நினைவுகள்

புதன் கிழமை 23,  செப்டம்பர் 2015

பெங்களூர், இந்தியா


கேள்வி - பதில்கள்

குருதேவா ! இன்று சுதர்சன கிரியா கோடிக்கணக்கான உலக மக்களின் வாழ்க்கையில் நன் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது. அல்லது அது எப்படி உங்களுக்குக் கிடைத்தது?

காலத்தின் தேவைப் படி ஞானம் மக்களுக்காக வெளிப்படுகிறது. தன்னிச்சையாக நிகழ்கிறது. இது ஆச்சரியம். இப்படைப்பு நமக்குத் தெரியாத பல ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது. பல முறை நாம் அதிசயங்கள் நடப்பதைப் பற்றிப் பேசுகிறோம். எல்லோருடைய வாழ்க்கையிலும் அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்கின்றன.

நமக்குள் அமைதியாக நம் ஆன்மாவின் ஆழத்தில் ஒன்றியிருக்கும் போது, அதிசயங்களுக்குக் குறைவே கிடையாது. படைப்பின் அதிசயங்களுக்கு முடிவு கிடையாது. அதிசயம் என்பது யோக சாதனைகளின் முகவுரையாகும். நம் வாழ்வில் ஆச்சரியமான நிகழ்வுகள் துவங்கும் போது, இயற்கையாகவே நம் வாழ்வின் மற்றொரு பரிமாணத்தை உணரலாம். இதுவரை வெளிப்படாத, கண்ணால் காண முடியாத, சூட்சுமமான, இது வரை கற்பனை செய்ய முடிந்ததை விட மகத்தான ஒன்றைப் பற்றி அறியலாம்.
இந்த அனுபவம் சில முக்கியமான மனிதர்களுக்கு மட்டுமல்ல. யாருக்கு வேண்டுமானாலும் இந்த அனுபவம் வர முடியும். ஆனால் உண்மையில் சிலர்  மட்டுமே அனுபவிக்கிறார்கள்.

குருதேவா ! நான் இன்று இங்கு வரும் போது, துபாயிலிருக்கும் என் நண்பர் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். உங்கள் குரலைப் பதிவு செய்து அவருக்கு அனுப்பச் சொல்லியிருந்தார். உங்களை ஆசிர்வதிக்க சொல்லியிருக்கிறார். இது வரை அவர் உங்களை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் உங்கள் ஞானம் பற்றிய அறிவுரைகளை யூ.ட்யூபில் (வீடியோ) பல முறை கேட்டிருக்கிறார். துபாய் மற்றும் அபுதாபியிலிருக்கும் பல மக்கள் உங்கள் ஸத்சங்கப் பதிவுகளை வீடியோவில் கண்டு, கேட்பதை வழக்கப் படுத்திக் கொண்டு, மன உளைச்சலிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

இது நவீன தொழில் நுட்பத்தால் கிடைத்த பெரிய பரிசு. தொழில் நுட்பம் காரணமாக உலகின் எல்லா இடங்களுக்கும் நாம் தொடர்பு கொள்ள முடிகிறது. இது வரை, வெகு சிலரிடம், இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ஞானம் இப்போது பலருக்குச் சென்றடைகிறது. இண்டர் நெட் மூலம் வெகு விரைவாக பலரைத் தொடர்பு கொண்டு, ஞானத்தைப்  பகிர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் ஞானத்தின் கதவுகளை எல்லோருக்காகவும் திறந்து விட நான் விரும்பினேன். இந்த ஞானம் (சுதர்சன கிரியா) விலை மதிக்க முடியாதது. இது ஜாதி, மதம், இன வேறு பாடின்றி எல்லோருக்கும் அளிக்கப்  படுகிறது. இது உலகின் எல்லா இடத்திலுமுள்ள மனித சமுதாயத்தை சேர்ந்து. சமுதாயமனைத்தும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும், இந்த ஞானத்தால் பயனடைய முடியும்.

