யோக சாதனைகளின் சக்தி

புதன்கிழமை 29 ஏப்ரல், 2015

வாஷிங்டன் டி.சி.  யூ.எஸ்.ஏ


(பின் வருவது யோக சாதனைகள் மற்றும் தியானம் மூலம் அமைதியை வளர்ப்பது என்ற உரையின் தொடர்ச்சி.)

கேள்வி - பதில்கள்

என் கேள்வி பதட்டத்தை பற்றியது. யோக சாதனைகள் மற்றும் தியானம் மூலம் கடந்தகால வாழ்க்கையிலிருந்து எப்படி விடுபடலாம்? வார்த்தைகள் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. ஆனால் அதை எப்படி நடைமுறையில் கொண்டுவர முடியும்?

உன் கேள்விக்கு நீயே விடையளித்து விட்டாய் என்று நினைக்கிறேன். அது ஒரு கேள்வியாக இருக்க முடியாது. சில நிமிட தியானத்துக்குப் பின்பு உன்னால் ஓய்வாக இருக்க முடிகிறது. நீ ஓய்வாக இருக்கும் போது, உன் பிரச்சினைகளை சிறந்த வழியில் கையாள முடியும். துப்பாக்கி முனையில் உன்னை யாரும் பயமுறுத்தாத வரை இது முடியும். அப்படி யாராவது செய்யும் போது, ஒரு நிமிடம் இரு! நான் கண்களை மூடி தியானம் செய்து விட்டு வருகிறேன் என்று சொல்ல முடியாது. அது சாத்தியமில்லை. அதிர்ஷ்டவசமாக ஒரு தீவிரமான சங்கடத்தில் இல்லாதவரை, ஒருவரால் மூன்று உபாயங்களை மேற்கொள்ள முடியும்.

·         கடந்து வந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார். இப்படிப்பட்ட பல சூழ்நிலைகளை நீ பார்த்திருப்பாய். இது முதல் தடவையல்ல. மன அழுத்தத்துக்குள்ளான பல சந்தர்ப்பங்கள் உன் வாழ்க்கையில் இருந்திருக்கின்றன. அவைகளை கடந்து வந்திருக்கிறாய். நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய். எப்படியோ இயற்கை உனக்கு உதவியாக இருந்திருக்கிறது. நீ இதை உணர்ந்தால்,உன் கண்ணோட்டம் மாறும். இந்தப்  பிரச்சினையை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வோம் என்று நினைப்பாய். எனவே உன்மீது நம்பிக்கை; அல்லது உனக்குளிருக்கும் ஆத்ம சக்தியின் மீது நம்பிக்கை; அல்லது இறைவன் மீது நம்பிக்கை; இவை உன் மனதை ஓய்வாக வைக்கும்.

·         தன்னம்பிக்கையை நாடுதல்; சுய நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது. மன அழுத்தம் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? தன்னம்பிக்கையின் பற்றாக்குறை; உன்னைச் சுற்றியிருப்பவர்கள் மேல் நம்பிக்கை குறைவாக இருப்பது; உன் திறமையின் மேல் நம்பிக்கை குறைவாக இருப்பது. இந்த மூன்றும் உனக்கு பதட்டத்தை ஏற்படுத்தும்.

·         தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் உன் பதட்டத்தை ஒழிக்கும். நீ ஒரு தொழில் நுட்பம் அறிந்தவனாக இருந்தும், இப்பயிற்சிகள் மேல் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், இப்பயிற்சிகள் உன் பதட்டத்தை, கவலையை ஒழிக்க வேலை செய்யும் என்பதைத் தெரிந்து கொள்.

என் உடல், மனம் மற்றும் ஆத்மாவை ஒருங்கிணைப்பது எப்படி?

