தாராள மனப்பான்மை : வெற்றிக்கு ஒரு திறவுகோல்

செவ்வாய்க்கிழமை, 

30 ஆகஸ்ட் 2014.

(வெற்றின் உண்மையான அடையாளம் என்னும் பதிவின் தொடர்ச்சி)

உளவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? பத்து நிமிடங்களுக்கு மேல் ஒரு பேச்சாளர் பேசினால் கேட்பவர்கள் மூன்று முறை இடைவெளி எடுத்துக் கொள்கின்றார்கள். கவன பற்றாக்குறை ,இக்காலத்தில் நமது இளைஞர்களுக்கு பெருமளவில் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு விதமான பதிவுகள் மூளையில் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் கவனப்பற்றாக்குறை, மனச் சிதைவு ஆகியவை அதிகரித்துக் கொண்டு வருகின்றன.நமது மன நலத்தினை காப்பது மிகவும் முக்கியமானது ஆகும். பல் சுத்தம் மாதிரி மன சுகாதாரம் முக்கியம் ஆனால் அதற்குப் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு சில பகுதிகளில் பற்கள் அனைத்தும் உடைய மனிதர்களைக் காண்பது அரிது ஏனெனில் அவர்கள் தினமும் பல் துலக்க மாட்டார்கள், இது உலகெங்கிலும் அல்ல, சில பகுதிகளில் மட்டும். இன்று அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைந்திருப்பவை பல் பசையும் பல்துலக்கும் பிரஷும் ஆகும். இது போன்றே நாம் மக்கள் அனைவருக்கும் எவ்வாறு மனதை சுகாதாரமாக வைத்திருப்பது என்னும் கல்வியினை அளிக்க வேண்டும்.இது மன சுகாதாரம் என்று அழைப்படும். தியானம் ஒரு வகையில் மன சுகாதார வழி. அது உங்களை விவேகத்துடன் வைத்திருக்கும். அந்நிலையில் நீங்கள் மகிழ்வுடன் இருக்கின்றீர்கள், உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றது.

சூழ்நிலை மகிழ்ச்சியற்று இருக்கும் போது ஒருவன் தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? ஒரு குடும்பத்தில் ஒருவர் மகிழ்ச்சியற்று இருந்தால் கூட மற்ற அனைவரும் மகிழ்ச்சியற்றே இருக்கின்றார்கள். மகிழ்ச்சி என்பது பரவ வேண்டும். அவ்வாறு பரவ வில்லையெனில் விரைவில் அது இறந்துவிடும். அடுத்து, மகிழ்ச்சியின் இயல்பு பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். நீங்கள் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்தால், என்ன செய்கின்றீர்கள்? " ஒ ! யாரும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்! நான் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்து விட்டு வந்திருக்கின்றேன்" என்று கூறமாட்டீர்கள்.  அவ்வாறு கூறுவீர்களா? (அவையோர் இல்லை என்று கூறுகிறார்கள்) நல்ல எதையும் பார்த்தால், உடனே என்ன செய்கின்றீர்கள்? அனைவரிடமும் அது மிக நன்றாக இருக்கின்றது அவர்களும் அதைப் பார்க்க வேண்டும் என்று கூற விரும்புவீர்கள். மகிழ்ச்சியின் இயல்பே பகிர்ந்து கொள்ளுதலும் தருவதும் தான்.

இரண்டு விதமான மகிழ்ச்சிகள் இருக்கின்றன.முதலாவது பற்றிக் கொள்ளுதல் அல்லது எடுத்துக் கொள்ளுதல். இந்த வகையுடன் தான் நாம் அனைவரும் பிறந்தோம்.ஒரு குழந்தை அனைத்தையும் எடுத்துக்கொண்டு மகிழ்கின்றது. இது குழந்தைப் பருவ மகிழ்ச்சி நிலை. உடைமையின் தேவை.ஒரு குழந்தையை பொம்மைக் கடைக்கு அழைத்துச் சென்றால், அக்கடை முழுவதையுமே வீட்டிற்குக் கொண்டு வர விரும்பும். இது குழந்தையின் ஆனந்தம்.

