உயரத்துக்குச் செல்வோம்

வெள்ளிக்கிழமை 17 ஏப்ரல் 2015                   

பெங்களூர், இந்தியா


(நீ பொறுப்புடன் இருக்கிறாயா? என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது அலை போன்ற மாற்றத்தைக் கொண்டு வர ஆசிரியர்கள் தான் உதவியாக இருந்தார்கள்.ஆசிரியர்கள் மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி, ஊக்கப்படுத்த பொறுப்பேற்று கொண்டார்கள். எந்த விஷயமானாலும் அதில் ஆசிரியர்களின் பங்கு அதிகமாக இருக்கும்.

இன்று நீங்கள் பார்க்கும் நெக்ஸலைட் இயக்கமும் சில ஆசிரியர்களால் துவங்கப்பட்டது. “நம் நாட்டுக்கு அமைதியையும், வளமையையும் கொண்டு வர எல்லோரும் சேர்ந்து செயல்படுங்கள் “ என்று நான் எல்லா ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய மாணவர்களை ஊக்குவித்து நல்ல அறிவார்ந்த விஷயங்களை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகள் ஒரு காலியான கண்ணாடி பாத்திரம் போன்றவர்கள்; நீங்கள் எந்த விஷயத்தை பற்றி கற்பித்தாலும், அப்படியே பிடித்துக் கொள்வார்கள். அவர்களைப் பயமுறுத்தி, தவறான கருத்துகளை போதித்தால் அவர்கள் நடவடிக்கை அதன்படி இருக்கும். நம் நல்ல கருத்துகளை கற்பித்து, நற்குணங்களோடு வாழச் செய்தால், அவர்கள் அப்படியே நல்ல வழக்கங்களோடு வளர்ந்து நாட்டின் பொறுப்பான குடிமக்களாவார்கள்.

மற்றவர்களுக்கு நல்ல கருத்துக்களை கற்பிக்குமுன், நாமும் அப்படி நடந்து ஒரு உதாரணமாக வாழவேண்டும். ஒரு நல்ல நோக்கத்தை அடையும் மனஉறுதியோடு, நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் அங்கமாக்கி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். இங்கு வந்திருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் இதற்காக சங்கல்பம் எடுத்துக் கொண்டு மாணவர்களை இலட்சிய வாழ்க்கை வாழ்வதற்காக நல்வழிப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்வில் இருக்கும் குறைகளை தீர்த்து வைக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்து விடுங்கள். குறைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நான் கவனித்துக் கொள்வேன். ஆக்கபூர்வமான சக்தியுடன் சமுதாயம் முன்னேற்றமடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல் படுங்கள்.

கேள்வி பதில்கள்

குருதேவா, “ஒரு சிஷ்யன் தன் சின்ன மனதை வென்று தன் குருவை பின்பற்றுவான்” என்று சொன்னீர்கள்.என்னைப் பொறுத்தவரை, என் சின்ன மனதை வெல்ல முடியாமலிருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் ?

அப்படியா? அப்படியிருந்தால், இயற்கை உன் சின்ன மனதைக் கொன்று, அதை வெல்ல உனக்கு உதவி செய்யும். (சிரிப்பு). மனம் என்றால் என்ன? மனம் என்பது நீ மனதில் வைத்திருக்கும் பல ஆசைகள் தான். நீ மனதில் எத்தனை ஆசைகளை வைத்திருக்கிறாய் என்று இயற்கைக்குக் தெரியும். நீ எவ்வளவு இறுக்கமாக, ஜுரவேகத்துடன் உன் ஆசைகளை தூக்கிக் கொண்டிருக்கிறாய் என்று இயற்கை பார்க்கிறது. அது சிலசமயம் நம் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும். சில சமயம் நிறைவேற்றாது. ஆசை நிறைவேறுகிறதோ, இல்லையோ, நான் நடுநிலையில் மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று நீ சொல்லும் போது, நீ உன் சின்ன மனதைக் கொன்று விட்டாய் அல்லது வென்று விட்டாய்.

நீ தியேட்டருக்கு சினிமா பார்ப்பதற்குக் போய் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதாக வைத்துக் கொள். அப்போது டிக்கெட் தீர்ந்து போய், ஹவுஸ்ஃபுல் என்று தெரிந்து கொள்கிறாய். அப்போது கோபப்படுகிறாயா அல்லது குழப்பமடைகிறாயா? அல்லது பரவாயில்லை என்று திரும்பி வருகிறாயா? சினிமா டிக்கெட் கிடைக்காததும் நல்லது தான் என்று கோவிலுக்கு செல்லக்கூடும். (சிரிப்பு). அல்லது ஏதாவது சத்சங்கத்துக்கு செல்லலாம். மனம் குழப்பமடையாமல், யுக்தியோடு இதை நீ செய்ய முடிந்தால், உன் சின்ன மனதை வென்று விட்டாய் என்று தெரிந்து கொள்.

