காலத்தை பற்றிய உணர்வு...

06 ஆகஸ்டு, 2014, 

பெங்களூரு, இந்தியா

காலம், மனம் மற்றும் நிகழ்வு ஆகிய மூன்றுக்கும் இடையே வெகு சிக்கலான தொடர்பு இருக்கிறது. ஒரு நிகழ்வு மனதில், தாக்கத்தை ஏற்படுத்துகிறது, காலம் நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

இது ஒரு முக்கோணம்.


நிகழ்வு காலத்தால் பாதிக்கப்படுகிறது, மனமும் நிகழ்வால் பாதிக்கப்படுகிறது, மேலும் மனம் காலத்தாலும் பாதிக்கப்படுகிறது. விடுதலை அல்லது முக்தி என்பது மனதை காலத்திலிருந்தும் நிகழ்விலிருந்தும் விடுவிப்பது. காலத்தை நிகழ்விலிருந்து பிரிக்க முடியாது, ஆனால் மனதை காலம் மற்றும் நிகழ்வு என இரண்டிலிருந்தும் பிரிக்க முடியும். அதைச் செய்வதற்கு வழி தியானம்.

ஒரு நிகழ்வை நல்லதாகவோ அல்லது தீயதாகவோ ஆக்குவது காலம். மனதை மகிழ்வாகவோ அல்லது மகிழ்வற்றதாகவோ ஆக்குவது நிகழ்வு. மற்றும் மனதை கட்டுக்குள்ளோ அல்லது கட்டில்லாமலோ ஆக்குவது காலம். இது ஒரு அதி சுவாரசியமான நுட்பம். காலம், நிகழ்வு மற்றும் மனம் ஆகிய முக்கோணம்.

தெய்வத்தின் விதிகளை, தெய்வத்தின் திட்டங்களை, தெய்வத்தின் மனதை அறிந்தவர்கள் அல்லது காலத்தை புரிந்து கொண்டவர்களை தெய்வத்னியா என்று அழைப்பார்கள். காலத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், உங்களால் நிகழ்வையும் மனதையும் நிர்வகிக்க முடியும். ஒரு விவசாயிக்கு எந்த காலத்தில் விதைப்பது என்று தெரியும். ஒரு விவசாயி மழைக்காலத்துக்கு  முன்பாகவோ அல்லது கோடைக் காலத்தின் ஆரம்பத்திலோ விதை விதைத்தால் அவன் இழப்படைவான். எனவே, ஒரு விவசாயிக்கு விதைப்பதற்கு மிகச் சரியான காலம் எது என்று தெரியும். காலத்தைப் பார்த்து விதை விதைப்பான்.

ஒரு விவசாயிக்கு எப்போது அறுவடை செய்வது என்பதும் தெரியும். சரியான காலத்திற்கு முன்பு அறுவடை செய்தாலும் அல்லது சரியான காலத்திற்கு பின்பு அறுவடை செய்தாலும் இழப்பு தான். எனவே விதைப்பதற்கும்,அறுவடை செய்வதற்கும் மிக சரியான காலம் எது என்பது விவசாயிக்குத் தெரியும். இல்லையா? எனவே ஒரு நிகழ்வு எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்வதே ஒரு ஞானம். ஒரு நிகழ்வு எப்படி நடக்கிறது என்ற ஞானம். நிகழ்வு செயலோடு தொடர்புடையது, மனம் செயலோடு தொடர்புடையது. காலம் செயலோடு தொடர்புடையது. ஒரு நாற்கோணத்தை போல. செயல்கள், நிகழ்வுகள், காலம் மற்றும் மனம். இது சுவாரசியமான ஒன்று. எனவே சரியான நேரத்தில் சரியான விஷயத்தைச் செய்வது முக்கியம்.