பின்னர் சற்றே முதிர்ந்த மகிழ்வு நிலை. இது உங்கள் தாத்தா பாட்டியின் மகிழ்வு நிலை. பாட்டி தனியாக இருக்கும் போது அதிகமாக சமைக்க மாட்டார்கள். ஆனால் பேரன் பேத்திகள் வந்தால் பாட்டியின் உற்சாகத்தை பாருங்கள்! பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்களை செய்து பேரன் பேத்திகளுக்கு ஊட்டுவதில் ஆனந்தம் அடைவார்கள். இது முதிர்ந்த இன்ப நிலை. தருவதில் அடையும் ஆனந்தம். மகிழ்ச்சியும் வெற்றியும் உங்களது கொடுக்கும் திறனில் அடங்கியுள்ளது. இத்தகைய கொடுக்கும் திறன் உங்களது விழிப்புணர்வு நிலையில் உங்கள் மனதில் இருக்கின்றது.  நீங்கள் கொடுக்கும் பொருள் முக்கியம் அல்ல, பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மைதான் முக்கியம். 
உலகெங்கிலும் பல தொழில் அதிபர்கள் கொடுப்பதில் மகிழ்ச்சியுருவதை பார்த்திருப்பீர்கள். ஏன் கொடுக்கின்றார்கள்? கொடுப்பது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.  ஒப்பற்ற திருப்தியினை அளிக்கின்றது. கொடுத்தல் உங்களுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சி ஒப்பற்றது. எவன் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை ருசிக்கின்றானோ வெற்றி பெற்ற மனிதன் ஆவான். அவ்வாறு ருசித்தவன் அந்த மகிழ்ச்சியைப் புரிந்து கொண்டு கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். அதுவே வெற்றியின் அடையாளம்.

வெற்றி அடைந்த பின்னரே கொடுக்க வேண்டும் என்பது அல்ல. அதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கொடுப்பதில் சிறப்புப் பெற்ற இந்நாட்டில், அரசாங்கம் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு என்பதை சட்டமாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து தொழில் முனைவோரும் அவர்களது லாபத்தில் 2 முதல் 3 சதவீதம் வரை கட்டாயமாக கொடுக்க வேண்டும். இது சட்டம். பாருங்கள் எவ்வாறு நற்பண்புகள் மறைந்து விட்டன? இது நமது மரபணுக்களிலேயே உள்ள ஒன்று. நாம் எப்போதுமே சமுதாயத்திற்கு கொடுத்து வந்தோம். எனவே, மகிழ்ச்சியும் வெற்றியும் நமது கொடுக்கும் திறனிலே அடங்கியுள்ளது. இத்தகைய கொடுக்கும் திறன் உங்களது விழிப்புணர்வு நிலையில் உங்கள் மனதில் இருக்கின்றது. நீங்கள் கொடுக்கும் பொருள் முக்கியம் அல்ல, பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மைதான் முக்கியம்.

வினாக்களும் விடைகளும்

குருதேவ்,  கேலிவதை என்பது இப்போது கல்லூரிகளில் ஒரு பெரிய பிரச்சினை ஆகி விட்டது. நமது மகிழ்ச்சி திட்டப்பயிற்சியில் இளைஞர்களை தயவு செய்து அதற்கெதிராக கூருணர்ச்சிப்  படுத்துங்கள்.

குருதேவ்: ஆம் நிச்சயமாக. ஏன் கேலி வதை செய்கின்றார்கள் தெரியுமா? ஒரு வேடிக்கைக்காக. பல விதங்களில் வேடிக்கை செய்யலாம்,ஆனால் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவதன் மூலம்  அல்ல. நீங்கள் தொழில்நுட்ப மாணவர்கள். புதுமையாக எதுவும் செய்யுங்கள்,ஆனால் மற்றவரின் வாழ்க்கையையோ , மனதையோ பாதிக்கும் வகையில் அல்ல.

குருதேவ் என்னுடைய வாழ்க்கை மிகுந்த நிச்சயமற்றதாக இருக்கின்றது. என் வாழ்வின்   குறிக்கோள் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. என்னுடைய சுற்றுச் சூழலினால் நான் எளிதாக வசியப்படுத்தப் படுகின்றேன். எனக்கு சரியான பாதையைக் காட்டுங்கள்.

குருதேவ்: ஒரு மாணவனின் முதல் குறிக்கோள் படிப்பில் சிறப்புற்று, ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொள்வதே. அதே சமயத்தில் பல அம்சங்களிலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இதுவே சிறந்த பருவம். படிப்பு மட்டுமே உங்களுக்கு முழு திருப்தியை அளிக்காது. கூடுதல் கல்விசார் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள், ஆனால் உங்களது முக்கிய கவனத்தை அவை திசைதிருப்பி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

படிப்பிலேயே உங்கள் முக்கிய கவனம் இருக்கட்டும்.“ஒ! எனக்கு இது பிடிக்கவில்லை இதை விட்டுவிட வேண்டும்” என்றெல்லாம் எண்ணாதீர்கள். அது ஒரு போதும் வேண்டாம். மாணவர்கள் என்னிடம் வந்து இவ்வாறு கூறும் போது நான் எப்போதுமே அவர்களிடம், முதலில் படிப்பை முடியுங்கள். என்ன எடுத்துக் கொண்டீர்களோ அதைப் படித்து முடித்துப் பட்டம் வாங்குங்கள்.   பின்னர் தான் அனைத்தும் என்றுதான் கூறுவேன்.

