யோகா மற்றும் தியானத்தின் மூலம் அமைதியினை உருவாக்குங்கள்

புதன்கிழமை - 29 ஏப்ரல் - 2015 

வாஷிங்க்டன் டிசி,  அமெரிக்க ஐக்கிய நாடுகள்


இன்றைய விவாததத்திற்கான தலைப்பு அமைதியையினை வளர்த்தல் என்னும் பரந்த தலைப்பு. அமைதி பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏன் அமைதி தேவை? அமைதி என்பது இயற்கையான நிலைமையா? குழந்தையினை " உனக்கு அமைதி வேண்டுமா அல்லது லாலிபாப் வேண்டுமா?” என்று கேட்டால் அது லாலிபாப் என்றே கூறும்.

இங்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்தைக் காண்கின்றேன். அவரைப் பற்றிய ஓர் கதை நினைவுக்கு வருகின்றது. லண்டனில் ஒரு பேராசிரியர் சுவாமி விவேகானந்தரை, "ஒரு அறிவு நிறைந்த நூலும் சிறிது பணமும் இருந்தால்  நீ எதை எடுத்துக் கொள்வாய்?" என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி," நான் பணத்தையே எடுத்து கொள்வேன்" என்று கூறினார். பேராசிரியர், அவரைக் கேலி செய்து, "நீ அறிவினை மதிப்பதில்லை,பணத்தையே எடுக்க விரும்புகிறாய். நானாக இருந்தால் அந்தப் புத்தகத்தையே எடுத்துக் கொள்வேன் என்று கூறினார். சுவாமி விவேகானந்தர்," ஐயா! யாரிடம் எது இல்லையோ அதையே எடுத்துக் கொள்வோம்"என்று பதிலிறுத்தார்.

யோகாவின் நிறுவனர், யோகாவின் நோக்கம் "ஹேயம் துக்கம் அனாகதம்"- துன்பம் வரும் முன்னரே அதைத் தடுத்து நிறுத்துவது என்று கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு அமைதியின் மீது மதிப்பில்லை. ஏன் தெரியுமா? ஏனெனில் அவர்களுக்கு அது நிறைந்திருக்கின்றது. ஒரு க்ஷணம் அழும் குழந்தை அடுத்த  நொடியிலேயே  கண்ணீர் சற்றும் காயாத நிலையிலேயே சிரிக்கும், அவர்களால் சிரிக்க முடியும். ஆனால் வளர்ந்த நாம், இந்த நெகிழ்வுத் தன்மையை இழந்து விட்டோம். யோகா இந்த நெகிழ்வுத் தன்மையினை நமது உடலில் மட்டுமின்றி மனதிலும் எடுத்து வரும். துரதிர்ஷ்டவசமாக இன்று யோகா ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சியாக கருதப்படுகின்றது. அவ்வாறில்லை. யோகாவினை தோற்றுவித்தவர் அதன் நோக்கத்தை, ஹேயம் துக்கம் அனாகதம் என்று கூறுகின்றார் அதாவது  துன்பம் வருவதற்கு முன்னரே அதனைத் தடுத்து நிறுத்துவது. உடல் நோய்கள் அவற்றில் ஒன்று ஆகும். ஆகவே யோகப் பயிற்சியினை இடைவிடாது செய்தால் மருத்துவரை நாடுவதைத் தவிர்க்கலாம்..
மற்றொரு அம்சம் செயல்திறன். 

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், யோகாஹ் கர்மாசு கௌஷலம் என்று கூறுகின்றார். செயல் திறன், தொடர்புத் திறன், அதாவது மனதோடு மனம்,ஆத்மாவுடன் ஆத்மா தொடர்பு கொள்ள முடியும். வாயால் பேசுவதை விட நமது இருப்பின் மூலம் மேம்பட்ட தொடர்பு நிலை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி யோசித்திருக்கின்றீர்களா? நாம் அனைவருமே அதனை அனுபவித்திருப்போம் என்று நான் உறுதியாக எண்ணுகின்றேன். சரியா? ஒருவர் அன்பினைப் பற்றி இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டே இருக்கலாம், ஆனால் ஒரு சிறிய குழந்தை அதனை தன்னுடைய ஒரு பார்வையினாலேயே தெரிவித்து விடும். அல்லது ஒரு நாய் உங்களை சுற்றி ஓடி அன்பினைத் தெரிவித்து விடும். யோகா என்பது தொடர்புத் திறன், மக்களுடன் உறவினைப் பிணைத்துக் கொள்ளும் திறன்.

