வார்த்தைகளின்றி ஒரு உரையாடல்

9 மார்ச் 2013  பெங்களூரு, இந்தியா

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் பயனற்றவை என்பதை காணவும் அதை கவனிக்கவும் வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. எல்லா எண்ணங்களும் கடந்த காலத்தைப் பற்றியதே. மனதில் எழும் இந்த எண்ணங்கள் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு தோற்றத்தை நம் மெய்யுணர்வில் பதிக்கிறது. கடந்த காலத்தில் நடந்தவற்றை, அப்படியே எதிர்காலத்திலும் இருக்கப்போவதாக ஒரு தோற்றம் காட்டுகிறது.எனவே, கடந்த காலத்தின் எண்ணங்களே நம் மனதில் வந்தவண்ணம் உள்ளது. ‘இது சரி, அது சரியல்ல. இது எனக்குப் பிடிக்கும், அது பிடிக்காது.’
நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இவற்றை கட்டாகக் கட்டி தூக்கி எறிய வேண்டியது தான். இந்த எண்ணங்கள் எல்லாம் பயனற்றவை என்று உணர்ந்தாலே போதும்,  நம் மனம் விடுதலையாகிறது.

நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? இன்று, உங்களிடையே அமர்ந்திருக்கும் சிலர் இதை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் மௌன சம்வத் எனப்படுகிறது. மௌனத்தில் ஆழமாகப் போகும் போது உங்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும்.

இது என்ன? எண்ணங்கள் இல்லாத நிலையில் தகவல் பரிமாற்றம் நிகழ்வதை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்; ஒரு வார்த்தைகூட சொல்லப்படாமல் பரிமாறப்படுவதை ஒருவரால் புரிந்து கொள்ள முடிகிறது. இது எப்போது என்றால் உங்கள் மனதில் உள்ள கேள்விகள் மறையும் போது.
சேருமிடத்தை அடைவதற்கான வாகனம் மட்டுமே கேள்விகள். கேள்விக்கான பதில்கள் அந்த வாகனத்திற்கு தேவையான எரிபொருள். எனவே, கேள்விக்கான விடை கிடைத்தபின், வாகனம் மேலே செல்லத் தொடங்குகிறது. ஆனாலும், கேள்விகளும் பதிலும் இன்றி, நேரடியாகவும் நீங்கள் சேருமிடத்தை அடையலாம். எப்படி? மௌனத்தில் அமரும் போது. இதுவே மௌனத்தின் முக்கியத்துவம். ஒருவர் மௌனத்தில் அமரும்போது, மனதில் கேள்வியுடன் கூடவே அதற்கான விடையும் சேர்ந்தே வருகின்றன. இது உங்களுக்கு நடந்திருக்கிறதா? எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள்? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்)

உங்களுக்கு இன்னுமொரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்; பழைய விஷயம்தான் ஆனாலும் புதிது. எல்லா கேள்விகளும் அதற்கான பதில்களும் எண்ணங்களே, உங்களுக்கு இருக்கும் மற்ற எண்ணங்கள் எல்லாவற்றையும் மூட்டையாகக் கட்டித் தூக்கிப் போடுங்கள் போதும். 

மௌனமாயிருங்கள். வேறெதுவும் தேவையில்லை! அதற்குப் பிறகு மட்டுமே கொண்டாட்டம் சாத்தியம். பிறகே உற்சாகம் பிறக்கிறது மற்றும் உங்கள் மெய்யுணர்வு மலர்கிறது. எவ்வளவு அதிகமாக எண்ணங்களில் சிக்கியிருக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் தன்னிலை மாறா ஒரு மந்த நிலை நோக்கி செல்கிறீர்கள்.

தன் எண்ணங்களில் அதீதமாக சிக்கியிருப்பவர்கள் ஒரு உயிரற்ற அல்லது அதீத மந்த நிலையில் இருக்கிறார்கள்; அப்படியென்றால் அவர்களிடம் உற்சாகம் என்பது அறவே இல்லை. சிறு குழந்தைகளைப் பாருங்கள், அவர்களிடம் என்ன இருக்கிறது? உற்சாகம், கொண்டாட்ட நிலை, அன்பு, ஒரு ஒளிச் சிதறல் அவர்களிடம் உள்ளது. அவர்களுக்கு வெகு சில எண்ணங்களே உள்ளது, இல்லையா? சிறு குழந்தைகளைப் பார்க்கும் போது, அவர்களிடம் மெய்யுணர்வு ஆனந்தமாய் பொங்கி பிரவகிக்கிறது போலத் தெரிகிறது.

