வாழ்கையின் நோக்கம் துயரப்படுவதோ அல்லது பிறரை துயருக்குள்ளாக்குவதோ அல்ல....


09
2012............................... மான்ட்ரியால் ஆசிரமம்
மே


வாழ்க்கையில் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன: ஒன்று, நீங்கள் வசதியாய் மகிழ்ச்சியாய் இருப்பது. மற்றொன்று நீங்கள் மகிழ்வற்று இருப்பது. நீங்கள் வசதியையும், மகிழ்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ள தேவைப்படுவது சேவை செய்யும் மனப்பான்மையே!!!.
நாம் மகிழ்ச்சியாய் இருக்கும் போது சேவை செய்வதில்லை. வழக்கமாக மனம் அந்த திசையில் செல்வதில்லை. மகிழ்ச்சியாய் இருக்கும் போது அதை அனுபவிக்க மட்டுமே நினைக்கிறீர்கள். மற்றவர்களிடம் அக்கறை, பகிர்தல் மற்றும் சேவை ஆகியவை பற்றி நினைப்பு வருவதில்லை. ஆனால் அந்த நேரத்தில் தான் நீங்கள் கட்டாயம் சேவை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. மகிழ்ச்சியாய் இருக்கும்போது சேவை செய்தால் அந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். நாம் மகிழ்ச்சி யாய் இருக்கும் போது சேவை செய்ய விரும்பும் மனமும், மகிழ்வற்று இருக்கையில் அனைத்தை  யும் தவிர்த்து விட்டு உள்நோக்கி கவனிக்க கூடிய திறனும் தான். நாம் மகிழ்வற்று இருக்கையில் அனைத்தையும் தவிர்த்து விட்டு உள்நோக்கி திரும்பும் மனவலிமையை பெற வேண்டும்...
உலக வாழ்கையில் இருந்து கொண்டே, அதை தவிர்ப்பது எப்படி என்பதை கற்றுகொள்ள வேண்டும்.அது தான் ஞானம். ஒரு சத்சங்கத்தில்,வயதான பெண்மணி கேட்டார், ‘கடவுள் ஏன் இந்த உலகத்தை இவ்வளவு சோகமாய் படைத்தார்?’ அதற்க்கு நான், ‘ஆம், அப்படிதான்!. இவ்வளவு சோகமாய் இருக்கும் போதே நீங்கள் அதை விட்டுவிட்டு கடவுளை நோக்கி திரும்பவில்லை. இல்லாவிட்டால் நீங்கள் உள்நோக்கி திரும்பவே மாட்டீர்கள்.’
கே: குருஜி, சிவலிங்கத்தின் பொருள் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: லிங்கம் என்றால் அடையாளம், மெய் எது என்று கண்டறிய ஒரு குறியீடு. எது கண்களுக்கு புலப்படவில்லையோ, அதை, எந்த ஒன்றை கொண்டு அறிகிறோமோ, அதுவே லிங்கம். குழந்தை பிறந்தவுடன், அது ஆணா பெண்ணா என்று எப்படித் தெரிந்து கொள் கிறோம்? உடலில் இருக்கும் ஒரு பாகத்தை கொண்டு தான் அந்த குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று அறிகிறோம். இல்லையென்றால் ஒரு குறிப்பிட்ட வயது வரை எல்லா குழந்தை களும் ஒன்று போலவே இருக்கும். ஆனால் அந்த ஒரு பகுதி எதிர்காலத்தில் எப்படி என்று கூறுகிறது. அதனால்தான் பிறப்பு உறுப்பு கூட  லிங்கம் எனப்படுகிறது. லிங்கா என்றால் பால். ஸ்த்ரீலிங்கா என்றால் பெண்ணுறுப்பு, பூலிங்கா என்றால் ஆணுறுப்பு. பால் என்பது முழுவதுமாக வெளிப்படாத ஒன்றை அடையாளம் காண உதவுவது. இது தான் லிங்கம் என்பதன் பொருள். எனவே சிவலிங்கம் என்றால் வெளிப்படாத இறைத்தன்மை என்று பொருள். இறை விளக்க முடியாதது; விளக்கத்திற்கு அப்பாலானது; விளக்கபடாததை அடையாளம் காண்பது. அப்பாற் பட்டதை ஒரு குறியீட்டின் மூலம் இது தான் என்று தெரிந்துகொள்வது.
இந்த மொழி மிக வலிமையானது. ஒரு கல்லை எங்கேயாவது வைத்தால் அது லிங்கமாகிறது, அப்படியென்றால் ஒரு கல்லின் மூலம் இதுவரை விளக்கபடாததை விளக்குவதே.
