சரியான முறையில் ஈன்ற செல்வம்.

செவ்வாய்கிழமை, 24 ஜூன், 2014,

வாஷிங்க்டன் அமெரிக்க ஐக்கிய நாடுகள்



(நமது செல்வத்தை பகிர்ந்து கொள்வோம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

சமய நம்பிக்கைகள், பொருளாதார கருத்துக்களை பாதிக்கலாம். தங்களது நம்பிக்கையின்படி, மனித வளத்தினை ஊக்குவிக்கும் சுயேச்சையான வணிக நிறுவன அமைப்பு (அரசு சார்பற்ற ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் தனி வணிக நிறுவன அமைப்பு) பற்றிய கருத்து என்ன?  தவிர செல்வவளப் பெருக்கம், மற்றும் வெற்றிக்காக உழைத்தல் இவை பற்றி கூறுவதும் என்ன?

குருதேவ்: இந்தியாவில், சுயேச்சையான வணிக அமைப்பு உண்டு. எப்போதுமே சுதந்திரம் உண்டு. சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு செல்வத்தைப் பெருக்கினால் நன்று. ஏழ்மை புனிதமானதே அல்ல, செல்வம் ஒரு பாவம் அல்ல. ஏழ்மை சோம்பலின் விளைவென்றால் அது பாவம். செல்வம் பேராசை மற்றும் நெறியற்ற வழிகளில் ஈட்டப்பட்டால் பாவம். இதுதான் அளவுகோல். எவ்வாறு செல்வத்தை உருவாக்குகின்றீர்கள்? உங்களது செல்வத்தை சேர்க்கும் செயல்பாடுகள், பலருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றதா? அவ்வாறெனில் அது நல்லதல்ல.ஆனால்,உங்களது செல்வதை உருவாக்கும் செயலினால் பலருக்கு நன்மை, வேலை வாய்ப்பு மற்றும் ஆறுதல் ஏற்பட்டால்,அது மிக நல்லது. தொடர்ந்து செய்யுங்கள்.

உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உங்களை பின்பற்றுகின்றார்கள். அவர்கள் சுய மகிழ்ச்சியை அடைய தடையாக எவற்றை எதிர்கொள்கின்றார்கள்? இத்தடைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றனவா? அல்லது மனித இனம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரே விதமான காரணங்களாக இருக்கின்றனவா? உதாரணமாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெவ்வேறாக இருக்கின்றதா?

குருதேவ்: ஆம். வெவ்வேறு விதமான கலாச்சாரங்களும் மொழிகளும் இப்பூமியில் உள்ளதால், அந்த அளவுக்கு சவால்களும் உள்ளன. அடிப்படையில் நான்கு விதமாக அவற்றை பிரிக்கலாம்.

1. வேலை வாய்ப்பு மற்றும் பணி சார்ந்த பிரச்சினைகள்.
2. பொருளாதாரப் பிரச்சினைகள்
3. உறவு முறைப் பிரச்சினைகள்
4. உடல் நலப் பிரச்சினைகள்

சிலருக்கு, தான் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கின்றோம் என்றே தெரிவதில்லை. இது வேறுவிதமான பிரச்சினை. இதனால் தான் மகிழ்ச்சியற்று இருக்கின்றேன் என்று குறிப்பிட்டு கூற இயலாமல் இருக்கின்றார்கள். இவைதாம் பொதுவான விஷயங்கள். ஒரு பிரச்சினையானது நீடித்து இருந்தால் மக்கள் அதற்கு பழகிக் கொண்டு விடுகின்றார்கள். அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே தோன்றுவதில்லை. எங்கேயோ பிரச்சினையை பற்றிய கூருணர்வே இல்லாமல் இருப்பதுவும் ஒரு பிரச்சினை தான். உதாரணமாக, சுற்றுச் சூழல் பற்றிய கூருணர்வு இன்மை. ஒரு சேரியில் வசித்து, அதை அப்படியே ஏற்றுக் கொண்டால், அதுவும் சமுதாயத்திற்கு பிரச்சினை தான்.

