சிறிதளவு வெளிப்படுத்துங்கள், சிறிதளவு மறைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய்கிழமை, 22 செப்டம்பர் 2016,

பெங்களூரு, இந்தியா


(பொருளின் உண்மை எனும் இடுகையின் தொடர்ச்சி )

குருதேவ், ஒருவர் சந்யாசத்தில் தீட்சை பெறும் போது, தனது தோளைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும்  பூணூலை எரித்து விடுமாறு கூறப்படுகிறார். அப்போது அவர்  தன்னையே  தகனம் செய்து விடுவதாக  கருதப்படுகிறது . இதன் உண்மையான ரகசியம் என்ன?

இல்லை, அவ்வாறு பொருள்படாது. ஒரு பாம்பு தன்னுடைய தோலைக் கழற்றி விடுவது போன்று இந்த சடங்கு ஒருவர் தனது கடந்த காலத்தின் அனைத்தையும் விட்டு விடுத்து  நிகழ்காலத்தில் முற்றிலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதைக்  குறிப்பிடுகிறது. சந்யாசத்தில் தீட்சை பெறும் போது பூணூலை எரிப்பது என்பது, பொறுப்புக்களையும் கடமைகளையும் இனி சுமக்க வேண்டியதில்லை என்பதைக் குறிக்கிறது. பூணூல் என்பதே ஒருவருக்கு, தான் நிறைவற்ற வேண்டிய பொறுப்புக்களை நினைவு படுத்துவது தான். அவ்வாறு தன் பொறுப்புக்களையும் கடமைக ளையும் முடித்துவிட்ட பின்னர் அந்தப் பூணூலை அகற்றி விடுகிறார். இது ஒருவர் மைய நிலையில் அமைதியுடன் இருப்பதையும் குறிக்கிறது. அதன் பின்னர் எந்த ஆசைகளும் இல்லை.

அன்பு ஓர் தெய்வீகக் குணம் என்று கூறப்படுகிறது.  ஆனால் என் அன்பினால் பிறர் தொல்லையடைகின்றனர்.  தயவு செய்து என்னை வழிநடத்துங்கள்.

இது ஏனெனில், நீங்கள் அன்பை ஓர் செயலாக அல்லது உணர்ச்சியாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அன்பு என்பது உங்களது இயல்பு. உங்கள் ஆளுமை எப்போதுமே அன்பினை கதிர்வீசிக் கசிந்து வெளிப்படுத்துகிறது. ஓர் மெழுகுவர்த்தி அல்லது விளக்கு தனது ஒளியினை பரப்ப எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அது இருக்குமிடத்திலேயே இருந்து கொண்டு ஒளி வீசுகிறது. நான் கூறுவது புரிகிறதாபிறர் உங்கள் அன்பினால் தொந்தரவு அடைந்தால், நீங்கள் அவர்களிடம் அதிகமாக அன்பை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது பொருள். இதைப் புரிந்து கொண்டு சில சமயங்களில் உங்கள் அன்பு வெளிப்பாட்டினை சற்று  மறைத்துக் கொள்ள வேண்டும்.  அன்பை முழுமையாக வெளிப்படுத்துதலும் மிகக் கடினம். மற்றவரால் ஏற்றுக் கொள்ளக் கூடிய, மற்றும்  மெச்சத் தகுந்த அளவு அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதிகமாக வெளிப்படுத்தினால் அதை  அடைபவர் மூச்சுத் திணறுவது போன்று உணருவார்.

நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று ஒருவரிடம் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தால், "சரி, இப்போது அதற்கென்ன?" என்று எரிச்சல் அடைவார். "கடவுளே! இவனை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று எண்ணத் துவங்குவார். அன்பை அளிப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும்  ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கொள்திறன் இருக்கும். எல்லோருக்கும் ஒரே விதமான கொள்திறன் இருக்கும் என்று எண்ணாதீர்கள். அனைவருக்கும் அதிக அன்பை அளித்து அனைவரிடமிருந்தும் அதிக அன்பை ஏற்கும் திறன் ஓர் ஞானிக்கு இருக்கும். ஓர் சாதாரண மனிதனுக்கு குறைந்த அளவே கொள்திறன் இருக்கும். எனவே குறைந்த கொள்திறன் கொண்டவரிடம் அதிக அன்பைக் காட்டினால் இயல்பாகவே அவர்கள் அதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். அந்த அன்பே ஓர் பாரமாகி விடும். எங்காவது ஓடி விடலாம் போன்று உணருவார்கள். ஆகவே உங்கள் அன்பை சற்று மறைத்துக் கொண்டு எங்கு தேவையோ அங்கே வெளிப்படுத்துங்கள்.  அதிக அளவு வெளிக்காட்ட வேண்டாம்.

குருதேவ், சப்தம் பெரிதா நிசப்தம் பெரிதா?

சப்தத்திற்கும்  அது போன்றே நிசப்ததிற்கும் அதற்குரிய முக்கியத்துவம் இருக்கிறது. இவ்விரண்டிற்குமிடையே நீங்கள் எந்த வேறுபாட்டையும் உருவாக்க வேண்டாம். நிசப்தம் சப்தத்தினாலேயே முக்கியத்துவம் மற்றும் மதிப்பினைப் பெறுகிறது, அது போன்றே நிசப்தத்தின் மூலமாகவே சப்தத்தினைக் கண்டறிகின்றீர்கள். நிசப்தத்திலிருந்தே எந்த ஓர் அசை அல்லது ஒலி பிறக்கிறது.

குருதேவ், தயவு செய்து அகோரி பாரம்பரியத்தைப் பற்றியும் அதன் நடைமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறுங்கள்.

