அறிவுத்திறனும் அதற்கெதிரான உணர்ச்சிப்பெருக்கும்


புதன் கிழமை, 6 ஜூன், 2013, பெங்களூரு, இந்தியா



இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். ஒரு வகையினர் பாவ் பிரதான் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் முற்றிலும் தங்கள் உணர்ச்சிகளினாலேயே செலுத்தப்படுகின்றவர்கள். இரண்டாவது,ஞான் பிரதான் என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் கண்கூடான நிகழ்வுகள், தர்க்க அறிவுத்திறன்,அடிப்படையில் செலுத்தப்படுகின்றார்கள். நீங்கள் அறிவு மற்றும் உணர்வு இரண்டையும் பேணி வளர்க்க வேண்டும். இரண்டையும் இணைத்து வாழ்வில் முன்னேற வேண்டும். அப்போது தான் வாழ்வில் முழுமையைக் கொண்டு வரமுடியும்.

சிலருடைய உணர்ச்சிகள்  மிகுந்த பலம் உள்ளவையாகவும், அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றி உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆயின் சிலரோ இயல்பாகச் சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் ஒவ்வொன்றின் சாதக பாதகங்களைக் கணக்கிட்டு சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். உணர்ச்சிகள் மற்றும் அறிவுத்திறன் இரண்டுமே ஒருவரின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததும், அவசியம் ஆனதும் ஆகும். நீங்கள் அறிவுத்திறனை விட உணர்ச்சிகளையே அதிகமாக சார்ந்திருந்தால் அவற்றால் உந்தப்பட்டுத் தவறான வழியில் சென்று விடுவீர்கள். அது போன்று அறிவை மட்டுமே சார்ந்து உணர்ச்சிகளை துடைத்துவிட்டு செயல்பட்டால், வாழ்க்கை உற்சாகமும் சாரமும் இன்றி வறண்டு இருக்கும்.

புத்தி (தர்க்கம், அறிவுத்திறன் இவற்றின் இருப்பிடம்) நெஞ்சம் (உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் இருப்பிடம்) ஆகிய இரண்டையும், பேணி வளர்க்க வேண்டும்.  இவ்விரண்டையும் இணைத்தே வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு தான் வாழ்வில் முழுமையை கொண்டு வர வேண்டும்.முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால்: சிலர், தர்க்கம் மற்றும் அறிவுத்திறன் இவற்றின் அடிப்படையில் செலுத்தப் படுகின்றார்கள். சிலர் தங்கள் உணர்ச்சிகளினாலேயே செலுத்தப்படுகின்றார்கள். உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு செயல்படுபவர்களிடம் நீங்கள் சரணாகதி மற்றும் அன்பு ஆகியவற்றை பற்றிப் பேசினால் அது அவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். ஆனால் ஒரு விஞ்ஞானியிடம் ( நிகழ்வுச் செய்திகள் மற்றும் தர்க்கத்தை அடிப்படையாக கொண்டு அறிவுத்திறனில் இயங்குபவர்களை குறிப்பிட்டு) அன்பு, மற்றும் சரணாகதியை பற்றிப் பேசினால் அவரால் அதை புரிந்து கொள்ள இயலாது. அவர் உங்கள் மனதில் ஏதோ உணர்ச்சி அல்லது ரசாயனக் கோளாறு இருப்பதாகவே கருதுவார்! உங்களது நாளமில்லா சுரப்பிகள் அதிக வேலை செய்து என்டோமார்பின் ஹார்மோன்களை அதிகமாகச் சுரந்து விட்டதாக கருதுவார். இத்தகைய மனிதர்கள் முற்றிலும் அறிவுபூர்வமாகவே செயல்படுவர். அனைத்தையும் அறிவாற்றல் என்னும் கண்ணாடி வழியே  காண்பர். ஆயினும் அவர்களும் இதே தத்துவத்தையே (முழு விழிப்புணர்வு) பின்பற்றுகின்றனர்.

