குருதேவின் ரக்ஷாபந்தன் தின செய்தி

10 ஆகஸ்ட் 2014, 

பெங்களூரு, இந்தியா



இன்று ரக்ஷாபந்தன் (ஹிந்துப் பண்டிகை) மற்றும் ஸ்ராவன் உபாகர்மா (ஆண்டுக்கொரு முறை பூணூல் மாற்றும் சடங்கு) ஆகும். ரக்ஷாபந்தன் நமது வாழ்க்கையில் பயத்தினை அகற்றுவதற்காக கொண்டாடப்படுவது. பயம், நமது நற்குணங்களையும் ஆக்கத்திறனையும் உருச்சிதைக்கின்றது. நமது தனி சிறப்பினை சுருக்கி, பிறரிடம் நமது நடத்தையை மோசமானதாக ஆக்குகின்றது.

உபாகர்மா என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? யஞ்ஞோபவிதம் (பூணூல்) மாற்றும் தினம் ஆகும். பூணூல் எதைக் குறிக்கின்றது? ஒருவன் தனது தோளில் சுமக்கும் பொறுப்புக்களைக் குறிக்கின்றது. பூணூலில் மூன்று நூல்கள் இருக்கின்றன. நமது பெற்றோருக்கு, சமுதாயத்திற்கு, மற்றும் நமது பாரம்பரியத்திற்கு நாம் பட்டிருக்கும் கடன்களை. இவை சுட்டிக் காட்டுகின்றன. இம்மூன்று கடன்களையும் தோளில் சுமந்திருப்பதுவே யஞ்ஞோபவிதம்.

நாம் சமுதாயத்திற்கு பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றோம். சமுதாயம் நமக்கு அனைத்தையும் தருகின்றது, நாம் அதற்குத் திருப்பித் தரவேண்டும். நமது பெற்றோர் நம்மை கவனித்து, வளர்த்திருக்கின்றார்கள், அவர்களுக்கு அக்கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். ஞானத்தை அடைந்திருக்கின்றோம், அந்த பாரம்பரிய தர்மக் கடனை, திருப்பி செலுத்த வேண்டும். இம்மூன்று கடன்களையும் நாம் தோளில் சுமந்து கொண்டிருப்பதை குறிக்கும், அந்த பூணூல் காலம் செல்லும்போது பலமிழக்கின்றது, எனவே, ஒவ்வொரு ஆண்டும்,நாம் அதை நினைவு கூர்ந்து ரிஷிகளுக்குத் தர்ப்பணம் செய்து, பூணூலை மாற்றி கொள்கின்றோம்.இவ்வுலகில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஞானத்தை ரிஷிகள் காத்து வந்திருக்கின்றனர். ரிஷிகளின் பாரம்பரியம் இன்றி நமக்கு இந்த ஞானம் கிடைத்திருக்காது. அதன் பொருட்டு இந்த நாளில் ரிஷிகளைத் துதித்து, அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

அது போன்று, பயத்திலிருந்து நமக்குப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. ஒரு சமுதாயத்தில் வாழும் போது, விவாதங்கள், கருத்து வேற்றுமைகள், தவறான புரிதல்கள் இவையாவும் பதட்டம், பாதுகாப்பின்மை, மற்றும் பயம் இவற்றை ஏற்படுத்துகின்றன.பயத்தில் மூழ்கும் சமுதாயம் அழிந்து விடும்.ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பயத்துடன் வாழ்ந்தால், அக்குடும்பம் அழிந்துவிடும். ரக்ஷாபந்தன் என்னும் பண்டிகையில், ஒருவருக்கொருவர், "நான் உனக்குத் துணை இருக்கின்றேன் என்னும் உறுதிமொழியை அளிக்கின்றனர்.

