தன்னலமற்ற சேவையே மகிழ்ச்சியின் திறவுகோல்

வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2015,

குஜராத், இந்தியா


 உபநிஷதங்களில் "ஓம் க்ரதோ ஸ்மார கிருதம் ஸ்மார " (வேத பிரார்த்தனை: ஈசாவாஸ்ய உபநிஷதம்) என்றொரு வரி இருக்கின்றது. இதன் பொருள் என்ன? நாம் எதை நினைவில் கொள்ள வேண்டும்?

இதுவரையில் நீங்கள் செய்ததையெல்லாம், நினைவுபடுத்தி கொள்ள வேண்டும் என்பது பொருளாகும். நினைவு கூர்ந்து உங்கள் விழிப்புணர்வுக்கு வரும் போது, நீங்கள் செய்த நல்லனவனைத்துக்கும் அல்லது இது வரையில், உங்கள் செயல்களினால் விளைந்த நன்மை களனைத்துக்கும், சாட்சியாக உங்களால் உணர முடியும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், அவற்றை நினைவுபடுத்தி கொள்வதன்  மூலம் அவற்றுக்கு சாட்சியாக உணர்ந்து கடக்க முடியும். (அதாவது, ஒருவன் தனது செயல்களில் அல்லது செயல்களின் பயன்களில் பற்று அல்லது தளை கொண்டிருந்தால் அதைக் கடக்க முடியும்.) அந்த ஸ்லோகம் என்னவென்றால்,"வாயூர் அனிலம் அம்ருதம் அதேடம் பாஸ்மந்தம் சரீரம்.ஓம் க்ரதோ ஸ்மார கிருதம் ஸ்மார" என்பதாகும். (17 வது ஸ்லோகம், ஈசாவாஸ்ய உபநிஷதம்) இது வரையில் நீங்கள் செய்தவற்றுக்கும், இனி செய்யப் போவதற்கும் சாட்சியாக ஆகின்றீர்கள் என்பதே  அதன் பொருள்.

தங்களது நூல்களில், ஒருவன் புனித கங்கையில் நீராடும் போது, அனைத்துப் பாவங்களும் நீங்கி விடுகின்றன என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஓர் புனித நதியில் நீராடினால், மிகக் கொடிய பாவம் கூட நீங்கி விடுமா?

இல்லை. உண்மையான பொருள் என்னவென்றால், தவறுகள் அல்லது பாவங்கள் செய்வது மனித இயல்பு. வெளியிலிருந்து வரும் அழுக்கை போன்றது அது. உங்களை அதிலிருந்து தனிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குற்றங்கள் புரிந்து, புனித கங்கையில் நீராடிவிட்டால், மேலும் குற்றங்கள் புரிவதற்கான லைசென்ஸ் கிடைத்து விட்டதாக பொருள் அல்ல.(சிரிப்பு) குற்றம் புரியும் போது அது மெய்யுணர்வில் ஏதோவொரு பதிவினை ஏற்படுத்துகிறது அதனால் வேதனையடைகிறீர்கள். அதுவே பாவம் என்பதாகும்.

குருதேவ், நமது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மூலமே நாம் மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகிய இரண்டையும் அடைகின்றோம். இதிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

ஆம், உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் நேசியுங்கள். ஆனால் எந்த கோரிக்கையையும் அவர்களிடம் விடுக்காதீர்கள் அல்லது, அவர்களிடம் ஒட்டிக் கொள்ளாதீர்கள். எந்த வழியிலெல்லாம் முடியுமோ அந்த விதத்தில் அவர்களுக்குத்  தொண்டு செய்யுங்கள். அவர்களுக்கு உதவுவதை மட்டுமே உண்மையான நோக்கமாக கொண்டால், உங்களுக்கு எந்த துன்பமும் வராது. ஒரு கோரிக்கையுடனோ அல்லது ஏதேனும் லாபமோ கருதியோ நீங்கள் செயல்பட்டால், அப்போது நீங்கள் துன்பத்தையும் வேதனையையும் அடைய வேண்டியதிருக்கும்.

கர்மா என்பது என்ன? கர்மத்தினை  புரிந்துகொள்ளும் திறனை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது?

இதுவரையில் நீங்கள் செய்தவையனைத்தும் கர்மா தான். இப்போது செய்து கொண்டிருப்பதுவும் கர்மமே.இனி வருங்காலத்தில் செய்யும் ஒவ்வொரு செயலையும் தூண்டும் அனைத்தும் கர்மமேயாகும். இவ்வுலகில் நடைபெற்றுவரும் அனைத்தும் கர்மா தாம்.

நாம் மக்களை நம்புகிறேன்.அதற்கு பெரும் விலை கொடுக்கிறேன், தீங்கிழைக்கப்படுகிறேன். நான் மனிதர்களை நம்புவதா அல்லது கூடாதா?