ஒரு வேளை சதாம் ஹுசைனுக்கு, ஜார்ஜ் புஷுடனும் புஷ்ஷிற்கு சதாம் ஹுசைனுடனும் தொடர்புத் திறன் சிறப்பாக இருந்திருந்தால் இன்று உலகம் மேம்பட்ட நிலையில் இருந்திருக்கும். தன்னிடம் பெருமளவு அழிக்கும் போர்க்கருவிகள் இல்லை என்பதை சரியான முறையில் தெளிவு படுத்தியிருந்தால் நிகழ்வுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மோசமான நிலையில் இன்று இருக்கின்றோம். நீங்கள் நான் கூறுவதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவலாம், ஆனால் தொடர்பு நிலை அறுபடுவதாலேயே போர் துவங்குகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சொற்களால் சமாதானப்படுத்தி நம்ப வைக்க முடியாத போது போர்க் கருவிகளை எடுக்கின்றோம். அவை பயனற்றுப் போகும் போது மீண்டும் பேச முயல்கின்றோம்.அதுவும் பயன் தருவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்த சுழற்சியிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றோம். இந்த ரோலர் கோஸ்டர்  பல்வேறு மோதல்களுக்கு வழி வகுக்கின்றது. இவற்றின் விளைவாக இன்று உலகில் அதிக அளவில் துப்பாக்கிக் கடைகள் உள்ளன, அதிக பயம் மற்றும் நம்பிக்கையின்மை எங்கும் காணப் படுகின்றன.

மன அழுத்தத்திற்கு யோகாவே மருந்து ப்ரோசெக் மாத்திரைகள் அல்ல. ப்ரோசெக் மாத்திரை தார்க்காலிக  நிவாரணம் அளிக்கலாம், ஆனால் நாளடைவில் பயன் தருவதை  நிறுத்தி விடும்.

நமது குழந்தைகளுக்கு அந்த நிலை ஏற்படுவதை நிச்சயம் நாம் விரும்ப மாட்டோம் அல்லவா? குழந்தைகளுக்கு மேம்பட்ட சூழலையும் உலகையும் அளிக்க விரும்பும் இங்குள்ள ஆண்களும் பெண்களும் நான் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான இடம் தேவை. இதை அடையும் வழி, அனைவரையும் ஒன்று திரட்டுவதுதான். பல்வேறு மனங்கள், பண்பாடுகள், சமயங்கள், நாகரீகங்கள் ஒன்றிணைய வேண்டும். அனைத்து வயதினர் அனைத்துத் தலைமுறையினர் ஒன்றிணைய வேண்டும். இது மிகவும் முக்கியமானது ஆகும். உலகெங்கும் ஒரு பெரிய தலைமுறை இடைவெளியினை காண்கின்றோம்.தந்தையும் மகனும் ஒத்துப் போவதில்லை. தாய்க்கும் மகளுக்குமிடையே புரிதல் இல்லை. அதனால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. குடும்ப பண்புகள் சரியாக இருந்தால், மன அழுத்தம் இத்தனை பெரிய பிரச்சினையாக ஆகியிருக்காது. உலக சுகாதார நிறுவனம் வரும் பத்தாண்டுகளில் மன அழுத்தம் உயிர்க் கொல்லிகளில் ஒன்றாக விளங்கும் என்று கூறியிருக்கின்றது. ஐரோப்பாவில் 40 விழுக்காடு மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

மகரிஷி பதஞ்சலி "ஹேயம் துக்கம் அனாகதம்" என்று கூறுவது போன்று துக்கம் உங்கள் வீட்டு வாயிலில் வரும்போதே அதைத் தடுத்து நிறுத்துங்கள். அதுவே யோகா, அதுவே தியானம், ப்ராணாயாமத்தின்  நோக்கமும் அதுவேயாகும். இவற்றின் நல்ல பயனை நாங்கள் 152 நாடுகளில் கண்டறிந்திருக்கின்றோம். இந்த நாட்டிலும் அனேகமாக மக்கள் சாதாரண நிலைக்குத் திரும்ப உதவியிருக்கின்றது.

