வெற்றியின் உண்மையான அறிகுறி..

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014,

டெல்லி, இந்தியா


மகிழ்ச்சி மற்றும் வெற்றி குறித்து உங்களுக்கு உரை நிகழ்த்த வேண்டிய தேவை உள்ளதாக நான் கருதவில்லை. நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் மிகுந்த வருத்தம் உள்ள ஒரு கூட்டமாக  இருந்தால் மகிழ்ச்சியை பற்றிப் பேசிப் பயன் இல்லை. ஏனெனில் நான் என்ன கூறினாலும் அது உங்கள் மூளையில் ஏறாது. நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியுடன் இருந்தால் அதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் வெற்றியைப் பற்றி நாம் பேசலாம்.
வெற்றியான ஒரு மனிதன் எப்போதும் திருட விரும்பமாட்டான், ஏனெனில் எங்கு சென்றாலும் செல்வம் ஈட்டலாம் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருக்கும், அப்போது  நெறியற்ற முறையில் எதையும் ஏன் செய்ய வேண்டும்?

ஒரு சமயம், நான் உலகிலேயே மிகுந்த வெற்றி பெற்ற மக்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டேன். அங்கு வந்திருந்த அனைவருக்கும் அறிமுகப் படுத்தப்பட்டேன்.அவர்களில் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தும் போது, மிக வெற்றிகரமான தொழில் அதிபர் என்று கூறப் பட்டது. ஆனால் அவர் மிகுந்த எரிச்சலுடன் காணப்பட்டார். வேறொருவர் மிகுந்த சிடுசிடுப்பானவர் என்று அறிமுகப்படுத்தப் பட்டார். அவரது மனைவி என்னிடம், என் கணவரின் மனப்பாங்கை உங்களால் சரிப்படுத்த முடியுமா என்று கேட்டார். அவர்களையெல்லாம் பார்த்தால் அவர்கள் சிரித்துப் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்று தோன்றியது. ஒருவர் முகத்தில் கூடப் புன்முறுவல் இல்லை. சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், சிலருக்கு வயிறு பிரச்சினை என்றெல்லாம் இருந்தன. இவர்களெல்லாம் வெற்றியாளர்களா? பலர் மயானத்திற்கு செல்லத் தயாராக இருப்பது போலத் தோன்றினார்கள்.

வெற்றி என்பதன் விளக்கம் என்ன? பல சமயங்களில் டாக்டர், அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி இறந்து விட்டார், என்று கூறுவது போன்றது இந்நிலை. வெற்றியை நோக்கி தேடி ஓடி, வாழ்வில் களைப்பு மேலிடுகின்றது. சக்தி இல்லை, உற்சாகம் இல்லை நம்பிக்கை இல்லை. இந்நிலையில் எவ்வாறு அவர் வெற்றி அடைந்தவர் ஆவார்?
 
ஒரு உயர்ந்த பதவியை அடைவதற்கு ஒருவர் கடினமாக உழைக்கின்றார். அதை அடைந்தவுடன் அதை இழந்து விடுவோமோ என்று பயம் கொள்கின்றார். பெருமளவு காலத்தைப் பிறரை பழித்துக் கொண்டோ, சந்தேகித்துக் கொண்டோ கழிக்கின்றார். வெற்றியை குறித்து எனது வழியலகு வேறுபட்டது ஆகும்.  மறையாத புன்முறுவலே வெற்றியின் அடையாளம். அசைக்க முடியாத நம்பிக்கையே வெற்றியின் அறிகுறி. இம்மனிதர்கள் அனைவரும் சிறு விஷயங்களுக்காகக் கூட நிலைகுலைந்து விடுகின்றார்கள். இதுவா வெற்றியின் அடையாளம்? பயமின்மையே வெற்றியின் அடையாளம். பயமற்ற மனப்போக்கே வெற்றியின் அறிகுறி. 

வெற்றியான ஒரு மனிதன் எப்போதும் திருட விரும்பமாட்டான் ஏனெனில் எங்கு சென்றாலும் செல்வம் ஈட்டலாம் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருக்கும், அப்போது ஏன் நெறியற்ற முறையில் எதையும்  செய்ய வேண்டும்?

செல்வத்தை குவிக்க நெறியற்ற முறையை யார் உபயோகிப்பார்கள் தெரியுமா? தான் சம்பாதிக்க முடியும் என்று தன் மீது நம்பிக்கை அற்றவன் தான். எங்கு சென்றாலும் செல்வம் ஈட்டலாம் என்னும் நம்பிக்கை உள்ளவன், திருடவோ நெறியற்ற முறையில் பொருள் தேடி அதனால் சிறை செல்லும் நிலை ஏற்படவோ விடமாட்டான். அத்தகைய மனிதர்கள் குறுகிய காலத்திற்கே வெற்றியுள்ளவர்களாக இருப்பார்கள். பின்னர் சிறை செல்ல நேரிடும். இது ஒரு சமுதாயத்தின், ஒரு குடும்பம் அல்லது தனி மனிதனின் வெற்றியாகாது. முன்னேறும் சமுதாயத்தின் மதிப்பீட்டு அளவு என்னவென்றால், எப்போதும் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்கும் நிலையிலும், சிறைச்சாலைகள் காலியாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அது முற்போக்கான சமுதாயம்.
இன்று, ஒவ்வொரு நாளும் புதிய ஆஸ்பத்திரிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. சிறை சாலைகள் நிரம்பி இருக்கின்றன. இது ஒரு வெற்றிகரமான சமுதாயம் அல்ல. வெற்றிகரமான வாழ்கையும் அல்ல. எங்கோ தவறு செய்கின்றோம். வெற்றி என்பதன் அளவுகோலை நாம் மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

