என்ன நடக்கின்றதோ,அது நடக்கின்றது.....


மார்ச் - 07 - 2013 – பெங்களூர் - இந்தியா

கே: நான் முழுமையாக சரணடைந்த பிறகு என்னைக் கவனித்துக் கொள்ள கடவுள் அல்லது குரு இருக்கின்றார் என்ற முழு நம்பிக்கையோடு நான் வாழ்வது எப்படி

குருதேவ்: நீங்கள் அப்படி செய்வதற்கு வழியே இல்லை. நீங்கள் சிலுவை சுமக்கத் தான் வேண்டும். என்னவெல்லாம் நடக்கின்றதோ நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு பிறகு என்ன நடக்கின்றது என்று பாருங்கள். நம்பிக்கையைக் கொண்டு வரவேண்டுமென்று நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கவே நடக்காது."நான் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்" என்று சொன்னால், நீங்கள் எந்த நம்பிக்கையை வைத்துக் கொள்ள விரும்புகின்றீர்கள்? தூக்கி எறியுங்கள் உங்கள் நம்பிக்கையை. 

நம்பிக்கையோடிருக்க முயற்சி செய்வதென்பது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா? அதை விட "எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை" என்று சொல்லிக் கொள்ளுங்கள். நம்பிக்கை என்பது இருந்தால், அது தானாக இருக்கும். நம்பிக்கை இல்லையென்றால் அது இருக்காது. நம்பிக்கை என்பது 

வரம். உங்கள் தலையிலோ அல்லது இதயத்திலோ நம்பிக்கையை கட்டாயமாகத் திணிக்க முடியாது. சில நேரங்களில் அமைதியிழந்து சலனங்களும் எதிர்மறை எண்ணங்களும் நிறைந்த உங்கள் அறிவு நம்பிக்கையை நிராகரித்து விட்ட பிறகும் உங்களுக்குள் ஏதோ ஒன்று உங்களை கலக்கி நம்பிக்கையின் திசையில் உங்களை இழுக்கும். இது நிச்சயம் நிகழும். அவ்வாறு நிகழ்வதை அடையாளம் கண்டு அங்கீகாரம் செய்யுங்கள் போதும்.

எனக்கு எதிலுமே நம்பிக்கை இல்லை என்று ஒருவர் சொல்கின்றார், இருந்தாலும் அவர் அமைதியாக அமர்ந்து தியானம் செய்கின்றார். எதற்காக தியானம் செய்கின்றீர்கள் என்று நீங்கள் கேட்டால் "ஏதோ ஒன்று என்னை தியானம் செய்யச் சொல்கின்றது" என்று சொல்வார். நான் குருவை நம்புவதில்லை" என்று ஒருவர் சொல்வார், இருந்தாலும் குருதேவ் வரும் போது" எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை; அதனால் அங்கே செல்கின்றேன்" என்று சொல்லி அங்கே செல்வார்கள். அவரை ஏதோ ஒன்று இழுக்கின்றது. விமான நிலையம், அல்லது சத்சங்கம் என்று எங்கும் அவரை வரவழைப்பது எது? எதிலும் நம்பிக்கை கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டீர்கள். மிகவும் முயற்சி செய்து நம்பிக்கையை அழித்துவிட்டீர்கள். உங்களுக்கு எதிலும் நம்பிக்கையில்லையென்று மறுப்பு தெரிவிக்கின்றீர்கள். இருந்தாலும் எதோ ஒன்று வந்து உங்களை அவ்வாறு இருக்க விடாமல் செய்கின்றது. அப்போது நம்பிக்கை என்பது இருக்கின்றது என்பதை நீங்கள் அடையாளம் கண்டு உணர வேண்டும். நம்பிக்கையை திணிக்க முடியாது. நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அது எப்போதும் இருக்கும். அந்த நம்பிக்கை போய்விட்டால் அது உங்களை கவலைக்கு ஆளாக்கிவிடும். 

