எல்லோரிடமும் இருக்கும் நன்மை

வியாழன், 28, ஆகஸ்ட், 2014 

பெங்களூரு, இந்தியா

(நேர்மையே சிறந்த கொள்கை என்ற பதிவின் தொடர்ச்சி)


கேள்வி - பதில்

எல்லோருடைய ஆன்மாவும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் தான் என்றால், ஏன் இவ்வுலகில் அவ்வளவு எதிர்மறை, அவ்வளவு வன்முறை?

குருதேவ்ஆன்மா தான் இறைவன், பலரிடம் உள்ளே இறைவன் தூங்கிக் கொண்டிருக்கிறார், ஆதலால் உள்ளே ஆழத்தில் இருக்கும் ஒளியை உங்களால் காண முடியவில்லை. தீமை செய்பவர்களிடமும் இறைவன் உள்ளார். தீயவை செய்பவர்களிடம் இறைவன் இல்லை என்பது சரியல்ல, தெய்வீகம் திரையிடப்பட்டு இருக்கிறது; தூங்கி கொண்டிருக்கிறது. சமஸ்க்ருதத்தில், ‘தேவி ஜாக்ரன்’ என்று சொல்வோம். அதன் பொருள் தெய்வீகக் குணங்கள் எல்லோரிடமும் உள்ளன, அதை எழுப்பியாக வேண்டும், அவ்வளவு தான். இந்தத் தெய்வீகக் குணங்கள் நம்முடைய பேருணர்வில் செயலற்று இருக்கிறது, அதை எழுப்பியாக வேண்டும். விழிப்புணர்வு கொண்ட பேருணர்வைப் பார்த்தீர்களானால், அங்கு எதிர்மறையோ அல்லது வன்முறையோ இருக்காது. இந்த உலகத்தையும் அங்கு நடக்கும் நிகழ்வுகளையும் ஒரு விளையாட்டாய்ப் பார்க்க வேண்டும். அதனால் தான் இது லீலை அல்லது திருவிளையாடல் எனப்படுகிறது.

அன்பு குருதேவ், குருவிற்கு பேராசைப்படுவது நல்லதா?

குருதேவ்தொண்டு செய்வதற்கும், உயர் ஞானம் கிடைப்பதற்கும் பேராசைப்படலாம். குருவிற்கு அருகிலிருப்பவரைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டாம். ஒரு குரு தன்னைச் சுற்றி எல்லாவித மக்களையும் வைத்திருப்பார். சிலரை தனக்கு மிக நெருக்கமாக வைத்திருப்பார், ஏனென்றால் அவர் பிறருக்குத் தொல்லை தரக்கூடாது என்பதால். சிலருக்குத் தடித்த தோல், சிலர் மிக மென்மையான உணர்வு கொண்டவர்கள்.

ஆசிரமங்கள் ஒரு மிருகக் காட்சி சாலை போன்றது. அங்கு எல்லா மக்களும் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். நமது ஆசிரமத்தில் கூட ஒரு முழு மிருகக்காட்சி சாலை இருக்கிறது. வாயிலில் குரங்குகள் உண்டு, ஏராளமான அணில்கள், பாம்புகள், கீரிப்பிள்ளைகள் உள்ளன. பின்பக்கம், வாத்து, அன்னம் மற்றும் பல பறவைகள் உண்டு. நூறு வகையான பறவைகளும், இருநூறு வகையான வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன. மான், குதிரை, முயல், ஆமை, பசு ஆகியவை இருக்கிறது, ஏன் ஒரு யானை கூட உண்டு. சில மிருகங்கள் விட்டுப் போயிருந்தால், அவற்றைப் போலவே நடவடிக்கை கொண்ட மக்களும் இருக்கிறார்கள். சிங்கம் போலவும் புலி போலவும் பாய்வார்கள். இங்கு ஒரு சிறிய மிருகக் காட்சி சாலையே உண்டு. ஆனால் இது மிக சுவாரசியமாக உள்ளது, இங்குள்ள அனைவரும் ஆனந்தமாய் இருக்கிறார்கள். அதுதான் விஷயம்.

நான் புலிமியாவிலிருந்து எப்படி வெளியே வருவது? உங்கள் உதவி தேவை.

குருதேவ்சாப்பிடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் போது, அந்த உணவை நன்கு உணர்ந்து, 32 முறைகள் மென்றபின் விழுங்கினால், திருப்தியை உணர்வீர்கள். உங்களுக்கு ஒரு திராட்சைக் கொத்து தரப்பட்டால், அதை ஒவ்வொரு திராட்சையாக வாயில் வைத்து முழு விழிப்புணர்வோடு சாப்பிடுங்கள். புலிமியா உள்ளவர்கள் உணவை அப்படியே விழுங்கி விடுவார்கள். அதை மென்று சுவைத்து சாப்பிடுவதில்லை. எனவே உணவை நன்கு மென்று, நன்கு ருசித்து பின்னர் விழுங்கினால் திருப்தி கிடைக்கும். உண்மையில், நீங்கள் சோர்வடைவீர்கள், பிறகு புலிமியா போய்விடும்.