மத வழிபாட்டுடன், சில பயிற்சிகளைப் பின் பற்றுவதால், மனம் ஆனந்தமும் அமைதியுமடையுமென்று நினைக்கிறேன். ஆன்மீகப் பயிற்சிகள் மிக முக்கியமானவை. ஆன்மீகம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் இன்றியமையாதது. பயிற்சிகள் உடலுக்கு வலுவைக் கொடுக்கிறது. மனமும் இதயமும் ஆனந்தத்தால் மலரும். அறிவாற்றலைக் கூர்மைப்படுத்தும். இந்த ஞானம் எல்லோரையும் சென்றடைய வேண்டுமென நான் நினைக்கிறேன். ஆகவே, இந்தியாவின் பழங்கால பொன் மொழியான வசுதேவ குடும்பகம் (உலகமனைத்தும் ஒரே குடும்பம்) என்பதற்கேற்ப, ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த ஞானத்தை எடுத்துச் செல்வதற்காக வாழும் கலை நிறுவனம் துவங்கப்பட்டது.

குருதேவா ! உலகிலுள்ள ஒவ்வொருவரும் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் செல்வாக்கு, வலிமை பெற்றவர்களாக இருந்தாலும் சரி, மிகவும் ஏழையாக இருந்தாலும் சரி. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி தயவு செய்து சொல்லுங்கள்.

நல்லது. நானும் எல்லோரையும் சந்திக்க விரும்புகிறேன். இன்றைய தொழில் நுட்பத்தின் உதவியால் மிகத் தொலைவிலிருக்கும், மூலை முடுக்குகளில் வசிப்பவர்களையும் தொடர்பு கொள்வது சாத்தியமாகி விட்டது. உங்களைப் போன்ற ஊடகத்தில் வேலை செய்பவர்களால், பல மக்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது.

மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை கடிதம் மூலம், இ.மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். இ.மெயில் உதவியால், ஒவ்வொரு நாளும் எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. இரு வகையான தொடர்புகள் உள்ளன.  வெளித் தொடர்பு, 2.     உள் தொடர்பு

நம் ஆத்மாவுடன் (உள்) தொடர்பு கொள்ள வேண்டும். நேர்மையாக மற்றவர்களின் ஆத்மாவோடு நாம் தொடர்பு கொண்டிருப்பதை உணரும் போது, அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு தானாகவே வரும். இதை நாம் புரிந்து கொண்டு, அவர்களை ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டும் தான் தேவை.

நுட்பமான நிலையில், நாமனைவரும் இணைக்கப்பட்டிருக்கிறோம். எல்லோரும் ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டிருக்கிறோம். நம் மூளையில் கோடி கோடி செல்கள் உள்ளன. நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் இப்பிரபஞ்சத்தோடு சேர்ந்தவை. ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான். ஆழ் நிலையில் சென்று, நாமனைவரும் ஒருவரோடொருவர் சேர்ந்திருப்பதை உணர முடியும். தியானத்தின் போது அப்படி உணர முடியும்.

குருதேவா! உங்களைப் பார்த்தவுடன் எங்களுடைய எல்லா புகார்களும், கவலைகளும் தானாகவே மறைந்து விடுகின்றன. நீங்கள் எப்போதாவது கவலைப்படுவதுண்டா ?

நான் எல்லோரையும் பற்றிக் கவலைப்படுகிறேன். இந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படுகிறேன். முழு படைப்பையும் பற்றிக் கவலைப்படுகிறேன். ஆனால் இதை ஒரு பிரச்சினையாகக் கருதுவதில்லை.

குருதேவா ! இப்போது நீங்கள் உள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதைப் பற்றிச் சொன்னீர்கள். நான் உங்களை சந்திக்கத் திட்டமிட்ட போது, பல பெற்றோர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளோடு தொடர்பு கொண்டு, நல்ல உறவோடு இருக்க முடியாமலிருப்பதைக் கண்டேன். உங்கள் குருதேவரிடம் என்ன மாயம் இருக்கிறது? கண்ட உடனே அவரால் ஈர்க்கப் பட்டு, பிள்ளைகள் அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பெற்றோர் சொல்வதைக் கேட்பதில்லை ?

இளைஞர்கள் அதிக உற்சாகமுள்ளவர்கள். எப்போதும், உற்சாகமாக இருப்பதை ஊக்கப்படுத்துபவன்  என்று அவர்களறிவார்கள். இளைஞர்கள் புதிதாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் இங்கு வரும் போது, ஞானத்துக்கான தாகத்தைத் தீர்த்துக் கொள்ள முடிகிறது. இளைஞர்கள் முழு மனதுடன், அன்போடு, ஆனந்தமாக இருப்பதை விரும்புவார்கள். இங்கு அவர்களை நாம் மரியாதையாக நடத்துவோமென்று அவர்களுக்குத் தெரியும்.

