வாழ்க்கை ஒரு விளையாட்டு

வியாழக்கிழமை - 16 ஏப்ரல்- 2015,

பெங்களூரு - இந்தியா



வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். ஞானம் இல்லையெனில் வாழ்க்கை ஒரு போராட்டம். ஞானம் இருந்தால் போராட்டமாக தோன்றிய அதே வாழ்க்கை விளையாட்டாக மாறிவிடும். வெற்றி, தோல்வி எது விளைந்தாலும், மகிழ்ச்சியாகவே இருக்கின்றீர்கள். வாழ்க்கை ஒரு போராட்டம் என்று நீங்கள் உணர்ந்தால் வெற்றி கூட தோல்வியை போன்று அவலமாகவே திருப்தியற்று இருக்கும். ஆனால் வாழ்க்கையை ஒரு பாதையாக பார்த்தால், ஆடலும் பாடலுமாக சுலபமாகவே இருக்கும்.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது பாடிக் கொண்டும்,ஆடிக் கொண்டும், வெளியில் சுற்றிக் கொண்டும் இருப்பார்கள். அவ்வாறு சுற்றும்போது நோக்கம் எதுவும் இருக்காது. நீங்கள் நேராக நடந்தால் ஏதோ ஒரு இலக்கை அடைய விரும்புகிறீர்கள் ஆனால் சும்மா சுற்றிக் கொண்டிருந்தால் அது விளையாட்டு. அது ஒரு பந்தயப் பாதையில் குதிரைப் பந்தயம் நடத்துவது போன்றதாகும். பந்தயப்பாதையில் குதிரை எங்கும் சென்றடைய வேண்டியதில்லை. அது போன்றே கிரகங்களும் சுற்றிச் சுற்றி போய்க் கொண்டிருக்கின்றன. அவை உங்களுக்கு அளிக்கும் செய்தி: இது ஒரு விளையாட்டு என்பதேயாகும்.

பழங்கால ரிஷிகள் வாழ்க்கையை ஒரு லீலை என்று கூறினார்கள். லீலை என்றால் விளையாட்டு அல்லது வேடிக்கை. அதை ஸ்ரீ ராமரின் ஸங்கர்ஷ் அல்லது போராட்டம் என்று கூறவில்லை. அவர்கள் ராம்லீலா (ராமரின் விளையாட்டு) என்றே கூறினார்கள். வாழ்க்கை விளையாட்டுப் போன்றதானால் முழு அணுகுமுறையும் இரு விதங்களில் இலகுவாகவே இருக்கும்: நீங்கள் லேசாகவே உணருவீர்கள், அது உங்களுக்கு ஒளியூட்டும்.

எப்போதும் ஆத்மாவுடன் தொடர்பில் இருக்க காலையில் எழுந்ததும் முதலில் என்ன எண்ண அல்லது செய்யவேண்டும், நாள் முடிவில் என்ன எண்ண அல்லது செய்யவேண்டும்?

தியானம். காலையில் பல் துலக்கிவிட்டு, சிறிது உடல் சுத்தம் செய்து கொண்டு, தியானம் செய்ய அமர வேண்டும். நாளின் முதலில் மற்றும் நாள் முடிவில் தியானம் செய்ய வேண்டும். எதைச் செய்தாலும் நெறிகளுடனும் விழிப்புணர்வுடனும் செய்யுங்கள்.

ஆன்மீகத் தேடலில் எந்த அளவுக்கு சமயப் பற்று உதவும்?