செல்வத்தை அடைய பாதி ஆரோக்கியத்தை செலவு செய்து விட்டு அந்த ஆரோக்கியத்தைத்  திரும்பப் பெற பாதி செல்வத்தைச் செலவு செய்கின்றோம். இது செல்வம் ஈட்டுவதற்கு புத்திசாலித்தனமான வழி அல்ல. இது நம்மை மகிழ்ச்சியாக ஆக்காது. மகிழ்ச்சியும் வெற்றியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை இணைந்தே இருக்க வேண்டும். நம்பிக்கை, கருணை, பெருந்தன்மை, ஆகியவையும் இருக்க வேண்டும். ஏற்றமும் இறக்கமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும், நீங்கள் விரும்பாத ஏதேனும் நிகழ்ந்தால் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும், இல்லையெனில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

பழைய இனிமையற்ற நினைவுகளிலேயே திளைத்திருந்தால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? நிகழ்காலத்தில் நிலைபெற, பெரும் தடையாக இருப்பது பழைய இனிமையற்ற நினைவுகளே ஆகும். அனைத்து இனிமையானவற்றையும் விட்டுவிட்டு சில இனிமையற்ற நினைவுகளைப் பிடித்து வைத்து அசைபோட்டு கொண்டிருப்பதே மனதின் இயல்பு ஆகும். நாம் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறிய போதும் அந்த தொழில் நுட்பத்தை மனதிற்கு பயன் படுத்த வில்லை. மனம் பல முறைகள் நழுவி விடுகின்றது. வர்த்தகம், தொழில்நுட்பம், உண்மை, பாரம்பர்யம் இவை நான்கையும் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் இல்லையெனில் அவை காலம் கடந்ததாக ஆகி விடும்.

தொழில் நுட்பத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் அல்லவா? ஒரு சாதனத்தை வாங்கி அதை பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கும் போதே ஒரு புதிய மாதிரி சாதனம் சந்தைக்கு வந்து விடுகின்றது.அல்லவா? இங்குள்ள முதியோர் அதை நன்கு அறிவர். இந்த புதிய கைபேசியை பயன்படுத்த நான் கற்றுக் கொண்டு வருகின்றேன். ஆனால் இதை விடப் புதிய மாதிரியில் பல்வேறு புதிய சிறப்புக் கூறுகளுடன் வேறொன்று வந்து விட்டது. தொழில்நுட்பம் வேகமாக வளருவதால் நாமும் நம்மை காலத்திற்கேற்றாற் போல் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

மரபும் அது போன்றதே ஆகும். சிலர் மரபுகளைப் புறக்கணித்து விடுகின்றார்கள். சிலர் புதுப்பித்துக் கொள்ளாமல் பழைய மரபுகளையே பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இரு சாராருமே முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிட்டார்கள். இந்தியாவில் மிக அழகான பல மரபுகள் உள்ளன.அவற்றை புதிப்பிக்க வேண்டும்.அப்போதுதான் அதன் சாரத்தை வெளிக் கொண்டு வர முடியும். பழமையான எல்லாமே மோசமானவை அல்ல. புதியன அனைத்தும் சிறப்பானவையும் அல்ல. இதை வேறு கோணத்திலிருந்து காண வேண்டும்.

தொழில்நுட்பம் நமக்கு வசதியை அளிக்கின்றது.அது போன்றே ஆன்மிகம் நமது ஆத்மாவிற்கும் மனதிற்கும் சுகத்தை அளிக்கின்றது.ஆன்மீகமும் தியானமும் போன்றது என்றே கூறுவேன்.என்பதன் பொருள் தெரியுமா? Absolute Comfort முற்றிலும் சுகம். உள்ளில் நீங்கள் சுகமாக உணரவில்லை என்றால் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெறுவது? நீங்கள் உள்ளில் துன்பத்துடன் இருந்தால் எவ்வாறு நீங்கள் வெற்றி பெற்றவராகவோ மகிழ்ச்சியானவராகவோ கருதப்படுவீர்கள்? நாம் இந்த கட்டளைப்படிவ வாய்ப்பாட்டினை திரும்பவும் பார்த்து ஆராய வேண்டும். உலகில் எவ்வாறு வெற்றியுடன் இருப்பது? வெற்றி என்பதை ஆய்ந்து விளக்கம் அளிக்க வேண்டும். முக்கியமானது என்னவென்றால் உங்களுக்கென்று சற்று நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அவசரம் ஓன்றும் இல்லை.  

வெற்றியை நோக்கி ஓடுவது தான் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. மனஅழுத்தம் தான் இன்று உலகில் பெரிய கொலையாளி. அதை இரண்டாவது என்று கூறுகின்றார்கள் ஆனால் முதன்மையாது என்றே கூறுவேன். 40% ஐரோப்பிய மக்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அவ்வளவு இல்லை ஆனால் மெதுவாக அந்த அளவை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். டெல்லியும் அவ்வாறே டெல்லியில் தற்கொலை மனப்போக்கு அதிகமாகிக் கொண்டே வருகின்றது. ஏனெனில் பெற்றோர் குழந்தைகளின் மீது வெற்றி பெறவேண்டும் என்னும் மன அழுத்தத்தை உருவாக்குகின்றனர். வெற்றி பெற பெற்றோரின் மற்றும் சமமானவரின் நெருக்கடி அழுத்தம் அதிகமாக உள்ளது. இது மற்றுமொரு பிரச்சினை. எனவே நான் ஏற்கனவே கூறியபடி நமக்கென்று சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். யதார்த்த நிலை மற்றும் உண்மை என்ன என்று அறிய வேண்டும். நான் எதற்காக இங்கு இருக்கின்றேன்? வாழ்க்கை என்பது என்ன? என்னும் இக்கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அதுதான் உருமாற்றத்தை ஏற்படுத்தும்.