ஒருவர் வயதால் மட்டுமே இளைஞராக முடியாது. தங்கள் இதயத்தில் இளமையாக உணர்ந்து, ஆர்வம் மற்றும் உற்சாகத்தோடு இருந்தால், அப்படிப் பட்டவர்களை நான் இளைஞரென்று அழைப்பேன். யார் இன்னும் களைப்படையவில்லையோ, அவரே உண்மையில் இளைஞர். வயது முதிர்ந்தவர்கள் கூட ஆசிரமத்துக்கு வந்தால், வயது குறைந்தது  போல் உணர்கிறார்கள். களைப்பு நீங்குவதை, கவலைகள் மறைவதை உணர்ந்த நேரத்திலேயே உற்சாகம் பெருகி, அவர்கள் புதிய சவால்களை ஏற்கத் தயாராகிறார்கள்.

ஆசிரமத்தில், இளைஞர்களை சமூக சேவை செய்ய ஊக்குவிக்கிறோம். ஏதாவது ஒன்றைப் பெற்று, அல்லது லாபமடைந்தால் கிடைக்கும் ஆனந்தம் ஒரு வகையானது. ஆனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் ஆனந்தம் மற்றோரு வகையாகும். இரண்டாவது வகையில் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கும்.

வாழ்க்கை என்பது பெறுவதில் கிடைக்கும் ஆனந்தத்திலிருந்து, கிடைத்ததை மேலும் மற்றவர்களோடு பகிர்வதில் கிடைக்கும் ஆனந்தத்தை நோக்கிச் செல்லும் பயணமாகும்.  இளைஞர்களிடம் நிறைய சக்தியுள்ளது. அவர்களால் சமுதாயத்துக்கு பல நன்மைகள் செய்ய முடியும். உண்மையில் அவர்களும் அப்படிச் செய்ய விரும்புகிறார்கள்.

“வாழும் கலை” துவங்கி 35 ஆண்டுகள் கழிந்து விட்டன. இதைக் கொண்டாட 2016 ல் உலக கலாசார திருவிழா பெரிய அளவில் புதுடில்லியில் நடக்க இருக்கிறது. பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறார்கள். இப்படிப் பட்ட திருவிழாவுக்கு என்ன அவசியம்? மக்களிடையே இந்த திருவிழா எப்படிப் பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்?

10 ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் வாழும் கலை துவங்கி 25 ஆண்டுகள் நிறைவானதை வெள்ளி விழாவாகக் கொண்டாடினோம். அதற்கு 5 ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு, ஜெர்மனியில் பெர்லின் நகரில் ஒரு உலக கலாசாரத் திருவிழாவை நடத்தினோம். இந்த முறை, திருவிழாவை நட த்தித்தர டில்லி நகரத்துக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. 154 நாடுகளைச் சேர்ந்த மக்கள் உலகம் ஒரு குடும்பம் என்பதை உறுதி செய்வது போல இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள வருகிறார்கள். மக்கள் தங்கள் நாட்டின் வளமையான கலாசாரத்தை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். வாழும் கலையைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து தியானம் மற்றும் யோக சாதனைகள் செய்து கொண்டாடுவதற்காகக் கூடுகிறார்கள்.

இந்நிகழ்ச்சி, உலகமனைத்துக்கும் பொதுவான தனிப்பட்ட சிறந்த உதாரணமாகத் திகழும்.
அன்பையும், அமைதியையும் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல, நமக்கு ஒரு வழியாகும். எதிர்மறை எண்ணங்கள் மற்றும் வன்முறையில் சிக்காமல், அவை பற்றிக் கேட்காமல், அமைதியை பரப்ப இது ஒரு நல்ல வழி. உலக கலாசாரத் திருவிழா, அமைதி, அன்பு மற்றும் பிரபஞ்சத்தின் நல்லிணக்கம் பற்றிய செய்தியை உலக மக்களுக்குத் தெரிவிக்கும். மனித நேயப் பண்புகள் இன்றும் உலகில் சிறந்து விளங்குகின்றன. இன்று இந்தச் செய்தி எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும்.

தற்சமயம், மன உளைச்சல் பரவலாகக் காணப்படுகிறது.மக்கள் குறுகிய மனத்தோடு, தங்களுக்கு என்ன ஆகி விடும், தங்கள் வருங்காலம் என்னவாகும் என்பதை நினைத்து அஞ்சுகிறார்கள். இந்த மன நிலையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதற்காக, நம் எதிர் மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைதியையும் ஆனந்தத்தையும் கொண்டாடுவது அவசியம்.

