உணர்ச்சிகளை சமாளிக்க ஆரோக்கியமான வழி

சனிக்கிழமை, ஏப்ரல்-25-2015

பாரிஸ், பிரான்ஸ்

Bonjour Comment ca ya? (ஹலோ, எப்படி இருக்கீங்க?) அருமை! உங்களுடன் இருப்பது அவ்வளவு அருமையாக இருக்கிறது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு இங்கு வருகிறேன்;பல பழைய முகங்கள், இன்னும் அதே புன்னகையுடன். அன்பான ஒன்றை பற்றி இன்று மாலை நாம் உரையாடலாம். உண்மையாகவே நமது இதயத்துக்கு நெருக்கமான ஒன்றை பற்றிப் பேச, முறைமைகள் தவிர்த்த, சகஜமான மனதிற்கு இதமான சூழல் வேண்டும்; முறைமையான சூழல் வசதியில்லை.


நம் தினசரி வாழ்க்கையில், அக்கறையான பல விசாரிப்புகளை பரிமாறிக் கொள்கிறோம். யாரவது உங்களுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வந்து தந்தால், நீங்கள்,“மிக்க நன்றி, merci beaucoup” என்று சொல்கிறீர்கள்.அதிலுள்ள merci beaucoup (மிக்க)க்கு எந்தப் பொருளும் இல்லை; இல்லையா? நாம் அப்படிச் சொல்லும் பெரும்பாலான முறைமை சொற்கள், எல்லாம் அல்ல, உதட்டிலிருந்து வருபவை, இதயத்திலிருந்து அல்ல. விமானத்திலிருந்து வெளி வரும்போது விமான பணிப்பெண், “இந்த நாள் நன்றாக இருக்கட்டும்!” என்கிறார்.அதை அவர்கள் பொருளுணர்ந்து சொல்வதில்லை. ஆனால் அதே வார்த்தைகளை உங்களுக்கு நெருக்கமானவர் சொன்னால் அதில் ஒரு அதிர்வு இருக்கிறது. “இந்த நாள் நன்றாக அமையட்டும்!” என்று உங்கள் பாட்டியோ அல்லது தாத்தாவோ சொல்வதற்கும் விமானப் பணிப்பெண் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

நாம் வார்த்தைகள் மூலமாக கொஞ்சம் தான் சொல்கிறோம், நம் அதிர்வுகள் மூலமாகவே அதிகம் சொல்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஏராளமாக அதிர்வுகள் கொண்டிருக்கிறோம். அதிர்வுகளே நம்மை நண்பராகவோ அல்லது எதிரியாகவோ ஆக்குகிறது, அதிர்வுகளே ஒரு விஷயத்தை நடத்தி முடிக்கிறது அல்லது முடிக்காமல் தடுக்கிறது! அனைவரும் நேர்மறையான அதிர்வுகள் கொள்ள விரும்புகிறோம், ஆனால் எப்படியோ மனதில் சிக்கிக்கொண்டோம்; கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டோம். பிறகு என்ன நடக்கிறது? நமது அதிர்வுகள் எதிர்மறையாய் ஆகி மனஅழுத்தம் ஏற்படுகிறது. கோபம், அன்பு போன்ற உணர்சசிகள் எல்லாம் அதிர்வுகள் மூலமே சொல்லப்படுகிறது.
நம் வாழ்கையை நாம் மேலோட்டமாக வாழ்ந்தால், விரைவில் அது நம்மை மன அழுத்தத்திற்கு கொண்டு சென்று விடும். இதுதான் இன்று நம் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 

