உங்கள் வாழ்க்கையின் காலம்: அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவும்.

ஆகஸ்ட் 8, 2014

பெங்களுரு இந்தியா


(செல்வத்தின் ஆசீர்வாதம் என்னும் பேழையின் தொடர்ச்சி)

கேள்வி பதில்கள்

கே: குருஜி! வேதங்களை படிப்பதன் மூலம் யாராவது ஒருவர் இந்த உலகத்தில் இருந்து விடுபட முடியுமா அல்லது முக்தி பெற ஒருவர் படிப்பதை நிறுத்த வேண்டுமா?

உங்களுக்கு தெரிந்திருக்கும் போது எதனால் கேட்கின்றீர்கள்? (கபீர்தாஸ் புத்தகங்களை படித்து அனைவரும் இறந்து போகின்றனர், யாருமே புத்திசாலியாகவில்லை. அன்பு வார்த்தைகளை படிக்கும் ஒருவர் மட்டுமே புத்திசாலியாகிறார்.

நீங்கள் இதைப் பற்றி ஏற்கனவே படித்துள்ளீர்கள்! புரிந்து கொண்டும் உள்ளீர்கள்! ஆனால் அதே நேரத்தில் சீட்டாட்டம் ஆடுவதை விட எதையாவது படிப்பதே மேலானது. படிப்பதன் மூலம் ஒரு புத்திசாலி தூய்மை அடைகிறார், ஆனால் சீட்டாடுவதனால் எதுவும் அடைவதில்லை. நீங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள். கிராமங்களில் இளைஞர்கள் சீட்டு விளையாட ஆரம்பித்தனர், மரத்தடியில் அமர்ந்து ஆடுவர். சீட்டாடுவதை விட அறிந்தவைகளை பற்றி விவாதிக்கலாம். சமஸ்கிருதத்தில் "புத்திசாலியான ஒருவர் ஞானம்,இசை, இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் மக்களை ஒன்றாக கொண்டு வருவது போன்றவற்றில் தனது நேரத்தை செலவிடுவார்" என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் புத்தியில்லாதவர்கள் எப்போதுமே போதைப் பழக்கங்கள் கைகலப்புகள் சண்டை ஆகியவற்றில் செலவிடுவதையே அனுபவிக்கின்றனர். 

நமது நாட்டின் இன்றைய நிலையை பார்க்கின்றீர்களா? முன்பெல்லாம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து வேதங்களை பற்றி விவாதிப்பார்கள். இப்போதெல்லாம் சீட்டாடுகிறார்கள், மது அருந்துகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் எப்போதும் தீவிரமாகவே இருக்க வேண்டும் என்றும் சாத்திரங்களையே விவாதித்து கொண்டு இருக்க வேண்டும் என்று சொன்னது இல்லை. சந்தோஷமாகவும் நகைச்சுவையாகவும்,புன்னகையுடன் இருக்கவும். மற்றவர்களையும் புன்னகைக்க வைக்கவும். எந்த போதைக்கும் அடிமையாகி விட வேண்டாம், மற்றவர்களையும் அடிமையாக விட வேண்டாம். சீட்டடுவது ஒரு மாதிரியான போதை பழக்கம் தான். அதை விடுத்து ஆனந்தமாக இருப்பது, நடனம், பாடுவது மற்றும் புதுமையாக எழுதுதல் ஆகியவற்றில் நேரத்தை செலவிடவும். யாரைப் பற்றியாவது அரட்டை அடித்து பேசிக்கொண்டு இருப்பது, மற்றவர்களை பற்றி இழிவாக பேசுவது போன்றவை முட்டாள்தனத்தின் அறிகுறிகள்.

கே: அன்பு குருதேவ்! நாம் ஐம்புலன்களில் சிக்கி விடக்கூடாது என்று கூறுகையில், பூஜை செய்யும் போது எதனால் விளக்கையும் ஊதுவத்தியையும் ஏற்றுகிறோம்? மலர்களை அர்ப்பணிக்கிறோம்?

இந்த அர்ப்பணிப்புகள் அனைத்தையும் நீங்கள் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். பூஜை உங்களுடைய தியானத்தில் கூட நடக்கலாம். இந்த நடைமுறைகள் பாரம்பரியமாக வருபவை. மேலும் இவைகள் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்குவதால் மக்கள் இவைகளை செய்து வருகிறார்கள். ஒரு விழா நடக்கும் போது யாருமே விளக்கை ஏற்றவில்லை என்றால், அந்த விழா அல்லது கொண்டாட்டத்தில் ஒரு பிரகாசம் இல்லாததை நீங்கள் கவனிக்கலாம். எனவே ஒரு விழாவிற்கு ஒரு வண்ணத்தை தரவே விளக்குகள் மற்றும் ஊதுவத்தி ஏற்றுதல், மலர்களால் அலங்காரம் செய்தல் போன்ற அனைத்தும் செய்யப்படுகின்றன. இது பிறந்த நாள் விழாக்களில் காகிதத்துண்டு அலங்காரங்கள் உபயோகிப்பதை போன்றது.   
             
காகித அலங்காரங்களும் கேக்கும் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாட முடியுமா? நீங்கள் கொண்டாடலாம் ஆனால் அதில் ஏதோ குறை இருப்பது போல இருக்கும். கொண்டாட்டம் என்று வரும்போது நீங்கள் அறையை மலர்களால் அலங்கரிப்பீர்கள், திருவிழா சூழலை உருவாக்க ஏதாவது செய்வீர்கள் இல்லையா! அதை போலவே விளக்கை ஏற்றுவதும் ஊதுவத்தியை ஏற்றுவதும் கொண்டாட்டத்தின் உணர்வை சூழலையும் ஏற்படுத்தவே ஆகும், அவ்வளவுதான். அந்த மாதிரியான ஒரு சூழல் உருவாக்கப்படும் போது, சாதகமான அயனிகள் அல்லது அலைகள் அதிகரிக்கின்றன.   

இந்த பரம்பரை வழக்கங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன அதனால் நாம் அவைகளை தொடரலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட மந்திரங்களை சொல்லி, குறிப்பிட்ட மூலிகைகளை தீயிலே இட்டு ஒரு யாக சூழலை உருவாக்குவது பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. நிச்சயமாக இந்த நடைமுறைகள் அனைத்தும் எதிர்மறையான எண்ணங்களை விலக்கக்கூடிய நுட்பமான அதிர்வுகளையும் சக்தியையும் உருவாக்குகின்றன என்று ஏற்கனவே நிருபிக்கப்பட்டுள்ளது.