உண்மையாக இருங்கள், வாழ்கை இன்னும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்...


மார்ச் 19, 2013 - ஸ்ப்ளிட், குரோஷியா

நாம் சந்திப்பவர்களிடம் எல்லாம், ஹலோ ! ஹாய், எப்படி இருக்கிறீர்கள்! நல்வரவு என்றெல்லாம், வாழ்த்துக் கூறுகிறோம்.அவையெல்லாம், மேலேழுந்தவாரியானவை. நம்முடைய  உள்மனதில் இருந்து வருபவை அல்ல. விமானத்தில் இருந்து இறங்கும் போது, விமானப் பணிப்பெண் இந்த நாள் இனியதாக இருக்கட்டும் என்று வாழ்த்துவது போலத் தான். அவள் அதை மனமார உணர்ந்து கூறுவதில்லை. நாம் பல தடவைகள், "நல்வரவு" "போய்வருகிறேன்" "நல்ல இரவு" என்று வாழ்த்துவது எல்லாம்  எந்த உணர்வும் இல்லாமல் கூறப்படுபவையே ஆகும். ஆனால் இதே வாழ்த்துக்கள் உங்களுடன் நெருக்கமான ஒருவரிடமிருந்து  வரும் போது, அவை, உணர்வு பூர்வமான அதிர்வுகளுடன் கூடியதாக இருக்கின்றன. உங்களுடைய பாட்டி "இந்த நாள் உனக்கு இனியதாக அமையட்டும்" என்று வாழ்த்துவது, விமானப் பணிப்பெண் கூறுவது போல் அல்லாமல், உணர்வதிர்வலைகளுடன் கூடியதாக இருக்கின்றது அல்லவா?

நாம் வாழ்கையை, மேலோட்டமாக வாழும் போதுவரண்டதாகவும், சுவாரஸ்யம் இல்லாததாகவும் இருக்கின்றது. அதுவே, நாம் மற்றவரிடம் உள்ளன்புடன் இணையும் போது, அது உண்மையானதாக ஆகிறது. அந்த உண்மைநிலை வாழ்கையை அழகானதாகவும், மெய்யானதாகவும்  ஆக்குகிறது. சரி! எப்போதும் இவ்வாறு செயல்படுவது என்பது இயலாது என்று எனக்குப் புரிகிறது. ஆனால், ஒவ்வொரு நாளும் சில சமயங்களிலேனும் இவ்வாறு செயல்படப் பழக வேண்டும். மனித வாழ்வின் நிலைக்களனாகியது இப்பண்பு என்று அறிந்து கொண்டால், நம் வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் பெரும் மாற்றம் ஏற்படும்.

அனைத்தும் அதிர்வலைகளினாலேயே நிகழ்கின்றன. நாம் எப்பொழுதும், அதிர்வலைகளை வெளியிடுகிறோம். அவை நேர்மறையாக இருந்தால், நம்மை சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நாம் விரும்பும்படியாகவே எல்லாம் நடக்கின்றன. நமது அதிர்வலைகள் எதிர்மறையாக இருந்தால், நம்முடன் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. நம்மை நாமே விரும்புவதில்லை.

நம்முடைய அதிர்வலைகளை, பெருமளவில் நேர்மரையாக்கிக் கொள்வதற்கு வழி இருக்கின்றது. அது என்னவென்றால், மூச்சுப் பயிற்சி, தியானம், விவேகம்.

வாழ்வின் பல அடுக்குகளாகிய உடல், மூச்சு, மனம், அறிவு போன்றவற்றை அறிந்து உணருதல், ஆகியவை ஆகும். 

இவற்றை அறிந்து நம்முள் ஆழ்ந்து நாம் இளைப்பாறும் போது, எதிர்மறை அதிர்வலைகள் நேர்மறை அதிர்வலைகளாக  மாறுகின்றன. நீங்கள் பூரண திருப்தியுடன், மனம் தெளிவுடனும் பரிசுத்தமாகவும் இருக்கும்போதும் ,யார் மீதும் தீங்கான உணர்வுகள் இல்லாமல் இருக்கும் போதும், நீங்கள் பிறரை சமாதானப்படுத்தி ஆசி வழங்கும் நிலையை அடைகிறீர்கள். சாத்தியமான ஒன்று. ஒவ்வொருவரும், தனது அதிர்வலைகளை முற்றிலும் நேர்மறையாக மாற்றிக்கொண்டால், பிறரை ஆற்றுப்படுத்தி ஆசி வழங்க முடியும்.

நமக்குள்ளேயே நாம் அமைதியை உணர்ந்தால் நாம் அமைதியைப் பரவிப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.நமக்குத் தெரிந்தது என்று நாம் நினைப்பது உண்மையில் ஒரு சிறு பகுதியே ஆகும். பல ரகசியங்கள், வேறு விதமான உண்மைகள் இருக்கின்றன. சிறிது காலம்  எடுத்துக் கொண்டால், நாம் ஆழமான ஞானத்தை அடையலாம். ஞானம் அடைந்தவரிடம் இருந்து மகிழ்ச்சியை ஒருபோதும் பறிக்கமுடியாது.

நேற்று, ஜாக்ரேப் என்னும் இடத்தில், "வளமான குரோஷியாவிற்குத் தொண்டர்கள்" என்கிற இயக்கத்தைத் துவக்கி வைத்தேன். அதில் 2500 பேர் இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் தினமும் ஒரு மணி நேரம், ஒரு வாரத்தில் 7 மணி நேரம் சமுதாயப் பணிக்காகத் தருமாறு கேட்டுக் கொண்டேன். அது போல் இங்கும் செய்ய வேண்டாமா? இது போன்ற பணிகளுக்கு நாம் அனைவரும் சிறிது பங்களிக்கலாம்.

