யோகப் பாதை

செவ்வாய்கிழமை, 21 ஏப்ரல், 2015, 

பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியம்


(ஜூன் 21 நிகழவிருக்கும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஒரு திரை தூக்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் குருதேவ் யோகா பற்றிய உரை நிகழ்த்தி ஒரு தியானமும் நடத்த வரவேற்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் பெயர் யோகப்பாதை. பிரஸ்ஸல்ஸ் நகரிலுள்ள இந்தியத் தூதரகம் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இந்திய உறவுக்கான பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இதனை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் குருதேவ் ஆற்றிய உரையும் வீடியோவும் கீழே தரப்பட்டிருக்கின்றன)  

உலகில் இன்று கடவுளுக்கு ஒரு போட்டியாளர் இருந்தால் அது மன அழுத்தமாகவே இருக்கும், மன அழுத்தம் கடவுளை போன்றே எங்கும் நிறைந்திருக்கின்றது.

மன அழுத்தம் என்பது என்ன?

மிக அதிகப் பணி, மிகக் குறைந்த நேரம் ஆற்றல்யின்மை இதுவே மன அழுத்தம். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? குறைந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய அதிகப் பணிகள் உள்ளன, ஆனால் அதிச் செய்ய ஆற்றல் இல்லை. இது மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. எவ்வாறு இதிலிருந்து வெளியேறுவது?

·         பணிகளைக் குறைத்துக் கொள்வது - ஆனால் அது இக்காலத்தில் சாத்தியமில்லை
·         நேரத்தை அதிகப்படுத்துவது - நேரம் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டு விட்டது. வேறேதேனும்      கிரகத்திற்கு சென்றாலொழிய நாம் அதை மாற்ற முடியாது
·         நம்முடைய ஆற்றலை அதிகப்படுத்துவது. இது மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு.

நம்மிடம் தேவையான அளவு ஆற்றலும் உற்சாகமும் இருக்கும் போது நம்மால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும். மன அழுத்தமற்ற பதட்டமற்ற வாழ்க்கையை நாம் வாழ கருவிகளையும் நுட்பங்களையும் நமக்கு அளிப்பது யோகாவின் அம்சம் ஆகும்.மறுபுறம், யோகா மனித இனத்திற்கு மாபெரும் செல்வம் என்றே நான் கூறுவேன்.

செல்வம் என்பது என்ன? எது வசதியினை அளிக்குமோ அதுவே செல்வம். மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதே செல்வத்தின் நோக்கம் அல்லவா? மனிதனுடைய மனம் மற்றும்  வாழ்க்கைக்கு ஆறுதல் அளிக்கும் இலக்கினை அடையவில்லையெனில் அதை செல்வம் என்றே கூற மாட்டேன்.யோகா முழுமையான ஆறுதலை அளிப்பதால் அது ஓர் செல்வம். வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனம் தடையற்ற அறிவு, அதிர்ச்சியற்ற நினைவாற்றல், துன்பமில்லாத ஆத்மா இவையனைத்தும் ஒவ்வொருவரின் பிறப்புரிமையாகும். உலகெங்கும் பாராளுமன்றங்கள் மனித இருப்பின் இலக்கான மகிழ்ச்சியினை பெற்றுத் தர உழைத்துக் கொண்டிருக்கின்றன. நம் அனைவருக்குமே மகிழ்ச்சி வேண்டும், மிகத் தேவையான இந்த மகிழ்ச்சியினை அடைய யோகாதான் ஒரே பாதை.

யோகா ஒரு விதமான உடற்பயிற்சி என்றே கருதுகின்றோம்.1980 மற்றும்90 களில் நான் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்யும் போது, பிரதான சமூகத்தில் யோகா எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. யோகா,கால் கட்டை விரல்களில் நிற்பது, ஒரு காலில் நிற்பது போன்ற .ஒரு கடினமான உடற்பயிற்சி என்றே கருதப்பட்டது.யோகா விசித்திரமானது, விசித்திரமானவர்களே அதைச் செய்வார்கள் என்னும் கருத்து நிலவி வந்தது. ஆனால் இன்று விழிப்பு ஏற்பட்டு, மக்கள் யோகாவின் முக்கியத்துவத்தை கண்டறிந்து கொண்டனர். உலகெங்கும், யோகா இளைப்பாறுதல், மகிழ்ச்சி, படைப்பாற்றல் இவற்றுடன் ஒத்ததாகக் கருதப்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் கூட தங்களது விளம்பரங்களில் உள்ள அமைதிக்கு யோகா நிலையில் அல்லது தியான நிலையில் அமர்ந்திருப்பது போன்ற படங்களைத் தருகின்றன.

