இவ்வுலகுக்கு ஒளியைக் கொண்டு வாருங்கள்....


14 – மார்ச் – 2013 - பெங்களூர் - இந்தியா

சத்சங்கத்தில் அமர்ந்து உள்நோக்கிச் செல்லுங்கள். அது தான் முக்கியம்.

பார்வையாளர்கள்:- குருஜி! நீங்கள் இப்போது போகாதீர்கள்…..

குருதேவர்: நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் என்னை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார்கள். நான் யாரும் ஏமாற்றம் அடைவதை விரும்பவில்லை. இன்று கூட, நான் சிறிது நேரம் சத்சங்கத்தில் வந்து விட்டுப் போகிறேன் யாரும் ஏமாற்றம் அடையக் கூடாது என்று வந்திருக்கிறேன். அதனால் என் விமான பயணத்தை ஒத்திப்போட வேண்டியிருந்தது. எனவே 10 நிமிடம் மட்டும் உங்களுடன் இருக்க முடியும்.

சாதனை, சேவை மற்றும் சத்சங்கத்தில் மேலும் மேலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலகிற்கு எப்படி மேலும் மேலும் ஞான ஒளியைக் கொண்டு வரலாம் என்று எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு மேலும் மேலும் ஞானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும் நாம் இன்னும் 40 லிருந்து 50 ஆண்டுகள் வாழவேண்டும். இவ்வாழ்க்கைக்கு ஒரு திசையும் குறிக்கோளும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

சாப்பிடுவது, தூங்குவது, யோசனை செய்வது, செய்தித்தாள் வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது தவிர மேலும் ஏதாவது செய்ய வேண்டும். நம்மால் செய்யக் கூடிய அப்படிப்பட்ட காரியம் என்ன என்று எண்ணிப் பாருங்கள்!! ஞானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரவச் செய்யுங்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க உதவுங்கள். மக்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதற்கு உதவுவது ஞானம் பற்றிய விழிப்புணர்வு மட்டுமே.

யாராவது துக்கத்தில் இருந்தால், அதன் காரணம் அவருக்கு ஞானம் பற்றிய அறிவு கிடைக்கவில்லை என்று பொருள். அல்லது அவர்களுக்குக் கிடைத்த ஞானம் பற்றிய தெளிவு அவர்களுக்கு ஏற்படவில்லை என்று அர்த்தமாகும். அதனால் தான் அவர்கள் துக்கத்தில் இருக்கிறார்கள்.

“குருதேவா! பல மக்களுக்கு இன்னும் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. உணவு கிடைக்கவில்லை. அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். அதனால் தான் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” என்று நீ சொல்லக்கூடும்.

இப்படிப்பட்ட துக்கம் வேறு வகையானது. இந்தப் பிரச்சினையினால் வரும் வருத்தம் வேறு விதமானது. இயற்கையின் சீற்றத்துக்குள்ளான மக்களும், பஞ்சத்தாலோ, வெள்ளத்தாலோ பாதிக்கப் பட்டவர்களும் துக்கத்துக்குள்ளாவார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் நீ சேவையில் ஈடுபட்டு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அந்த சமயத்தில் கூட அவர்களுக்குச் செய்யும் சேவையுடன் ஞானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது. வாழ்க்கையில் கஷ்டம் வருவது இயல்பு. இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு மேலே செல்ல ஒருவர் சக்திசாலியாக இருப்பது அவசியம். அந்த சக்தியை ஆன்மீகத்தின் மூலம் தான் பெற முடியும்.

தென் அமெரிக்காவில் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியால் ஏற்படும் அலை அதிர்வுகள் சீன தேசத்தின் மேல் இருக்கும் மேகங்களை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள், இந்த உலகம் முழுதும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது. நீ உணர்ச்சி பூர்வமாகச் செய்யும் பூஜை, அழகான நன்மையை அளிக்கும் அணுத்துகள்களை உருவாக்குகிறது. அது எங்கும் பரவி உலக அளவில் நன்மையை ஏற்படுத்துகிறது. குரு பூஜை செய்வதால் வரும் நன்மைகளை எவ்வளவு பேர் அனுபவித்திருக்கிறீர்கள்? குரு பூஜை மந்திரத்தை ஜபிப்பதால் மிகவும் நன்மை கிடைக்கும்.

“மருத்துவமனையில் நோயால் வாடுபவர்கள் இருக்கும் இடத்தில் குரு பூஜை மந்திரத்தை ஜபித்தவுடன் அவர்கள் குணமடைந்தார்கள்” என்று ஒருவர் எனக்கு எழுதியிருந்தார்.ஒரு குழந்தை மிகவும் அழுது கொண்டிருந்தபோது, குரு பூஜை மந்திரம் ஜபிப்பதைக் கேட்டு அது அழுகையை நிறுத்தி மிகவும் அமைதியாக மாறியது. இப்படிப்பட்ட பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல.மந்திரத்தின் மகிமை அப்படித்தான். அப்படித்தான் ஏற்படும். அது மிகவும் இயல்பான ஒன்று. அப்படி நடக்காவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.

ஆகவே, வாழ்க்கையில் நமக்கு ஒரு திசையும் நோக்கமும் தேவை. அந்த திசை – நம் பழமையான ஞானத்தை ஒவ்வொருவருக்கும் அளிப்பது எப்படி என்று பார்க்க வேண்டும். ஞானம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து நம்மை வந்தடைந்திருக்கிறது. நம் வாழ்க்கையில் அது நம் மூலமாக மேலும் மேலும் பலரை சென்றடைய வேண்டும்., இந்த நீரோட்டம் போன்ற ஞான ஓட்டம் எல்லா காலத்துக்கும் எல்லோரையும் சென்றடைய வேண்டும். இதைப் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். நம் சக்தியை இத்திசையில் திருப்ப வேண்டும்.