மகா சிவராத்திரி போன்ற கொண்டாட்டங்கள் அதற்காகத் தான். நீங்கள் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட! எல்லாவற்றையும் சும்மா அப்படியே விட்டுவிடுங்கள், சிவ தத்துவதில் முழுமையாக மூழ்குங்கள். சிவனாக மாறுங்கள், அப்படியென்றால் ஏதுமறியா உணர்வில் இருப்பது.ஏதுமறியாத என்றால் என்ன? எந்த எண்ணங்களிலும் சிக்காமலிருப்பது, எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பது, தனக்குள்ளே முழமையாக மூழ்கியிருப்பது. சற்று நேரம், இசையில் மூழ்குங்கள்.
இசை, பிரார்த்தனை, மந்திர ஜெபம், பக்தி, நம்பிக்கை, ஆகியவை இது நடப்பதற்கான ஊடகம். ஒரு குருவும் ஊடகமே. பூஜை ஒரு ஊடகம். இவையெல்லாம் நமக்கு நம் இருப்பைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கேகுருதேவ், செய்வது நாமல்ல என்று பகவத்கீதை கூறுகிறது. நாம் ஒரு ஊடகம், நம் மூலம் வேறு யாரோ செயல்படுகிறார்கள். இறந்தகாலம் என்பது விதி, எதிர்காலம் என்பது நம் விருப்பம் என்கிறோம். இது முரண்பாடாகத் தெரிகிகிறது. தயவு செய்து விளக்க முடியுமா?

குருதேவ்: இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று செய்பவர்; மற்றொன்று மகிழ்பவர், அந்த இருவரும் ஒன்றாக செல்பவர்கள். செய்பவர் நீங்களானால், அதனால் மகிழ்பவரும் நீங்கள் தான். செய்பவர் நீங்களில்லை என்றால் அதனால் நீங்கள் மகிழ்வதுமில்லை. எனவே, ‘நான் இதைச் செய்யவில்லை’, என்று சொல்லும் போது உங்களிடம் உள்ள ஒன்று அந்தச் செயல்களினாலோ அல்லது அதன் விளைவுகளினாலோ தொடப்படாமல் இருக்கிறது. மற்றும் உங்களில் உள்ள மற்றொன்று எல்லாவற்றையும் செய்து கொண்டு அதன் விளைவுளால் மகிழ்ந்து கொண்டோ அல்லது வருந்திக் கொண்டோ இருக்கிறது. எனவே, உங்களிடம் இரண்டு விஷயங்கள் இருக்கிறது.
உபநிஷத்தில் இதற்கு ஒரு அழகிய உவமானம் உள்ளது.

இந்தப் பிரபஞ்ச மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. ஒன்று செயல்களின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது,மற்றொன்று அதனை சாட்சிபாவமாக கவனித்து கொண்டிருக்கிறது. இதுதான் தத்துவத்தின் ஆழம். நீங்கள் தியானத்தில் ஆழமாகச் செல்லச் செல்ல, மேலும் மேலும் புரிதல் வர, இந்த விஷயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். ஒரு மிக நன்றாகச் செய்யப்பட்ட வேலையோ அல்லது மிக மோசமாகச் செய்யப்பட்ட வேலையோ, எங்கோ உள்ளுக்குள், நான் இதைச் செய்யவில்லை, இது நடந்தது அவ்வளவே, என்பதை உணர்வீர்கள். இதை உணர்ந்திருக்கிறீர்களா? இது எனக்கு நடந்திருக்கிறது, நான் இதைச் செய்யவில்லை. அதுதான் இது. அது ஒன்றுதான் இதை நடக்கச் செய்யும். மற்றொரு விஷயம், நான் இதை செய்பவனல்ல என்ற உணர்வு. இதில், ‘நான் செய்யவில்லை’ என்பவரே இயக்குனர்.

கே: குருதேவ், சாங்க்ய யோகா என்பதை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் புரியவில்லை. தயவு செய்து விளக்குங்கள். மேலும், உலகாய விஷயங்களில் இருந்து கொண்டே இதை பின்பற்ற முடியுமா?

குருதேவ்: ஆம், முடியுமே. சாங்க்ய யோகா என்பது விழிப்புணர்ச்சி பெற்று எல்லாம் உண்மையில் இருப்பது இல்லை என்பதை காண்பது தான். இருப்பது ஒன்று மட்டுமே, எல்லாம் அதன் மூலமே வேலை செய்கிறது. எண்ணங்கள் கூட எதுவுமே இல்லை என்பதைப் பாருங்கள்; எல்லாம் வெறும் அதிர்வுகளே. சாங்க்ய யோகா என்றால் இந்த ஆத்மா சிரஞ்சீவி என்று பொருள். என்னுள் உள்ள ஒன்று, அழியாதது, பாதிக்கப்படாதது, வயதாகாதது என்று அறிவது. நான் உடம்பல்ல என்று அறிந்து ஓய்வாவது. இதைத் தெரிந்து கொண்டு, தனக்குள்ளே ஓய்ந்து இருப்பது சாங்க்ய யோகா எனப்படுகிறது.

கே: குருதேவ், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவு எப்படி ஆரம்பிக்கிறது, அது எப்படி வளர வேண்டும் என்பதை தயவு செய்து விளக்கமுடியுமா?

