சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கிடையே நல்லிணக்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015,

பாரிஸ், பிரான்ஸ்



(பூஜ்ய குருதேவ் சமயங்கள்  மற்றும்  கலாசாரங்களுக்கிடையே  நல்லிணக்கம் என்பதை பற்றி பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் 24 ஏப்ரல் அன்று உரையாற்றினார். அந்த உரை கீழே தரப்பட்டுள்ளது)

வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் முக்கியம் என்று நான் கருதுகின்றேன். கல்வி, கல்வி, மற்றும்  கல்வி. ஒருவரது வாழ்க்கையில் பெரும் பங்கினை வகிப்பது கல்வியே. கல்வி என்பது செய்திகளை சேகரிப்பது என்று எண்ணிக் குழப்பிக் கொள்ளக்கூடாது. என்னை பொருத்தவரையில், ஒரு மனிதரின் முழுமையான தனித்திறன் குண நலன்களை வளர்ப்பது கல்வியேயாகும். மாறுபட்ட உலகில் நாம் வாழ்கின்றோம். இறைவனுக்கு வேற்றுமைகளற்ற உலகம் வேண்டுமாயின் ஒரே ஒரு விதமான மீன், பூ, பழம் மற்றும் காய் இவையே இருந்திருக்கும். இந்தப் பிரபஞ்சம், உலகம் பல வகைகளை உடையது. இது ஒரு மலர்க் கொத்து.

இந்த அழகிய பிரபஞ்சத்தில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் நமக்கு அளிக்கும் செய்தி என்னவென்றால், நாம் பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த உலகில் வாழ்கிறோம், அந்த வேற்றுமைகளே வாழ்க்கையை அழகாக்குகின்றன என்பதேயாகும்.

எப்படியோ சகிப்புத்தன்மை என்னும் சொல்லை நான் விரும்புவதில்லை. ஏன் தெரியுமா? அதற்கு ஒரு எதிர்மறை தாத்பரியம் உள்ளது. சாதரணமாக உலகெங்கும் சமய நம்பிக்கைகள் பயிற்சிகளில் நாம் " சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்" என்று கூறுகின்றோம். இது ஒரு தவறான சொல் என்றே நான் எண்ணுகின்றேன். சகித்துக் கொள்வது என்பது உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை குறிப்பிடுவதாகும். இப்போது வேற்றுமைகளை கொண்டாடி, பாராட்டுவதற்கான நேரம் ஆகும், சகித்துக் கொள்வதற்கானது அல்ல. இதை நாம் சற்றுக் கூர்ந்து காணவேண்டும். பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு வேற்றுமைகளை பாராட்டி, அனுபவித்துக், கொண்டாட வேண்டும்.

நான் மக்களிடம் "நாம் உலகின் பல பகுதிகளிலுள்ள உணவு வகைகளை ஏற்கின்றோம், உலகின் பல்வேறு இசையினை ஏற்கின்றோம், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழில்நுட்பத்தினை ஏற்கின்றோம், எங்கிருந்து இந்த தொழில்நுட்பம் வந்தது என்று நாம் கேட்பதில்லை. ஆனால் ஞானம் என்று வரும் போது ஏதோ ஒரு விதத்தில் மறுப்பு தோன்றுகிறது. ஒரு சுவர் எழுப்பி, இது யூதர் ,இது ஹிந்து, இது புத்தசமயம் என்று கூறுகின்றோம். ஒரு தவறான அபிப்பிராயத்துடன் விலகி நிற்கின்றோம். இந்த திரிபு தொடரும் வரையில், உலகம் அமைதியான இடமாக இருக்காது. உலகின் ஒரு சிறிய பகுதியில் அவர்களிடம் மட்டுமே ஸ்வர்க்கத்தின் திறவுகோல் உள்ளது, பிறர் அனைவரும் நரகத்திற்கே செல்வர் என்று எண்ணினால் அவர்கள் இவ்வுலகில் உள்ள மற்ற அனைவருக்கும் நரகத்தையே உருவாக்குகின்றனர்.
  
எனவே நம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. நமது மக்களுக்கு பல்வேறு வகைக் கலாசார மற்றும் பல்வேறு வகை சமய கல்வியினை அளிக்க வேண்டும். தற்கால இணைய  தொழில் நுட்பத்தால் இது சாத்தியமாகும்.ஆயினும் மிகப் பெரிய அளவு மக்கள் தாங்கள் மட்டுமே சுவர்க்கத்தின் திறவுகோலை கொண்டுள்ளதாக கருதி,அறியாமையுடன் இருக்கின்றனர். நாம் இரண்டு முக்கிய பிரச்சனைகளை உலகில் பிரச்சினையாக வகைப்படுத்த முடியும்: 

தவறான அபிப்பிராயம்

இன்றைய உலகில், இனம்,பாலினம், சமயம் வகுப்பு அனைத்திலும் தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. செல்வந்தர்கள் எப்போதுமே அடக்குமுறை செய்பவர்கள், பணக்கார நாடுகள் பிற நாடுகளை அடக்கியாளுகின்றன என்றெல்லாம் சமுதாயத்தின் சில பகுதியினர், கருதுகின்றனர். இந்தத் தவறான கருத்துக்கள்  விலக்கப்பட வேண்டும். அப்போது தான் நாம் ஓரளவு கல்வி, பண்பு நாகரீகம் உள்ள நிலையினை அடைகிறோம் என்று கூறுவேன்.

