வார்த்தைகளில்லாத ஒரு குரல்

வியாழக்கிழமை, 29 அக்டோபர், 2015        

பெங்களூர், இந்தியா


(தமிழ்நாட்டிலிருந்து வந்த பாடகர்களின் குழுவினர், இன்றைய சத்சங்கத்தில் சேர்ந்து கொண்டார்கள். புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களைப் பாடினார்கள்)

இன்று தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் குழுவினர், பிரசித்தி பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகரை சேர்ந்தவர்கள்.தமிழகத்தில் 63 சிவஅடியார்கள் இருந்தனர். அதில் மூன்றாவதாக வந்தவர் மாணிக்கவாசகர். வார்த்தைகள் ஞானத்தின் முத்துகள் போன்றவை என்பதால் அவரை மாணிக்கவாசகர் என்றழைத்தனர். அவருடைய வார்த்தைகள் வைரம் மற்றும் சிவப்பு இரத்தினக் கற்கள் போன்றவை. அவர் பேசுவது போல் தெளிவாக அப்பழுக்கில்லாமல் இருக்கும். இவர்கள் பாடிய இப்பாடலில், மாணிக்கவாசகர் மனித வாழ்க்கையை பற்றிய அழகான விளக்கத்தை அளிக்கிறார். பின் வருமாறு. இறைவன் ஒரு சிறுமி கயிற்றைத் தாண்டி விளையாடுவது போல் ஆடுகிறார். தாண்டி விளையாடும் போது கால் கயிற்றில் சிக்காமல் குதித்து விளையாடுகிறீர்கள். அதே போல், வாழ்வில் வரும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல், தாண்டி சென்று இறைவனை சென்றடையுங்கள் என்று அழகாக சொல்கிறார். எல்லாத் தடைகளையும் தாண்டி இறைவனை சென்றடையுங்கள். அவர் மேலும் சொன்னது; சிவபெருமான் மூன்றாவது கண்ணைத் திறந்து மூன்று மாநகரங்களை எரித்தார். அந் நகரங்கள் யாவை?

·         கர்ம வினை (செயல்களின் பதிவுகள்)
·         அகம்பாவம்
·         மாயை (உண்மையற்றதை உண்மையென்று நினைப்பது)

இந்த மூன்று நகரங்களில் மனிதன் சிக்கிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறான். (மீண்டும் 
மீண்டும் பிறவி எடுக்கிறான்).இப்பிறவித் தளையிலிருந்து விடுபட, முக்தியடைய இறைவனின்
அருள் தேவை. எனவே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கயிறு தாண்டுவது போல், அதில் சிக்கிக் 
கொள்ளாமல் தாண்டிச் செல். பிரச்சினைகள் கயிறு போன்றவை. நீ கவனமாக அதைத் தாண்ட
வேண்டும். பிரச்சினைகளைத் தாண்டி மேலே சென்றால் இறைவனின் அருளை உணரலாம்.
பிரச்சினைகளைத் தாண்ட உதவும் இறைவன் எப்போதும் உன்னுடனிருப்பதை நீ உணரலாம். 
இப்பாடலின் கருத்து இது தான்.

பாடலுக்கு மற்றொரு பொருளுண்டு. 3 நகரங்கள் விழிப்பு, கனவு மற்றும் தூக்க நிலைகளை குறிக்கிறது. இறைவனின் அருளை நீ உணரும் போது, உன் வாழ்வில் இறைவனின் பங்கை நீ புரிந்து கொள்ளும் போது, நான்காவது நிலையை, ஞான நிலையை அடைய முடியும். அதை சிவ தத்துவமென்று சொல்லலாம்.  தியான நிலை அல்லது துரிய நிலை என்றும் அழைக்கப்படுகிறது. நீ தியானத்தில் அமரும் போது நான்காவது நிலையை அடைய முடியும். தியானத்தின் போது விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் தூக்க நிலைகளைக் கடந்து செல்கிறாய்.

மாணிக்கவாசகரின் பாடல் 2000 ஆண்டுகளுக்கு முன்பானது. ஒரு சில பக்தர்கள் இப்பாடல்களை போற்றி அழியாமல் காத்து காத்து நமக்குத் தருகிறார்கள். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களை நான் இங்கு அழைத்திருந்தேன். எல்லாவற்றையும் மறந்து இப்பாடல்களைப் பாடி, அதன் கருத்துகளைச் சிந்திக்க முடியும். இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல பக்தர்கள் வாழ்கிறார்கள். பல அறிஞர்கள் பல அழகான பாடல்களை பாடியிருக்கிறார்கள். குருவாயூர் கிருஷ்ணரிடம் மிகவும் பக்தியுள்ள கேரளாவில் வாழ்ந்த பூந்தானம் என்பவர் இயற்றிய ஞானப்பானா என்ற பக்திப் பாடல் இன்றும் பாடப்பட்டு வருகிறது. 12 ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த பசவண்ணா இயற்றிய வசனங்கள் இன்றும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. 12ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்த அல்லாம பிரபு எழுதிய வசனங்களும் போற்றப்படுகின்றன. அக்கா மாதேவி என்ற பெண் புலவர் இயற்றிய “மந்த்ர கோப்யா” மற்றும் ‘யோகாங்கத்ரிவிதியாரே” கன்னட இலக்கியத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.