கே: ஒரு பிரம்மச்சாரியாக வாழ்வது நடுநிலையான பாதையா? ஆண் பெண் பரிமாணம் இல்லாமல் கடவுளின் முழு வெளிப்பாடை எப்படி தெரிந்துகொள்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் ஆண் மற்றும் பெண் தன்மை இரண்டாலும் உருவாக்கப்பட்டவர். இரண்டு தன்மைகளும் உங்களுள் இருக்கிறது. இப்போது பிரம்மச்சரியம் என்ற ஒன்று மட்டுமே வழியல்ல. அது ஒரு வழக்கம். நீங்கள் உடம்பல்ல என்று அறியும் போது ஏற்படும் ஒரு நிகழ்வு. ஆண் பால் பெண் பால் என்பதெல்லாம் உடம்புக்கு தான், மெய் யுணர்வுக்கு அல்ல. மெய்யுணர்வு அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
மெய்யுணர்வு இதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதை உணரும் போது, நீங்கள் இந்த இன்பத்திற்கு அப்பாற்பட்டு செல்வீர்கள். மற்றபடி, பல்வேறு பிறவிகளாய், பூனையாய், நாயை, குதிரையாய், என்ன விதமான விலங்காகவும், ஏன் மனிதனாய் கூட இருந்து ஆண் பெண் இவற்றை அறிய முயற்சித்து வந்துள்ளோம். அதை மட்டுமே அறிய விரும்பினால் அறிந்து கொண்டே இருங்கள். எவ்வளவு காலம் தெரிந்து கொள்ள விழைவீர்கள்? ஒரு காலகட்டத்தில் சொல்வீர்கள்,‘போதும் போதும். நான் உள்ளே போக வேண்டும். அவ்வளவே.’ அப்போது தான் மனம் உள்நோக்கி திரும்பும்.
எனவே, எல்லாவற்றையும் வேண்டாம் என்று விலக்க வேண்டாம்; ஆனால் உங்களுள் சக்தி பெருகும்போது கிளர்ச்சியும் படபடப்பும் இல்லாத ஆனந்தம் வேண்டும் என்ற அவா ஏற்படும். அது தான் இது.
எனவே தான் சொல்கிறார்கள், பாலுறவில் வரும் இன்பத்தை விட ஆயிரம் மடங்கு இன்பம் ஒரு நிமிட நேர சமாதி நிலையில் கிடைக்கும் என்று. ஒரு பாலுறவில் எவ்வளவு இன்பம் கிடைக்கும், ஒரு சமாதியில் ஆயிரம் பாலுறவு இன்பம் கிடைக்கும்.அந்த ஒரு நிமிட சமாதி ஒரு பில்லியன் வருடங்கள் ஒய்வு எடுக்கும் பலன் உண்டு.
எனவே அது வேண்டுமா? அப்படியென்றால் இந்த வழக்கமான விஷயங்களுக்கு அப்பால் போக வேண்டும். நீங்கள் ஏதாவது ஒன்றை பெற வேண்டும் என்றால் ஏதாவது ஒன்றை விட்டு கொடுக்கத் தான் வேண்டும்.
ஒரு நல்ல சாப்பாட்டை ருசிக்க வேண்டும் என்றால் நாள் முழுதும் நொறுக்கு தீனி ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். காலையிலிருந்து உருளைகிழங்கு வறுவல் ஒரு பெரிய பாக்கெட் சாப்பிட்டு கொண்டே இருந்தால் மதிய உணவிற்கு பசி எங்கே இருக்கும்? பசி இருந்தால் தான் உணவை நன்கு ருசிக்க முடியும். 
கே: நான் மன்னிக்க விரும்புகிற சிலர் என் வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர்களை மன்னித்து மறந்துவிட பலமுறை நினைக்கிறேன். ஆனால் திடீரென்று இறந்தகால நினைவுகள் வந்து அவர்களை வெறுக்க ஆரம்பிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதிலிருந்து விடுபட வேண்டும்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதை இப்போதே செய்யுங்கள். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமா அதை செய்து விட்டார்கள், அவர்களுக்கு வேறு வழி இல்லை. தன் விருப்பப்படி நடக்கக் கூடிய  தனி மனிதர்களாக நினைக்காதீர்கள். அவர்கள் அப்படி இருக்கும்படி அவர்கள் வடிவமைக்கப் பட்டிருக்கிறார்கள்; அந்த வடிவமைப்பு ஒரு மென் பொருள் சிப் போல அவர்களுக்குள் சொருகப் பட்டிருக்கிறது. அவர்கள் பாவம், அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அவர்கள் மீது தயையோடு இருங்கள். அவர்கள் செய்ததை அவர்கள் ஒரு கட்டாயத்தினால் செய்தார்கள். அவ்வளவுதான், முடிந்தது!