மன அழுத்தம்

மனித வாழ்வின் மற்றொரு அம்சம் மன அழுத்தம். பரபரப்பான சமுதாயத்தில், நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. உண்மையில் மிகக் குறைந்த நேரத்தில் குறைந்த ஆற்றலுடன் செய்ய வேண்டியது மிக அதிகமாகவே உள்ளது. இதுதான் மன அழுத்தம் என்பதன் விளக்கம். அழுத்தத்தின் சூத்திரம்: மிக அதிகப் பணி,மிகக் குறைந்த நேரம் தேவையான அளவு ஆற்றல் இன்மை. அனைவருக்குமே 24 மணி நேரம் உள்ளது. அது எழுத்தராயினும், பிரதமராயினும் அனைவருக்கும் 24 மணி நேரமே ஒரு நாளில் உள்ளது. இதை மாற்ற முடியாது. உங்களுடைய பணிகள் என்று வரும்போது, பெரும்பாலானோருக்கு செய்ய வேண்டியவற்றை குறைத்துக் கொள்ள முடியாது. எனவே ஒரே ஒரு வழிதான் உள்ளது, அது உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள வேண்டியது. 

உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள, தொன்று தொட்டே ஏறக்குறைய பாதுகாக்கப்பட்ட ரகசியங்களாக சில பயிற்சிமுறை நுட்பங்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளன. இந்த நுட்பங்கள் பிரபுக்கள், இளவரசர்கள் மற்றும் உயர்தர மக்களுக்கே அளிக்கப்பட்டு அவர்கள் தம் பங்கில் வளர்ச்சியினை ஏற்படுத்தினர். ஆனால் இப்போது இந்த தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகள், அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றோம். 

வீட்டிலோ பள்ளியிலோ எவ்வாறு அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்று யாரும் கற்பிக்க வில்லை. உணர்ச்சிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று யாரும் கற்பிப்பதில்லை.
மனக்கஷ்டம் சாதாரணமானது தான். ஆனால் அதை நாள் முழுவதும் வாரம் முழுவதும் சில சமயங்களில் மாதக்கணக்கில் எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல. உங்களுடைய உடைகள் அழுக்காகி விட்டால், அழுக்கை எவ்வாறு நீக்குவது என்று உங்களுக்குத் தெரியாமல் அந்த அழுக்கு ஆடையுடனேயே சுற்றிக் கொண்டிருப்பது போல் ஆகும்.ஆகவே மக்களுக்கு அழுத்தத்திலிருந்து வெளி வரக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதை மன சுகாதாரம் என்று கூறுவேன். பல் சுகாதாரம் பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோம் ஆனால் யார் மீதும் வெறுப்பு அல்லது எதிர்மறை உணர்வு கொள்ளக்கூடாது போன்ற மன சுகாதாரம் பற்றிக் கற்றுக் கொடுப்பதில்லை.

மகாத்மா காந்தி பதினோரு உறுதி மொழிகள் எடுத்துக்கொண்டார். தனது ஆஸ்ரமவாசிகளுக்கும் அளித்தார். அவற்றில் ஒன்று கோபத்தை கட்டுப்படுத்தி, கருணையுடன் இருப்பது. வாழ்க்கையில் வன்முறையின்மையை வலியுறுத்த வேண்டும். அல்லவா? நமது உலகம் மேலும் மேலும் வன்முறைகளுடன் இருப்பதால், நாமும் அந்த வன்முறைக்கு தற்காப்பு வலிமை பெற்று விடுகிறோம். என்னுடைய இளம்வயதில், வகுப்பில் யாராவது ஒரு மாணவன் திடீர் வெறி கொண்டால், நாங்கள் அனைவரும், இவனுக்கு என்ன ஆயிற்று? தன் சமநிலையினை இழந்து விட்டானே? "என்றே கூறுவோம்.

சமநிலையினை இழப்பது வெட்கத்திற்குரிய விஷயமாகவே இருந்தது. இன்று, ஆக்கிரமிப்பே பெருமைக்குரிய விஷயம் ஆகிறது, சமாதானமல்ல.மாற்ற வேண்டும்.கருணை, வன்முறையின்மை, ஆகியவையே பெருமைக்குரியனவாக வேண்டும்.ஆக்கிரமிப்பும் வன்முறையுமல்ல. அடுத்து, மூச்சும் உங்களுடைய அழுத்தத்தினைக் குறைக்கின்றது. சமுதாயத்தில் பதட்டம் ஏற்பட அழுத்தம் ஒரு காரணம் ஆகும். அது நமது தொடர்புகளைத் துண்டிக்கின்றது. நமது கருத்துக்கள் வெளிப்பாடு அனைத்தையும் பாதிக்கின்றது.

நமது சமுதாய செயல் தொடர்புகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படலாம்.
1. எவ்வாறு கண்டுணர வேண்டும்
2. எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்

நமது கண்டுணரும் மற்றும் வெளிப்படுத்தும் திறன்கள் நமது அழுத்த நிலைகளால் பாதிக்கப் படுகின்றன.