விரும்பியோ விரும்பாமலோ நாம்  அனைவருமே யோகிகளாகவே பிறந்திருக்கின்றோம். உலகில் எந்த இடத்திலும் ஒரு குழந்தையை நீங்கள் கவனித்தால், ஒரு யோகா ஆசிரியர் அவசியமே இல்லை என்பதை அறிவீர்கள். மூன்று மாதங்கள் முதல் மூன்று வயது வரையில், ஒரு குழந்தை யோகா தோற்றங்களையே செய்கின்றது. அது விடும் மூச்சு, தூங்கும் விதம், புன்முறுவல் பூக்கும் விதம் அனைத்துமே யோகாதான். குழந்தைகள் தான் யோகா ஆசிரியர்கள். அவர்கள் யோகிகள், அதனால் தான் அழுத்தமற்ற ஆனந்தத்துடன் இருக்கின்றார்கள். ஒரு சிறு குழந்தை ஒரு நாளில் 400 தடவைகள் சிரிக்கும். அன்றாட வாழ்வில் அழுத்தம் பதட்டம் போன்ற நிலைமைகள் இருந்த போதிலும், உங்கள் முகத்தில் புன்முறுவலை எடுத்து வருவது தான் யோகாவின் நோக்கமேயாகும்.
அழுத்தமற்ற, பதட்டமற்ற வாழ்வினை நடத்திச்செல்ல யோகா நுட்பங்களை நமக்கு அளிக்கின்றது

யோகாவின் பயன்கள் பல படிகளைக் கொண்டது.
1. பல உடல்நல பயன்கள் உள்ளன.
2. ஒருவரது நடத்தையினை மாற்றியமைக்கும், ஏனெனில் நடத்தை அழுத்த நிலையினைப் பொறுத்தது. நட்பான மனப்போக்கு, இனிமையான சூழல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
3 வார்த்தைகளால் தெரியப் படுத்துவதை விட நமது இருப்பினாலாயே அதிர்வலைகளினாலேயே நம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். நமது அதிர்வலைகளை மேம்படுத்திக் கொள்ள யோகா உதவும்.

ஒரு உதாரணம் தர விரும்புகின்றேன். உங்களுக்கு நெருங்கிய ஒருவர் "இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும்" என்று கூறுவதற்கும்,விமானப் பணிப்பெண் "இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் "என்று கூறுவதற்கும் தெளிவான வித்தியாசத்தைக் காண முடியும். விமானப் பணிப்பெண் கூறும் போது அதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் உங்களுடைய நெருங்கிய நண்பர் கூறும்போது அதே வார்த்தைகள் அதிர்வலைகளைத் தாங்கியுள்ளன.

4.குவாண்டம் மெக்கானிக்ஸ்படி,அனைவரும் அதிர்வுகளையும்,அலைகளையும் வெளியிடுகின்றோம்.  தொடர்புகள் துண்டிக்கப்படும் போது எங்களது அலைகள் ஒத்துப் போகவில்லை என்று  கூறுகின்றோம்.ஏனெனில் நமது தொடர்புத் திறன் பிறரிடமிருந்து பெறப்படும் தொடர்புகளைப்  பொறுத்தே அமைகின்றது. இங்கு யோகா தெளிவான மனதை அடைய உதவுகின்றது.

5. இன்று நாம் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை துவேஷம். பல்வேறு வகையான துவேஷம்.- சமயம், இனம், பாலினம், வகுப்பு, கல்வி நிலை, பொருளாதார நிலை, போன்றவை. இத்தகைய பல்வேறு வகையான துவேஷங்கள் மக்களின் மனதில் சூழ்ந்து, சமுதாயத்தில் மோதல்கள் ஏற்படுகின்றன.யோகா தன்னிச்சையாகவும் இயல்பாகவும் நாம் மனதை துவேஷத்திலிருந்து விடுவிக்கின்றது. மோதல்களைத் தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐவரிகோஸ்ட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியினை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இரண்டு கிராமங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டது. ஒரு கிராமத்திலுள்ளவர்கள் அடுத்த கிராமத்தவரை துரத்தினர்.நமது தன்னார்வ தொண்டர் ஒருவர் அங்கு சென்று அவர்களிடம் பேசி, சில யோகா மற்றும் தியானப் பயிற்சியினை அளித்தார். இரண்டு கிராம மக்களையும் ஒருங்கிணைத்தார். இந்த அனுபவத்திலிருந்து எவ்வாறு மக்கள் தங்களது மனதிலுள்ள துவேஷ உணர்ச்சியினை உடைத்தெறிந்து மாறுபட்ட மக்களுடன் கைகுலுக்க முடியும் என்பதை காணலாம். இன்றைய உலகில் இது மிகத் தேவையானது என்றே நான் கருதுகின்றேன். யோகா உங்கள் சொந்த உணர்வுகளுக்குப் பலியாவதற்குப் பதிலாக எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் வகையில் உணர உங்களை மேம்படுத்தும்.

