஆயினும் உலகெங்கும் பல தம்பதிகளை கவனித்திருக்கின்றேன். அதனால் சில கருத்துக்களைக் கூற முடியும். மூன்று கருத்துக்களை கூறுகிறேன். ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று .இருவருக்கும் சேர்த்து ஒன்று..

முதலில் பெண்களுக்கு. ஒரு ஆணின் ‘தான்‘  என்னும் அகந்தையில் குறுக்கிடாதீர்கள். உலகமே உங்கள் துணைவரை முட்டாள் என்று கூறினாலும் நீங்கள் அவ்வாறு கூறக்கூடாது. தன்னுடைய தகுதியினை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியத்தை அவருக்கு ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் அவரிடம்,"இந்த உலகிற்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் அறிவாளி. புத்தியினை பயன்படுத்தாமல் இருப்பதால் நீங்கள் புத்தியற்றவர் என்று கூற முடியாது" என்றே கூறுங்கள். அவருடைய அகந்தையை தூண்டி, தன்னம்பிக்கையினை உயர்த்துங்கள். ஒரு மனிதன் வெளி உலகில் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் அமைதியினையும் ஓய்வினையும் எதிர் நோக்கியே வருவார். அங்கேயும் அவர் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிலையினை நீங்கள் ஏற்படுத்தக் கூடாது. அவரது "தான்" என்னும் தன்மையினை நீங்கள் தூண்டி  விட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு எந்த இடையூறும் இல்லை.

இனி ஆண்களுக்கு ஓர் அறிவுரை. ஒரு பெண்ணின் உணர்ச்சிகளுக்குள் ஊடுரவக் கூடாது. அவள் உங்களிடம் தன்னுடைய சகோதரன், சகோதரி, தந்தை, மற்றும்  தாய் பற்றிப் புகார் கூறலாம், ஆனால் நீங்கள் குறை கூறினால் அது சரியாக இருக்காது. இவ்வாறு தான் இந்தியா அமெரிக்கா இங்கு பிரான்சில் கூட நிகழ்கின்றது. சரியா? பெண்ணிற்கு எந்த உணர்வுகள் முக்கியமானவையோ அவற்றைப் பேணி வளர்க்க வேண்டும்.

இரு தரப்பினருக்கும் ஓர் அறிவுரை. உங்கள் மீது வைத்துள்ள அன்பினை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கேட்காதீர்கள். நீண்ட நாட்களாக தம்பதியாக வாழும்போது அன்பின் வெளிப்பாடு குறைந்தார்ப்போன்று தோன்றும். மீண்டும் "என்னை நேசிக்கிறாயா" என்று கேட்காதீர்கள். அல்லது இப்போதெல்லாம் நீ என்னை நேசிப்பதே இல்லை என்றும் குறை கூறாதீர்கள். உங்களுடைய அன்பினை சந்தேகித்தால் அதை நிரூபிப்பது உங்களுக்குப் பெரும் சுமையாகி விடும் அல்லவா? அது போன்றே  பிறர் தங்களுடைய அன்பினை உங்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். நீ என்னை விரும்பவில்லை, நீ இதை செய்யவில்லை என்றெல்லாம் குறை கூறுவதற்குப் பதிலாக ஏன் என்னை இந்த அளவு விரும்புகிறாய் என்று கேட்கத் துவங்குங்கள். குறை கூறுவதை நிறுத்துங்கள்.

எந்த உறவிலும் புகார் கூறிக் கொண்டே இருந்தால், அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அது ஆற்றலைக்  குறைக்கும், உங்களுடைய பணி ஆற்றலை அதிகப்படுத்துவதே ஆகும். நம்முடைய மனதின் மீது நமக்கு அதிகாரம் இருக்கட்டும். "என்னுடைய மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு. வேறு யாரும் இல்லை. .நானே ஓட்டுனர் இருக்கையில் உள்ளேன். என்னை சோர்வடையச் செய்ய  ஆயிரக்கணக்கான காரணங்கள் இருந்தாலும் "என்னைச் சுற்றியிருக்கும் இந்த உலகம் என்னை உயிருடன் புதைக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் என்னும் ஒரே கோட்பாட்டுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். இதுதான் ஆன்மா  இதுவே ஆன்மீகம். இதை அடைய நான் உங்களுக்குத் துணையிருக்கின்றேன். குதித்தோடும் ஆனந்தம் மற்றும் உற்சாகம் உங்களுக்கு உயர்ந்தெழ நான் என்னை அர்ப்பணிக்கின்றேன்.