மோசடிகளும் சேரிகளும் இந்தியாவில் நிறையப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.ஆனால் அமெரிக்காவில் வகுப்பறைகளில் வன்முறை உள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு என்ன ஆகும் என்று தெரியாத நிலை உள்ளது. குழந்தைகள் பத்திரமாக வீட்டுக்குத் திரும்பும்வரை பெற்றோர் பீதியிலேயே உள்ளனர். குண்டு கலாச்சாரமும் உள்ளது. அமெரிக்காவில்  மளிகைசாமான் கடைகளை விட துப்பாக்கி விற்கும் கடைகள் அதிகமாக உள்ளன. செய்தித்தாட்களில் படிக்கும் இவ்விஷயம் திடுக்கிட வைப்பதாக உள்ளது. ஐரோப்பாவிலுள்ள நாற்பது சதவீதம் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் பெரிய பிரச்சினைகள். இந்தியாவில் மன அழுத்தம் ஒரு பிரச்சினை அல்ல, ஆனால் ஊழலும் வறுமையும் பிரச்சினைகள். குடும்பப் பண்புகள் சிதைவு மற்றுமொரு பிரச்சினையாகும்.

ஏற்கனவே கூறியுள்ளபடி,சமுதாயத்தில் மனிதப் பண்புகளை மீண்டும் நிலைநிறுத்தும் போது மக்கள் செயல்முனைப்படைந்து ஊழலை எதிர்க்கின்றார்கள், அதைத் தான் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காண்கின்றோம். சமுதாயத்தின் தீங்குகளை எதிர்த்து நிற்கின்றார்கள். போதைக்கு அடிமையாதல் இந்தியாவில் மற்றுமோர் பெரிய பிரச்சினை. கடந்த மூன்று ஆண்டுகளில் மது அருந்துதல் மூன்று மடங்காகக் கூடி விட்டது. இரண்டு வட இந்திய மாநிலங்கள் போதை பொருட்களால் முழுதும் விழுங்கப்பட்டு விட்டன. கண்டிப்பான சட்ட அமுல்படுத்துதல் மிகுந்த கடினமான பிரச்சினையாகிவிட்டது. ஆனால் இங்கே (அமெரிக்காவில்) சட்டங்கள் மிக நல்ல முறையில் அமைந்துள்ளன, அவை நல்லமுறையில் அமுல்படுத்தபட்டுள்ளன. இந்தியாவில் இத்தகைய சவால்கள் சந்திக்கப் பட வேண்டியுள்ளன, இந்தியாவின் பெரும் மக்கள்தொகை அதற்கு தடையாக  உள்ளது. 

இன்று உலகம் பல நிலைகளில் இது வரை கண்டிராத  சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் தலைவர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் அதிருப்திக்கிடையே  21 வது நூற்றாண்டு சவால்களை பயனுள்ள வகையில் எதிர்கொள்ள எவ்வகையான தலைமை தேவைப்படுகின்றது?

குருதேவ்: கல்வியறிவுள்ள சமுதாயத்தில், "நான் தலைவன்" என்று கூறிக் கொண்டிராமல், பின்னிருந்து தலைமை தாங்கும் ஒரு தலைவர் நமக்கு தேவை. நான் தலைவர், நான் தான் வழிகாட்டுவேன் என்னும் மனபோக்கில் இல்லாமல் பின்னிருந்து தலைமையை மேம்படுத்துதல்,  அதிகாரத்தை விட உத்வேகம் காட்டிப் பணிபுரிதல் ஆகிய  பண்புகள் கொண்ட ஒரு தலைவர் கல்வியறிவுள்ள சமுதாயத்தில் அதிக பணிபுரியக் கூடும்.

அடிப்படைக் கல்வி குறைவாயுள்ள சமுதாயத்திற்கு, தீர்மானிக்கும் ஆற்றலுள்ள தலைவர் தேவை. ஒரு டாக்டரிடம் நீங்கள் செல்லும் போது, அவர்," ஒரு வேளை  இந்த மருந்து பயனளிக்கலாம், முயற்சி செய்து பாருங்கள்" என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவீர்கள், அல்லவா? ஒரு டாக்டர் தீர்மானிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.இந்த மருந்து வேலை செய்யும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும். அறிவுபூர்வமான முயற்சிகளில் உயர் நிலையில் இல்லாத மக்களுக்கு நம்பிக்கையுள்ள தலைவர் பெரிதும் பயனுள்ளவராகின்றார். அதே சமயம், விவேகமும், அறிவார்ந்த மனப்போக்கும் உள்ள மக்களுக்கு  அவர்களை பின்னிருந்து மேம்படுத்தும் தலைவரே தேவை. எனவே ஒரு தலைவனுக்கு யாரை, எங்கே , தான் வழிநடத்துகின்றோம், என்பது தெரிந்திருக்க வேண்டும்.