6. தனக்குள்ளேயே தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் என்பது அடுத்த விஷயம். யோகாவின் துவக்குனர் "யோகா கர்மாசு கௌஷலம்" என்று கூறியுள்ளார் (பகவத் கீதை அத்தியாயம் 2.50) ஸ்ரீ கிருஷ்ண பகவான், யோகா என்பது செயலில் திறன் என்று கூறியுள்ளார். யோகா ஒரு வெறும் உடற்பயிற்சியல்ல. அது எவ்வாறு நுட்பத்துடன் தொடர்பு கொள்வது, எவ்வாறு ஒரு நிகழும் சந்தர்ப்பத்தில் திறனுடன் செயல்படுவது என்பதை அளிப்பதே யோகா.
இன்று  யாருமே திறமைகளை மற்றும் புதுமைகளை வேண்டாம் என்று கூறுவார்கள் என்று நான் எண்ணவில்லை. புதுமை, உள்ளுணர்வு, திறன்கள், மேம்பட்ட தொடர்பு, இவையனைத்தும் யோகாவின் முக்கியமான பலன்கள் ஆகும்.

இவையனைத்தும் இவ்வாறிருக்கும் போது எப்படி நமது நம்பிக்கைகளின் அமைப்புடன் மோதல் ஏற்படுகிறது? ஒரு குறிப்பிட்ட சமயத்தை அல்லது சித்தாந்தத்தை பின்பற்றும்போது, அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணப் போக்கினைப் பின்பற்றும் போது, அது யோகாவுடன் மோதுகின்றதா?இல்லவே இல்லை என்றே நான் கூறுவேன். யோகா எப்போதுமே வேற்றுமையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தி வேற்றுமைகளை ஊக்குவிக்கின்றது. யோகா என்னும் சொல்லிற்குப் பொருள், ஒருமைப்படுத்துதல் என்பதாகும். நீங்கள் வணிகராயினும், பிரபலமானவராயினும் தனி மனிதராயினும், உங்கள் தேவை சாந்தம், புன்முறுவல் மற்றும் மகிழ்ச்சி அல்லவா? துன்பத்தின் மூல காரணத்தைக் கண்டறிந்தால் மட்டுமே  இந்த ஆனந்தம் கிடைக்கும். ஏனெனில், மகிழ்ச்சியற்ற நிலை சரியான பார்வையின்மை, அழுத்தம், பதட்டம் மற்றும் கவலைகள் இவற்றால் ஏற்படுகின்றது.

ஐரோப்பிய யூனியன் மொத்த உள்நாட்டு மகிழ்ச்சி பற்றி பேசி வருகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து மொத்த உள்நாட்டு ஆனந்தம் என்னும் நிலைக்கு நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.  நமது மக்கட் தொகையில் பெரும் சதவீதம் இன்று மன சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மன அழுத்தத்திற்கு மருந்தான ப்ரோசெக் அல்லது பிற மாத்திரைகளை விழுங்குவதால் மட்டுமே பயனில்லை. இயற்கையான அதாவது நமது மூச்சினை ஒத்த இயற்கையானவையே நமக்குத் தேவை. அதுவே நமது நமது உற்சாகத்தைத் தூண்டி, மிகத் தேவையான அனைவரும் தேடியலையும் ஆனந்தத்தை அடைய உதவும்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, யாராவது பாராட்டினால் அல்லது விரும்பிய ஏதோ ஒன்றினை நீங்கள் அடைந்து விட்டால், உங்களுக்குள் ஏதோ ஒன்று விரிவடைவதை போன்று உணருகின்றீர்கள் அல்லவா? அதே சமயத்தில், ஓர் தோல்வியை சந்தித்தால், யாராவது உங்களை அவமானப்படுத்தினால் என்ன நிகழ்கின்றது? ஏதோ ஒன்று உங்களுக்குள் சுருங்குகின்றது. நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது ஏதோ ஒன்று விரிவடைவதையும், சந்தோஷமற்று இருக்கும்போது ஏதோ ஒன்று சுருங்குவதையும் நோக்கி உங்கள் கவனத்தை யோகா திருப்புகின்றது. 