பிராணாயாமமும் தியானமும் புலிமியாவை வெல்ல நிச்சயம் உதவும். அல்லது யாரிடமாவது மிக அன்பு வைத்தாலும் புலிமியா காணாமல் போகிறது. அன்பில் இருக்கும் போது உணவு பெரிய விஷயமில்லை. அது கட்டாயமல்ல. அதனால் தான், ஒருவருக்காக ஏங்கும் போது, அந்த வெறுமையை போக்கும் விதமாக அதிக அளவு உணவு உண்கிறார்கள். எனவே உங்களிடம் அதிக அன்பு இருந்தால், உங்கள் வாழ்க்கைக்கு ஒரு சீரிய நோக்கம் இருந்தால், புலிமியா மறையும்.

 குருதேவ், இறைவன் உங்களிடம் அன்பு கொண்டிருக்கிறார் என்பது தெரியும் போது எப்படி புன்னகை பிறக்கிறது என்று இன்று ட்வீட் செய்திருந்தீர்கள். இறைவனின் அன்பு என் வாழ்க்கையில் நேர்மறையான செயல்களாக மட்டும் தானே வெளிப்படும்?

குருதேவ்ஆம், அதன் விளைவு நேர்மறை மட்டுமே. நடுவில் எங்கோ கொஞ்சம் அவ்வளவாக நேர்மறையாய் இல்லாதது போலத் தோன்றும். ஆனால் இறுதியில், அது நிச்சயம் நேர்மறையாக, உங்களை உயர்த்துவதாக மற்றும் உங்களை மேம்படுத்துவதாக மட்டுமே இருக்க முடியும்.

குருதேவ், யோக சூத்திரம் சொல்கிறது, ‘தீவ்ர சம்வேகனம் ஆசனாஹ்’, தீவிர ஆசை, பாதையை விரைவாக்கும். மற்றொரு விஷயம் நிறைவு அல்லது இருக்கம் தளர்தல். தீவிர ஆசையும் கொண்டு தளர்வாகவும் இருப்பது எப்படி?

குருதேவ்: இது நான்கு சக்கர வாகனம் ஓட்டுவது போன்றது. உங்களுக்கு வாகனம் ஓட்டத் தெரியுமா? நீங்கள் பின்னாலிருப்பதைக் காட்டும் கண்ணாடி, பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் முன்னால் உள்ள சாலை ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். இதை எப்படிச் செய்கிறீர்கள்? அதைப் போலவே இதையும் செய்யுங்கள். தீவிர ஆசை இருக்க வேண்டும் அதே நேரம் அவசரம் இல்லாமல் இருக்க வேண்டும்; இறுக்கம் தளர வேண்டும். உணவு சமைக்க விரும்பினால், நீங்கள் அதற்கான செயல் முறைகளை செய்ய வேண்டும், அவசரப்பட முடியாது. நீங்கள் சாதம் பொங்க வேண்டும் என்றால் அது நன்றாக வேக நேரம் எடுக்கும். அரிசி வெந்து சாதமாக பத்து நிமிடம் வேண்டும் என்றால் முழு பத்து நிமிடமும் தேவை. சாதத்தை அடுப்பில் வைத்துவிட்டு எனக்குப் ஒரு நிமிடத்தில் வேக வேண்டும் என்றால் நடக்காது. வேக வைக்க ஒரு நிமிடம் மட்டுமே தரப்பட்ட சாதம் தரமாய் இருக்காது. அதனால் தான், ‘சமதா சித்தி, ஈஷ்வரப் பிரணிதான,’ என்று சொல்லப்படுகிறது. பிரபஞ்சப் பேருணர்வு உங்களின் ஒரு பகுதி, நீங்கள் அதனில் ஒரு பகுதி, எனவே இறுக்கம் தளருங்கள். அப்போது தான் சமாதி நிலை விரைவாக நிகழும்.

சில புனிதர்கள் விபூதி, மற்றும் மோதிரம், ஆரம் போன்ற சிறு ஆபரணங்களை வரவழைப்பதை அறிவியல் பூர்வமாக விளக்க முடியுமா?

குருதேவ்: இல்லை, அவர்கள் கூட அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது வெறும் நுட்பம் தான். இதைப் போன்றவற்றை செய்ய பல வித்யாக்கள் (நுட்பங்கள்) உள்ளன. இதை செய்ய நீங்கள் முக்தி அடைந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை.
மோதிரத்தை அங்கிருந்து இங்கு வரவழைப்பதை விட அதிக முக்கியம் மனதில் மாற்றத்தை கொண்டு வருவது மற்றும் ஒருவருடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவது. அது முக்கியம்.

அன்பு குருதேவ், என் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் என்பதை அறிந்திருப்பதால் என்னுடைய பிரச்சினைகளை உங்களிடம் கூறுவதில்லை. எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, தயக்கமில்லாமல் ஒருவர் தன்னுடைய ஆசானிடம் தன் மனதில் உள்ளவைகளைக் கூறவேண்டும் என்று நீங்கள் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை படித்தேன். நான் வெளிப்படையாக என்னுடைய பிரச்சினைகளை உங்களிடம் கூறவேண்டுமா அல்லது மௌனமாகப் பிரார்த்தித்தால் போதுமா?

குருதேவ்: உங்கள் பிரார்த்தனைகள் நடந்து வரும்வரை, உங்களுக்கு வெளிப்படையாய் கூற வேண்டும் என்று தோன்றாதவரை சரி. நீங்கள் வெளிப்படையாய் சொல்ல வேண்டும் என்பதில்லை, ஆனால் வாய்விட்டு சொல்லும் போது உங்களுக்கு உள்ளே இலேசாக உணர்வீர்கள். அதனால் தான் வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள் என்கிறேன். நீங்கள் தயக்கம் கொள்ளத் தேவையில்லை.