நம்மிடம் பல பயிற்சிகள் உள்ளன. சிறிது நேரம் ஒன்றாக செலவழிக்கலாம். நிச்சயம் அனைவரும் விரும்பும் வகையில்  நீங்கள் அழகான உறுதியான ஒருவராக மலர்ந்தெழுவீர்கள் என்று உறுதியாக எண்ணுகின்றேன். 

கணவரின் நான் என்னும் அகந்தைக்குள் நுழையக் கூடாது என்று கூறினீர்கள். ஆனால் நான் என்னும் அகந்தை அனைத்துத் துன்பங்களின் மூல காரணம் அல்லவா?ஆன்மீக வழிக்குப் புறம்பானது அல்லவா?

இல்லை. ஒருவர் தன்னுடைய ‘தான்’ என்னும் அகந்தையை அகற்ற, தானே உழைக்க வேண்டும், பிறர் அல்ல. உங்களுடைய அகந்தை தான் உங்கள் கவலை என்றால் நீங்கள் தான் அதை அகற்ற  உழைக்க வேண்டும். உங்கள் மனைவி அல்ல. வேறொருவர் உங்கள் அகந்தையை அகற்ற முற்பட்டால் அது மேலும் மோசமாகி விடும். ‘தான்’ என்னும் அகந்தைக்கு ஆன்மீகத்தில் பல விளக்கங்கள் உள்ளன. ‘தான்’ என்பது ஓர் அடையாளம். அது குறிப்பிட்ட அடையாளத்திலிருந்து ஒரு பெரிய அளவிற்கு விரிவடையும்போது, அது மிகவும் நல்லதே. அப்போது ' தான் ' என்பது தெளிவாக வெளிப்படையாகத் தெரியும். வேறொருவர் உங்கள் 'தான்' என்னும் அகந்தையினை அடக்க முற்பட்டால் அது மன அழுத்தத்தையும் வேதனையையுமே உருவாக்கும். “ஞானம்  தேடுபவருக்கு ஞானச் செய்தி” மற்றும் “மௌனம் ஒரு கொண்டாட்டம்” என்னும் நூல்களை நீங்கள் படிக்க வேண்டும். அவற்றில் நான் இருப்பின் ஏழு நிலைகளைப் பற்றி விவரித்திருக்கின்றேன். ‘தான்’ எனும் அகந்தைக்கும் பல விளக்கங்கள் அவற்றில் உள்ளன. இங்கு நான் வேறொரு சூழலில் அதைப் பற்றிப் பேசியிருக்கின்றேன்.

போர் நிகழும் உலகில் நாம் என்ன செய்யக் கூடும்?

இந்த இக்கட்டான சூழ்நிலை எனக்குப் புரிகின்றது. எனக்கும் அதே நிலை தான். போர் நிறைந்த உலகில் நாம் செய்யக் கூடியது என்ன நானும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். போருக்கு இறையானவர்களுக்கு உதவ பாரிசுக்குள் 3 மில்லியன் மக்கள் வந்திருக்கின்றனர். 1,80,000 முதல் 2,00,000 வரையில் மக்கள் மும்பையில் அவர்களுக்காகத் தியானம் செய்திருக்கின்றனர்.
தீவிரவாதத்தினை அகற்ற மக்களின் மனதில் கவனம் செலுத்த வேண்டும் சுவர்க்கத்தின் திறவுகோல் தங்களிடமே உள்ளது ,மற்றவர்கள் அனைவரும் நரகத்திற்கே செல்வர் என்றெண்ணிக் கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் நரகத்தைனையே உருவாக்குகின்றனர். இவர்கள் தவறாக வழி நடத்தப் பட்டவர்கள். அறியாமையில் இருப்பவர்கள். ஆன்மீக அனுபவத்தினை அடைய சற்றும் வாய்ப்பில்லாதவர்கள்.