உன் உடல், மனம் மற்றும் ஆத்மா ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நாம் அப்படித் தான் இருக்கிறோம். அதனால் தான் கேட்டுப் புரிந்து கொள்கிறோம். உடல் மனம் ஆத்மாவிடையே ஒருங்கிணைப்பு இல்லாதிருந்தால் நாம் (உயிரோடு) இருக்கவே முடியாது. உடல் மண்ணுக்குள் இருக்கும்.ஆத்மா எங்கேயோ, மனம் எங்கேயோ இருக்கும்.

மூன்றுமே ஒன்றாக இருக்கின்றன. அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தியானம் செய்யலாம்.ஒவ்வொரு ஆண்டிலும், நாலைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, இங்கு மேல் நிலை தியானம் மற்றும் மௌனப்பயிற்சிக்கு வந்து, இயற்கையோடு இணைந்து தியானம் செய்யவேண்டும் என்று னைவருக்கும் பரிந்துரைப்பேன். (சிபாரிசு செய்கிறேன்.) சரியான உணவு, போதிய தூக்கம், தினசரி ஒவ்வொரு வேளையும் முறையான தியானம் எல்லோருக்கும் அவசியம்.

பொதுவாக மேல் நிலை தியானம் மற்றும் மௌனப் பயிற்சி முகாம் 5 நாட்களுக்கு நடத்துகிறோம். அது உங்கள் பேட்டரிகளை ஒரு ஆண்டுகால தேவைக்கு ரீசார்ஜ் செய்து விடும். ஒரு ஆண்டு கழித்து, மீண்டும் இங்கு வந்து பயிற்சியில் சேர்ந்து பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், ஆண்டுக்கு நான்கு முறை இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
தினசரி வாழ்க்கையில் நாம் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் தியானம் செய்ய இயலாமலிருக்கும். எனவே மூன்று நான்கு மாதங்களுக்கொரு முறை மேல் நிலை தியானம் / மௌனப் பயிற்சிக்கு வருவது நல்லது.

ப்ரோசக் போன்ற மருந்துகளால் மனச்சிதைவைக் (டிப்ரஷன்) குணப்படுத்த இயலாது. மனச் சிதைவை குணப்படுத்த யோக சாதனைகளைச் செய்ய வேண்டுமென்று சொன்னீர்கள். மக்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, தற்கொலை எண்ணங்களோடு போராடும் போது, அவர்கள் எப்படி யோக சாதனையை நாடுவார்கள்? இதற்கு நீண்ட காலம் தேவையாக இருக்கலாம். உங்கள் தர்க்கம் எனக்குப் புரியவில்லை.

புது டில்லி எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தினராலும், (ஏ.ஐ.எம்.எஸ்) பெங்களூர் நிம்ஹன்ஸ் என்ற தேசிய மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் விஞ்ஞான நிறுவனத்தாலும் (என்.ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ்) நடத்தப்பட்ட சுதர்சன கிரியா சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப்பாருங்கள். இந் நிறுவனங்களில் நடத்திய ஆராய்ச்சிப்படி, சுதர்சன கிரியா மற்றும் தியானம் மூலம் மனச் சிதைவுக்குள்ளான நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள்

விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து கண்டறிந்த தரவுகளின் படி, இப்பயிற்சிகளை மருந்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். மன அழுத்தத்தால், மனச் சிதைவால் பாதிக்கப்பட்டு என்னிடம் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், 5 நாள் பயிற்சிக்குப் பின் குணமடைந்து திரும்பிப் போவதை நான் என் அனுபவத்தில் காண்கிறேன்.

கேள்வியின் தொடர்ச்சி: மருத்துவ ரீதியில் (கிளினிகல் டிப்ரஷன்) மனச் சிதைவடைந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

மனச்சிதைவு (டிப்ரஷன்) எப்போதும் மருத்துவ ரீதியில் குறிப்பிடப்படுகிறது. இது ஒருவரின் மனதில் உள்ளது.மன நோயால் வருந்தும் பலரை நிம்ஹன்ஸில் குணப்படுத்தியுள்ளார்கள். நிம்ஹன்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பெங்களூரில் உள்ள முதல் தரமான தேசிய மனநோய் மருத்துவ நிலையமாகும்.