ஒரு விஞ்ஞானி இவ்வுலகில் அனைத்தும் ஒன்றினாலேயே ஆக்கப்பட்டுள்ளது என்றே கூறுவார். அனைத்தும் ஒரே பண்புக் கூறினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு பண்புக்கூறு படைப்பில் வெவ்வேறு விதமாக வடிவெடுத்துள்ளது. இதைப் புரிந்து கொள்வதற்கு வாழைப்பழத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இவ்வுலகில் எத்தனை விதமான வாழைகள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? தென் இந்தியாவில் செவ்வாழை கிடைக்கும். சிவந்த வாழைப் பழங்களைப் பார்த்திருக்கின்றீர்களா? தவிர, பச்சை வாழை சிறிய உருவில் கிடைக்கும் அவை எலைச்சி என்று அழைக்கப்படும். (ஏலக்காய்  ஹிந்தியில் எலைச்சி என்று பொருள்படும்) அதன் சிறிய உருவத்தினால் அப்பழம் அவ்வாறு அழைக்கப்படுகின்றது. இவை வாழை தாம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உரு அளவில், நிறத்தில், சுவையில் உள்ளன. அது போன்றே ஆப்பிள்களும் பல வேறு வகைகளில் உள்ளன. மஞ்சள் ஆப்பிள், பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் ஆகியவை. சிம்லா ஆப்பிள்கள் காஷ்மீர் ஆப்பிள்களுக்கு நிறம்,சுவை ஆகியவற்றில் வேறுபட்டவை. அது போன்றே மலர்களும் பழங்களும், காய்களும் பல்வேறு வகைகளில் உள்ளன. மனிதர்களும் அவ்வாறே பல்வேறு வகைப்பட்டவர்கள் ஆவர்.

பலவேறு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் போன்று இன்னொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் மற்றவரிடமிருந்து வேறுபட்டும் உள்ளனர். வெவ்வேறு விதமான நடத்தை, உணர்வு மற்றும் உணர்ச்சிகள் கொண்டவராக இருக்கின்றனர். அது போன்று பல்வேறு விதமான எண்ணங்கள் மற்றும் அறிவுத்திறன் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.  சிலருடைய உணர்ச்சிகள் மிகுந்த பலம் உள்ளவையாகவும், அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றி உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆயின் சிலரோ இயல்பாகச் சிந்திக்கக் கூடியவர்கள்.அவர்கள் ஒவ்வொன்றின் சாதக பாதகங்களைக் கணக்கிட்டு சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். உணர்ச்சிகள் மற்றும் அறிவுத்திறன் இரண்டுமே ஒருவரின் வாழ்வில், தேவையானது  ஆகும்.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார், ஞான யக்னேன ச-அபி  அன்யே யஜந்தோ மாம் உபசதே . ஏகத்வேன ப்ரதக்வேன பஹுதா விஸ்வதோ முகம் (9.15) சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் ஒரே விழிப்புணர்வின் பல்வேறு வகையான வேறுபாடுகளின் விளையாட்டே ஆகும். இதை நீங்கள் நன்குணர்ந்து நம்ப வேண்டும். இந்த வேறுபாடுகளை நீங்கள் மதிக்க வேண்டும். ஒரே மாவிலிருந்து பல வகையான பலகாரங்களைச் செய்யலாம். ஒரே மாவிலிருந்து ரொட்டி, நான், சமோசா மற்றும் அல்வா இவற்றை செய்யலாம்.

அது போன்று ஒரே கடவுளை மக்கள் பல்வேறு வகையாக வழிபடுகின்றார்கள். ஒரே ஒரு உண்மை தான் உள்ளது ஒரே இறைமை தான் உள்ளது. வழிபாட்டு முறைகள் தாம் பலவேறு வகையான மனிதர்களிடம்  வெவ்வேறு வகையாக அமைந்துள்ளன. பிறர் அனைவரும் தன்னை போன்றே நடந்து கொள்ள வேண்டும், செயல்பட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. இன்றைய உலகில் தீவிரவாதம் மிகுந்துள்ளது, ஏனெனில் சிலர் "எல்லோரும் எனது வழியையே பின்பற்ற வேண்டும், என்னைப் போன்றே பணியாற்றி நடந்து கொள்ள வேண்டும், நான் கூறுவதும் செய்வதும் மட்டுமே சரியானது, மற்றவை அனைத்தும் தவறு'' என்று எண்ணுகின்றார்கள்.

இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் பயத்தையும், பயங்கரவாதத்தையும் உலகில் இன்று பரப்புகின்றார்கள். அவர்கள் இதை அறியாமையினாலேயே  செய்கின்றார்கள். இதனால் தான் ஞான யக்ஞம் தேவையாக இருக்கின்றது.  (அறியாமை மற்றும் எதிர்மறையை அகற்றி மக்களுக்கு ஞானத்தைப் பரப்பும் வழி என்பது பொருள்).