இந்தியா – முன்னேறும் வழி

வெள்ளிக்கிழமை,15/08/2014

பெங்களூரு, இந்தியா


கேள்வி பதில் 

இந்தியாவை முன்னேற்றுவதில் தொழில் முனைவோரின் பங்கு என்ன?

தொழில் முனைவு பல மடங்கு அதிகமாக வேண்டும்,அதற்குத் திட்டமிட வேண்டும். மேலும், நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பை (CSR – Corporate Social Responsibility) மறந்துவிடக் கூடாது என்பதும் முக்கியம். CSR செயல்பாடுகளில் கலந்துகொண்டால்,உள்ளடங்கிய வளர்ச்சியில் நீங்களும் பங்குபெறலாம் என்பது நிச்சயம். சட்டப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது அதைச் செய்தாக வேண்டுமே என்றோ செய்யாமல் விருப்பத்துடன் இதயபூர்வமாக செய்யுங்கள்.

சட்டப்படி 3% அளிப்பது கட்டாயம் என்றால், நீங்கள் ஏன் 4% அல்லது 5% அளிக்கக்கூடாது? நீங்கள் அளிக்கும் அந்தக் கூடுதலான 1% உங்களுக்கு நாட்டின் மேல் இருக்கும் அக்கறையை காட்டும்.
போட்டி என்பது மிக நல்லது, ஆனால் அதில் கசப்புணர்ச்சி இருக்கக் கூடாது. கசப்புணர்வு இல்லாத போட்டியுணர்ச்சியை எப்படி கைக்கொள்வது? ஆன்மீகம் மூலம். உள்ளார்ந்த தன்னம்பிக்கையையும் அமைதியையும் ஆன்மிகம் தருவதால்,உங்கள் நோக்கத்திலும் நடத்தையிலும் சூழ்ச்சி மற்றும் அநியாயம் தவிர்த்த போட்டியுணர்ச்சி கொள்ள உதவுகிறது.

தடுக்க இயலாத முன்னேற்றத்தை இந்தியா அடைய நம் இளைஞர்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?

குருதேவ்: ஐந்துதான் வேண்டுமா? இருபத்தி ஐந்து விஷயங்கள் இருக்கிறது.
1.       இந்தியாவின் இன்றைய இளைஞர்கள் தங்களது வேர்களை நினைத்து பெருமைப்பட வேண்டும். அப்படித் தங்களது வேர்களை நினைத்து பெருமைப்படவில்லையென்றால் அது அவர்களது ஆளுமையில் பலவீனமாக வெளிப்படும். உங்களது வேர்களைப் பற்றி பெருமை கொள்ள வேண்டும், அதனால் உங்களது சுயமரியாதை அதிகரிக்கும்.
உங்களிடம் நல்ல சுய மரியாதை இருந்தால், நீங்கள் உலகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். இந்தியாவில் பலர், சுயமரியாதை இல்லாமல் துன்புறுகிறார்கள்.
2.       போதைப் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள்.
எல்லைத் தாண்டி வரும் போதைப் பொருட்களால் பஞ்சாப் மாநிலம் பாழாகிவிட்டது. வருந்தத்தக்க விஷயம். போதைப் பழக்கத்தில் அடிமையாகி அங்குள்ள இளைஞர்கள் எதையும் செய்ய விரும்புவது இல்லை. பஞ்சாப் மாநிலம் மட்டுமல்ல,கேரளாவிலும் கூட இது இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இளைஞர்கள் குழு ஒன்று என்னை சந்தித்தது. கேரளா, மும்பை மற்றும் பெங்களூருவில் எப்படி போதைப் பொருட்கள் வேர்விட்டன என்று கூறினார்கள். நம்பமுடியாதபடி இருக்கிறது. இதை நாம் தடுத்தாக வேண்டும். எல்லாவிதமான போதைப் பொருட்களிலிருந்தும் விலகி இருக்க நமது இளைஞர்களை கேட்டுக்கொள்ள வேண்டும். முன்னேறும் நாட்டிற்கு போதை மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை வேண்டும்.
3.        ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது சமூகத் தொண்டாற்றுங்கள். ஒரு மணி நேரத்தை நாட்டுக்குக் கொடுங்கள்.
4.        ஏதாவது பரிவான செயலை செய்தபடி இருங்கள்.
5.       இளைஞர்கள், திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டிய நேரமிது. படைப்பாற்றலும் பல பரிமாண நோக்கும் கொள்ளவேண்டிய காலம். பல திறமைகள் தேவை. ஒரு துறையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாலும், மற்ற திறன்களை புறக்கணிக்காமல் வேறு ஏதாவது திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பொறியியல் படிக்கலாம், சமைக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பொறியாளராக வேலை கிடைக்காவிட்டாலும் எங்காவது சமைக்கும் தொழிலாவது செய்யலாம். நான் உங்களைப் போல இருந்தபோது, எப்படியும் ஆன்மீகத்தில் தான் ஈடுபடப்போகிறோம் என்று தெரிந்தும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிப்பதுண்டு. எனவே எல்லாவற்றிலும் ஈடுபட்டேன். நீங்கள் அதில் சிறப்பான தகுதி பெறவில்லை என்றாலும் கூட, பல திறன்கள் கொண்டவராக இருப்பீர்கள். பல் பரிமாணம் கொண்ட ஆளுமையாக உங்கள் திறன் அமைய வாய்ப்பு இருக்கிறது. எனவே உங்கள் ஆளுமையை மேம்படுத்த பல துறைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது மிக முக்கியம். 

கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுக்களை வளர்ப்பது எப்படி? இந்தியா கிரிக்கெட்டிலேயே சிக்கிவிட்டது போல் இருக்கிறது.

ஆம், இரண்டு பேர் விளையாடுவதை ஏராளமானோர் பார்க்கின்றனர். அதைப் பார்க்கும்போது, கால்பந்து சற்று பரவாயில்லை, அணியில் உள்ள எல்லோரும் செயல்படுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் பந்தைப் பிடிக்க வேண்டியிருப்பதால், கிரிக்கெட் உங்கள் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது. கோ கோ, கபடி போன்ற இந்திய விளையாட்டுக்களை வளர்க்க வேண்டும். நம் கிராமிய விளையாட்டுக்களும் மிக அருமையானவை, அதையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒரு இல்லத்தரசியாக, நம் நாட்டின் கட்டுமானத்தில் நான் என்ன பங்காற்றுவது?

ஆம், பெண்கள் எழுந்து நிற்க வேண்டும். நீங்கள் இல்லத்தரசியாக இருந்தாலும், எழுந்து நிற்க வேண்டும். உங்களுக்குச் சம உரிமை உண்டு, பெரும் பொறுப்புகளும் உண்டு. பலவீனமாக உணரவே கூடாது. உங்களுக்கு சக்தி அளிக்கப்படிருக்கிறது, நீங்கள் கட்டாயம் செய்தாக வேண்டும், உங்களால் பல விஷயங்கள் செய்ய முடியும். நாட்டுக்கு தொண்டாற்ற ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள். பெண்களுக்கு பேசுவதில் விருப்பமுண்டு, நீங்கள் தெருக்களில், சேரிகளில் உள்ள மக்களோடு, வசதி வாய்ப்பற்ற மக்களோடு சென்று பேச வேண்டும். வசதி வாய்ப்பற்ற மக்களிடம் ஒரு குழுவாகச் சென்று அமர்ந்து பேசுங்கள், அவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள். அவர்களிடம் பேசுவதன் மூலமே அவர்களின் சுமையை கவலையை குறைக்க முடியும். அவர்களின் இறுக்கத்தைக் குறைக்க முடியும். திரைப்படம், துணிமணி போன்றவற்றை பற்றி அமர்ந்து பேசிகொண்டிருக்காமல், மக்களிடம் ஆறுதலாய் பேசி அவர்களின் துயரை ஏன் குறைக்கக் கூடாது? நீங்கள் ஏராளமாய்ச் செய்யலாம். முதியோர் இல்லங்களுக்கு சென்று இவ்வாறு தொண்டு செய்யும் பெண்கள் பலரை நான் பார்க்கிறேன்.

திறன் வளர்ப்பதில் இந்தப் புதிய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. திறனை மேம்படுத்த நாம் என்ன செய்யலாம்?

ஆம், திறன் பயிற்சி தனி, அதை வாழும்கலையும் செய்து வருகிறது. SSRDP (Sri Sri Rural Development Program – ஸ்ரீ ஸ்ரீ கிராம வளர்ச்சித் திட்டம்) ஆசிரியர்களை நாடுங்கள், அவர்கள் இளைஞர்களுக்கு மின்னணுக் கருவிகள் பழுது பார்க்கும் பயிற்சியை அளிக்கிறார்கள்.தங்களுக்குத் தேவையான பழுது பார்க்கும் வேலைகளை செய்துகொள்கிறார்கள். இதைப் போன்றவற்றை நாம் சொல்லித் தரவேண்டும்.

புதிய உலக முறைப்பாடு என்னும் சதி ஏற்பாடு உண்மையா? மக்களின் மனங்கள் வேதிப் பொருட்களால், உயிரியல் பொருட்களால் கட்டுப்படுத்தப்படுகிறதா?

இப்படிப்பட்ட பல சதி ஏற்பாடுகள் இருக்கின்றன, அவற்றைப் பற்றி படித்தால் அதிர்ச்சியாய் இருக்கிறது, அவற்றில் பல உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பீதி அடையக்கூடாது என்றே நான் சொல்வேன். இத்தகைய சதி ஏற்பாடுகளைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு உங்கள் மனதை மாசுபடுத்த வேண்டாம். மருந்துப் பொருட்கள் தொழிலில், மனிதர்களுக்குக் கேடு விளைவிக்ககூடிய மருந்துகளை விற்பதற்கு குழுக்கள் இயங்கி வருகிறது என்பது உண்மைதான். இதைப் பற்றி நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.