குருதேவா ! நீங்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது, ஊடகங்களுக்கு அதை முற்றிலும் கவனித்து செய்தியை மக்களுக்குச் சொல்வது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. மாபெரும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதின் பின்னால் உங்களிடம் என்ன இரகசியம் உள்ளது ?

சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உள்ளது. “சிறிய அளவானவைகளில் ஆனந்தம் கிடையாது. ஆனந்தம் எப்போதும் மகத்தான காரியங்களில் உள்ளது. “ எனவே உங்கள் பார்வை விரிந்திருக்கும் போது, நீங்கள் பெரிதாக சிந்தித்து செயல்படும் போது, நீங்களும் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும்.

உன் இதயம் பெரியதாக, தாராளமாக இருக்கும் போது, உன்னால் எப்படி சிறிய காரியம் செய்ய முடியும் ? எல்லாமே தானாகவே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, மகத்தான நிகழ்வுகள் நடக்கத் துவங்கும். இது ஒரு மனிதனின் விருப்பத்தால் மட்டும் நடப்பதில்லை. எல்லோருக்கும் விரிந்த பார்வையும், மகத்தான மன உறுதியும் வேண்டும். இப்படி பெரிய நிகழ்வுகள் எப்படி நடக்கிறது என்று பார்ப்பது மிகவும் சுவராஸ்யமானது. நிறுவனத்திலுள்ள அனைவரும் ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்கிறார்கள். பல குழப்பங்கள் வரும். பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கும். எல்லாமே அதனதன் இடத்தில் வந்து ஒன்று சேர்வதைக் காணலாம். இந்த வழியே ஒரு தனிப்பட்ட சிறந்த வழி.

குருதேவா ! நாங்கள் நாலைந்து மணி நேரம் வேலை செய்து, ஒரு நாளில் 10 பேரைச் சந்தித்தாலே மிகவும் களைப்படைகிறோம். நாள் முடிந்ததும் ஒன்றும் செய்யாமல் ஓய்வெடுக்க விரும்புகிறோம். நீங்கள் எப்போதாவது விடுமுறை எடுத்ததுண்டா ?

நிச்சயமாக ! வாழ்க்கைகளின் இடைவெளியில். (சிரிப்பு) பார் ! நமக்கு இயல்பான ஒன்றைச் செய்யும் போது நாம் களைப்படைவதில்லை. ஒரு நதி ஓடுவதால் களைப்படைவதில்லை. சூரியன் பிரகாசிப்பதால் களைப்படைவதில்லை. எனவே நாம் நம்மியல்பில் இருக்கும் போது, நம் உண்மையான, இயற்கையான நிலையில் நிலைத்திருக்கும் போது, எல்லாமே தானாகவே நிகழும். நம்மைக் களைப்படையச் செய்யாது.

குருதேவா ! நீங்கள் இன்று ஆன்மீகத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள். இன்று இங்கு உங்களுடன் இல்லாத ஞானம் தேடுபவர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் ?

எதைப் பற்றியும் முயற்சி செய்து ஞானத்தை அடை. அதே சமயம் நம்பிக்கை அவசியம். பார் ! உனக்கு எல்லாவற்றையும் பற்றி தெரிந்திருப்பது சாத்தியமில்லை. சிலவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை தேவை. சந்திப்பவர் எல்லோரையும் அன்போடு அரவணைத்துச் செல். இது தான் என்னுடைய செய்தி. பார் ! யாராவது  ஒரு பண்டத்தைக் கொடுத்து, இது மிகவும் இனிப்பாக உள்ளது என்று சொன்னால், நீ முதலில் அதை ருசித்து அது இனிப்பு என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். யாராவது உன்னிடம் “ இது விஷம். இதைத் தொடாதே ” என்று சொன்னால் அவரை நம்ப வேண்டும். அப்போது  “ இல்லை. நான் இதை  ருசி பார்த்து  விட்டு உன்னை நம்புவேன் “ என்று சொல்லக் கூடாது. (சிரிப்பு)