ஐரோப்பாவில் 40% மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால், எப்படி நமது அதிர்வுகளை சுத்தம் செய்வது, எப்படி அதை நேர்மறையான அதிர்வுகளாக மாற்றுவது என்று வீட்டிலோ அல்லது பள்ளியிலோ சொல்லித் தருவதில்லை. நாம் மனிதர்கள், நமது வாழ்வின் பெரும்பகுதியை ஆள்வது உணர்ச்சிகளே. உணர்ச்சிகள் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. எப்படி நமது உணர்ச்சிகளை நேர்மறையாக்குவது அல்லது எது சரியான உணர்ச்சி தண்ணீரில் வரைந்த கோடு எவ்வளவு நேரம் இருக்கிறதோ அவ்வளவு நேரமே எதிர்மறை உணர்ச்சிகள் நம்மிடம் தங்க வேண்டும் என்று கூறும் ஒரு பழமொழி பண்டைய இந்தியாவில் உண்டு. நீங்கள் கோபப்படக் கூடாது, வருத்தம் கொள்ளக் கூடாது அல்லது பொறாமை கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை; பரவாயில்லை! நீங்கள் கத்தலாம், கோபப்படலாம்,வருத்தப்படலாம்; ஆனால் அது சில நிமிடங்களுக்கு மேல் தங்கக்கூடாது; அப்போது தான் அது ஆரோக்கியமானது. 

வருத்தப்பட்டு சோர்வடைவது சாதாரணமானது தான்,அதை மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தக்க வைத்துக் கொள்வது அசாதாரணம். நீங்கள் குழந்தைகளை போல இருக்க வேண்டும். குழந்தைகள் அழும்போது பார்த்திருக்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்,அழுகையிலிருந்து மீண்டு புன்னகைக்க. ஆனால்,பெரியவர்கள் அழுதால், மறுபடி புன்னகைக்க பல மாதங்கள் கூட ஆகலாம்; உண்மையில் நமக்கு எவ்வளவு காலம் அப்படி இருக்கிறோமென்று கூடத் தெரியாது. எப்படி முடியும்? 

குழந்தைகளை போல புன்னகையை திரும்பப் பெறுவது எப்படி? உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன்! உங்களை யாரவது பாராட்டும் போதோ அல்லது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதோ நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கவனித்ததுண்டா? உங்களில் ஏதோ ஒன்று விரிவடைகிறது, சரியா?  உங்களை யாராவது இகழும் போது எப்படி உணர்கிறீர்கள்? உங்களில் ஏதோ ஒன்று உடைகிறது. வெளியிலிருந்து வரும் தூண்டல்களுக்கு ஏற்ப உங்களுக்குள் விரிந்து சுருங்கும் தன்மையுள்ள அந்த ஒன்றுதான் பேருணர்வு . பேருணர்வு அல்லது மனம் விரிந்து சுருங்கும் திறனுள்ளது. இது உங்களுக்கு தெரிந்தால், இதைப் புரிந்துகொண்டு அனுபவித்திருந்தால், யாராலும் உங்களிடமிருந்து புன்னகையை பறிக்க முடியாது. இதை சுயத்தை அறிதல் என்று பெரிய வார்த்தைகளில் கூறுவார்கள்.ஆனால் நான் சொல்கிறேன், இது வெகு எளிது! மூச்சு நுட்பங்கள், 

தியானம் இவையனைத்தும் உங்கள் அதிர்வுகளை நேர்மறையாக்கும் நோக்கம் கொண்டவை.
குழந்தைகளின் பார்வை எப்படிப்பட்டது தெரியுமா?அவர்கள் உங்களைப் பார்க்கும்போது அவர்களின் மனம் நூறு சதவீதம் உங்கள் மீது இருக்கிறது. ஆனால் நீங்கள் யாரையாவது பார்க்கும் போது, உங்கள் மனம் வேறு எதையாவது நினைத்துக்கொண்டிருக்கிறது. நம்மிடம் உள்ள உயிர்ச்சக்தியை தூண்டும் போது, நாம் மறுபடி குழந்தைகளை போல ஆகிறோம்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு யோகி; ஒவ்வொரு குழந்தையும் எல்லா யோகாசனங்களையும் செய்கிறது. நாம் எல்லோரும் குழந்தைகளாக இருந்த போது, இதைச் செய்திருக்கிறோம். மூன்று மாதத்திலிருந்து மூன்று வயதுவரை ஒரு குழந்தையை நன்கு கவனித்தால் நமக்கு யோகா சொல்லித்தர ஆசிரியர் தேவையில்லை.அது அர்ஜெண்டினாவாக இருந்தாலும், மங்கோலியாவாக இருந்தாலும், ஜப்பானாக, சீனாவாக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தக் குழந்தையும் எல்லா யோகாசனங்களையும் செய்கிறது, சுவாசத்தை வித்தியாசமாக செய்கிறது.குழந்தை சுவாசிப்பதற்கும் வளர்ந்த மனிதர் சுவாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது;ஏனென்றால் குழந்தைக்கு மன அழுத்தம் இல்லை.

