ஆத்மாவின் பலன் உண்மையான ஆனந்தம்

04 ஆகஸ்ட்டு 2014, பெங்களூரு, இந்தியா


(சிரவண மாதத்தின் புனிதம் பற்றிய குருதேவ் அவர்களின் உரையின் தொடர்ச்சி இது)

கேள்வி - பதில்

குருதேவ், மரணம் தான் வாழ்கையின் இறுதி உண்மை என்றால், நாம் ஏன் ஜோதிடத்தை நாட வேண்டும்?

குருதேவ்: இதை உங்களுக்காக கேட்கிறீர்களா? இல்லை மற்றவர்களுக்காக கேட்கிறீர்களா? இதை உங்களுக்காக கேட்கிறீர்கள் என்றால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நாம் அனைவரும் நிச்சயம் இறக்கப் போகிறோம் என்பதே. நாம் வாழும் போது ஆனந்தமாக வாழ்ந்து நமது வேலைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாகச் செய்ய வேண்டும் என்பதே இதில் முக்கியமானது.
மனிதன் வாழும்போது பொதுவாக, ‘ஓ, எனக்கு என்ன ஆகும்? நாளைக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால்? நான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?’ போன்ற எண்ணங்களில் சிக்கிக் கொள்கிறான். இதனால் உந்தப்பட்டு,தன்னுடைய பாதுகாப்பு உணர்விற்காக செல்வத்தை தேடுகிறான். வாழ்கையின் முக்கிய நோக்கம், இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருப்பது தான். ஆனால், ஒருவர் பொதுவாக தேர்வு செய்யும் பாதை என்பது துயரத்தை தான் கொணர்கிறது. இது மிக முட்டாள்தனமான ஒன்று.

எனவே புத்திசாலியான ஒருவர் என்ன செய்வார்? இறைவன் தன்னுடன் இருக்கிறார், இறைவன் தன் மீது அன்பாக இருக்கிறார், இறைவன் தன்னைச் சேர்ந்தவர் அதனால் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்பதை புத்திசாலியான ஒருவர் நிச்சயம் அறிவார். இந்த ஆழமான நம்பிக்கை உணர்வு அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது. இதுதான் தன்னம்பிக்கையின் இரகசியம். இதனால் அவர்கள் விரும்பியதைச் செய்யவும் அதை விரும்பியதை அடையவும் முடிகிறது.நீங்கள் ஓட்டுனர் இருக்கையில் இருந்தால், நீங்கள் வண்டியை எந்தத் திசையில் வேண்டுமானாலும் திருப்பலாம். நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்களோ அங்கே செல்லக் கூடிய வலிமையை ஆன்மிகம் தருகிறது. உங்களுக்கு இது நடந்ததில்லையா? நீங்கள் விரும்பியது நடக்க ஆரம்பித்திருப்பதை இங்கே உங்களில் எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்? (அவையோரில் பலர் ஆமோதித்து கைகளை உயர்த்துகிறார்கள்).

இதுதான் ஞானத்தில், ஆன்மீகப் பாதையின் தேனை சுவைக்கும் மாய வித்தை. எப்போதும் ஒரு பிச்சைக்காரனை போல நடப்பதால் என்ன பயன்? ஒரு பழமொழி உண்டு, ‘ராம் ஜாரோகே பெய்த் சப்கா முஜ்ரா லெ’. அதன் பொருள், இறை நம்பிக்கையைச் சார்ந்து இருந்து எல்லாவற்றையும் கடந்து போகும் நிகழ்வாகப் பாருங்கள். எனவே றைவனோடு தொடர்பு ஏற்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல, நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும், அதை அடைவீர்கள். நீங்கள் தரும் ஆசீர்வாதம் பலிக்க ஆரம்பிக்கிறது. பலர் இந்த அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். இதுதான் ஆன்மீக ஞானத்தின் பெருஞ்செல்வம்.

இப்படிப்பட்ட பெரும் ஞானம் நம்மிடம் நம் நாட்டில் இருக்கிறது, ஆனால் பலருக்கு இது தெரியக்கூட இல்லை. மக்கள் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து, ஆரத்தி காட்டும் அர்ச்சகருக்கு தட்டில் காணிக்கை போட்டுவிட்டு, தம் வாழ்கையை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்கு வந்தபின் மறுபடி வேட்கையிலும், வெறுப்பிலும், மற்றவர்களை விமர்சித்துக் கொண்டும், சிறுமைப்படுத்தி, பொறாமையிலும் பேராசையிலும் சிக்கிகொள்கிறார்கள். தங்கள் வாழ்கை முழுதையும் அப்படியே கழிக்கிறார்கள்.உங்கள் வாழ்கையை மேம்படுத்த ஆன்மீகத்தில் ஆனந்தத்தை காண வேண்டும். இந்த ஆனந்தத்தை கண்ட பின், குடும்பப் பொறுப்புகளிலிருந்து ஓடிவிடக் கூடாது; வீட்டிலேயே இருந்து குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுங்கள். ஆன்மீக மற்றும் குடும்ப வாழ்கை இரண்டிலும் மேன்மை பெற இரண்டையும் சமமாகக் கருத வேண்டும்.