நீங்கள் மிகவும் கவலைக்குள்ளாகும் போது 'நம்பிக்கை போய்விட்டது; அதனால் தான்  துன்பப்படுகின்றேன்' என்று அறிந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் துன்பத்திலிருக்க விரும்புவதில்லை. நான் கவலைப்படக் கூடாதென்று நீங்கள் தீர்மானம் செய்த அந்த நிமிடமே உங்கள் நம்பிக்கை மீண்டும் தொடர்கின்றது. நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கின்றது.  இப்போது மீண்டும் வெளிப்படுகின்றது. நம்பிக்கையோடிருக்க முயற்சி செய்வதென்பது மிகவும் கடினமான காரியம்.

சில நேரங்களில் மக்கள் கடவுளுக்காக அவர் மேல் நம்பிக்கை  வைத்திருப்பதாக நினைக்கின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக கடவுள் கவலைப்படுவதில்லை. கடவுள் சொல்வார்,"சரி. நம்பிக்கையில்லை. அதனால் என்ன? நான் இங்கே இருக்கின்றேன். நான் இங்கே இல்லையென்று நீங்கள் நினைத்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்." பலர் நான் கடவுள் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றேன்என்று சொல்வார்கள்.  நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்தால் என்ன? எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். நம் நம்பிக்கை மேலோட்டமானது. நம் வசதிக்காகவும், சின்ன சின்ன காரியங்கள் நடை பெறுவதற்காகவும், நம் இலட்சியங்கள் நிறைவேருவதற்காகவுமே நம்பிக்கை வைக்கின்றோம். 

நம் இலட்சியங்கள் நிறைவேறினால் 'எனக்கு நம்பிக்கை இருக்கின்றது' என்று சொல்கிறோம்.  இல்லையென்றால் என் நம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்டது; எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்கிறோம். வாழ்க்கை என்பது லட்சியங்களை விட மேலானது. நம்பிக்கை என்பது அந்த வாழ்க்கையை விட மேலானது. நம்பிக்கை எப்போதும் இருக்கின்றது. சத்வ குணமோ, அல்லது தூய்மையோ, நல்லிணக்கமோ உங்களிடம் உண்டாகின்ற போது நம்பிக்கை மேலெழுகின்றது. எனவே நீங்கள் செய்யக் கூடியதெல்லாம் நல்லிணக்கத்தோடு இருப்பது தான். சிறந்த உடற்பயிற்சி, உணவு, ஞானம் இவற்றின் மூலம் உங்கள் மனதை தூய்மையாக வைத்திருங்கள். நீங்கள் உங்கள் பாதையில் முன்னேற உதவும். 

கே: குருதேவ், முன்பெல்லாம் நான் அறியாமையினால் பயம் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சில நேரங்களில் ஞானம் என்னை மிகவும் குழப்பமடைய செய்கின்றது. நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: நல்லது. ஞானத்தின் குறிக்கோளே உங்களை மீண்டும் மீண்டும் குழப்பமடையச் செய்வதுதான். தெளிவைக் கொண்டு வருவதல்ல; குழப்பத்தின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் ஒரு படி மேலே தாவிச் செல்கின்றீர்கள். ஆகவே கவலைப்பட வேண்டாம். 

குழப்பமில்லையென்றால் அது படிகள் இல்லாத சாய்தளத்தில் (ராம்ப்) நடப்பது போன்றது.   அங்கே தாவுதல் இல்லை. சில நேரங்களில் படிகளில் நாம் ஒரு படியை விட்டுத் தாவி ஒரு படி மேலே செல்ல வேண்டியிருக்கும். அது போன்ற நேரங்களில் தான் குழப்பம் நேரும்.  அப்படியென்றால். என் வாழ்வில் குழப்பமில்லாமல் அமைதியாக இருந்தால் வளர்ச்சி இல்லையென்று அர்த்தமா, நான் முன்னேற்றம் அடையவில்லையா? ஞானம் எனக்கு வேலை செய்யவில்லையா? என்றெல்லாம் கேட்க வேண்டாம். அப்படியெல்லாம் இல்லை. நீங்கள்  எளிமையான சமதளத்தில் நடக்கின்றீர்கள். அது இல்லையென்றால் நீங்கள் கடுமையான பயணத்தில்,மேடு பள்ளமான சாலையில் இருப்பீர்கள். அது நல்லதே.

