இந்தியாடுடே கான்க்ளேவ்


16 மார்ச் – 2013 - டெல்லி - இந்தியா

இந்தியாடுடே கான்க்ளேவ் என்பது “இந்தியாடுடே” செய்தி பத்திரிக்கையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் விசேஷ நிகழ்ச்சியாகும். கடந்த 11 வருடங்களாக உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து அரசியல், நிதி, வியாபாரம், கல்வி, பொறியியல், கலை மற்றும் பல துறைகளில் இருக்கும் வல்லுனர்களைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள்.


21ம் நூற்றாண்டின் பிரச்னைகளுக்கான சுமூகமான தீர்வுகள், தனிப்பட்ட கருத்துக்கள், மற்றும் ரணநீதி பற்றி விவாதித்து நல்ல முடிவு எடுப்பது தான் இக்கூட்டத்தின் நோக்கமாகும். குருதேவர், ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்களை 2013ம் ஆண்டுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். அவர் பேசியவை பின் வருமாறு.

ஞானம் என்பது காலத்துக்கு அப்பாற்பட்டது. சூரியன் மிகவும் பழமையானது. இருந்தாலும் அதன் கிரணங்கள் இன்றும் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அதன் கிரணங்கள் பழையதாகி விடவில்லை, கெட்டு விடவில்லை. நீரும் அதே போலத் தான். கங்கை நதி மிகவும் பழமையானது. ஆனாலும் இன்றும் புத்தம் புது நீர் அதில் ஓடுகிறது. அதே போல் ஞானம் என்பது பழமையானாலும், இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. எவ்வளவு பழமையான ஞானமானாலும் இன்றும் புத்தம் புதியதாக நமக்குத் தெரிகிறது. நம் வாழ்க்கையை மேம் படுத்துவது தான் ஞானம்.

உலகில் அஞ்ஞானிகள் அல்லது தீவிர மதவாதிகள் இருப்பதைப் பார்க்கிறோம். சில அறிவு ஜீவிகள் தங்களை நாத்தீகர்கள் என்று சொல்வது தான் நாகரீகம் என்று நினைக்கிறார்கள். பழமையையும், புதுமையையும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையைச் செவ்வனே நடத்தும் பல அறிவாளிகள் இருக்கிறார்கள்.

எவ்வளவு பழயதானாலும் வேர் என்பது மரத்துக்கு அவசியம். மேலே வளரும் கிளைகளும், இலைகளும் புதிதாக வளர்ந்த வண்ணம் இருக்கும். நம் வாழ்க்கைக்கும் பழங்கால ஞானமும், புதிய விஞ்ஞானமும் தேவையாக இருக்கின்றன. இதையே பல அறிஞர்கள் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார்கள்.

ரிக் வேதத்தின் முதல் வரி “அக்னி பூர்வே பிர் ரிஷிபிர் இத்யோ மூடநைர் உடா” இதன் பொருள் “உலகில் பழமையும் புதுமையும் கலந்திருக்கிறது என்று அறிவதே ஞானமாகும்”
தொழில் நுட்பம் மற்றும் வியாபாரத்தை நாம் புதுப்பிப்பது போல, பாரம்பரிய நல்ல பழக்க வழக்கங்களை மறவாமல், அவற்றைப் பற்றிச் சிந்தித்து, இன்றைய வாழ்க்கைக்கு ஏற்றவாறு இணைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியம். இந்தியாவில் இருக்கும் பல்வேறு கலாசாரங்களை நாம் மறவாமல் இன்றும் பின்பற்றி வருகிறோம். 

நெடுங்காலத்திலிருந்தே பாரம்பரியமான சில நல் வழக்கங்களை விடாமல் பின் பற்றுகிறோம். நவீன யுகத்தை நோக்கிச் செல்லும் போதும், நவீன யுகத்தின் சவால்களைச் சந்திக்க வேண்டிய நேரத்திலும் இப்பழக்கங்கள் நமக்கு உதவுகின்றன. உண்மையில் ஞானம் என்பது என்ன? நாம் ஏன் அறிவாளியாக இருக்க வேண்டும்?

யாருமே வருத்தப்பட விரும்புவதில்லை. யாரும் மனக் குழப்பத்தில் இருக்க விரும்ப மாட்டார்கள். எது நம்மை வருத்தத்திலிருந்து, மகிழ்ச்சிக்கு எடுத்து செல்கிறதோ, நம் பார்வையை விரிவு படுத்துகிறதோ, நம்மைத் துடிப்புள்ளவராக ஆக்குகிறதோ, நம் ஆத்மாவைப் பரமாத்மாவோடு இணைக்கிறதோ, எது இவ்வுலகிலிருந்து பிரிக்க முடியாமல் எப்போதும் இருக்கிறதோ அதுதான் ஞானம்.