இது அவ்வளவு அழகான ஞானம், இதைத்தான் நாம் நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.


குருதேவ், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அவதாரமா அல்லது சிவ பெருமானின் அவதாரமா? இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன், தயை செய்து என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள்.

குருதேவ்: நீங்கள் பகவத் கீதையை படித்திருக்கிறீர்களா? நீங்கள் கீதையை முதலில் படிக்க வேண்டும். அதை ஒரு முறை படித்தால் போதாது. அதை மறுபடி மறுபடி படிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘எங்கு நீ இறைத் தன்மையைக் கண்டாலும் அது என்னுடைய ஒரு பகுதி, என்னுடையது மட்டுமே’. அவர் கூறுகிறார்,மரம் செடி என எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன். வலிமையானவரின் வலிமை நான், ஒளி பொருந்தியவர்களின் பிரகாசமும் புகழும் நான். இந்த படைப்பில் என்னை விஞ்சி எதுவும் இல்லை.’


ஏக்கம் பற்றி பேசுங்கள். நான் ஏன் அவ்வளவு ஏங்குகிறேன்?

குருதேவ்ஏக்கமே இறைவன் தான். இறைவனுக்காக ஏக்கம் வரும் போது, வாழ்க்கையில் இறைவனுக்காக ஏங்கும் போது, வாழ்க்கையில் சித்தி (அசாதாரண திறன்கள்) கிடைக்கிறது. வாழ்க்கையில் ஏக்கம் இல்லையென்றால், அன்பு இருக்க முடியாது, நறுவிசு இருக்க முடியாது, நிறைவு இருக்க முடியாது, விளையாட்டுத்தனம் இருக்க முடியாது. எனவே ஏக்கம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது.

சிறிய மற்றும் சாதாரணப் பொருட்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஒருமுறை இறைவனை பற்றிய ஏக்கம் வந்துவிட்டால், பிறகு நீங்கள் சக்கரவர்த்தி ஆகிவிடுகிறீர்கள். 

குருதேவ், பகவத் கீதையில் தான் மாதங்களில் மார்கழி என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். தயை செய்து விளக்குங்கள்.

குருதேவ்நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு நிகழ்ச்சியைக் கொண்டது, எனவே ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. புருஷோத்தம மாதம் (ஸ்ரீ விஷ்ணு பகவானின் மாதம்) என்று ஒரு மாதம் மிக விசேஷமானது, விஷ்ணு பக்தர்களுக்கு மிக முக்கியமான மாதம்.

சிவ பெருமானின் பக்தர்கள் ஆடி மாதத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். தேவியின் பக்தர்கள் சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். நவராத்திரி புரட்டாசியில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே எல்லா மாதங்களுக்கும் அதற்கென ஒரு முக்கியத்துவம் உள்ளது. ஆன்மிகம் என்று வரும்போது நம் நாட்டில் ஒரு தத்துவம் மட்டுமே இல்லை. பல புராணங்கள் பல நூல்கள் உண்டு, அவை ஒவ்வொன்றும் வேறு வேறு தனித்துவத்தை 
ஒவ்வொரு மாதத்திற்கும் கூறுகிறது. ஆனால் அவை எல்லாவற்றின் சாரம் என்னவென்றால் நாம் காலத்தை மதித்து அதற்குத் தகுந்த முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். அதைத் தேவையில்லாமல் உண்டு, குடித்து அல்லது வெட்டிக் கதைகள் பேசி வீணாக்கக் கூடாது.
இதில் நாம் அறிவது என்னவென்றால் காலம் புனிதமானது. காலத்தை ஒரு இறைப் பிரசாதமாகக் கருத வேண்டும்.

சிவ பெருமான் ஏன் போலேநாத் என்று அழைக்கப்படுகிறார்?

குருதேவ்சிவபெருமான் ஒரு போலா (களங்கமில்லாதது),அவர் போலேநாத் (களங்கமில்லாதவர்) என்று அழைக்கப்படுகிறார். எளிதாக மனமிரங்கச் செய்துவிடலாம். அன்போடு கேட்பவர்களுக்கு வரம் தந்துவிட்டு தானே பிரச்சினையில் மாட்டிக் கொள்வார். (வரம் வாங்கியவர்கள் அதை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள்). அசுரரோ அல்லது தேவரோ, அவரை நோக்கித் தவம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், களங்கமில்லாமல் வரத்தை அளித்துவிடுவார். அவர்கள் எதைக் கேட்டாலும் கொடுத்துவோடுவார், அதனாலேயே அவரை போலேநாத் என்று அழைக்கிறார்கள்.
வேறொரு பொருள் உண்டு. நீங்கள் போலா வாக மாறினால் பிறகு அவரே உங்கள் நாத் (தலைவன் அல்லது ஆசான்). ‘போலே பாவ் மிலே ரகுராய்’ என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதன் பொருள், நீங்கள் உள்ளே களங்கமற்று தூய்மையாய் ஆகும் அந்தக் கணம் இறைவனோடு ஒன்றிவிடுகிறீர்கள்.