நம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கவே விருப்பம். நமது வாழ்வின் மிகத் தேவையான மகிழ்ச்சியினை அடைய யோகாவே வழியாகும்.

பொதுவாக நாம் எதிர்மறை உணர்ச்சிகளை எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம். பள்ளியிலோ வீட்டிலோ எவ்வாறு எதிர்மறை உணர்ச்சிகளை கையாள்வது என்று யாரும் கற்றுத் தருவதில்லை. நீங்கள் வருத்தமாக இருந்தால் அப்படியே இருக்கின்றீர்கள் அல்லது காலம் அந்த வருத்தத்தை ஆற்றும் என்று காத்திருக்கின்றீர்கள். இத்தகைய மனநிலையை மாற்ற யோகாவில் ஓர் ரகசியம் உள்ளது. உணர்ச்சிகளுக்கு பலியாவதைத் தவிர்த்து, நீங்கள் எவ்வாறு உணர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே உணர உங்களை மேம்படுத்துகின்றது. உங்களை முற்றிலும் சுதந்திரமானவராக மாற்றுகின்றது.

அரை மில்லியன் சிறைக் கைதிகளுக்கு கற்பித்த எங்களது அனுபவத்தில், நாங்கள் கண்டறிந்தது இதுவே: ஒவ்வொரு குற்றவாளியும் ஏதோ ஒன்றுக்குப் பலியாகி விட்டதாகவே கூறுகின்றனர். அந்த பலியான உணர்ச்சியை ஆற்றியவுடன் குற்றம் மறைந்து விடுகிறது. மிக எளிதாக மூச்சு இந்தப் பணியினை செய்து விடும். இந்த அதிர்ச்சிகள் ஆழமான பதிவுகள் மனதில் வலியும் வேதனையும் ஆகிய அனைத்தையும் அகற்ற, எவ்வாறு வித்தியாசமான தாளகதியில் மூச்சு எடுத்துவிட வேண்டும், எந்தெந்த முறையில் அதைச் செய்ய வேண்டும், என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பதஞ்சலி யோக சூத்திரங்களில் யோகாவின் நோக்கத்தை தெளிவாக கூறியிருக்கின்றார். ஹேயம் துக்கம் அனாகதம் என்று கூறியிருக்கின்றார். துக்கம் ஏற்படுவதற்கு முன்னரே அதை தடுப்பது தான் யோகாவின் நோக்கம் என்பதாகும். பல விதங்களிலும் இது மிகவும் பயனுள்ளது. எங்காவது மோதல் மறுகிக் கொண்டிருந்தால், மக்களை மூச்சு எடுத்து விட்டு, சேர்ந்து அமர்ந்து தொடர்பு கொள்ளச் செய்தால்,அந்த மோதலின் மூல காரணம் கண்டறியப்பட்டு, மோதல் அகற்றப்படும். 

பேராசை, பொறாமை, கோபம், வெறுப்பு, விரக்தி, ஆகிய எதிர்மறை உணர்ச்சிகள் யோகாவின் மூலம் ஆற்றப்பட்டு அல்லது தகவமைவு படுத்தப்பட்டு விடுகின்றது. உலகெங்கும் இதுவே என் அனுபவம். யோகா மேலும் மக்கள் பொறுப்புணர்வுடன் இருக்கவும், பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கின்றது. இதுவே கர்ம யோகா என்று அழைக்கப்படுகின்றது. பொறுப்புக்களை ஏற்றுக் கொள்பவன் கர்மயோகி. நாம் அனைவருக்கும் வாழ்வில் பல பாத்திரங்களை ஏற்கின்றோம். ஒரு யோகியாக அல்லது யோகியல்லாத பொறுப்பான அல்லது அவ்வளவாக பொறுப்பேற்றுக் கொள்ளாத பாத்திரத்தை ஏற்கும் விருப்பத் தேர்வு இருக்கின்றது. பொறுப்பான ஆசிரியர் ,பொறுப்பான மருத்துவர் அல்லது பொறுப்பான வணிகராக இருக்கலாம். 

கவனிப்பு, பகிர்வு, மற்றும் பொறுப்பு ஆகிய குண நலன்களை நம்முள் யோகா வளர்க்கின்றது. இவையனைத்தும் நமக்குள் இருக்கின்றன. மக்கள் அனைவருக்குமே இருக்கின்றன. ஆனால் அவை வளர்க்கப் பட வேண்டும். ஒரு தனி மனிதன் பொறுப்பேற்றுக் கொள்ள வைப்பதற்கு மிக சிறந்த கருவிகளில் யோகா ஒன்றாகும்.