எமது வலைத்தளத்திற்கு சென்று பார்த்தால்,  மூச்சுப் பயிற்சி  மற்றும் தியானம் செய்து பல தீவிரவாதிகள் முற்றிலும் மாற்றம் அடைந்துவிட்டதை காண்பீர்கள். அவர்களது கருத்துக்களை அவர்களது வாயிலாகவே கேட்பீர்கள். இந்தியாவில் சுமார் 1000 தீவிரவாதிகள் தங்களது போர்க் கருவிகளை துறந்து விட்டனர். இந்தத் துறையில் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இது பரந்த பரப்பில் உள்ள பிரச்சினையாகையால் இன்னும் அதிக மக்களும் பொருட்களும் அதிக ஆசிரியர்களும் தேவைப் படுகின்றனர். இன்னும் அதிகமான உதவிக் கரங்கள் இருந்தால், நிச்சயம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நம்மை சுற்றிப் பரப்ப முடியும். எனக்கு எதுவும் வேண்டாம். ஏனெனில் என்னிடம் எல்லாமே இருக்கின்றது. ஆனந்தம் அமைதி ஆகியவற்றைத் தரவே விரும்புகின்றேன். இது போன்று நிறையப் பேர் உள்ளதாகவே நான் கருதுகின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், விழித்தெழுந்து நமது பணியினைச் செய்ய வேண்டும்.

குழந்தைகளாக இருந்த போது அதிகத் திறமைகள் பெற்றிருந்த நாம் ஏன், எவ்வாறு அவற்றை இழந்தோம் ?

ஏன் எப்படி என்றெல்லாம் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதை விட எவ்வாறு அவற்றை எவ்வாறு கண்டெடுப்பது என்று யோசியுங்கள் ஏன் இழந்தோம் என்பதற்கு பல கோட்பாடுகள் மற்றும் சூத்திரங்கள்  இருக்கலாம், அவற்றால் பயன் எதுவும் இல்லை. ஒரு குழந்தை ஒரு நாளுக்கு நானூறு தடவைகள் புன்முறுவல் பூக்கின்றது. மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு செல்லும் போது பதினேழு தடவைகள் மட்டுமே புன்முறுவல் தோன்றுகிறது. அது ஏனெனில் நாம் தன்னை பற்றி, தனது மனதைப் பற்றி அல்லது வாழ்க்கையைப் பற்றி எதுவும் நாம் கற்றுத் தருவதில்லை.

நான் எவ்வாறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது?

மூச்சின் மூலம். மூச்சிற்கு சூழல், உடல், உணர்ச்சிகள் அனைத்துடனும் தொடர்பு இருக்கின்றது. சில மூச்சுப் பயிற்சிகளை, அதாவது ப்ராணாயாமா க்ரியா இவற்றைக் கற்றுக் கொண்டால், அவை உங்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதவும்.

தாங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது பற்றிப் பேசினீர்கள். அவற்றுடனேயே வாழ்வது மேம்பட்டதல்லவா?

இல்லை. உணர்ச்சிகள் உங்களைக் கட்டுப்படுத்தினால் குழப்பமே ஏற்படும். உணர்ச்சிகளை நீங்கள் வெளிப்படுத்தலாம்.அவற்றை அடக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.இரண்டு விஷயங்கள் உள்ளன: ஒன்று உணர்ச்சிகளை அடக்குவது மற்றொன்று உணர்ச்சிகளுக்கு இரையாவது. உலகில் பெரும்பான்மையான குற்றங்கள்  மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளுக்கு இரையாவதாலேயே ஏற்படுகின்றன.