வாழ்க்கையில் மூன்று விதமான நம்பிக்கைகள் உள்ளன.
1. தன்னம்பிக்கை அல்லது தன் மீதே நம்பிக்கை. உங்கள் மீதே உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் மீது முற்றிலும் நம்பிக்கை வைத்து, எனக்கு அனைத்தும்  நல்லதே நடக்கும் என்று நம்பினால் அதுவே உங்கள் வாழ்க்கையில் நிகழத் துவங்கும்..

2. உலகிலுள்ள , மற்றும் சமுதாயத்திலுள்ள மக்களின் நற்குணங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது எப்போதும் சந்தேகப் பட்டால் உங்களால் ஓர் அடி கூட முன்னெடுத்து வைக்க முடியாது.ஒரு வேளை நீங்கள் தனியாகப் பயணம் செய்து கொண்டிருக்கும் போது  ரயில் நிலையத்தில் அவசரமாகக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியதிருந்தால், சுற்றுமுற்றும் பார்த்து, யாரையேனும் உங்கள் பொருட்களின் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுமாறு வேண்டி கழிப்பறைக்குச் செல்வீர்கள் அல்லவா? இது போன்று பேருந்து  நிலையங்களிலும் நிகழ்ந்திருக்கக் கூடும். பிறர் மீது நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும், இல்லையெனில் வாழ்க்கை செல்லாது. ஒரு மருத்துவரை, வக்கீலை, தொழிலதிபரை நம்பித்தான் ஆக  வேண்டும். ஒரு வீட்டை வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ முற்பட்டால், அதன் சொந்தக்காரரை அல்லது கட்டுபவரை நம்பி முன்பணம் கொடுக்க வேண்டும்.அது போன்றே உங்கள் வீட்டிற்குத் தினமும் வரும் பால்காரரை நம்பவேண்டும். மாதம் பூராவும் பால் அளித்து, மாத இறுதியில் நீங்கள் பணம் தருவீர்கள் என்னும் நம்பிக்கையில் தான் அவர் தினமும் பால் கொண்டு வந்து தருகிறார்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்திவிடுவீர்கள் என்னும் நம்பிக்கையில் தான் மின்வசதி, அளிக்கப்படுகிறது. நீங்கள் பணம் கட்டுவீர்களோ மாட்டீர்களோ என்று உங்கள் மீது சந்தேகப்பட்டு, மின்கட்டணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ள முடிவு செய்தால் அது சரியாகுமா? அவ்வாறு நிகழ்வதேயில்லை. முதலில் மின்வசதியை அளித்து விட்டுப் பின்னர் மாத இறுதியிலேயே நுகர்ந்த மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கின்றனர். நம்பிக்கையின்றி சமுதாயம் இயங்க முடியாது. ஆகவே நற்குணம் படைத்த மனிதர்கள் சமுதாயத்தில் இருக்கின்றனர் என்று நம்ப வேண்டும். சமுதாய அமைப்பில் இந்த நம்பிக்கையில்லையெனில், காட்டிற்குத் தான் செல்ல வேண்டும், வேறு எந்த விருப்பத் தேர்வும் இல்லை.

3. தெய்வ நம்பிக்கை வேண்டும்.வாழ்க்கை மற்றும் சமுதாயத்திலுள்ள அனைத்தையும் நடத்திச் செல்லும் ஓர் உயர்ந்த சக்தியை  நம்ப வேண்டும். இந்த தெய்வீக சக்தி அல்லது மெய்யுணர்வு மிக சக்தி வாய்ந்தது. பரந்தது, அனைத்தையும் சூழ்ந்திருப்பது.அதை -  கடவுள், அல்லது ஈஸ்வரன், அல்லது அல்லா என்று எவ்வாறு வேண்டுமானாலும் அழைக்கலாம். தெய்வ சக்தியை நம்பாமல் வாழ்க்கையின் முழுமையை அனுபவிக்க முடியாது.

ஆகவே, உங்கள் மீதே நம்பிக்கையின்றி வாழ்க்கையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இரண்டாவதாக சமுதாயத்தை நம்பாமல் நீங்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியாது. மூன்றாவதாக தெய்வ நம்பிக்கையின்றி வாழ்க்கை முழுமையடையாது. இந்த மூன்று விதமான நம்பிக்கைகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.அதற்காக முட்டாள்தனமாக அல்லது எதுவும் தெரியாமல் பிறர் உங்களை ஏமாற்ற அனுமதிக்கக் கூடாது. எச்சரிக்கையுணர்வு கொண்ட அறிவுடன் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அறியாமை மற்றும் தவறான நம்பிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.