எது உனக்கு வாழ்வில் நல்லதோ, அது மட்டுமே உன் வாழ்வில் நடக்கும் என்ற இந்த அசைக்க முடியாத நம்பிக்கை உனக்கிருக்க வேண்டும். இயற்கை எப்போதும், உன் வாழ்க்கையில், உன்னை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இரு. இப்படிப்பட்ட ஞானம் எப்போது பிறக்கும்? எந்தச் செயலை செய்தாலும், உன் 100% ஐ கொடுக்கும் போது, முழு மனதோடு ஈடுபடும் போது இதை நீ அறியலாம். ஒன்றுமே செய்யாமல், கடவுள் நமக்கு வேண்டியதைத் தருவார், நம்மைப் பார்த்துக் கொள்வார் என்று சோம்பேறித் தனமாக அமர்ந்திருந்தால் அப்படி நடக்காது.

பொதுவாக, தவறான காரியம் செய்யுமுன், இருமுறை யோசிக்க மாட்டாய். ஆனால் நன்மை தரும் ஒரு செயலை செய்யுமுன், “கடவுள் விருப்பம் இருந்தால் அப்படி நடக்கட்டும்”  என்று விட்டு விடுவாய். “நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அல்லது அழைக்கிறீர்களோ, அப்போது மட்டும் தான் ஆசிரமத்துக்கு வர முடிகிறது” என்று பலர் என்னிடம் சொல்கிறார்கள். ஏன் அழைப்பை எதிர்பார்க்கிறீர்கள்? கடவுள் என்னை வந்து பார் என்று உனக்கு அழைப்பு அனுப்புகிறாரா? ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றால், விதிப்படி நடக்கட்டும் என்று ஒரு முயற்சியும் செய்யாமல் விட்டு விடுகிறோம். ஆனால் உன் ஆசை நிறைவேற வேண்டுமென்றால், சக்தியை ஒன்றுதிரட்டி எல்லா முயற்சியும் செய்வாய். இதயபூர்வமாக, ஆத்ம பூர்வமாக அதற்கான காரியத்தில் ஈடுபடுவாய். இந்த எண்ணப் போக்கை மாற்ற வேண்டும்.

இன்று நீ எந்த நிலையில் இருந்தாலும், அது உன்னுடைய ப்ராரப்த கர்மவினையால் வந்தது என்று தெரிந்து கொள். உனக்கு வாழ்வில் என்ன கிடைக்க வேண்டுமோ அது கட்டாயம் கிடைக்கும்.
“வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று நீ சிந்திக்க வேண்டும். முடிவு என்ன ஆகும் என்று எண்ணாமல், அதை நேர்மையாக செயலாற்ற வேண்டும். அந்தக் காரியத்தின் பலனைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. நீ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய். வாழ்வில் உனக்கு ஆழ்ந்த திருப்தி உதயமாகும்.

குருதேவா ! ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தாலிபான் போன்ற வன்முறையாளர்களுடன், பேச்சு வார்த்தைகள் மூலம் அமைதியை நிலை நாட்ட முடியுமா ?

இந்த மக்களை, நாம் பேச்சு வார்த்தைக்கு அழைக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த திசையில் செல்லும் முன்பே, அது பலன் கொடுக்குமா, இல்லையா என்று இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது.

யார் நமக்கு குருவாக இருக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கும் சரியான அளவுகோல் எது ? அந்தப் பவித்திரமான உறவை எப்படிக் கட்டிக் காக்க முடியும் ?