வாழ்க்கைக்கு மூன்று விஷயங்கள் தேவை.  இதயத் தூய்மை 2. தெளிவான சிந்தனை 3.  நேர்மையான செயல். எனக்கு என்ன ஆகும் என்ற சிந்தனையில் சிக்கி விடாதே. பார் ! எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். ஆனால் அவை எப்போதும் அப்படியே பிரச்சினையாக  இருக்காது என்பதை நினைவு கொள். பிரச்சினைகள் வரும். போகும். பிரச்சினைகள் உன்னை மூழ்கடிக்க விடாதே. அதற்குத் தேவையான வலிமையை, ஸ்திரத் தன்மையை ஆன்மீகம் உனக்குக் கொடுக்கும். உன்னால் பிரச்சினைகளை புன்முறுவலோடு சமாளித்து அதற்குத் தீர்வு காண முடியும். ஆன்மீகம் உன் சிந்தனையின் போக்கை, புதிய திசையில் திருப்பி வாழ்க்கையை சிறப்பிக்கும்.

குருதேவா ! கடைசியாக ஒரு கேள்வி. உங்களை சந்திக்கும் போது, மிகவும் ஆனந்தமடைகிறோம். நீங்கள் சொல்லும் ஞானத்தைக் கேட்டு வாழ்க்கைக்கு நல்ல வழி கிடைக்கிறது. உங்கள் பக்தர்களைப் பார்க்கும் போது, உங்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கின்றன ?

அவர்கள் அனைவரும் என்னைச் சேர்ந்தவர்கள். முற்றிலும் எனக்குரியவர்கள். இது வரை நான் சந்தித்த அனைவருமே என்னைச் சேர்ந்தவர்கள். எனக்குரியவர்கள். என் வாழ்வில் நான் ஒரு புதிய நபரை என்றுமே சந்தித்ததில்லை.

சிறிதளவு வெளிப்படுத்துங்கள், சிறிதளவு மறைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய்கிழமை, 22 செப்டம்பர் 2016,

பெங்களூரு, இந்தியா


(பொருளின் உண்மை எனும் இடுகையின் தொடர்ச்சி )

குருதேவ், ஒருவர் சந்யாசத்தில் தீட்சை பெறும் போது, தனது தோளைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும்  பூணூலை எரித்து விடுமாறு கூறப்படுகிறார். அப்போது அவர்  தன்னையே  தகனம் செய்து விடுவதாக  கருதப்படுகிறது . இதன் உண்மையான ரகசியம் என்ன?

இல்லை, அவ்வாறு பொருள்படாது. ஒரு பாம்பு தன்னுடைய தோலைக் கழற்றி விடுவது போன்று இந்த சடங்கு ஒருவர் தனது கடந்த காலத்தின் அனைத்தையும் விட்டு விடுத்து  நிகழ்காலத்தில் முற்றிலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதைக்  குறிப்பிடுகிறது. சந்யாசத்தில் தீட்சை பெறும் போது பூணூலை எரிப்பது என்பது, பொறுப்புக்களையும் கடமைகளையும் இனி சுமக்க வேண்டியதில்லை என்பதைக் குறிக்கிறது. பூணூல் என்பதே ஒருவருக்கு, தான் நிறைவற்ற வேண்டிய பொறுப்புக்களை நினைவு படுத்துவது தான். அவ்வாறு தன் பொறுப்புக்களையும் கடமைக ளையும் முடித்துவிட்ட பின்னர் அந்தப் பூணூலை அகற்றி விடுகிறார். இது ஒருவர் மைய நிலையில் அமைதியுடன் இருப்பதையும் குறிக்கிறது. அதன் பின்னர் எந்த ஆசைகளும் இல்லை.

அன்பு ஓர் தெய்வீகக் குணம் என்று கூறப்படுகிறது.  ஆனால் என் அன்பினால் பிறர் தொல்லையடைகின்றனர்.  தயவு செய்து என்னை வழிநடத்துங்கள்.