செப்டம்பர் 11 நிகழ்விற்கு பின்னர் நாங்கள் யோகா, ப்ராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை தீயணைப்பு வீரர்களுக்கும் காவலர்களுக்கும் கற்றுக் கொடுக்கத் துவங்கினோம். ஓர் சிறிய மையத்தினைத் துவக்கினோம், இன்று அது பெரிதாக வளர்ந்து பல மக்கள் தினந்தோறும் வந்து பயன் பெறுகின்றனர்.வீட்டிற்கு நல்வரவு என்னும் குழுவினைத் துவக்கினோம். அது இராக், ஆப்கன் வியட்நாம் போர்களில் போரிடுபவர்களுக்காகத் துவங்கப்பட்டது. அவர்கள் இந்த மூச்சுப் பயிற்சி, தியானம் சில ஆசனங்கள் ஆகியவற்றைக் கற்று அவர்களது வாழ்வே முற்றிலும் மாறி விட்டது. பெரும் மாற்றம் தோன்றியது. அவர்களில் சிலரை நான்  சில செனட் உறுப்பினர்களுடன் நாளை சந்திக்கப் போகின்றேன்.

நான் ஓர் முக்கியமான கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எதியோப்பியா ஒரு ஜனநாயகக் குடியரசாக மாறிய போது மக்களுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியவை பற்றிக்  கற்பிக்க வேண்டியிருந்தது. அறியாமை நிறைந்த அவர்களுக்கு இவை எதுவும் பற்றித் தெரியவில்லை. எதிர்க் கட்சி ஆளும்கட்சியை ஆதரித்தும், ஆளும் கட்சியினர் தங்களுக்குள்ளேயே எதிர்த்துக் கொண்டும் இருந்தனர். ஜனநாயகத்தின் கோட்பாடுகள் பற்றி எதுவும் தெரியாததால் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் அவர்களுக்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பற்றிக் கற்பித்தனர். அதனால் வேறொரு பிரச்சினை தோன்றியது. கட்சிகள் இரண்டும் மிகுந்த பகைமைக்கு ஆளாகி ஒருவரையொருவர் சந்திக்கக் கூட விருப்பமில்லாத அளவுக்கு வெறுக்கத் துவங்கினர். அப்போது அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் ஒன்றிணைந்து இந்திய தூதரகத்தின் உதவியுடன் ஓர் வாழும்கலை பட்டறைக்கு ஏற்பாடு செய்தன. இந்திய தூதுவரின் மனைவி ஓர் வாழும்கலை ஆசிரியர். அவர் வேறு சில ஆசிரியர்களுடன் சேர்ந்து வாழும்கலைப் பயிற்சியினை அளித்தார்.

நான் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கு வாழும்கலை என்று பெயரிட்டேன், ஏனெனில் அப்போதெல்லாம் யோகா என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.இந்தப் பயிற்சிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நல்லிணைப்பு ஏற்பட்டது. அவர்கள் என்னை அங்கு  பேசவும் அழைத்தார்கள். மக்களின் மனங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஊழல் மிகுந்தவர்கள் கருணை மிக்கவர்களாக மாறினார்கள். தங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.எங்கு சார்பின்மை ஏற்படுகின்றதோ  அங்குதான் ஊழல் என்பதே துவங்கும். யோகா அனைவரிடமும் ஓர் நல்ல இணைப்பினையும் சார்புடைமையையும் தோற்றுவிக்கின்றது.