சமீபத்தில் புதுடில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தினரால் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் 800 மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள். பல மருத்துவ வல்லுனர்கள், தாங்கள் நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சர்க்கரை நோய் (டயாபிடிஸ்), கொழுப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் (கொலஸ்ட்ரால்), இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல நரம்பு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் செய்வது நோயாளிகளின் நோயைக் கட்டுப்படுத்தி விரைவில் குணமடைய உதவி செய்வதாகச் சொல்லப்பட்டது. பல கட்டுரைகளின் முடிவுகள் இதை உறுதி செய்தன.

நான் ஒரு சாதாரண மனிதன். டாக்டர் அல்ல. (என்னிடம் கௌரவ டாக்டர் பட்டம் மட்டுமே இருக்கிறது). ஒரு மருத்துவர் போல பேச எனக்குத் தகுதி கிடையாது. இருந்தாலும், நானறிந்தவரை, தியானம் செய்வதால் உடலில் கார்டிஸான்களின் அளவு குறைகிறது. மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்கள் குறையும். உடலுக்குத் தேவையான ஆக்க பூர்வமான சக்தி அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் நீங்கி விடும்.

உங்களுக்குத் தெரியுமா? எனக்கு ஒவ்வொரு நாளும் 700 – 800 இ.மெயில் வருகின்றன. நம்முடைய பயிற்சிகளால் மக்கள் எப்படி குணமடைந்தார்கள் என்பதைத் தெரிவிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். மங்கோலியா, ஜப்பான், அர்ஜென்டினா மற்றும் உலக நாடுகள் அனைத்திலிமிருந்து இ-மெயில் வருகின்றன. இங்கு அமெரிக்காவிலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (மனதின் மீது தியானத்தின் தாக்கம் பற்றி) ஆராய்ச்சி நடத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. நார்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆஸ்லோ பல்கலைக் கழகத்திலுள்ள டாக்டர் ஃபரித் என்பவர் மரபணுக்களின் மேல் தியானத்தின் தாக்கத்தை பற்றி ஆராய்ந்து வருகிறார். அவர் ஆராய்ச்சியின்படி, தியானம் நம் மரபணுக்களில் (ஜெனீஸ்) மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சுவாராஸ்யமான தகவல். நீங்கள் விரும்பினால் மேல் விவரங்களுக்கு, டாக்டர் ஃபரீதை தொடர்பு கொள்ளலாம்.

நான் வாரத்தில் 3 முறை யோகப் பயிற்சிகள் செய்து வருகிறேன். வகுப்பில் சற்றுநேரம் தியானம் செய்கிறேன். தியானம் செய்யும் போது, மனதில் எண்ணங்கள் மேலும் மேலும் வருகின்றன. எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

பெரிய பிரச்சினை இது தான். எண்ணங்களை மனதிலிருந்து நீக்க விரும்புகிறோம். தியானத்தின் போது மனதில் எண்ணங்களிருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். தியானம் என்றால் மனதை ஒருமுகப்படுத்துவது என்று நினைக்கிறோம். துரதிஷ்டவசமாகப் தியானத்தின் போது மனதை ஒருமுகப்படுத்த  வேண்டுமென்று,  எதிர்மறை எண்ணங்களை மனதிலிருந்து நீக்க வேண்டும்; மனதில் ஆக்கபூர்வமான எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று சொல்லியிருப்பார்கள்.
இப்படி இல்லை. தியானம் ஒரு கலை. மனதை ஓய்வெடுக்கச் செய்ய ஒரு வழி. அதற்காக ஒரு முயற்சியும் தேவையில்லை. இங்கு வாழும் கலை ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். யாராவது ஒருவரிடம் பேசித் தெரிந்து கொள்ளுங்கள்.