ஒரு சிறு தோல்வி கூட என்னுடைய நம்பிக்கைக்கு இடையூறு  உண்டாக்குகின்றது.  நான் என் வாழ்வில் பல தோல்விகளைச் சந்தித்திருக்கின்றேன். எவ்வாறு என்னை ஊக்கம் குறையாமல் காத்துக் கொள்வது?

குருதேவ்: உங்கள் மீது மிகக் கடுமையாக இருக்காதீர்கள். ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி வைக்கு ஒரு அடியாகும்.இன்று உலகில் உள்ள எத்தனையோ வெற்றியாளர்கள், தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் எவ்வளவு தோல்வி அடைந்திருக்கின்றார்கள் தெரியுமா? உலகெங்கிலும் அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

ஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடைந்தால் நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா? வேறொருவர் வெற்றி பெற நீங்கள் வழி வகுத்திருக்கின்றீர்கள் என்று எண்ண வேண்டும். வாழும் கலையில் நான் எப்போதுமே கூறுவேன்," நாம் வெற்றியை பெற அல்லது வேறொருவர் வெற்றி பெற விழைகிறோம்" தோல்வி என்பதே கிடையாது.வேறொருவரை வெற்றி பெறச் செய்வதும் ஆனந்தம் தான். நீங்கள் பரிசு பெற்று உங்கள் நண்பர்கள் பெறவில்லையெனில் அதைப் பற்றி நீங்கள் மகிழ்வீர்களா? இல்லை.வெற்றி பெறும்போது பிறரும் அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றே நீங்கள் விரும்புகின்றீர்கள். எனவே இவ்வாறு எண்ணுங்கள். ஒரு போட்டியில் யாரேனும் வெற்றி பெற்றால் அவர்களுடன் மகிழ்வினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொழிலை ஆர்வமாக கொள்ளுவது என்பது எவ்வளவு முக்கியம்?

குருதேவ்: தொழிலில் நீங்கள் அதிக வெற்றிகாணும் போது அதுவே உங்களது ஆர்வமானதாக ஆகி விடுகின்றது. எதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கின்றதோ அதுவே உங்கள் தொழில் ஆகி விடுகின்றது. நீங்கள் ஒரு எஞ்சினியராக இருந்து சங்கீதத்தில் ஆர்வம் இருந்தால், அதை நீங்கள் தொடரும் போது ஒரு சங்கீத வித்வான் ஆகி விடுவீர்கள். ஆர்வமும் செய்யும் தொழிலும் ஒன்றாக இருந்தால் அதுதான் வெற்றிக்கான சூத்திரம்.

நான் வெற்றியாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் போது ஏற்படும் கர்வத்தை எவ்வாறு கட்டுப் படுத்துவது? தியானம் தவிர மனதை அமைதியாகவும் மகிழ்வாகவும் வைத்திருக்கும் பிற வழி முறைகள் யாவை?

குருதேவ்: கர்வம் உள்ளவர்கள் பாதுகாப்பின்றி உணருவார்கள்.போதுமான அளவு அறிவு இருக்காது. ஆனால் உங்கள் வாழ்க்கை விரியும் போது,மாறும் போது, கர்வம் ஏற்பட இடம் ஏது? வாழ்க்கையை முழுமையான கண்ணோட்டத்தில் காணும் போது கர்வம் ஏற்படாது. பல கோடிக்கணக்கான மக்கள் பிறந்து இறந்து விட்டார்கள். இன்னும் பிறந்து வருவார்கள். கர்வம் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக என்ன செய்து விட்டீர்கள்? அனைவரையும் போன்று,நீங்களும் மண்ணுக்குள் போகின்றீர்கள். நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்பதை பற்றி விழிப்புணர்வு அடையவில்லை என்றே எண்ணுகின்றேன். மயானத்தில் ஒரு முறை நடந்து சென்று அங்கு தான் நீங்களும் ஒரு நாள் போகப் போகின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எந்த அகந்தையும் நிலைத்திருக்காது. பணிவு, சார்பு உணர்வு ஒரு தானியங்கி நிகழ்வு ஆகும். இது நமது வாழ்க்கையின் ஒரு எளிய விழிப்புணர்வு ஆகிறது.இது நிகழ நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.