ஞானம் நமக்குப் பூரண த்ருப்தியைக் கொடுக்கிறது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் சிறிய மகிழ்ச்சிகள் இப்படிப்பட்ட பூரண த்ருப்தி அளிப்பதில்லை. ஞானம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது. அது ஒருவரின் கல்வித் தகுதியைப் பொறுத்தது அல்ல, எழுதப் படிக்கத் தெரியாத கிராம மக்களிடையே கூட ஞானிகளைக் காணலாம். இன்னும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட இடங்களில் ஞானிகள் அதிகமாக இருக்கின்றனர்.

அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த தெரியும். சமூகத்தில் ஒற்றுமையாக எல்லோரையும் ஒன்று சேர்த்து வாழவைக்கும் திறமையும் அவர்களுக்கு உண்டு. வாழ்க்கையை,கொண்டாட அவர்கள் அறிவார்கள். ஞானம் என்பது, வாழ்வில் கொண்டாட்டத்தையும், முகத்தில் புன் முறுவலையும் கொண்டு வரும். அது உனக்கு ஆரோக்கியத்தையும், அறிவுக் கூர்மையையும் கொடுத்து வாழ்வில் சரியான முடிவெடுக்கும் திறமையை அளிக்கிறது.

எண்ணத்தைப் பற்றிப் பேசினோம். அதைப் பற்றி மேலும் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.

எண்ணம் என்பது ஒரு வீட்டின் காவல்காரன் போல இருக்கிறது. மன உணர்ச்சி (கொந்தளிப்பு) எண்ணத்தை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று நீ நினைக்கலாம். அல்லது உன் கவனம் முழுவதையும் அந்த எண்ணத்தின் மீது வைக்கலாம். ஆனால் உணர்ச்சி வசப்படும் போது, அது மிக அதிக உந்து சக்தியோடு இடையில் நுழைகிறது. அப்போது நீ கவனமாக வைத்திருந்த எண்ணம் மறைந்து விடும். அப்போது உனக்கு “மன எழுச்சி எண்ணத்தை விட அதிக சக்தி வாய்ந்தது” என்று புரிய வரும்.

சூழ்நிலைகள் உன்னை விட சக்தி வாய்ந்ததாகிறது. “நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்” அல்லது “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று நீ நினைத்தாலும், மன எழுச்சி மடை திறந்தது போல் அதிக சக்தியோடு வரும் போது எண்ணங்கள் எல்லாம் மறைந்து விடும். எனவே நாம் நம் இருப்பின் பல நிலைகளைப் புரிந்து நடக்க வேண்டும். முதல் நிலை சுற்றுப்புறம் மற்றும் உடல். அடுத்தது மூச்சு. (மூச்சு உடலுக்கும் மனதுக்கும் உள்ள ஒரு பாலம் போல செயல் படுகிறது.) அடுத்த நிலை மனம் – எண்ணங்கள் வரும் இடம். அடுத்த நிலை மன உணர்ச்சி (எழுச்சி). இது மனதை விட நுணுக்கமாக, சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

இவைகளையெல்லாம் கடந்தால் நீ சக்தியின் ஆதிக்கமிருக்குமிடம், ஆக்க பூர்வமான செயல்களின் பிறப்பிடம், ப்ரகாசமாக ஜொலிக்கும் ஆத்மா என்று அறிந்து கொள்வாய்.
தியானப் பயிற்சிகளில் மிக முக்கியமான ஒன்று கிறிஸ்தவர்களின் மௌனமான வழிபாடு போன்றது. (மனத்தில் எண்ணங்களை அசை போடுவது போன்றது). அல்லது இதை பௌத்தர்களின் ஜென் தியானத்துக்கு ஒப்பிடலாம். இப்பயிற்சிகள் மூலம் நாம் ஆழ்நிலைகளை கடந்து சக்தி நிறைந்த ப்ரகாசமான ஆத்மாவாக உணரலாம். ஆத்மா தான் உடல் என்ற வீட்டின் சொந்தக்காரர். ஆத்மா என்ற வீட்டின் சொந்தக்காரரை அறிந்தால், காவல்காரன் என்ற எண்ணம் ஆத்மா சொல்வதைக் கேட்கும்.