13ம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து வந்த, நாத் பரம்பரையில் வந்த தத்துவ ஞானி மற்றும் யோகி, சந்த் க்யானேஷ்வர் பகவத்கீதைக்கு விளக்கம் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய த்யானேஷ்வரி மற்றும் அம்ருத அனுபவ மராட்டி இலக்கியத்தில் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலுமே ஆன்மீக விழிப்புணர்வு இருந்து வந்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பல ஞானிகள், புலவர்கள் பல சிறந்த இலக்கியங்களை படைத்திருக்கிறார்கள்.
எனவே இந்திய நாடு ஞானிகள், தத்துவ அறிஞர்கள் வாழ்ந்து வந்த நாடாகும். கன்னட மொழியில் “வசன சாகித்யம்” என்ற தாள கதியில் எழுதப்பட்ட பாடல்கள் பிரசித்தி பெற்றவை. ‘வசனம்” என்றால் சொல்லப்பட்டது என்று அர்த்தம்.

கேள்வி - பதில்கள்

நாங்கள் ‘வைசேஷிக தர்ஷணம்’ (இந்தியாவில், இந்து மதத்தின் பழமை வாய்ந்த 6 பிரிவுகளில் ஒன்று) பற்றி படித்தோம். மைக்ராஸ்கோப் போன்ற நுண்ணிய கருவிகள் இல்லாத பழங் காலத்தில், இந்து மத ஞானிகள் எப்படி விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்கினார்கள் என்பதை பற்றிச் சொல்வீர்களா?

நம் மனதுக்கு எட்டாத புதிர் என்று நினைக்கிறேன். இன்று காலை தற்கால விஞ்ஞானி ஒருவர் “வைசேஷிக தர்ஷணத்தில் பௌதீகம்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு புத்தகத்தை படித்தேன். இரண்டு மூன்று சூத்திரங்களைப் படித்த உடனே மனதுக்கு எட்டாத ஆச்சரியமாக இருந்தது.
10000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகள் அணுவைப் பற்றி விவரமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணுவை அழிக்கும் போது, அது எப்படி மற்ற பல அணுக்களை அழிக்க வல்லது என்பதை விவரித்திருக்கிறார்கள். அணுத் துகள்களின் ஓட்டப் பாதையைப் பற்றியும், அவை எப்படி மற்ற அணுத்துகள்களுடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது பற்றியும் நுணுக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணுவை நாம் நன்றாக அறிந்து கொண்டால், அது மற்ற அணுக்களை பற்றிய அறிவுக்கு வழி வகுக்கும்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான். ஐந்து புலன்கள் மூலம் அறிவதற்கப்பால், வேறுவழி ஒன்று உள்ளது. ஆறாவது அறிவு என்று சொல்கிறோம். 6வது அறிவை உபயோகப்படுத்தி, கடந்தகால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை பற்றி நீ அறியமுடியும். வாழும் கலையில், குழந்தைகளுக்கான ஒரு விசேஷ பயிற்சித் திட்டத்தை வகுத்திருக்கிறோம். இது அவர்களுடைய ஆறாவது அறிவைத் தூண்டுவதற்கான பயிற்சி. பெரியவர்களும் இப் பயிற்சியில் சேரலாம். ஆனால் அவர்களுக்கு அதிக காலம் தேவை. குழந்தைகளின் இந்த சக்தியைத் திறக்க சில மணி நேரம் அல்லது சில வாரங்களே தேவை. அவர்கள் தங்கள் கண்களை மூடிய படியே புத்தகத்திலிருப்பதை படிக்க முடியும். உங்களுக்குத் தெரியுமா? சில குழந்தைகள் இப்பயிற்சிக்கு,  மாலை சத்சங்கத்தில் பேசப் போவதை முன் கூட்டியே அறிந்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய ஆறாவது அறிவை பயன்படுத்தும் திறமை வேகமாக வளர்கிறது. பண்டைய காலத்து ரிஷிகளுக்கும் இந்த ஆறாவது அறிவுத் திறமை (உள்ளுணர்வு) மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ் நாட்டில் தஞ்சாவூர் கோவிலுக்குச் சென்றால், (கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.) தொப்பி அணிந்த,துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேயப்படை வீரனின் சிலையை காணலாம். 1000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்திருக்கவில்லை. துப்பாக்கிகளும் கிடையாது. அப்போது வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் இப்படி நடக்குமென்பதை, ஆங்கிலேயர்கள் வந்து நம்மை ஆள்வார்கள் என்பதை தங்கள் உள்ளுணர்வால் அறிந்திருந்தார்கள். எனவே தொப்பி அணிந்த, துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேய படை வீரனின் உருவத்தை கல்லில் வடித்தார்கள். இது அவர்களுடைய ஆறாவது அறிவால் சாத்தியமாகும். நாமும் நம் ஆறாவது அறிவை எப்போதாவது பயன் படுத்தியிருப்போம். அதை தியானம் மூலம் முறையாக தொடர்பு கொள்ளலாம்.