கே: நான் ஆன்மீகத்திற்கும், பாலுணர்வுக்கும் இடையே திண்டாடுகிறேன். இரண்டையும் கலந்து ஒரு குற்ற உணர்வோடு இருக்கிறேன். நான் மணமாகி மனைவியுடன் நல்லுறவில் இருக்கிறேன்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் திருமணம் முடித்ததால் அதற்குண்டான தர்மம் இருக்கிறது, அது உங்கள் கடமை. நீங்கள் திருமணம் முடிந்தவராக இருந்தால் உங்கள் துணையுடன் சேர்ந்து வளர வேண்டும், அவர்கள் வளர உதவ வேண்டும். யோக வசிஷ்டா படித்திருக்கிறீர்களா? அதில் லீலாவின் கதை இருக்கிறது. யோக வசிஷ்டா படிக்க வேண்டும்.
கே: ஒருவர் தன் வாழ்கையின் நோக்கம் என்ன என்று கண்டுணர்ந்து அதைப் பற்றி வாழ வேண்டும் என்று மேலை நாட்டு சிந்தனையாளர்களும் மனவியலாளர்களும் கூறுகிறார்கள். ஞானம் பெறுவதைத் தாண்டி ஒவ்வொரு ஆத்மாவுக்கும் தனக்கான நோக்கம் உள்ளதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒவ்வொரு ஆத்மாவும் இந்த உலகில் ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு வேண்டிய வேலை எதுவானாலும், உங்களுக்கு தேவையான துறை எதுவானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் ஒரு பொதுவான விஷயத்தை மன வியலாளர்கள் மறந்து விடுகின்றனர். அந்த பொது விஷயம் என்ன? எல்லோருக்குமான மதிப்புகள், மனித மதிப்புகள், மகிழ்ச்சி. இப்போது அவர்களும் இதைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.
‘நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ இந்த ஒன்றை நாம் கேட்க வேண்டும்.
இல்லை என்றால், உங்களுக்குள் திரும்பி மகிழ்ச்சியை கண்டுபிடியுங்கள். வேறு எங்கும் வெளியே தேடாதீர்கள். உள்ளுக்குள் திரும்பிவிட்டால், எல்லாமும் திறக்க ஆரம்பிக்கிறது. எனவே வாழ்வின் நோக்கம் துயரத்துடன் இல்லாமல்,பிறரை துயரப்படுத்தாமல் இருப்பதே. இந்த ஒரு விஷயம் நம் மனதில் தெளிவாகி விட்டால், வாழ்கையின் நோக்கம் தானாய் தெரியும்.
மக்களுக்கு அதிக அளவு நன்மை செய்யுங்கள். எங்கிருந்தாலும் அங்கு தேவைப்படுபவராக நீங்கள் இருங்கள். நீங்கள் உங்களுடைய முழுமையான நூறு சதவித பங்களிப்பை செய்திருக்கிறீர்களா? உங்களை எல்லோரும் தங்கள் அணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அளவு குணநலன் / திறன் கொண்டவரா? நீங்கள் ஒரு அணியோடு இணைந்து செயல்படும் இயல்பானவரா? இல்லை என்றால், ஒரு அணியில் குழுவாக செயல்படக் கூடியவராக நம்மை நாமே சரி செய்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கோணல்களை நாம் சரி செய்து கொண்டால் வாழ்கையின் நோக்கம் தெளிவாகிவிடும்.
உங்களுக்கு ஒரு நோக்கம் ஏன் தேவைப்படுகிறது தெரியுமா? ஏனென்றால் அது உங்களுக்கு திருப்தியை தருகிறது. நோக்கம் நிறைந்த செயலை ஏன் செய்ய வேண்டும்? ஏனென்றால் அது திருப்தியை தருகிறது. நோக்கமில்லாத ஒன்றை செய்யும் போது அது திருப்தியை அளிப்பதில்லை. நோக்கம் வேண்டும் என விரும்புவதோ அல்லது வேண்டாம் என்பதோ திருப்தி அடைவதை முன்னிட்டே நடக்கிறது.
நீங்கள் திருப்தி அடைந்தால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் பயனுள்ளதாய் ஆகும்.‘எனக்கு நோக்கம் வேண்டும்’ என்று கூறும் போது அதன் மையத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள், இதனால் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று எப்போதும் நினைக்கிறீர்கள்.  நீங்கள் திருப்தியோடு இருக்கும் போது உங்கள் முழு வாழ்வும் பயனுள்ளதாகிறது.