குருதேவ்: உங்களோடு உங்களுக்குள்ள உறவு என்ன? உங்களிடம் நீங்கள் எதையாவது மறைக்கிறீர்களா? இல்லை, எனவே அதே உறவுதான் குருவுக்கும் சீடனுக்கும். உங்களுக்கு நீங்கள் என்ன? நீங்கள் மகனா? தந்தையா? சகோதரனா? உங்களுக்கு நீங்கள் என்ன?
(விடை: நான்தான் எல்லாம்) ஆம், அதுவேதான் குருவுக்கும்)

கே: குருதேவ், நான் எப்படி என்னுடைய அக இலட்சியத்தை கண்டுகொள்வது, என் உண்மையான சேருமிடத்தை? அல்லது நான் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமா?

குருதேவ்: அது நல்ல யோசனை என்று நான் நினைக்கிறேன், தேடுவதை நிறுத்தி விட்டு தளர்வாகுங்கள். உங்களுக்குள் ஆழமாக செல்லுங்கள். பாருங்கள், மனதின் இயல்பு புதிய புதிய விஷயங்களை நாடுவது. புதிய விஷயங்கள் எப்போதும் வெளியில் இருக்கின்றன, எனவே மனம் அதை நாடி சென்ற வண்ணம் இருக்கிறது.ஆனால்,மனம் உள்நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தால், அங்கே இன்னும் புதியன, புராதனமானது அங்கே இருப்பதை உணரத் தொடங்கும். அது புதிதாக இல்லாமலிருந்தாலும், ஆனால் மிக அறிமுகமான ஒன்றைப் போல இருந்தாலும் மற்றும் புராதனமாக இருந்தாலும், உங்களுக்குப் புதிய அனுபவம் கிடைக்கும். அதனால் தான் அது நித்ய நூதன் என்று அழைக்கபடுகிறது, அதாவது எப்போதும் புதியது, ஆனாலும் அது சனாதன், அப்படி என்றால் காலத்தை விஞ்சி நிற்பது என்று பொருள்.

அந்த ஆத்மா, அந்த மெய்யுணர்வு நித்ய நூதன் (எப்போதும் புதியது). ஒவ்வொரு கணமும் புதியது, ஆனாலும் அது புராதனமானது, சூரியனைப்போல.இன்று இந்த சூரியன் மிகவும் புதியது. புத்துணர்வோடு சூரியனின் கதிர்கள் வருகிறது. முதுமையடையவில்லை, அழுகிப் போகவில்லை அல்லது மிகப் பழமையாக இருப்பதில்லை. ஆனாலும் சூரியன் புதியதா? இல்லை, சூரியன் மிகப் புராதனமானது. அதைப் போல, ஆறுகள் மிகப் பழமையானது, ஆனாலும் அதில் ஓடும் நீர் புத்தம் புதியது. சந்திரன் மிகப் பழமையானது ஆனால் அதன் கதிர்கள் மிகப் புதிதானவை. அதேதான் நம் ஆத்மாவிற்கும், நம் சுயத்திற்கும். அது நித்ய நூதன்; எப்போதும் புதியது, ஆனாலும் அது புராதனமானது. அது ஒரு முரண் வார்த்தை, எப்போதும் புதிது, ஆனால் மிக பழமையானது.

கே: குருதேவ், நான் தனியாக வாழ்கிறேன். என் குடும்பத்துடன் வாழ்வதில்லை. எனக்கு 76 வயதாகிறது. உங்களுடைய ஏதாவது ஒன்றை என் இறுதி மூச்சு வரை வைத்திருக்க விரும்புகிறேன். நீங்கள் என்னக்கு ஏதாவது தந்தாக வேண்டும்! எனக்கு என்ன தருவீர்கள்?

குருதேவ்: இந்த மக்கள் எல்லோரும் என் குடும்பத்தவர்,அவர்கள் இப்போது உங்களுடையவர்களும் கூட. உங்களுக்கு இந்த முழு உலகமும் இருக்கிறது. கவனியுங்கள், ஏதாவதை சேகரிப்பதில் ஈடுபடாதீர்கள். கொடுக்கப்படும் ஞானத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். சிறு துணியோ அல்லது என் பொருட்கள் சேகரிப்பதை பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். விட்டு விடுங்கள். அத்தகைய ஆழமான ஞானம் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஞானத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் அந்த ஞானம் பல பிறவிகளுக்கு உங்களுடன் இருக்கப் போகிறது.

கே: அன்பு குருதேவ், வாழும் கலை ஆசிரியர்களால் உங்களுடன் நெருக்கமாக இருந்து உங்களை அடிக்கடி சந்திக்க முடிகிறது. ஆசிரியர்களாக இல்லாத எங்களைவிட அவர்கள் பாக்கியசாலிகள் அல்லவா?


குருதேவ்: ஆசிரியர்களாக இருப்பவர்கள் எனக்கு அருகில் இருப்பதால் மற்றவர்களை விட பாக்கியசாலிகள் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இங்கு இருக்கும் எல்லோரும் பாக்கியசாலிகள். சிலர் எனக்கு அருகில் இருக்கிறார்கள் சிலர் தூரத்தில் இருக்கிறார்கள். இதனால் சிலர் அதிர்ஷ்டசாலிகள் என்பதெல்லாம் இல்லை. எல்லோரும் என்னுடையவர்களே.