ரக்ஷாபந்தன் ஒருவருக்கொருவர், நான் உன்னுடன் இருக்கின்றேன், உனக்கு உதவி செய்வேன், உன்னுடன் கூடவே இருப்பேன் என்னும் தொடர்பையும், நம்பிக்கையையும், உறுதியளிக்கும் பண்டிகை. இப்பண்டிகையில் இவற்றை கூறி உறுதியளித்து பாதுகாப்பினை தருகின்றார்கள். இந்த உறுதிமொழியினால் என்ன ஆகின்றது? பயம் மறைந்து விடுகின்றது. ரக்ஷாபந்தனின் குறிக்கோளே நமது வாழ்வில் பயத்தை அகற்றுவது தான். பிணைப்பு இருக்கும் போது பயம் இல்லை. பிணைப்பற்ற நிலையிலேயே பாதுகாப்பின்மை நுழைகின்றது. பிறர் நம்மை என்ன செய்து விடுவார்களோ என்று கவலைப்படுகின்றோம். நம்மிடம் இருந்து குடும்பமோ சமுதாயமோ எதுவானாலும் பறிக்கப்பட்டு விடுமோ என்னும் பயம் அழுத்தமாக எழுகின்றது. எதிர்க்கும் சுபாவமுள்ள பலர் ஏதோ ஒரு பாதுகாப்பின்மை உணர்வுடன் இருக்கின்றார்கள். ரக்ஷாபந்தன் பண்டிகை "நமது நட்புக்கு பொறுப்பு ஏற்கின்றேன், உன்னைப் பாதுகாக்கும் பொறுப்பு ஏற்று, நமது பிணைப்புக்கு உறுதி அளிக்கின்றேன்" என்று கூறி, தளைக்கயிறு கட்டுவதாகும்.பிணைப்பு பயத்தை அகற்றுகின்றது, பயம் அகலும் போது அறியாமை விலகுகின்றது. இப்பௌர்ணமி நாள், நான்கு வேதங்களையும் இயற்றிய ரிஷிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்.

எவ்வாறு நன்றி தெரிவிக்கின்றோம்? நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பிணைத்துக் கொள்வதன் மூலம் நன்றி தெரிவிக்கின்றோம். ஒருவருக்கொருவர் நட்புணர்வுடன் இருக்கும் போது ரிஷிகளின் தீர்மானமான வசுதேவ குடும்பகம் (ஒரு உலகக் குடும்பம்) நிறைவேறுகின்றது. நெற்றியில் சந்தனம் இட்டுக் கொள்ளுங்கள். சந்தனம் ஞானசெறிவைக் குறிக்கும். நமது வாழ்வில், முட்டாள்தனம் சுய இரக்கம் இவை விலகி ஞானம் தழைக்கட்டும்.ஆகவே இப்பண்டிகை அறிவையும் ஞானத்தையும் கொண்டாடும் பண்டிகை ஆகும். இங்கு இந்தியாவில்,ஒவ்வொரு பௌர்ணமியும் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு அர்பணிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு விசேஷ குணம் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப் படுகின்றது. கவனத்துடன் விழிப்புணர்வுடன் இருந்து கொண்டாடு என்னும் பொருள் கொண்டது.நமது செயல்கள் அனைத்தும் எங்கேயோ பதிவு செய்யப் படுகின்றது. எனவே ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட வேண்டும். சித்ரா பௌர்ணமி இந்த எச்சரிக்கையை குறிக்கின்றது. இரண்டாவது பௌர்ணமி புத்த பௌர்ணமி, புத்தர் பிறந்த தினம் ஆகும்.

மூன்றாவது ஜ்யேஷ்ட பௌர்ணமி, இது பூமி பௌர்ணமி என்றும் அழைக்கப் பட்டுக் கொண்டாடப் படுகின்றது. அடுத்து வருவது ஆஷாட பௌர்ணமி. இது குருபூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று கொண்டாடப்படுகின்றது. இதற்கு அடுத்தது ஸ்ராவண பூர்ணிமா. இது ரிஷிகளுக்காகக் கொண்டாடப்படுவது. ஞானச் செறிவை நமக்கு அளித்து, நம்மைக் கற்க வைத்த அவர்களுக்கு நாம் காட்டும் நன்றி ஆகும்.நான்கு வேதங்களை நமக்குத் தந்து நம் கண்ணுக்குத் தெரியாமல் என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் ரிஷிகளை இப்பௌர்ணமியன்று நினைவு கூறுகின்றோம்.எவ்வாறு அதைச் செய்கின்றோம்? ஒருவருடன் ஒருவர் நட்புடன் பிணைந்து ரிஷிகளின் வசுதேவ குடும்பகம் என்னும் தீர்வை பூர்த்தி செய்வதன் மூலம் ஸ்ராவன் பௌர்ணமி யன்று அதைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

அடுத்த பௌர்ணமி சரத் பௌர்ணமி. இது எல்லையற்ற தன்மைக்கு அர்ப்பணம் செய்யும் பௌர்ணமி ஆகும். இந்த நாளில் ஸ்ரீ கிருஷ்ணபகவான் கோபியருடன் ஆடி மகிழ்ந்ததாக கூறப்படுகின்றது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.வாழும் கலையில், எந்த ஒரு நாளையும் கொண்டாடி மகிழ்கின்றோம், ஏனெனில் வாழ்வே ஒரு கொண்டாட்டம் ஆகும்.