கே: குருதேவ், தக்ஷினாமூர்த்தி என்பதன் பொருள் என்ன?

குருதேவ்: அமுர்தம் என்பதற்கு உருவமற்றது; பார்க்கவோ விவரிக்கவோ இயலாதது என்று பொருள். முடிவில்லாத அண்டவெளியின்  உருவமற்ற வெளிப்பாடே சிவம் ஆகும். அது உருவம் கொள்ள முடியாது; அது இயலாத காரியம்.

மூர்த்தி என்றால் சிலை என்று பொருள். உருவம் உள்ளதனால் மூர்த்தி என்பது பார்க்கக் கூடியது. 'தக்க்ஷ' என்றால், திறமையான என்று பொருள். எனவே விவரிக்க இயலாத  தெய்வீகம் மிகவும் திறமையான முறையில் வெளிப்படுத்தப்பட்டால் அதுவே தக்க்ஷினா  எனப்படும். 

நம்முள்ளே இருக்கும் நம் உணர்வுகளையெல்லாம் நம்மால் வெளிப்படுத்த இயலாது. பல நேரங்களில் நம் உணர்வுகளை மலர்களை அளிப்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம். மலர் அளிப்பதன்மூலம் நம் உணர்வினை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றோம், இல்லையாநம்முள் ஆழத்திலிருக்கும் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த நாம் கொடுக்கக்கூடியது எதுவும் இல்லை. இருந்தாலும் நாம் ஏதோ  ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்கின்றோம்.  அதுவே தக்க்ஷினா எனப்படுகின்றது.

தக்க்ஷினாமூர்த்தி என்பது பார்க்க இயலாதது, என்றாலும் திறமையாக விவரிக்கப்படும் ஒன்று.  வெளிப்படுத்துவதற்கு அப்பார்ப்பட்ட  ஒன்று, இருந்தாலும் ஒரு உருவமாக வெளிப்படுத்தப் படுவது. கண்ணுக்கு புலப்படாத ஒன்று,ஆனாலும் காணப்படுவது அனைத்துமே,அதனால் ஆக்கப்பட்டவையே. முடிவில்லாததும் வெளிப்படுத்த இயலாததுமாகிய ஒன்று மிகவும் திறமையாக ஒரு உருவமாக வெளிப்படுத்தப் படுவதே தக்க்ஷினாமூர்த்தி ஆகும். 

சூரியன் அளவில் மிகப் பெரியது. நம்மிடமிருந்து பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ளது.  ஆனால் ஒரு சிறு கண்ணாடியைக் கொண்டு நாம் பார்த்தால், அந்த சிறு கண்ணாடியில் அதன் பிம்பம் பிரதிபலிப்பதைக் காணலாம். உண்மையில் சூரியன் மிகப் பெரியதாக இருந்தாலும் அதன் முழு பிரதிபலிப்பையும் மிகத் திறமையாக ஒரு கண்ணாடியில் பிடித்து உங்கள்  வீட்டிற்குள் கொண்டுவர உங்களால் முடிகின்றது. அந்த திறமையே தக்க்ஷதா எனப்படுகின்றது.  அதுவே தக்ஷிணாமூர்த்தி ஆகும்.

சிவபகவான் ஆதி குரு என்று அழைக்கப்படுகின்றார். அதாவது காலத்தின் துவக்கத்திலிருந்து இருப்பவனும் காலத்தைக் கடந்தவனுமாகிய குரு எனப்படுகின்றார். அனைத்துமாகிய அவன் எங்கும் நிறைந்திருப்பவன். இருந்தாலும் குரு என்னும் உருவத்தில்  தோன்றுகின்றார். ஆகவே  முடிவில்லாத தெய்வீகம் குரு என்கின்ற உருவத்தில் வரும்போது தக்ஷிணாமூர்த்தி எனப்படுகின்றார். 