அது வித்தியாசமான கோணம். வாழ்க்கையில் சிறிதளவு சமயப்பற்று போதும். உங்களுக்கும் சமுதாயத்திற்கும் தேவையான அளவு சுவையினை அளிக்கும். கோவிலுக்கு, தேவாலயத்திற்கு, மசூதிக்கு சென்று தான் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யவேண்டும் என்பதில்லை. ஆனால் யாருமே செல்லவில்லையென்றால், அத்தனை கோயில்களும் என்னவாகும்? எல்லோருமே கடவுள், என் வீட்டில், என் இதயத்தில் மற்றும் எங்கும் நிறைந்திருக்கின்றார் என்று கூறிவிட்டால் ஒரு தலைமுறைக்கு சரி, ஆனால் பின் வரும் தலைமுறைகளில் என்னவாகும்? முழு அமைப்பும் சரிந்து விடும். இந்தப் பழமையான முறையினை, கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். 

எனவே கோவில்கள் என்பவை கடவுளைத் தேடும் இடமாக மட்டுமின்றி, சமூக கலாச்சார நிகழ்வுகளுக்குரிய இடமாகவும் இருக்கின்றது. அந்த முறையில், இந்த பாரம்பரியத்தைக் காப்பது சிறந்தது என்று நான் கருதுகின்றேன்.

என்னுடைய கல்வியை விட நான் ஞானச் செய்திகளில் அதிக இணக்கத்துடன் இருக்கின்றேன். என்ன செய்வது? என் பெற்றோரிடம் இது பரவாயில்லை என்று தயவு செய்து கூறுங்கள்.

ஞானச் செய்திகளில் நீங்கள் ஈடுபாட்டுடன் இருப்பது நல்லதே, ஆனால் கல்வியிலும் நிறைய முயற்சிகளை செய்ய வேண்டும். ஞானச் செய்திகளில் முயற்சி தேவையில்லை, ஆனால் படிப்பில் அதிக முயற்சி எடுக்க வேண்டும் ஏனெனில் உங்கள் விருப்பம் அதுவல்ல. ஆகவே எது முயற்சியின்றி உங்களுக்கு வருகின்றதோ, அது உங்களுக்கு சுகம் அனுபவித்தலில் ஒரு பகுதி, ஆனால் எதில் நீங்கள் முயற்சி அதிகம் எடுக்க வேண்டுமோ அது உங்களுக்கு நீண்ட கால அம்சங்களில்  உதவும்.

குருதேவ், நாம் சில எண்ணங்கள் பகிரங்கமாக நிஜமாக  வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அது ஒரு செயல் நுட்பமா? விவரித்துக் கூறுங்கள்.

எண்ணம், கவனம்,மற்றும் வெளிப்பாடு. உங்களுக்கு ஒரு உள்நோக்கம் இருந்தால், பிரபஞ்சத்திற்கு, உயர் ஆத்மாவிற்கு அல்லது நீங்கள் நெருக்கமாக விரும்பும், உங்கள் பெற்றோர், அல்லது மூதாதையர், சொந்த தேவதைகள், கடவுளர்கள் அல்லது குருவிற்கு அர்ப்பணம் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது,"இது என் விருப்பம்" என்று கூறி பொறுமையாக இருங்கள். நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நல்லதானால், நடக்கப் போகிறது.நடக்கும். விருப்பம் நல்லது என்றால் அது நடக்கப் போகிறது.

குருதேவ், பக்த பிரஹலாதன் போன்று எவ்வாறு நான் ஆவது? அது தானாகவே நிகழுமா? அல்லது நான் முயற்சி செய்யவேண்டுமா?

இது எவ்வாறு இருக்கிறதென்றால்," எவ்வாறு ஒன்றை விரும்புவது? எவ்வாறு மாம்பழங்களை விரும்புவது? எவ்வாறு வாழைப்பழங்களை விரும்புவது " என்று நீங்கள்  என்னைக் கேட்பது போன்றிருக்கின்றது. அவற்றை விரும்ப எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாகவே நடக்கும். பக்தப் பிரஹலாதன் போன்று இருக்க வேண்டும் என்ற விருப்பமே நீங்கள் அந்தப் பாதையில் ஏற்கனவே இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள செய்கின்றது.