முதலில், அழுத்தமும் வன்முறையும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மக்களுக்கு நட்புடனும், ஒற்றுமையுடனும், வன்முறையற்ற உணர்வுகளுடனும் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, பல்வேறு போதைகளுக்கு அடிமை ஆகிவிட்டவர்களுக்கு உதவ வேண்டும். ஒழுங்கான அட்டவணைப்படி செய்யும் சுதர்சனக் க்ரியாவும், தியானமும் அவர்கள் அத்தகைய பழக்க அடிமைத்தனத்திலிருந்து வெளி வர உதவும்.

மூன்றாவதாக, லஞ்ச ஊழலற்ற சமுதாயம் நமக்குத் தேவை.எங்கு உடைமைத்தனம் மறைகிறதோ அங்கு ஊழல் துவங்குகிறது. இவையெல்லாம் தவிர, உண்மையில் உதவி தேவை இருப்பவர்களை நாம் சென்றடைய வேண்டும். இருபது அல்லது முப்பது பேர் அடங்கிய குழுக்களாக நீங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களில் புன்முறுவலுடனும் தொண்டுணர்வுடனும், வாரம் ஏழு மணி நேரம் செயல்பட்டால், மகிழ்வலைகளை ஏற்படுத்தலாம்.

நீங்கள் கேள்விகள் கேட்கத் துவங்கும் முன் ஒரு விஷயம். உங்கள் அத்தனை கவலைகளையும் என்னிடம் தந்து விடுங்கள். நீங்கள் உங்கள் நாடு, குரோஷியா, இவ்வுலகம் இவை பற்றியே கவலைப் பட வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் தனிப்பட்ட சொந்தக் கவலைகள் அனைத்தையும் என்னிடம் கொடுத்து விடுங்கள்.

கே: இவ்வுலகில், அமைதியை நிலைநாட்ட, பல அமைப்புகளும், கட்டிடங்களும் எழுப்ப கோடிக் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்படுகின்றது. ஆனால் மனித மனங்களைப் புரிந்து கொள்ளாததால் அவர்களால், மனித இதயங்களை நெருங்க முடியவில்லை. உலக அமைதிக்காக  குரல் எழுப்பும் உங்களது ஞானம் இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருடைய இதயத்தையும் சென்றடைய வேண்டும். உங்களுடன் கூட நாங்கள் ஐக்கிய நாட்டு சபைக்கும், மற்றும் வன்முறையால் மக்கள் துன்பப்படும் எல்லா இடங்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது நோக்கமும், எண்ணமும் ஆகும்.

குருதேவ்: நல்லது, பெப்ரவரி 3 ஆம் நாள், புதுடெல்லியில், பத்து ஐக்கிய நாட்டு அமைப்புகளுடன் கூடிய "வளமான இந்தியாவிற்குத் தொண்டர்கள்'' என்னும் இயக்கத்தைத் துவக்கி வைத்தேன். மிக வெற்றிகரமான துவக்கமாக அது அமைந்தது. யூனிசெப் மற்றும் ஐக்கிய நாட்டு அமைப்புகள் பலவற்றுடன் இணைந்து செயல்பட்டு நல்ல சூழ்நிலையை உருவாக்குவோம். இங்கு ச்பிளிட்டில் உள்ள உங்களில் பலர், வாழும்கலை ஆசிரியர்களாகி இந்த செய்தியை பரப்பவேண்டும் என்று விரும்புகிறேன்.

உங்களை இந்தியாவிற்கு வரும்படியும் அழைக்கிறேன். இந்தியாவிற்கு வந்தால், நீங்கள் அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். தியானம் செய்து ஆழ்ந்த அனுபவங்களைப் பெறலாம். இது தவிர ஆயுர்வேத வைத்திய முறையையும் அனுபவித்துப் பார்க்கலாம். பெங்களூரில் தலை சிறந்த ஆயுர்வேத வைத்திய சாலை இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? அலோபதி முறையில் குணப்படுத்த முடியாத சுருள் நாளம் எனும் வலியை ஆயுர்வேத முறையில் குணப்படுத்த முடியும். மேலும் சிறந்த பல் வைத்தியம் உள்ளது. ஆயுர்வேத வைத்தியர்கள், வலியில்லாமல், ஒருதுளி ரத்தம் வராமல், மயக்க மருந்து இல்லாமல், சாதாரணமாக ஆகும் செலவில் பத்து அல்லது ஐந்து மடங்கு குறைவான செலவில் பல்லை பிடுங்கி விடுவார்கள். ஆயுர்வேத முறை குறைந்த செலவில் சிறந்த முறையில் செய்யப்படுவது. நமது புராதன வைத்திய முறையில் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

நீங்கள் செல்லுவதற்கு முன், உங்கள் கவலைகளை எல்லாம் என்னிடம் விட்டுவிட்டு பெரிய புன்முறுவலுடன் செல்லுங்கள்.

கே: தாங்கள் கூறிய சீரிய கருத்துகளுக்கும் இங்கு வந்ததற்கும் மிக்க நன்றி கூற விரும்புகிறேன். தாங்கள் கூறும் சமுதாயத்தொண்டு செய்வது என்பது தனிப்பட்ட முறையிலா அல்லது ரெட்கிராஸ் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவா என்று கூற முடியுமா?

குருதேவ்:  எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவையோ, எந்த வகையிலெல்லாம் தேவையோ அப்படியெல்லாம் செய்யலாம்.