தற்சமயத்தில் வாழ்வது எப்படி?

திங்கள்கிழமை 14 செப்டம்பர், 2015

பெங்களூர், இந்தியா


வாழ்க்கையில் கடந்து போன நிகழ்வுகளை கனவு போல் பார்க்கும் போது, தற்சமயத்தின் உண்மை பிடிபடும். இது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நிராகரித்தால் மட்டுமே தற்சமயத்தின் உண்மையை உன்னால் புரிந்து கொள்ள முடியும்கடந்த காலம் நம்மை மூழ்கடித்து, மனதில் ஒரு சுமையாகி விட்டது. கடந்த காலத்திலிருந்து விடுபடாவிட்டால் பூதநாதனை (சிவபெருமானை) அடைய முடியாது. சிவபெருமானை அடைய, நாம் கடந்த கால வாழ்வில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒரு கனவு போல் பார்க்க வேண்டும். இது மிகவும் கடினமான ஒன்றல்ல. நமக்குத் தேவையானது சிறிது விழிப்புணர்வு.

நீங்கள் பூனைகளையும், நாய்களையும் பார்த்திருப்பீர்கள். சில சமயம் அவை நீரிலும், மண்ணிலும் புரண்டு விளையாடும். ஆனால் உடனேயே எழுந்து, உடலில் ஒட்டிய மண்ணையும், நீரையும் உதறித் தள்ளி விட்டு நடந்து செல்லும். அதே போல், நீங்களும் நீரிலும், சேற்றிலும் விளையாடலாம். அவ்வப்போது எழுந்து நின்று, எல்லா நிகழ்வுகளையும் உதறித் தள்ளி விட்டு விழிப்புணர்வோடு இருக்கலாம். அந்த இடத்தில் சிவபெருமான் இருப்பதைக் காண்பாய். அதே சமயத்தில் காண்பாய். திரும்பத் திரும்ப அப்படிச் செய்யும் போது, ஞானம் உதயமாகி, உனக்குள் ஆழப்பதியும்.

பல சமயங்களில் மக்கள் சோர்வடைந்து, “எதுவும் ருசிக்கவில்லைஎன்று சொல்கிறார்கள். ஏதோ ஒரு விஷயத்தை அறிய வேண்டுமென்றால், நீ விழித்தெழுந்து, கடந்து போனவைகளை உதறித் தள்ளி விட்டுச் செல்ல வேண்டும். ஏன் ஒருவருக்கு எதுவும் ருசிக்காமல் இருக்கிறது?
ஏனென்றால் அவரது மனம் கடந்த கால நிகழ்வுகளில் அழுந்தி, நினைவுகள் சுமையாக இருக்கின்றன.

நிகழ்வுகள் ஆனந்தமானவையோ, துக்க்கரமானதோ, அதில் சம்பந்தப் பட்டவர்கள் உன் நண்பர்களாகவோ, அல்லது எதிரிகளாகவோ இருந்தாலும், இவைகளில் சிக்கி உன் மனம் சுமையைத் தாங்குவது போல் வருந்துகிறது. மனம் முழுதும் இந்நினைவுகளால் நிரம்பிவிட்டது போலுள்ளது. ஒரு வீட்டை வாடகைக்குக் கொடுத்தது போல், உன் மனதை கடந்த கால நிகழ்வுகளுக்காகக் கொடுத்து விட்டாய். ஆனால் வாடகையும் வருவதில்லை. (சிரிப்பு!)  இந்தக் கொடுக்கல் வாங்கலில் நஷ்டம் மட்டுமே. (கடந்த கால நினைவுகள் உன் மனதை நிரப்பி விட்டன).

எனவே அவ்வப்போது எழுந்து, ‘இது என் வீடு, (வெளியே செல்லுங்கள்)” என்று சொல்லி, கடந்த கால நிகழ்வுகளை நிராகரிக்க வேண்டும். இல்லா விட்டால் வாடகைக்கு இருப்பவர் (கடந்த கால நிகழ்வுகள்), இது தன் வீடு என்று நினைத்து அங்கேயே  இருந்து விடுவார். வீட்டுக்குச் சொந்தக் காரர் யாரென்று உனக்கே தெரியாமல் போய் விடும். எனவே கடந்த கால நிகழ்வுகள், உன் மனதை அபகரிக்க விடாதே. உன்னைத் துன்புறுத்த விடாதே

கடந்த காலத்தில் நடந்தவை நல்லதோ, கெட்டதோ, எல்லாமே ஒரு கனவு தான் என்ற விழிப்புணர்வு வாழ்வில் வரும்போது, எது வந்தாலும் அதை எதிர் கொள்ள சக்தி பெறுவாய்.
பிறகு, நீ உன்னுள் எழும் ஒரு சக்தியின் எழுச்சியை அனுபவத்தில் பார்க்கலாம். உன் ஆத்மாவை மறைத்திருந்த மேகங்கள்  விலகி, ஆத்மா மலர்ச்சியடைவதை அனுபவிக்கலாம்.
இது, அவ்வப்போது இது  ஒரு கனவு என்று சொல்லிக் கொண்டு, உன் மனதை ஏமாற்றி மகிழ்வடையச் செய்வதற்கான தந்திரம் அல்ல. உனக்குப் பசி  எடுக்கும் போது இது  ஒரு கனவு என்று பார்க்க மாட்டாய். இது (பசி) உண்மை என்பதை நீ அறிவாய். இல்லையா? எனவே இதில் ஒரு நடைமுறை உண்மை உள்ளது.

எனவே, அவ்வப்போது, எழுந்து கடந்த காலத்தை உதறி விட்டு எல்லாம் ஒரு கனவு என்று பார். ஆன்மீக சாதனைகளில் சாரம் இது தான். சாதனை என்றால், வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தைக் காணும் துணிகரமான செயல் அல்ல. இங்கேயே, தற்சமயத்தில் வாழ்ந்து, நம் கடமைகளைச் செய்து, நம் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அதே சமயம் அச் செயல்களில் பற்றற்று, மெய்யுணர்வை நாட வேண்டும்.

மெய்யுணர்வை நாட அவ்வப்போது, நம் விழிப்புணர்வை  தூண்டும் போது, அது உனக்கு மட்டுமல்லாமல், உன்னைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும், ஒரு அற்புத அனுபவமாக இருக்கும்அருகில் வரும் அனைவரும் அமைதியையும், ஆனந்தத்தையும் அனுபவிப்பார்கள். உன்னிடம் மிக அதிக அளவில் ஆக்க பூர்வமான சக்தி இருக்கும். உன்னைச் சுற்றிலும் நல்ல அதிர்வலைகள் இருக்கும். உனக்குள்ளும, உன்னைச் சுற்றியும் ஆக்க பூர்வமான சக்தியை உருவாக்க ஒரே வழி இதுவாகும்.