பண்டைக் காலத்திலிருந்தே தெய்வீகமான குரு தத்துவத்தின் முக்கிய உருவமே தக்ஷிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகின்றது. குரு என்பது ஒரு மனிதனைக் குறிப்பது அல்ல. அது குருவின் உடலில் இருக்கும் சக்தியாகும்.அது தெய்வீகமானது; எங்கும் நிறைந்ததுஎல்லையில்லாதது; ஞானத்தின் வழிகாட்டி; விவரிக்க இயலாத ஒன்றின் வெளிப்பாடு.

எனவே பகவான் சிவனே, தக்ஷினாமூர்த்தி, ஆதி குரு என்றழைக்கப்படுகின்றார். அதற்கென சொல்லப்படும் கதையில், சிவன் அமைதியாக அமர்ந்திருக்கின்றார். அவர் வயதான சீடர்கள் ஞானம் வேண்டி தன் முன்னே அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றார்.   அவர்கள் அவன் முன்னே மௌணமாக அமர்ந்த உடனே  அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றனர். அவர்களது கேள்விகளனைத்தும் மறைந்தன. அவரது சொற்பொழிவு மௌனமாக இருந்தது. அவர்களது சக்தி மேம்படுத்தப்பட்டது. அதுவே குரு தத்துவம். ஞானமும், அறிவும் துவங்கும் உண்மையான குருவே தக்ஷிணாமூர்த்தி. விவரிக்க இயலாத தெய்வீகம் மிகத் திறமையாக வெளிப்படுத்தப்படுவதே தக்ஷினாமூர்த்தி என்பதன் முழு சாரம் ஆகும். 

கே: குருதேவ்! காளி சிவனின் தலை மேல் நின்றிருப்பதன் முக்யத்துவம் என்ன?

குருதேவ்: அழிக்கும் சக்தியாக உருமாற்றம் செய்யக்கூடிய சக்தியே காளி என்று குறிப்பிடப்படுகிறது. சிவ தத்துவத்தின் மேல், நிற்கும் நிலையில் பத்ரகாளி அதாவது நற்செயல்கள் மட்டுமே ஆற்றும் சக்தியாகிறது. இவை அனைத்துமே, குறிப்பினால் தெரியப் படுத்தப் படுபவை ஆகும்; நன்மைகள் மட்டுமே ஏற்படும் என்பதை மட்டுமே மறைமுகக் குறிப்பினால் உணர்த்துவது ஆகும். சிவன் என்பது அறிவெல்லை கடந்த தத்துவ நிலை. அறமும், நன்மையையும்  மட்டுமே உலகிற்கு அளிப்பவர். அழிக்கும் சக்தியான காளி கடும் சினத்த்துடன் இருந்த அக்கணத்தில், சிவன் கீழே படுத்துக் கொண்டார். அவர் மீது ஏறியதும், காளியின் சினம் அடங்கி, அச்சக்தி நற்பயன் அளிக்கும் சக்தியாக மாறியது. ஆகவே அழிவு ஏற்பட்டாலும் அது நன்மை விளைவிக்கக் கூடியதாகவே இருத்தல் வேண்டும்.

பழைய கட்டிடங்களைத் தகர்க்க எண்ணும் போது என்ன செய்கிறீர்கள்? கட்டிடத்திற்கு அடியில் வெடிகுண்டு வைக்கிறீர்கள். கட்டிடம் தகர்ந்து விடுகிறது அல்லவா? ஒன்றை அழித்து புதிதாக ஒன்றை உருவாக்குகிறோம். அறம் மற்றும் நலன் என்ற நோக்கத்துக்காக அழித்தல் என்பது, கோபம், பொறாமை, வெறுப்பு, மற்றும் அறியாமை இவற்றால் அழித்தல் என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது, அணு அழிக்கப்பட்டு அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் அணுசக்தி போன்றது. அச்சக்தி சரியான முறையில் வழி நடத்தப்படவோ, அல்லது, பயன் படுத்தப்படவோ இல்லை என்றால் அது அழிவுக்கு வழி வகுக்கும். அதே அணுசக்தி, சரியாக வழி நடத்தப்பட்டால், மின்சாரம், போன்ற  மற்றும் பல வசதிகளுக்கு வழி வகுக்கிறது.