இது ஏனெனில், நீங்கள் அன்பை ஓர் செயலாக அல்லது உணர்ச்சியாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அன்பு என்பது உங்களது இயல்பு. உங்கள் ஆளுமை எப்போதுமே அன்பினை கதிர்வீசிக் கசிந்து வெளிப்படுத்துகிறது. ஓர் மெழுகுவர்த்தி அல்லது விளக்கு தனது ஒளியினை பரப்ப எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அது இருக்குமிடத்திலேயே இருந்து கொண்டு ஒளி வீசுகிறது. நான் கூறுவது புரிகிறதாபிறர் உங்கள் அன்பினால் தொந்தரவு அடைந்தால், நீங்கள் அவர்களிடம் அதிகமாக அன்பை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது பொருள். இதைப் புரிந்து கொண்டு சில சமயங்களில் உங்கள் அன்பு வெளிப்பாட்டினை சற்று  மறைத்துக் கொள்ள வேண்டும்.  அன்பை முழுமையாக வெளிப்படுத்துதலும் மிகக் கடினம். மற்றவரால் ஏற்றுக் கொள்ளக் கூடிய, மற்றும்  மெச்சத் தகுந்த அளவு அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதிகமாக வெளிப்படுத்தினால் அதை  அடைபவர் மூச்சுத் திணறுவது போன்று உணருவார்.

நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று ஒருவரிடம் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தால், "சரி, இப்போது அதற்கென்ன?" என்று எரிச்சல் அடைவார். "கடவுளே! இவனை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று எண்ணத் துவங்குவார். அன்பை அளிப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும்  ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கொள்திறன் இருக்கும். எல்லோருக்கும் ஒரே விதமான கொள்திறன் இருக்கும் என்று எண்ணாதீர்கள். அனைவருக்கும் அதிக அன்பை அளித்து அனைவரிடமிருந்தும் அதிக அன்பை ஏற்கும் திறன் ஓர் ஞானிக்கு இருக்கும். ஓர் சாதாரண மனிதனுக்கு குறைந்த அளவே கொள்திறன் இருக்கும். எனவே குறைந்த கொள்திறன் கொண்டவரிடம் அதிக அன்பைக் காட்டினால் இயல்பாகவே அவர்கள் அதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். அந்த அன்பே ஓர் பாரமாகி விடும். எங்காவது ஓடி விடலாம் போன்று உணருவார்கள். ஆகவே உங்கள் அன்பை சற்று மறைத்துக் கொண்டு எங்கு தேவையோ அங்கே வெளிப்படுத்துங்கள்.  அதிக அளவு வெளிக்காட்ட வேண்டாம்.

குருதேவ், சப்தம் பெரிதா நிசப்தம் பெரிதா?

சப்தத்திற்கும்  அது போன்றே நிசப்ததிற்கும் அதற்குரிய முக்கியத்துவம் இருக்கிறது. இவ்விரண்டிற்குமிடையே நீங்கள் எந்த வேறுபாட்டையும் உருவாக்க வேண்டாம். நிசப்தம் சப்தத்தினாலேயே முக்கியத்துவம் மற்றும் மதிப்பினைப் பெறுகிறது, அது போன்றே நிசப்தத்தின் மூலமாகவே சப்தத்தினைக் கண்டறிகின்றீர்கள். நிசப்தத்திலிருந்தே எந்த ஓர் அசை அல்லது ஒலி பிறக்கிறது.

குருதேவ், தயவு செய்து அகோரி பாரம்பரியத்தைப் பற்றியும் அதன் நடைமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறுங்கள்.

அகோரா என்னும் சொல்லே அதன் பாரம்பரியத்தின் பொருளை விளக்குகிறது. அகோரம் என்றால் திகிலூட்டுவதாக இல்லாத ஒன்று , அழகும் மதிப்பிற்குரியதுமான  ஒன்று என்று பொருள். அகோரி என்றால்  அமைதியான நடத்தையுடைய ஒருவன் என்று பொருள். அழகானவன்  மற்றும் யாரிடமும் எந்தவிதமான வெறுப்பும் இல்லாதவன் என்று பொருள். ருத்ரம் பண்ணிசைப்பில்," அகோரேப்யோ தகோரேப்யோ கோர கோர தரெப்யஹ. சர்வே பயஹ சர்வ சர்வே ப்யோ நமஸ்தே  அஸ்து ருத்ர ரூபேப்யஹா " என்றொரு ஸ்லோகம் உள்ளது. பகவான் சிவன் எவ்வாறு இருக்கிறார்