நமது அதிர்வுகளை எப்படி சுத்தம் செய்வது, மனதை எப்படி சுத்தம் செய்வது, எப்படி அமைதியை அடைவது எப்படி என்பதெல்லாம் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ யாரவது சொல்லித் தருகிறார்களா? இந்தக் கல்வி மிக்க அவசியம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அமேசான் காடுகளில்,ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வாழும் மக்கள் பற்களை சுத்தம் செய்வதில்லை. இதை அவர்களுக்கு யாரும் கற்றுத் தரவில்லை. இதனால் அவர்களில் பலருக்கு சில பற்களே இருக்கிறது. நம் எல்லோருக்கும் பற்களை சுத்தம் செய்ய சொல்லித் தந்திருக்கிறார்கள்; இது பற்களின் ஆரோக்கியம்; இது நமது கலாசாரம்.அதைப் போல மன ஆரோக்கியம் கற்க வேண்டும், அதாவது தியானம். நம் மனதிலிருந்து கோபம்,பேராசை,பொறாமை மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மனதிலிருந்து எப்படிக் களைவது என்பதை நம் மக்களுக்கு நாம் சொல்லித் தந்தாக வேண்டும். 

சுவாசப் பயிற்சியினால்,தியானத்தினால்,நம்மை நாமே உயிர்ப்போடும்,அன்போடும்,அக்கறையோடும், காருன்யத்தோடும், புத்தியோடும் வைத்துக்கொள்ள வேண்டும். தியானமும் ஆன்மீகப் பயிற்சிகளும் என்ன செய்கிறது?அதாவது புதியதை கண்டுபிடிக்கும் திறன், உள்ளுணர்வு, ஊக்கம் மற்றும் புத்திசாலித்தனம். சந்தேகத்தை பற்றி ஒரு விஷயம்;மனிதர்களாக நாம் எப்போது அனுமானம் செய்துகொண்டு சந்தேகப்படுகிறோம்? சந்தேகம் கொள்வது நல்லது தான். நான் இப்போது பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் கேட்கிறீர்கள்,ஆனால் உங்கள் மனதில், “இல்லை, இதை நான் ஏற்கமாட்டேன், அது எப்படி இப்படி?” அல்லது, “ஆம், இதை ஏற்கிறேன்.” உங்களுக்குள் ஒரு உரையாடல் நடக்கிறது, அதுவே புத்தி.

சந்தேகத்தின் இயல்பை அறிந்து கொள்ளவேண்டும். சந்தேகம் ஒரு நேர்மறையான விஷயத்தை பற்றி மட்டுமே வருகிறது; ஒருவரின் நேர்மையை சந்தேகப்படும் நீங்கள் அவரின் நேர்மையின்மையை சந்தேகிப்பதே இல்லை. இதை உணர்ந்திருக்கிறீர்களா? நேர்மையின்மையை சந்தேகிப்பதே இல்லை. யாராவது உங்களை, “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்,” என்று சொன்னால், நீங்கள் “உண்மையாகவா?”. ஆனால் யாராவது உங்களிடம், “நான் உன்னை வெறுக்கிறேன்”, என்று சொன்னால் நீங்கள், “உண்மையாகவா?” என்று கேட்பதில்லை. சந்தேகம் எப்போதும் நேர்மறையான ஒன்றைப் பற்றி மட்டுமே.