உங்கள் பார்வை விரிவாகும் போது, நீங்கள் உயர்ந்து செல்கிறீர்கள். பிரஹலாதன் உயர் நிலைக்குச் சென்றான். அஹலாதா என்றால் ஆனந்தம். பிரஹலாதா என்றால் பேரின்பம். ஹிரண்யகசிபுவின் கதையில், அவனது நோக்கமே பிரஹலாதா (பேரின்பம்) தான். இன்றும் நீங்கள் ஹிரண்யகசிபுவைப் போன்ற பலரைக் காண்கிறீர்கள். ஹிரண்யகசிபு என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஹிரண்யா என்றால் பணம். கஷ்யப் என்றால் பணத்தை மட்டுமே பார்ப்பவன். பெற்றோர், உறவுகள் போன்ற வேறெதுவும் பொருட்டில்லை. பணம் மட்டுமே பிரதானம். பணத்திற்கு பெற்றோரைக் கூட நீதிமன்றத்துக்கு இழுக்கும் அல்லது எதையும் செய்யும் வகையினர். இவர்களனைவரும் ஹிரண்ய கசிபுக்கள்தாம். அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் நோக்கமே பிரஹலாதாவை (பேரின்பம்) எடுத்து வருவது. பேரின்பம் ஹிரண்யகசிபுவிடம் சிறைப்படாது. அது எப்போதுமே நாராயணனை நோக்கியே செல்லும்.

உயர்ந்த ஆத்மாவை உயர்ந்த பேரின்பத்தை வழங்க முடியும். அதற்குத் தைரியம் தேவை. நரசிம்மா அந்த தைரியம். சிங்கம் போன்ற தைரியம். மனித மெய்யுணர்வு சிங்கம் போன்று கர்ஜிக்கும் போது, அது காட்டிலிருக்கும் சிங்கத்தைப் போன்று ஸ்திரமான அதிகாரம் உடையது. பிரஹலாதன் நரசிம்மரின் ஒரு தொடையிலும், லக்ஷ்மி மற்றொரு தொடையிலும் அமர்ந்திருக்கின்றனர்.அதாவது பேரின்பம் ஏற்கனவே உங்களிடம் இருக்கும்போது செல்வம் உங்களை வந்தடைகின்றது. அதுவே ஹிரண்யகசிபு, பிரஹலாதன் ஆகியோரின் முழுக் கதை. மிக அழகானது! யார்தான் பணத்தை தேடவில்லை? ஆனால் ஒருவன் சிங்கம் போன்றிருந்தால், அவன் பணத்தை மட்டுமே வேண்ட மாட்டான். செல்வம் மற்றும் பிற அனைத்தும் தானகவே தன்னை வந்தடையும் என்று அவனுக்குத் தெரியும். அதுவும் முயற்சியின்றி வரும். ஆகவே அவன் ஹிரண்யகசிபுவை அழித்து, ஆனந்தம் என்னும் பிரஹலாதனை மேம்படுத்துகின்றான். இதுதான் இக்கதையின் உட்பொருள்.,

சீண்டிக் கொடுமைப்படுத்துபவர்களை எவ்வாறு தடுப்பது?


அவர்களைத் தடுக்கத் தேவையில்லை. நீங்கள் அதற்கு ஆளாகாதீர்கள். அவ்வளவுதான். எவ்வாறு சீண்டுவார்கள்? ஏதேனும் கூறுவார்கள் அல்லவா? செவிடு போன்று நடித்து விடுங்கள். காது கேளாதது போன்றும் அவர்கள் பேசும் மொழி புரியாதது போன்றும் நடித்து விடுவது தான் சிறந்த வழி. அவர்களைப் புகழுங்கள். ஆச்சர்யப்படுத்துங்கள். “ஓ சீண்டுவதில் நீங்களே வல்லவர்!" என்று கூறுங்கள். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருந்தால் எந்தக் கடினமான நிலைமையையும்   தாண்டிச் சென்று விடலாம் புரிந்ததா?