சிவபெருமான் அமைதியானவர்  மற்றும்  திகிலூட்டுபவர். ஆயினும் அனைவருக்கும் அருள்பாலித்து மேம்படுத்துபவர். சிவம் என்பதற்கு மேம்படுத்தி ஆசீர்வதிப்பவர்  என்றே பொருள் ஆகும். " ருத்ர பகவானே (சிவனே) நான் உன்னை வணங்குகிறேன். நீயே மிக அழகு பொருந்தியவனும் மிக அதிக திகிலூட்டுபவனும் ஆவாய். " என்பது ஸ்லோகத்தின் பொருள். இந்த மந்திரம் அகோர மந்திரம்  என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும் இது போன்றதே ஆகும். நீர் நதியாக ஓடும்போது அமைதியாகவும் சாந்தமாகவும் காணப் படுகிறது. அதே நீர் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது அழிவுக்குக் காரணமாகிறது. ஓர் நீர்வீழ்ச்சி பார்க்க மிக அழகாக இருக்கிறது, ஆனால் அதே சமயம் ஆபத்தானதும் திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. இந்த மந்திரத்திற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம்.

உதாரணமாக கர்நாடகத்திலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி மிகக் கம்பீரமானது பல ஆயிரக்கணக்கான மீட்டர் உயரத்திலிருந்து ஏராளமான நீர் வீழ்கின்றது. ஆனால் அது மிக ஆபத்தானதும் கூட. தூரத்திலிருந்து பார்த்தால் மிக அழகு, ஆனால் நீர் வீழ்ச்சியில் ஒருவர் சிக்கிக் கொண்டால் அதன் வேகத்தைத் தாங்க முடியாது, உயிர் பிழைக்கவே முடியாது.

பஞ்சபூதங்களும் இது போன்றதேயாகும். உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஓர் விளக்காக எரியும் போது பார்க்க மிக அழகாக இருக்கிறது. ஆனால் ஓர் வீடு தீப்பிடித்துக் கொள்ளும்போது அதே நெருப்பு திகிலூட்டுவதாகவே இருக்கின்றது. அது போன்றதே காற்றும். மெல்லிய தென்றல் இதமானது அதுவே புயலாகவோ சூறாவளியாகவோ வீசினால் அதிக அளவு அழிவுக்கு காரணமாகின்றது.

குருதேவ், ஏன் என்னை இந்த அளவு நேசிக்கின்றீர்கள்?

இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருங்கள், அதற்கான விடை உங்களுக்குக் கிடைத்து விடும். அப்போது உங்களது அனைத்து புகார்களும் பிரச்சினைகளும் மறைந்து விடுவதைக் காண்பீர்கள்எப்போதெல்லாம் உங்கள் மனதில் புகார் எழுகின்றதோ அப்போதெல்லாம், இந்தக் கேள்வியை நீங்கள் அனைவரிடமும் கேட்க வேண்டும். ஒருவரது நடத்தையில் குறை தோன்றும் போது, அவர்கள் உங்களை மிக அதிகமாக விரும்புவதாலேயே அவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணுங்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியடைந்து, உங்கள் சுயத்தில் நிலை பெறுவீர்கள். அனைத்து எதிர் மறைகளிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளவும் முடியும்.

வேதங்களைப் படித்து புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?


ஆம், சரியான இடத்திற்கே நீங்கள் வந்திருக்கின்றீர்கள். இங்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இங்குள்ள பல்வேறு பயிற்சித் திட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். உதாரணமாக தமிழ் நாட்டில், கைகளைக் கூப்பி, தங்களது முஷ்டியால் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வார்கள். ஸ்ரீ கணேச பகவானை வழிபடும் போது இவ்வாறு செய்வதுண்டு. முற்காலத்தில் இதை 21 முறை செய்வதுண்டு. இதன் பின்னர் 21 முறை  உட்கார்ந்து எழுவதுண்டு. இந்த வழக்கம்  தோப்புக் கரணம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது அண்மையில் அறிவியல் நிபுணர்கள் இந்தப் பழக்கம் மனித மூளையை மேம்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் ஒருவேளை தமிழ்நாட்டு மக்கள் அதிகப் புத்திசாலிகளாக இருக்கின்றனரோ? ( சிரிப்பு) நமது வாழும்கலையின் தலைவரைக் கேட்கலாம், அவரும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் தாம். டெல்லியிலுள்ள பாராளுமன்றத்தின் செயலகத்தில் ஒரு காலத்தில் பல அதிகாரிகள் தமிழ்நாட்டிலிலிருந்து வந்தவர்கள். இன்று அந்த நிலை மாறி விட்டது. முற்காலத்தில், இத்தகைய வழக்கங்கள் ஆலயத்திற்குச் செல்பவர்கள் செய்யும் நடைமுறைகளாக இருந்து வந்தன.