யாராவது உங்களிடம், “நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களா?”, என்று கேட்டால், நீங்கள் சற்று யோசித்து, “எனக்குத் தெரியவில்லை” என்றே கூறுகிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியை சந்தேகப் படுகிறீர்கள். யாராவது உங்களிடம், “நீங்கள் மனத்தாழ்ச்சி கொண்டிருக்கிறீர்களா?” என்றால், நீங்கள் நிச்சயம் உங்கள் மனத்தாழ்ச்சியை உறுதி செய்கிறீர்கள். ஏன் ஒரு மருத்துவரே வந்து உங்களிடம், “உங்களுக்கு மனத்தாழ்ச்சி ஏதுமில்லை”, என்று கூறினால், நீங்கள், “இல்லை, மருத்துவருக்கு என்ன தெரியும்,எனக்கு மனத்தாழ்ச்சி இருக்கிறது,” என்றே கூறுவீர்கள். நமது மகிழ்ச்சியை சந்தேகப்படும் நாம் நம் மனத்தாழ்சியை சந்தேகப்படுவதில்லை.

நம் வாழ்க்கையில் ஏதாவதொன்றில் நாம் சிக்கிவிட்டால், பொதுவாக ஒரு நிலைப்பாட்டில் சிக்கி விடுகிறோம்; புத்தி தான் சிக்கிகொள்கிறது, இதைத் தான் முன் அனுமானம் என்கிறார்கள். அதைப் போலவே, நமது ஞாபகமும் எதிர்மறை விஷயத்தையே பற்றி கொள்ள விழைகிறது. யாரவது நம்மைப் பற்றி பத்து பாராட்டுகள் தெரிவித்து விட்டு ஓரே ஒரு குறை கூறினாலும், நீங்கள் எதைப் பற்றிக் கொள்கிறீர்கள்? பத்து பாராட்டுகளையும் மறந்துவிட்டு ஒரே ஒரு எதிர்மறை விஷயத்தையே பிடித்துக்கொள்கிறோம். இதை நீங்கள் தலைகீழாக மாற்ற வேண்டும்; எதிர்மறை விஷயத்தை நாடுவதிலிருந்து நேர்மறை விஷயதிற்கு உங்கள் நாட்டத்தை தலைகீழாக மாற்றுவது யோகப் பயிற்சியும் தியானமும் தான்.

எனவே, எதிர்மறை விஷயத்தையே நமது ஞாபகம் தக்க வைத்துக் கொள்கிறது. குழந்தைகள் விஷயத்தில் அப்படி அல்ல; அவர்கள் நிகழ் கணத்தில் வாழ்கிறார்கள். நமது மனதை, நமது மூளையை நிகழ் காலத்தில் இருக்க வைக்கவேண்டும். அதிக படைப்புத்திறன் கொண்டவராகவும் மிக மகிழ்ச்சியானவராகவும் மாற முடியும். வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனம், தயக்கமில்லா புத்தி, கலவரமற்ற ஞாபகம் மற்றும் துயரில்லா ஆன்மா, இவையே ஒவ்வொரு தனி மனிதரின் பிறப்புரிமை. குருதேவ் ஏன் இந்தப் பக்கம் பார்க்கவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? (மாடிப்பகுதியில் அமர்ந்திருந்த அவையோரை நோக்கி) சரியா? எத்தனை பேர் அப்படி நினைத்தீர்கள்? பாருங்கள், எண்ண அதிர்வுகள் தெரிகிறது. நமது மனம் மிக அருமையான ஒரு கருவி. நாம் ஒவ்வொருவருடனும் தொடர்பிலுள்ளோம்; நாம் எல்லோரும் தொடர்பிலிருக்கிறோம்; நாம் அனைவரும் ஒரு உயிரின் பகுதி, ஒரு மனித மனம். இந்தச் சிறிய மனங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக்கும் ஒரு பெரிய மனம் இருக்கிறது; ஒரு பெரிய மனம், மிக வியப்பானது!