குருதேவ், தற்கால தொழில்நுட்பம் மற்றும் கேளிக்கைகள்  காரணமாக உலக மக்கள் நம்பிக்கை மற்றும்கருணை ஆகிய பண்புகளுக்கு அண்மையில் இருக்கின்றார்களா அல்லது தொலைவில் உள்ளார்களா?

குருதேவ்: உலகில் மிக அதிகமான மக்கள் கைபேசி மற்றும் தொலைக்காட்சி வசதிகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நீங்கள் அறிய வேண்டும். எனவே இதில் பொது விதி காணமுடியாது.நான் ஏற்கனவே கூறியுள்ள படி உலகெங்கும் சுற்றிப் பார்த்தால் வெவ்வேறு வகையான மக்களைக் காண்பீர்கள். பதினேழாம் நூற்றாண்டிலிருப்பது போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்   இப்போதும் உள்ளார்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவானவையாக திகழ்பவை அன்பு, கருணை, சார்புடைமை ஆகும். உண்மையில் ஊடகங்களற்ற கிராமப் பகுதிகளில் மற்றும் ஒதுக்கமாயுள்ள பகுதிகளில் இவை மிக அதிகமாகவே உள்ளன. மனித நேயமும் மனிதப் பண்புகளும் மக்களுக்கு அதிகம் உள்ளன. மக்களுடன் நேயத் தொடர்பும் நேர்மையும் அவர்களுக்கு உள்ளன.

உலகம் இப்போது மேம்பட்டு வருவதாகக்  கருதுகின்றீர்களா?

குருதேவ்:சில பகுதிகளில் ஆம், சில இடங்களில் இல்லை. பொது விதியாகக் கொள்ள முடியாது. இங்கு வாஷிங்டனில் பிரகாசமாக இருப்பதாக் கூறினால், ஆம், ஆனால் உலகின் வேறு ஏதோ பகுதியில் இருளாக உள்ளது. ஆகவே, சில பகுதிகள் மேம்பாடு அடைகின்றன, வேறு சில பகுதிகள் பின்னடைவையே காண்கின்றன. எனவே, உலக சமூகம் விழிப்படைந்து எவ்வாறு அதிகமான ஒத்திசைவைக் கொண்டு வருவது என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு விதத்தில் நடைபெற்றும் வருகின்றது.

நாம் கற்பதை எவ்வாறு செயல்படுத்துவது? முன்னேற்றத்திற்கும் நல்ல மனித நாகரீகத்திற்கும் நமக்கு கிடைத்திருக்கும் வியத்தகு வழி வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ளும் பொறுப்பைத் தாங்கள் எங்களுக்குத் தந்திருக்கின்றீர்கள். இதுதான் எங்களது பொறுப்பு ஆகுமா?

குருதேவ்: மிகச் சரி! நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு துன்பத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டிருப்போரின் துயரையும் வேதனையையும் குறைக்க வேண்டும்.பல இடங்களில் குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. சமூகத்தில் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வரும் தொடர்பு இடைவெளியை அகற்றிப் பாலமாக செயல்பட வேண்டும்.

குருதேவ், பலர் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்தரமோதியை பற்றி அரசியல்வாதி என்னும் முறையில் எழுதியுள்ளார்கள். தாங்கள் அவரைத் தனி மனிதனாக அறிவீர்கள். மோதி ஒரு மனிதர் என்னும் முறையில், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?


குருதேவ்: அவர் ஒரு மென்மையான இதயம் கொண்ட கடினமான மனிதர். எப்போதும் அலுவலே குறியாக இருப்பார். மிகச் சிலரே அவரது மென்மையான இதயத்தினை அறிவார்கள். இதுவே அவரைப் பற்றிய அனைத்தையும் தெரிவிக்கும் என்று எண்ணுகின்றேன்.