பயனுள்ளதாய் இருப்பதே உங்கள் வாழ்கையின் நோக்கம் என்றால், அப்படியே இருங்கள்,  புரிந்ததா? நீங்கள் பயனுள்ளவராய் இருக்கும் போது மிகவும் திருப்தியாக உணர்கிறீர்கள்.  நான் பயனுள்ள ஒருவராய் இருக்க வேண்டும் என்று கூறும் போது, நீங்கள் எங்கே இருந்தாலும், என்ன செய்தாலும், தானாகவே பயனுள்ளவராய் இருப்பதை உணர்வீர்கள். 
கே: திருமண உறவில் சிக்கித் தவிக்கும் எனக்கு சுயம் உணர்தல் சாத்தியம் தானா? என் இல்வாழ்க்கைத் துணையின் எதிர்மறையும், கோபமும் என் அமைப்பை மூழ்கடிக்கிறது. எனக்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! ஆம்! ஆம்! ஆம்! உங்கள் துணைக்கு நன்றி கூறுங்கள். நீங்கள் நன்றாக வளர்ந்து மிக உறுதியாய் இருப்பீர்கள். அவர்கள் எதிர்மறை என்றால், நீங்கள் நேர்மறை, அவர் உங்களை என்ன பழித்தாலும் நீங்கள் புன்னைகையோடு இருங்கள். உங்களுக்கு எல்லா வாய்ப்பும் உள்ளது. சரியா!
கே: டொரொண்டோ பல்கலைக்கழக பாடப் புத்தகம் கூறுவது, ஒரு பெண்ணானவள் ஆணாக உரு எடுக்கும்போது மட்டுமே ஞானம் பெறமுடியும். இவ்வாறு வேதத்தில் எழுதியிருப்பதாக அந்த புத்தகம் கூறுகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முற்றிலும் தவறு! அது தவறு என்று உடனே அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள். வேதத்தில் எங்கும் அப்படி சொல்லப் படவில்லை. என்னிடம் அவர்கள் மேற்கோள் காட்டட்டும். அது உண்மையல்ல. அவை ஸ்மிருதிகள், ஸ்மிருதிகள் வேதங்கள் அல்ல, அவை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அரசர்களால் எழுதப்பட்டது. பண்டைய காலத்தில் வெவ்வேறு அரசர்கள், வெவ்வேறு அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் சமூக விதி முறைகளை எழுதினார்கள். அவற்றில் ஒன்று மனுஸ்மிருதி, அவற்றில் “பெண்கள் விடுதலை அடைய முடியாது, ஏனென்றால் அவளுக்கு முதலில் தந்தையும், பின்னர் கணவனும், பின்னர் மகனும் பாதுகாக்க வேண்டி யிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் அவளுக்கு பாதுகாப்பு தேவை, எனவே அவளுக்கு அந்த தகுதி இல்லை”. இதுவே அந்த ஸ்மிருதியில் இருக்கிறது, ஆனால் இது அந்த அரசனின் கருத்து. பெண்களால் ஞானம் அடைய முடியாது என்று வேதத்தில் எங்குமே கூறப்படவில்லை. கார்கி மற்றும் மைத்ரி என்ற ஞானம் பெற்ற பெண்முனிவர்கள் கூட இருக்கிறார்கள்.
அவர்களை யோக வசிஷ்டா படிக்கச் சொல்லுங்கள். வேத பாடங்கள் அதில் வருகின்றன.சுடலா என்ற பெண்மணி தான் முதலில் ஞானம் அடைந்தவர். பின்னர் லீலா என்ற பெண். லீலாவும், சுடலாவும் தான் முதலில் ஞானம் அடைந்தவர்கள். பின்னர் தங்கள் மூலம் தங்கள் கணவர்களும் ஞானம் பெற உதவினர். நாம் டொரொண்டோ பல்கலைகழகத்தின் புத்தகத்தை திருத்தக் கோரவேண்டும்.
கே: அன்புள்ள குருஜி, எனக்கு ஆன்மீகத்திலும் ஞானம் அடைவதிலும் நாட்டமில்லை. எனக்கு உங்களிடம் தான் விருப்பம்! உங்களை அடைவது எப்படி?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரே விஷயத்தை நீங்கள் வேறு விதமாக சொல்கிறீர்கள். நான் ஆன்மிகம், என்னிடமிருந்து ஆன்மீகத்தையும், ஞானத்தையும் பிரிக்க முடியாது.