மின்சக்தி  என்பதும் அழிக்ககூடிய சக்தி தான். உயர் அழுத்த மின்சக்தி உற்பத்தி ஆகும் இடத்தில், மின்னலைகளுடன் தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக அழிவு தான் ஏற்படும்.ஆனால் மின்சக்தி, நல்ல காரணங்களுக்காக, மின்கம்பிகள், மற்றும் மின்னியல் விசை மாற்றமைவு  வழியாக செலுத்தப்படும் போது அதன் உயர் சக்தி குறைந்து, பொது மக்களுக்கு பயனுள்ளதாக ஆகிறது. அது போலவே, தீயவைகளை அழிக்க முற்படும் பொருட்டு எழும் காளியின் சக்தி,  மிகுந்த அழிவு ஆற்றல் உள்ளதாக இருக்கின்றது.எனவே,அதை வழிப்படுத்தும் பொருட்டு சிவன் கீழே படுத்து, இப்பிரபஞ்சத்தைக் காக்க அதை நற்சக்தியாக்குகிறார்.

சிவன் எப்போதுமே, இவ்வுலகிற்கும், இப்ப்ரபஞ்சத்திற்க்கும் நன்மை அளிக்கக்கூடியதையே செய்வார், விஷம் கூட அருந்தினார். ஒரு புராணக் கதை இருக்கிறது.தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது முதலில் வெளிவந்தது நஞ்சு ஆகும். சிவன் உடனேயே அந்த நஞ்சை தாம் அருந்தி விட்டார். நஞ்சை உண்டதால் அவரது தொண்டை நீல நிறமாகி விட்டது. அதனால் நீலகண்டர்- நீல நிறமுடைய தொண்டையை உடைய அழகர் - என்றழைக்கப்பட்டார். இவ்வாறு புராணக்  கதை கூறுகிறது.

காளி என்பதற்கு ஞானம் என்று பொருள். தர்ம நெறியும், மங்களமும் கூடிய சிவன் மீது நின்ற காளி உலகிற்கு நற்பயன்களை தருகிறாள். நற்சக்தி அடைந்த காளி, நல்லாசி வழங்கும் சக்தி பெற்று, பிரபஞ்சத்திற்கு ஞான அருள் வழங்குகிறாள். ஆகவே நல்லதே செய்யும் பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறாள்.

கே: குருதேவ்! உருவில்லாத எல்லாம் சிவன், உருவுள்ள அனைத்தும் சக்தி என்றால், உருவும் உருவில்லாததுமான உயிர் மூச்சு என்பது என்ன?

குருதேவ்: ஆம்! உருவில்லாதது சிவம், உருவுள்ளது சக்தி. எந்த விதமாகவும் நீங்கள் வரையறுக்கலாம். பிராணன் (மூச்சிலிருந்து கிடைக்கும் உயிர் சக்தி) என்பது முக்கியப் பிராணன் என்றும் அறியப்படுகின்றது.

அனுமார் பிராணனுடன் தொடர்புடையவர், காற்று (வாயு பகவான்) பிராணனுடன் தொடர்புடையவர், ஓம்காரம் பிராணனுடன் தொடர்பு உடையது, பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே பிராணன் ஆகும். நாம் அனைவரும் பிராணன் எனும் மகா சமுத்திரத்தில் தான் உள்ளோம். சிவனும் சக்தியுமே பிராணன் தான்.