நமக்குள் இருக்கும் அன்பு மற்றும் ஒருவருக்கொருவர் சேர்ந்தவர் என்ற ஆழமான உணர்ச்சியை பொறுத்தது. நீ ஒருவரை உன் குருவாக்கவோ, அவரைத் தேர்ந்தெடுக்கவோ முடியாது. அவர் தான் உன் குரு என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். சமயங்களில் “நான் என் குருவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அவரை என் குருவாக்கிக் கொண்டேன்” என்று சொல்கிறோம். ஒரு சிஷ்யன் தன் குருவை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்று நினைப்பது சரியல்ல. அப்படியல்ல. நீ உருவாக்கும் எல்லாமே உன்னை விடக் குறைவாகவோ, சிறியதாகவோ இருக்கும். உன் குருவை உன் வாழ்க்கையில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவ்வளவு தான். நீ உன் குருவை அடைந்துவிட்டாய் என்று எப்போது தெரிந்து கொள்ள முடியும்? நீ உன்னை ஆன்மீகப் பாதையில் செல்லும் யாத்ரிகனாகப் புரிந்து கொள்ளும் போது அது முடியும். நீ ஒரு யாத்ரிகனாகும் போது, உன் குருவை சுலபமாக அடையாளம் கொண்டு கொள்வாய்.

குருதேவா! வேலை செய்யுமிடத்தில் ஆன்மீகத்தைப் பின்பற்றினால், அது வேலையின் இலக்கை நாடாமல் சுறுசுறுப்பைக் குறைத்து விடுமா? வேலை செய்யாமலேயே திருப்தி அடைவோமா ?

கண்டிப்பாக இல்லை. வேலையின்றித் திருப்தி அடைவது ஆன்மீகமல்ல. அமைதி என்றால் திருப்தியடைந்த மனநிலையில் இருப்பதாகாது. படைப்பாற்றலுக்கு (க்ரியேடிவிடி) மன அழுத்தம் தேவையில்லை. அப்படியென்றால் இன்று ஆஃப்கானிஸ்தானம் தான் உலகிலேயே அதிக படைப்பாற்றல் பெற்ற நாடாக இருக்கவேண்டும். கடந்த 25 – 30 ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானம் சிரமமான சூழ்நிலையில் உள்ளது. ஆஃப்கானிஸ்தானத்திலோ, லெபனான் நாட்டிலோ, அது போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆக்கபூர்வமான செயல்கள், புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆன்மீகத்தால் கிடைக்கும் உள்ளார்ந்த அமைதி, திருப்தி அடைந்து சோம்பலாக இருப்பதை ஒப்புக் கொள்ளாது.உள்ளார்ந்த அமைதி சுறுசுறுப்பை உண்டாக்கும். மகிழ்ச்சியாக இருக்கும்போது, மேலும் மேலும் நன்றாகச் செயல்பட விரும்புவாய்.
ஆன்மீகம் வாழ்க்கைக்கு என்ன தருகிறது?

·         உன் உள்ளுணர்வுத் திறனை மேம்படுத்துகிறது. எந்தச் செயலைச் செய்வதானாலும் உள்ளுணர்வு தேவை. அல்லவா ? ஆம்.
·         உன் உடலில் சக்தியை அதிகரிக்கும். உனக்கு சக்தி அவசியம் தானே ? ஆம். சக்தி உனக்குத் தேவையாக இருக்கிறது.
·         உன்னை ஏதாவது ஆக்கபூர்வமான செயலைச் செய்ய ஊக்குவிக்கும். ஊக்கமில்லாவிட்டால், எவ்வளவு படித்திருந்தாலும் என்ன பயன் ? அந்தப் படிப்பு எதற்கும் உதவாது. நீ மிகவும் படித்திருந்து, ஊக்கமில்லாமலிருந்தால், நீ எதற்கும் உதவாதவன் என்று சொல்வார்கள்.
·         ஆன்மீகம் உனக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. உனக்கு நம்பிக்கை, புத்திசாலித்தனம், உள்ளுணர்வு, ஊக்கம் தேவையில்லையென்றால் நீ ஆன்மீகத்திலிருந்து விலகி இருக்கலாம்.

ஆன்மீகம் மற்றும் நிறுவனத்தின் இலக்குகள் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்க முடியுமா ?

கண்டிப்பாக. நிறுவனத்தின் இலக்குகளை அடைய நீ பொறுமையாக இருக்கவேண்டும். தனி மனிதனின் வளர்ச்சியும், நிறுவனத்தின் வளர்ச்சியும் ஒரே வேகத்தில் இருக்கமுடியாது. நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் நாம் உலகின் சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கிறோம். நீ உலகை ஒரே இரவில் மாற்ற முடியாது. ஆனால் ஒரே இரவில் நீ உன்னை மாற்றிக் கொள்ள முடியும். அது உன்னால் முடியும். பொறுமை மற்றும் விடாமுயற்சியால் அது நடக்கும். தனி மனிதனின் வளர்ச்சியும், நிறுவனத்தின் வளர்ச்சியும் இணைந்து செல்ல வேண்டும்.