பண்டைய நூல்களில் ‘த்ரவ்ய குண சம்பந்தா’ என்பார்கள், அதாவது ஒரு பொருளுக்கும் அதன் குணத்திற்கும் உள்ள தொடர்பு. குணத்தின் மூலம் மட்டுமே அந்த பொருளை அடையாளம் காண முடியும்.
உப்பும், சர்க்கரையும் பார்ப்பதற்கு ஒன்று போல தோன்றுகிறது, அதன் சுவையை வைத்து மட்டுமே அது உப்பா அல்லது சர்க்கரையா என்று சொல்ல முடியும். பல தடவைகள் தங்கள் பேரானந்த நிலையிலோ அல்லது ஆழ்ந்த துயரத்திலோ பெண்கள் சர்க்கரைக்கு பதில் உப்பை இனிப்புப் பண்டத்தில் கலந்து விடுவார்கள். நேர்மையாக சொல்லுங்கள், உங்களில் எத்தனை பேர் இதை செய்திருக்கிறீர்கள்? (பலர் கை உயர்த்துகிறார்கள்) பால் சேர்த்த இனிப்பு ஆனால் உப்பு கரிக்கும். அதன் குணம் தான் அது என்ன என்பதை தீர்மானிக்கிறது. இவை இரண்டும் நெருக்கமான தொடர்பு உடையவை.
கே: நான் மனதை இழக்க விரும்புகிறேன், என்ன செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வாகனம் ஓட்டும்போது வேண்டாம்! தியானம் நடக்கும்போது இங்கு வந்து அமர்ந்தால் போதும் உங்கள் மனம் கரைந்து காணாமல் போய்விடும். நீங்கள் அதை இழக்க விரும்புவது தான் பிரச்சினை. மனம் எப்படி இருந்தாலும்,சும்மா இருங்கள். மனம் முழுக்க குப்பையாக இருந்தாலும்,அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுங்கள்.
உங்கள் மனதிலிருக்கும் குப்பைகள் மக்கிய உரம் போல, இருக்கட்டும் விட்டு விடுங்கள். அதை தொலைக்க விரும்பும் உங்களின் அந்த முயற்சிதான் இங்கு பெரிய பிரச்சினை.அது பெரிய வேலை, கடவுளின் பேரில் அந்த வேலை செய்ய வேண்டாம். மனம் கடவுளால் கொடுக்கப்பட்டது, அதை அப்படியே விட்டு விடுங்கள். இதுவே சூத்திரம் – அது அப்படியே இருக்கட்டும்.
கே: எதிர்மறையான, கட்டுப்படுத்த நினைக்கும் அரசியல்வாதிகளை எப்படி கையாள்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: திறமை, பொறுமை மற்றும் நேர்மறை என்ற மூன்று விஷயங்களின் மூலம். இது வேலை செய்ய வேண்டும். அப்படி இது வேலை செய்யவில்லை என்றால்,  ஒரு குழுவை உருவாக்குங்கள். இதைத்தான் பலர் செய்கிறார்கள். ஒருவருக்கு எதிராக குழுவாக செயல்படும் போது, வேலை எளிதாகும். ஆனால் அதில் வெற்றி உறுதியில்லை. ஆனால் வெற்றிக்கு, திறமை, பொறுமை, நேர்மறை ஆகிய அனைத்தும் தேவை. என்னைக் கேட்டால், பிரார்த்தனை, அதுதான் மிக சிறந்தது. நேற்று சொன்னாற் போல, எல்லாமும் ஒரே பொருளினால் மட்டுமே ஆனது. இந்த மனிதர் மாறட்டும் என்ற ஆழ்ந்த எண்ணம், அந்த எண்ணத்தோடு மட்டுமே சென்றால், அவர் நிச்சயம் மாறியிருப்பார்.
பாருங்கள், இந்த உலகத்தில் பல முறை உங்கள் நண்பர்கள் கூட எதிரியாய் மாறி இருப்பார்கள், இது உங்களுக்கு நடந்ததில்லை? சில நேரம், நீங்கள் எல்லாம் செய்து கொடுக்கும் ஒரு நண்பர் உங்கள் விரோதியாய் மாறியிருப்பார். சில நேரம் நீங்கள் எதிரி என்று நினைத்திருப்பவர் தக்க சமயத்தில் உங்களை காப்பாற்றுவார். இது ஒரு வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களை புரட்டினால், இத்தகைய சம்பவங்கள் முற்காலத்தில் ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் நடந்திருப்பதை காணலாம். எனவே, இந்த உலகில் நம்பி யிருக்கும் படியான ஒன்றே ஒன்று நமது இருப்பு, உண்மை, மெய்யுணர்வு; அது மட்டுமே எல்லாமும்.