ஒரு நிலையில் சிவனையும், சக்தியையும் வேறுபடுத்திக் காட்ட முடியாது. எல்லை என்பது மறைந்து கண்ணுக்குப் புலப்படாமல் போகிறது. சிவனும் சக்தியும் ஒன்றாகிறது. அந்நிலையே பிரம்மம் என்பது.அதாவது, எல்லாமே ஒன்று தான்இரண்டாவது என்பதே கிடையாது. அத்வைதம் என்றாலே இரண்டற்ற நிலை (ஒன்று என்று எண்ணினால் கூட இரண்டு என்பது இருந்தாக வேண்டும், அதனால் தான் இரண்டென்பது இல்லை ஒன்றே ஒன்று தான்). ஒரே சக்திப்பரப்பு மட்டுமே இருக்கின்றது. அது தவிர வேறெதுவும் இல்லை.

அத்வைதம் என்பது இருமை அற்றது என்று பொருள். பிரபஞ்சம் முழுவதும் இருமையற்ற ஒரே சக்தியால் ஆனது. இது தான் முடிவான ஞானம்.அதாவது இருமையற்ற - இரண்டு என்பதே இல்லாத ஒரே சக்தியால் இப்பிரபஞ்சம் உருவாக்கப்பெற்றது. ஒரு நிலை கீழிறங்கி வந்தால், இது துளிம (க்வாண்டம்) இயற்பியல் போன்றது. இன்னும் ஒரு படி கீழிறங்கி வந்தால், வேதியலிலுள்ள தனிம அட்டவணை போன்றது. தனிம அட்டவணை என்றால் என்ன என்று தெரியுமா? வெவ்வேறு விதமான தனிமங்கள் அல்லது மூலப் பொருட்கள், வெவ்வேறு  விதமான தன்மைகள் என்பது போல வெவ்வேறு தேவர்கள், தேவதைகள் (தெய்வீக சக்திகள்) ஆகும்.

கே: கிருஷ்ணர் "தர்மத்திற்கு எதிரல்லாத ஆசைகளே தாம்" என்று கூறுகிறார். தர்மத்திற்கு எதிரல்லாத ஒழுங்கமைந்த ஆசைகள் என்பற்றை எவ்வாறு கண்டுபிடித்து கொள்வது என்று தயவு செய்து தாங்கள் கூற முடியுமா?

குருதேவ்: சாதரணமான, இயல்பான, குற்ற உணர்வு, பயம், சங்கடம் ஆகியவற்றை ஏற்படுத்தாத இயல்பு நிலையிலிருந்து, உங்களை விலக்காத ஆசைகள் அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டவை.

எது உங்களை நடுக்கமுற செய்கிறதோ, எது உங்களைச் சுடுகிறதோ, எது உங்களைச் சங்கடப் படுத்துகிறதோ அது தர்மத்திற்குப் புறம்பானது. தர்மமான எதுவும் சுகமானது. தர்மமற்ற ஆசையில் பயம், குற்ற உணர்வு, உபாதைகள் இருக்கும்.

கே: உண்மையான தொண்டு என்பது என்ன? என்னுடைய ஒவ்வொரு செயலும் எப்படி தொண்டாக முடியும்?

குருதேவ்: தொண்டு என்பதன் பொருள் "அவரைப் போல செய்தல் என்பதாகும். படைத்தவரே ‘’அவர்என்று இங்கு குறிப்பிடப்படுகிறார்.. படைத்தவர் எல்லாவற்றையும் நமக்கு செய்கிறார். எதுவும் நம்மிடம் எதிர் பார்ப்பதில்லை. அது போல, எதையும் திரும்ப எதிர்பார்க்காமல் செய்வது தான் தொண்டு. எல்லாவற்றுக்கும் பலன் என்பது உண்டு. ஆனால் பலனை எதிர்பார்த்து செய்தால் அது தொண்டு அல்ல, எதையும் எதிர்பார்க்காமல் எதையும் விரும்பாமல், செய்யவேண்டும் என்பதற்காகவே செய்யும் செயலே தொண்டு ஆகும்.