குருதேவ், இந்த உலகம் ஏன் படைக்கப்பட்டது?

குருதேவ்இது எனக்காகப் படைக்கப்பட்டது! (சிரிப்பு) இந்த உலகத்தில் ஏன் இத்தனை பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் கேட்டால், அவை உங்களுக்காக என்று சொல்வேன்! (மறுபடியும் சிரிப்பு). இந்தப் பிரச்சினைகள் படைக்கப் பட்டத்தின் நோக்கம், இந்த உலகிலேயே நீங்கள் ஒட்டிக் கொண்டு பற்று வைக்கக் கூடாது என்பதே. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் நீங்கள் இந்த உலகில் ஒட்டிக் கொண்டுவிடுகிறீர்கள். பிரச்சினைகளே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் இந்த பொருள் உலகை விட்டு விட்டு வரவே மாட்டீர்கள்! சரிதானே?

குருதேவ், நீங்கள் அனாஹதத்தின் நாதத்தை மௌனமாய் இருந்து கேட்கச் சொன்னீர்கள். ஆனால், அதை நான் செய்தால், எனக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டால் போல தோன்றுகிறது. இதை ஒரு முறை மருத்துவரிடம் கூறும்போது, இதை ஏதோ மனக் கோளாறு என்கிறார்.

குருதேவ்உள்ளிருந்து கேட்கும் ஓசையில் இலயித்து இறுக்கத்தைத் தளருங்கள். அந்த உள் ஓசையோடு சண்டை போட்டு அது கேட்காமல் செய்து விடுகிறோம். அப்படிச் செய்யாதீர்கள், அமைதியான மனதோடு அந்த ஓசையின் மூலம் தளர்வடையுங்கள். உதாரணமாக மும்பை, டில்லி அல்லது நியூயார்க் போன்ற நகரங்களில் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் இல்லங்களில், 24 மணி நேரமும் கனரக வாகனங்களின் ஓசை கேட்டவாறு இருக்கும். நமது ஆசிரமத்தில் இருந்துவிட்டு இப்படிப்பட்ட வீடுகளில் தங்க நேர்ந்தால் உங்களால் தூங்கவே முடியாது. ஆசிரமத்தில் அப்படி ஒரு அமைதியான சூழலில் தூங்கி, அங்கே அந்த சப்தத்தில் உங்களால் தூங்க முடியாது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் அந்த வாகனங்கள் செல்லும் பலத்த ஓசை கேட்பதோடல்லாமல், ஏதோ அந்த வாகனம் உங்கள் தலைக்கு மேலே போகிறார்போல அதிர்வுகளும் இருக்கும். இந்த ஓசை நமக்கு பழக்கமில்லாததால் அதனுடன் நாம் சண்டை போட வேண்டியதாகிவிடுகிறது.

வெளி நாடுகளில், இப்படி நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடுகளில் அமைதியான சூழல் கிடைப்பது கடினம். உங்கள் அமைதியை இழந்து விடுவீர்கள். அங்கு செல்ல நேர்பவர்கள் தங்கள் அமைதியை இழந்து தூக்கம் கெட்டுத் தவிப்பார்கள். சரியான தூக்கமில்லாமல் உங்கள் முழு உடம்பும் நடுக்கத்திற்கு உள்ளாகி பயத்தை உணர்வீர்கள். ஆனால் வெகு காலமாய் அங்கேயே இருப்பவர்களுக்கு அந்தச் சப்தம் பழகிப் போய் இந்த சத்தத்தினால் அவர்களுக்கு தூக்கம் கெடுவதில்லை. அந்தச் சத்தத்தையும் மீறி முழு இரவும் குறட்டையுடன் நன்கு தூங்குவார்கள். அதை போலவே மும்பையில் வசிக்கும் மக்களும். நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இருந்தாலும், அந்தச் சத்தம் பழக்கமாகிவிடுவதால், அவர்களுக்கு அது தொல்லையாய்த் தெரிவதில்லை.
அதைபோலவே நமது உள்ளே இருந்து கேட்கும் குரலால் நமக்கு ஏதோ வியாதி வந்துவிட்டது என்று நினைக்கிறோம். மன நல மருத்துவரிடம் சென்று மருந்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தொல்லை தீராமல் வேறு சில பிரச்சினைகளையும் வரவழைத்துக் கொண்டு முன்பை விட மோசமான நிலைக்குச் செல்கிறோம். அந்த சூட்சுமமான ஓசையை ஏற்றுக்கொண்டு தியானத்தில் தளர்வடையுங்கள். அந்த சப்தத்தில் நீங்கள் மென்மையாக நனைவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை அன்போடு ஏற்றுக் கொள்வீர்களானால், எல்லாம் மாறுவதைப் பார்ப்பீர்கள்.