அகோரா என்னும் சொல்லே அதன் பாரம்பரியத்தின் பொருளை விளக்குகிறது. அகோரம் என்றால் திகிலூட்டுவதாக இல்லாத ஒன்று , அழகும் மதிப்பிற்குரியதுமான  ஒன்று என்று பொருள். அகோரி என்றால்  அமைதியான நடத்தையுடைய ஒருவன் என்று பொருள். அழகானவன்  மற்றும் யாரிடமும் எந்தவிதமான வெறுப்பும் இல்லாதவன் என்று பொருள். ருத்ரம் பண்ணிசைப்பில்," அகோரேப்யோ தகோரேப்யோ கோர கோர தரெப்யஹ. சர்வே பயஹ சர்வ சர்வே ப்யோ நமஸ்தே  அஸ்து ருத்ர ரூபேப்யஹா " என்றொரு ஸ்லோகம் உள்ளது. பகவான் சிவன் எவ்வாறு இருக்கிறார்

சிவபெருமான் அமைதியானவர்  மற்றும்  திகிலூட்டுபவர். ஆயினும் அனைவருக்கும் அருள்பாலித்து மேம்படுத்துபவர். சிவம் என்பதற்கு மேம்படுத்தி ஆசீர்வதிப்பவர்  என்றே பொருள் ஆகும். " ருத்ர பகவானே (சிவனே) நான் உன்னை வணங்குகிறேன். நீயே மிக அழகு பொருந்தியவனும் மிக அதிக திகிலூட்டுபவனும் ஆவாய். " என்பது ஸ்லோகத்தின் பொருள். இந்த மந்திரம் அகோர மந்திரம்  என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும் இது போன்றதே ஆகும். நீர் நதியாக ஓடும்போது அமைதியாகவும் சாந்தமாகவும் காணப் படுகிறது. அதே நீர் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது அழிவுக்குக் காரணமாகிறது. ஓர் நீர்வீழ்ச்சி பார்க்க மிக அழகாக இருக்கிறது, ஆனால் அதே சமயம் ஆபத்தானதும் திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. இந்த மந்திரத்திற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம்.

உதாரணமாக கர்நாடகத்திலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி மிகக் கம்பீரமானது பல ஆயிரக்கணக்கான மீட்டர் உயரத்திலிருந்து ஏராளமான நீர் வீழ்கின்றது. ஆனால் அது மிக ஆபத்தானதும் கூட. தூரத்திலிருந்து பார்த்தால் மிக அழகு, ஆனால் நீர் வீழ்ச்சியில் ஒருவர் சிக்கிக் கொண்டால் அதன் வேகத்தைத் தாங்க முடியாது, உயிர் பிழைக்கவே முடியாது.

பஞ்சபூதங்களும் இது போன்றதேயாகும். உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஓர் விளக்காக எரியும் போது பார்க்க மிக அழகாக இருக்கிறது. ஆனால் ஓர் வீடு தீப்பிடித்துக் கொள்ளும்போது அதே நெருப்பு திகிலூட்டுவதாகவே இருக்கின்றது. அது போன்றதே காற்றும். மெல்லிய தென்றல் இதமானது அதுவே புயலாகவோ சூறாவளியாகவோ வீசினால் அதிக அளவு அழிவுக்கு காரணமாகின்றது.

குருதேவ், ஏன் என்னை இந்த அளவு நேசிக்கின்றீர்கள்?

இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருங்கள், அதற்கான விடை உங்களுக்குக் கிடைத்து விடும். அப்போது உங்களது அனைத்து புகார்களும் பிரச்சினைகளும் மறைந்து விடுவதைக் காண்பீர்கள்எப்போதெல்லாம் உங்கள் மனதில் புகார் எழுகின்றதோ அப்போதெல்லாம், இந்தக் கேள்வியை நீங்கள் அனைவரிடமும் கேட்க வேண்டும். ஒருவரது நடத்தையில் குறை தோன்றும் போது, அவர்கள் உங்களை மிக அதிகமாக விரும்புவதாலேயே அவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணுங்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியடைந்து, உங்கள் சுயத்தில் நிலை பெறுவீர்கள். அனைத்து எதிர் மறைகளிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளவும் முடியும்.

வேதங்களைப் படித்து புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?


ஆம், சரியான இடத்திற்கே நீங்கள் வந்திருக்கின்றீர்கள். இங்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இங்குள்ள பல்வேறு பயிற்சித் திட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். உதாரணமாக தமிழ் நாட்டில், கைகளைக் கூப்பி, தங்களது முஷ்டியால் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வார்கள். ஸ்ரீ கணேச பகவானை வழிபடும் போது இவ்வாறு செய்வதுண்டு. முற்காலத்தில் இதை 21 முறை செய்வதுண்டு. இதன் பின்னர் 21 முறை  உட்கார்ந்து எழுவதுண்டு. இந்த வழக்கம்  தோப்புக் கரணம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது அண்மையில் அறிவியல் நிபுணர்கள் இந்தப் பழக்கம் மனித மூளையை மேம்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் ஒருவேளை தமிழ்நாட்டு மக்கள் அதிகப் புத்திசாலிகளாக இருக்கின்றனரோ? ( சிரிப்பு) நமது வாழும்கலையின் தலைவரைக் கேட்கலாம், அவரும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் தாம். டெல்லியிலுள்ள பாராளுமன்றத்தின் செயலகத்தில் ஒரு காலத்தில் பல அதிகாரிகள் தமிழ்நாட்டிலிலிருந்து வந்தவர்கள். இன்று அந்த நிலை மாறி விட்டது. முற்காலத்தில், இத்தகைய வழக்கங்கள் ஆலயத்திற்குச் செல்பவர்கள் செய்யும் நடைமுறைகளாக இருந்து வந்தன.